Sunday, October 18, 2020

GIRIVALAM

 

             


அண்ணாமலைக்கு அரோஹரா  J K  SIVAN  
 
கிரிவலம்  என்றாலே  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்  நினைவுக்கு வருகிறார்.  ப்ரதக்ஷிணம் என்றால் ஒரு அர்த்தம் இருக்கிறது.  ப்ரதா:  வரம் தருபவர்    க்ஷி:   கர்மத்தை அழிப்பவர்.  ண:  ஞானம் தருபவர். இது எல்லாமே  அருணாச்சலேஸ்வரர்.  அவரை ஒரு பெரிய  லிங்கமாக கற்பனை பண்ணிக்கொள்ளுங்கள். இல்லை கண்ணால்  பாருங்கள்.  வானுக்கும் பூமிக்குமாக  ஒரு பெரிய மலையாக லிங்கமாக தரிசித்தால் அது தான் அருணாச்சலேஸ்வரர்.    இடம்  வலமாக  அவர் ஆலயத்தை சுற்றி மலையை வலம் வருவது தான் கிரிவலம்.  அந்த மலை, அண்ணாமலை தான்  ஆதி லிங்கம்.   எத்தனையோ  யாகம்,யஞம், ஹோமம் பண்ணிய பலன்  கிரிவலம் ஒரு சுற்று வருவது.  உடலுக்கும் ஆரோக்கியம்.  ராத்திரி ஒன்பது மணிக்கு மேல்  கடைசியாக  அருணாச்சலேஸ்வரர் சந்நிதி மூடுமுன் தரிசனம் செய்து  நண்பர்கள் நாங்கள் யாவரும் நடக்க  ஆரம்பித்தோம். பிரதோஷத்துக்கு மறுநாள் நாங்கள் சென்றோம். வழியெல்லாம் ஜெகஜோதியாக வெளிச்சம். நல்ல சௌகர்யமாக வெறும் காலில் நடக்க  பாதை.  மூலிகை மணங்கள்  காற்றில் கலந்து சுவாசிக்க  தெரிந்த சிவ ஸ்லோகங்கள் சொல்லிக்கொண்டு  நடக்கும்போது சிலர்  பாடினார்கள்,  நாம சங்கீர்த்தனம் பண்ணினார்கள். சிரமமே தெரியவில்லை. 13 கி.மீ. போல நடந்தோம்.  எழுபதுக்கு மேல்  பலர்.
சிவராத்திரியில் நடந்தால் கூடுதல் போனஸ் புண்யம். கும்பல் இருக்கும்.  எனக்கு கிடைத்த அமைதி ஏகாந்த பரவசம் சந்தேகம் தான்.  வியாபாரிகள் வேறு தொல்லை.
குளத்தில்  ஸ்னானம் பண்ணிவிட்டு  உலர்ந்த வஸ்திரம் தரித்து, விபூதி ருக்ஷத்திரத்தோடு திறந்த மார்போடு நடப்பவர்கள் தனி உலகைச்  சேர்ந்தவர்கள்.   வழியே  நிறைய  உணவுப்பொருளாக, காசு, தானம் பண்ணுபவர்கள் ஒரு ரகம்.  மனது எதிலும் சிதறாமல்,    எதுவும் பேசாமல்,   சிவ  த்யானம் செய்துகொண்டே  கிரிவலம் வருவது  ஸ்ரேஷ்டமானது.

திருவண்ணாமலை   பஞ்சபூதத்தில்  அக்னி ஸ்தலம்.  சர்வேஸ்வரன்  நெருப்பாக நின்று, மலையாகக் குளிர்ந்த தலம்; நினைத்தாலே முக்தி தரும் தலம்; உமையவளுக்கு இடப்பாகத்தை அளித்து ஈசன் அம்மையப்பராகத் திகழும் தலம்.   புராணங்களில்   இது 
கிருதயுகத்தில் நெருப்பு மலை,  திரேதாயுகத்தில் மாணிக்க மலை,  துவாபுரயுகத்தில் பொன் மலை,  இப்போது நமது கலியுகத்தில் கல் மலை எனப்படுகிறது.    கிரிவலம் வந்து  தீராத நோய்களும் தீர்ந்தவர்கள் உண்டு. பாபங்களும் விலகி மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


கிரிவலம்  ஆரம்பிக்கும் முன் கோயிலுக்கு அருகே இருக்கும் பூத நாராயணரைத் தரிசித்து அனுமதி பெற வேண்டும். பூத நாராயணர்தான் திருவண்ணாமலையின் காவல் தெய்வம். அவரை வணங்கிவிட்டுப் புறப்பட்டால் எந்தவித இடையூறும் இல்லாமல் கிரிவலத்தை முடிக்க முடியும் என்பது நம்பிக்கை. 

பின்னர் வழியில் உள்ள இரட்டைப் பிள்ளையாரை வணங்க வேண்டும். அதன் பிறகு ஆலயம் சென்று அண்ணாமலையாரையும், உண்ணாமுலை அம்பிகையையும் தரிசிக்க வேண்டும். அதன் பிறகு கோயில் ராஜ கோபுரத்தை வணங்கிவிட்டு மலையை வலம் வரத் தொடங்க வேண்டும். கிரிவலத்தை இப்படித்தான் தொடங்க வேண்டும் என்பது நியதி.

திருவண்ணாமலை வயது 260 கோடி வருஷங்கள்  என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள். 2671 மீட்டர் உயரத்துடனும், 14 கி.மீ சுற்றளவுடனும் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது அண்ணாமலை. 

மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம். இவை ஒவ்வொன்றுக்கும்  தனிச் சிறப்பு. ஆதி அண்ணாமலை, நேர் அண்ணாமலை, சந்திர, சூரிய லிங்கங்கள், பதினாறு விநாயகர் கோயில்கள், ஏழு முருகன் கோயில்கள், ஆதி காமாட்சி அம்மன் என்று மொத்தம் 99 கோயில்கள் கொண்ட தெய்விகப் பாதை கிரிவலப் பாதையாகும்.

திருவண்ணாமலையில் சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி, யோகி ராம்சுரத்குமார் ஆகியோரின் ஆசிரமங்கள் இருக்கின்றன.  முன்பதிவு செய்து கொண்டு அறைகள் எடுத்துத் தங்கலாம்.    எந்த நாளிலும்  கிரிவலம் செல்லலாம். பௌர்ணமி தினத்தில் விசேஷம்.   கும்பலும் ஜாஸ்தி.  
கிரிவலம் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள்  என்று  ஒரு லிஸ்ட். :
ஞாயிற்றுக்கிழமை - சிவலோக பதவி கிட்டும் .
திங்கள்கிழமை  - இந்திர பதவி கிடைக்கும்
செவ்வாய்க்கிழமை - கடன், வறுமை நீங்கும் .
புதன்கிழமை - கலைகளில் தேர்ச்சியும், முக்தியும் கிடைக்கும்.
வியாழக்கிழமை - ஞானம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை - வைகுண்டப் பதவி கிடைக்கும்.
சனிக்கிழமை - பிறவிப் பிணி அகலும்.

கிரிவலத்தைப் பற்றி ரமண மகரிஷி  சொன்ன ஒரு கதை: 
ஒரு ராஜா  குதிரைமேல்  அமர்ந்து  ஒரு   காட்டுப் பூனையைத் துரத்தின போது   காட்டுப்பூனை, குதிரை, ராஜா எல்லோருமே இறந்து போனார்கள். மூவரும் ஒரே நேரத்தில் இறந்துபோனாலும் குதிரையும், காட்டுப் பூனை க்கும்  மோக்ஷம் கிடைத்தது.  ராஜாவுக்கு  இல்லை.  ஏன்?    ராஜ கையில்  சிக்க கூடாது என்று காட்டுப்போனாய் ஓடியது.  ராஜா  கட்டளைப்படி  பூனையை துரத்தவேண்டும் என்று  குதிரை  ஓடியது.   ஆகவே ஒரே சிந்தனையுடன் ஓடியதால் குதிரைக்கும், பூனைக்கும் மோட்சம்,  வீடு, மனைவிகள், அதிகாரம், கம்பீரம், பல  எதிர்கால திட்டங்களுடன் ராஜா  குதிரைமேல் துரத்தினான்.  ஆகவே  மோக்ஷம் பெறவில்லை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...