Monday, October 19, 2020

PESUM DEIVAM


 


பேசும் தெய்வம்:         J K  SIVAN 

                                                          2.  ''காலேஜ்லே போய்  படி.''

DR SUNDARARAMAN SAYS: 
'நான்  சுந்தரராமன்.  என் அம்மா அப்பா ஊர்  குளத்தூரிலிருந்து ஐந்து மைல்  தூரத்தில் கொடியூரில்  பிறந்தவள். அவள் அப்பா, என் தாத்தா பேர்,  சுந்தரேச ஐயர்.   அம்மா அவருக்கு ஒரே பெண்.  ஐந்து வயசில் அப்பாவுக்கும் அவளுக்கும் கல்யாணம்.  அப்பா  முன்கோபி, வேலையை விட்டு  கிராமத்துக்கு வந்தார்.  அம்மா  வழியில் நிறைய நிலம்.  அப்பா கிராம மணியக்காரர் ஆனார். மேட்டுக்குப்பம், பாவண்டூர் ரெண்டு ஊருக்கும் முன்சீப்.  அப்புறம் வக்கீல் குமாஸ்தா  வேலை பார்த்தார்.    வக்கீல்கள் திருக்கோயிலூர்,கடலூர் காரர்கள்.  நிறைய  கேஸ்கள்  மத்தியஸ்தம் ஆகி  கோர்ட் போகவில்லை. அப்பா வருமானம் குறைந்தது. 

பிழைக்கணுமே.  நிலத்தை ஏக்கர் ஏக்கராக விற்று பிழைத்தோம்.  1950ல் சுத்தமாக வறுமைக் கோலம்.  நல்லவேளை  அதற்குள்   என்   ரெண்டு அக்காவுக்கும்  கல்யாணம் ஆகிவிட்டது. ஒரு அண்ணா, ஒரு தங்கை பாக்கி.  அண்ணா வீட்டை விட்டு ஓடிப்  போய்விட்டான்.   நான்  எலிமெண்டரி ஸ்கூல் முடித்து  வீட்டில் சும்மா இருந்த வருஷம் 1949-50.   மஹா பெரியவா எங்க கிராமத்துக்கு வந்தா.  அம்மா என்னை அழைச்சுண்டு போனா. குடும்ப நிலவரம் சொன்னா. 

 பெரியவா என்னை உன்னிப்பா  பார்த்தார்.  ''நீ கவலைப்படாதே.  இவன் முன்னுக்கு  வருவான். உன் குடும்பம் சுபிக்ஷமா இருக்கும்'' என்று என்னைப்பார்த்து சொன்னார்.   அப்போது  அம்மா சொன்னதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 1951ல்  ஊரை விட்டு போனோம்.  மாயவரம் பக்கம்  மடத்தில்  சேர்ந்தோம்.  என் பெரிய அத்திம்பேர்  வெங்கட்ராமன் காஞ்சிபுரத்தில்  ஒரு ஸ்கூலில்  வாத்யார்.  அவர் ஸ்கூலில் 7வது படித்தேன்.  அடுத்த வருஷம் சித்தலிங்கமடத்துக்கு  அவருக்கு மாற்றல். அங்கே 8வது படித்தேன். 

அங்கே  ஞானாநந்தா என்று ஒரு ஸ்வாமிகள் பரிச்சயமானார் .  இவர்  தான்  பிற்காலத்தில் பிரபலமாக  திருக்கோயிலூர் தபோவனத்தில் சுவாமி ஞானானந்தா.   என் ஸ்கூலுக்கு எதிர்த்த வீட்டில் இருந்தார். தனிக்கட்டை.  பள்ளிக்கூடம் விட்டதும் ஒரு மணி நேரம் அவரோடு தான்  இருப்பேன்.  சுந்தரம் னு ஆசையா கூப்பிடுவார். ஸ்வீட்,  பழம் எல்லாம் கொடுப்பார். எனக்கு தாத்தா மாதிரி அவர்.  அவர் யார் எந்த ஊர் எதுவும் தெரியாது.   கதை  யெல்லாம் சொல்வார். அவரைப் பற்றி ஏன் சொல்றேன்னா  ''காஞ்சி பெரியவா  நடமாடும் தெய்வம் டா'' என்று அடிக்கடி சொல்வார் அதனாலே. ''எப்போவாவது உனக்கு  கஷ்டம் வந்தா பெரியவா பாத்துப்பா'' என்பார். 

எட்டு மாசம் கழித்து அப்பாவிடமிருந்து லெட்டர் வந்தது.  '' மடத்துக்கு போனபோது பெரியவா என்னைப்பற்றி விசாரிச்சு நான் ஒரு  பெரிய  ஹை ஸ்கூல்லே  சேர்ந்து படிக்கணும்'' னு சொன்னாராம். ESLC  என்கிற எட்டாவது முடிந்தவுடன்  1952 லே மாயவரம் அருகே  ஆனந்த தாண்டவபுரத்திலே  பெரியவாளை பார்த்தேன். 

 ''என்னடா ஹை ஸ்கூல்லே சேர்ந்து படிக்கிறியா? என்று கேட்டார்.   எனக்கு பரம சந்தோஷம் .  அம்மாவிடம் 

 ''நீ  சிதம்பரம் ஜாகை மாத்திக்கோ'' என்று சொன்னார்.   என் அப்பா அம்மாவை விட என் எதிர்கால  மேல்  படிப்பில் அதிக கவனம் பெரியவாளுக்கு இருந்தது  என்பது அப்புறம் தான் எனக்கு புரிந்தது.

சிதம்பரம் ராமஸ்வாமி செட்டியார் ஹை ஸ்கூலில் சேர்ந்தேன். நன்றாக படித்தேன்.  விடுமுறை நாளில் பெரியவாளைச்  சென்று பார்த்தேன்.  பக்தர்களுக்கு பிரசாதம் அனுப்பும்  பணியில் ஈடுபட்டேன்.  பெரியவாளுக்கு நியூஸ் பேப்பர்   படித்து காட்டும் வேலை கொடுத்தார்.   சில்லறை வேலைகள் கொடுத்ததை செய்வேன்.  SSLC  1955ல் எழுதினேன்.  பெரியவா சின்ன காஞ்சிபுரம் போய்விட்டார்.  அடிக்கடி  சிவஸ்தானம், ஓரிக்கை னு  போயிடுவா.  பரிக்ஷை முடிஞ்சு ரெண்டு மாசம் அவரோடு இருந்தேன்.   நான் பாஸ் என்று ரிசல்ட் வந்தது.  

மறுநாள் காலை  பாலாறு போகும்போது ''என்னோடு வா''  என்று என்னையும்   கூப்பிட்டார்.  ஆற்றுநீரில்  அவர் முங்கி ஸ்னானம் பண்ணும்போது ஆற்றில் அவர் பக்கத்தில்  நானும்   இருந்தேன்.  கரையில் பல பேர்  அவருக்காக  காத்திருந்தா.    பெரியவா என்னோடு 15 நிமிஷம் பேசினார்.  அது தான் என் வாழ்க்கையை அப்படியே புரட்டி போட்டது.  எனக்கு  கிடைத்த  ''கீதோபதேசம்''  அது .

''நீ  SSLC  பாஸ் ஆயிட்டே.  என்ன பண்ணப்போறே?''

''அப்பாக்கு  இப்போதான்  ஹெர்னியா  ஆபரேஷன் ஆச்சு.   குடும்பத்திலே பண கஷ்டம்.  நான் ஏதாவது வேலை தேடப்போறேன்''

''ரொம்ப  கெட்டிக்காரத்தனமா எனக்கு பதில் சொன்னதா எண்ணமா ?''
என்னை நேராக முகத்தில் உற்று நோக்கினார்.  சற்று  உரத்தக்குரலில்  பேசினார்;

''நீ  அவரைக்  காப்பாத்தணும்  என்கிறதற்காக  உங்கப்பா படைக்கப்படலே. நீ  நன்னா படிக்கறே. மேலே எவ்வளவு படிக்கமுடியுமோ படி. முன்னுக்கு வா.''
ஆற்றில் முங்கி ஸ்னானம் பண்ணினார். 
என்ன சொல்றார் பெரியவா? யோசித்தேன்.  அவரையே கேட்டேன். 
 
''காலேஜ்லே சேர்ந்து மேலே படிக்கணுமா?'' என்று கேட்டேன். 

''புரிஞ்சுண்டுட்டே''

''விளையாடறேளா,  என் குடும்ப நிலைமை உங்களுக்கு  தெரியாதா?  கேலி பண்ணறேளா. நாலஞ்சு வருஷம்   காலேஜ் படிப்புக்கு  ஆகுமே, பணத்துக்கு எங்கே போறது?

''எப்போவும்  குறைபட்டுண்டு  அழாதே.  இந்த குணம்  எனக்கு பிடிக்காது.  ஹனுமான் எப்படி லங்கையை தாண்டினான்னு தெரியுமோ உனக்கு? எதை வேணுமானாலும் சாதிக்க முடியும் உன்னால்.  உன் உழைப்புலே உனக்கு  தன்னம்பிக்கை இருக்கணும்.''    
அர்ஜுனனுக்கு கண்ணன் சொன்ன கீதை ஞாபகத்துக்கு வந்தது. 
கரையிலே  எல்லோரும் காத்திண்டிருந்தா. 

''பெரியவாளோடு இந்த துரைசாமி பிள்ளை எதுக்கு  தேவை, மரியாதை இல்லாம வாதம் பண்ணிண்டு இருக்கான்?'' என்று பேசுவது கேட்டது.  அவர்களது நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.  கரைக்கு போக திரும்பினேன். 
பெரியவா விடலை. 

 ''என்னடா என் மேலே நம்பிக்கை இருக்கா இல்லையா உனக்கு?''
 'பெரியவா உங்க மேலே பரிபூர்ண நம்பிக்கை எனக்கு''  என் கண்ணிலே ஜலம் .
''அப்படின்னா போய்  அண்ணாமலை பல்கலைக் கழக அப்ளிகேஷன் வாங்கு'' ன்னு என்னை அனுப்பினார்.

சின்ன காஞ்சிபுரம் போய் அப்பா கிட்டே  பாலாறிலே  நடந்ததை சொன்னேன். அப்பா அம்மாக்கு  ரொம்ப  ஆச்சர்யம்.  
''டேய்,   பெரியவா மேல் நம்பிக்கை இருந்தா உடனே அவர் சொன்னபடி செய் போ. என்னாலே உனக்கு உதவி பண்ண முடியாதுடா. வசதியில்லையே. ''

அப்ளிகேஷன் வாங்க இன்னும் கொஞ்சநாள் தான் டைம் இருந்தது.  என் மார்க் லிஸ்ட் ஒரு  GAZETTED ஆஃபீசர் சைன் SIGN பண்ணி  ATTEST பண்ணனும்.  கெசட்டட் ஆபிசர்னா  யாருன்னு எனக்கு தெரியாது.  
அப்போதான்   மட்ராஸ் லிருந்து யாரோ ஆச்சாரமா  மடத்துக்கு வந்திருந்தா.  அவர் கிட்டே என்னுடைய அப்ளிகேஷன்  கொண்டு காமிச்சேன். ''உங்களுக்கு  யாரோ  கெசட்டட் ஆபீஸர்னு இருக்காராமே  அவரைத்  தெரியுமா? ன்னு கேட்டேன்.
''எதுக்கு கேக்கறே?''
''என் மார்க் லிஸ்ட் அவர் தான்  கையெழுத்து போட்டு  ஸ்டாம்ப் குத்தி  தரணுமாம்.  அட்டெஸ்ட்ன்னு  பேராம்  அப்போ தான் வாங்கிக்குவா''
''உன் மார்க் லிஸ்டை நான்  அட்டெஸ்ட் பண்ணி தரேன்''னு சொன்னார்.  
 ''GAZETTED  ஆபிசர் தான்  அட்டெஸ்ட் பண்ணணும் னு போட்டிருக்கு. நீங்க போட்டா எப்படி ஒத்துக்குவா?''
''நான்  மெட்ராஸ் யூனிவர்சிட்டி  CHIEF  PROFESSOR. நான்  அட்டெஸ்ட் பண்ணலாம்'' என்று சொன்னார்.  
''எனக்கு தெரியலே, மன்னிச்சுடுங்கோ. ரொம்ப சந்தோஷம்  நன்றி''
''நிறைய மார்க் வாங்கியிருக்கே. நன்னா படி'' என்றார்.
இது எனக்கு ஒரு பாடம் வாழ்க்கையிலே.  ஒருத்தருடைய உருவத்தை பார்த்து தப்பா எடை  போடக்கூடாது  என்பதை புரிஞ்சுண்டேன்.

தொடரும்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...