Thursday, October 29, 2020

HUMAN LIFE


 

இது தான்  தீர்க்காயுஸா?    J K  SIVAN 


மற்ற ஜீவன்களுக்கு எப்படியோ தெரியாது. மனிதர்களுக்கு நீண்ட நாள்  வாழவேண்டும் என்ற ஆசை உள்ளூர இருக்கிறது.  இது ஆரம்பத்தில்  மனிதனை ப்ரம்மா படைத்த திலிருந்தே உண்டு என்று ஒரு  சம்பாஷ ணைக்
 கதை உங்களுக்கு தெரியுமா?

பிரம்மா படைக்கும்  தொழிலில்  படு வேகமாக  ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார். ஈ, கொசு, மரம், செடி கொடி, பல்லி , பாம்பு, நாய்  பூனை மனிதன்  என்று பல ஜீவன்களை விடாமல் படைத்துக்கொண்டிருக்கும் நேரம். நாம் பிரமனை அணுகும்போது அவர்  ரொம்ப பிசியாக ஒரு   ஒரு  கழுதையைப்  படைத்துக் கொண்டிருக்கிறார்..

''நான்  யார்  பிரம்ம தேவா?  எனக்கு  என்ன பெயர்? நான்  என்ன செய்யவேண்டும்?''  என்று கழுதை கேட்டது.

'' நீ  இனி  ஒரு கழுதை. உன் வேலை பொதி  சுமப்பது,  காலையிலிருந்து இரவு வரை.  புல்லைத்  தின்பாய். மனிதன் விட்டெறிந்த காகிதம் தின்பாய்.  மூளையில்லை என்று யாரோ யாரையோ திட்டும்போது உன் பேர்  தான் அடிபடும். உனக்கு நான் கொடுத்த  வயது  ஐம்பது வருஷம். சரியா?''

''ஏதோ  நான்  செய்த  கர்மபலன்  கழுதையா கப்  பிறக்க  ஒப்புக்கொள்கிறேன்.  ஆனால்  ஐம்பது வருஷம்  ரொம்ப  ஜாஸ்தி. அவ்வளவு வருஷம் கஷ்டம் எனக்கு வேண்டாமே.  கொஞ்சம் குறைத்து  இருபது வருஷமாகச்செய்யேன்.''

''சரி அப்படியே'' என்றார் பிரம்மா.  
அடுத்தது ஒரு  நாய்.  அதனிடம் ''நீ மனிதன்   வீட்டைக்  காப்பாய். ரொம்ப  நல்ல  நண்பனாக இருப்பாய்.கிடைத்தை  உண்பாய்.  நாயே, உனக்கு  நான் கொடுக்கும் வயசு  30 வருஷம்.''

நாய்  கழுதைபேசியதைக் கேட்டுக் கொண்டிருந் ததால் அதுவும் பேரம்  பேசியது. 

'வேண்டாம் ப்ரம்ம தேவா, எனக்கு தாங்காது  முப்பது வருஷம் குலைக்க முடியாது. தாங்காது.   தெருவில்  அல்லல்  பட்டுக்கொண்டு  அவ்வளவு  காலம்  அடியும் உதையும்  பட்டுக்கொண்டு  ஓட எனக்கு  இஷ்டமில்லை.  இவ்வளவு கஷ்டம்  ஏன் கொடுக்கிறாய்.?  பாதியாக குறைத்து  பதினைந்தாக்கிவிடு'' 

 ''சரி, போ. உன் வயதை 15 ஆக்குகிறேன் '

அருகே இருந்து இதெல்லாம் பார்த்துக் கொண்டு  குரங்கு  சும்மா இருக்குமா?. 

''ப்ரம்மதேவா,  நீ கேட்கும் முன்பே  நானே சொல்லிவிடுகிறேன்.  நீ  ஏன் இவ்வளவு கொடுங் கோலனாக இருக்கிறாய்? என்னை இப்படி   ஆட்டம்  ஆடி தாவி குதித்து  வேடிக்கை காட்ட  விட்டுவிட்டாயே.  இதையே இருபது வருஷம்  பண்ணுவது என்பது முடியாத காரியம்.  பண்ணிப் பார்த்தால்  அல்லவோ  உனக்கு  தெரியும்?  ஏதோ என் விதி ஒப்புக்கொள்கிறேன்.  அவர்களைப்போல் எனக்கும்   பாதி வயசாக பண்ணி அனுப்பு .வேறு  வழி?''

''சரி குரங்கே  உன் வயது பத்து வருஷம்... திருப்தியா? ''

.காது கொடுத்து இதெல்லாம்  கேட்டுக் கொண்டி ருந்த, பார்த்துக்கொண்டிருந்த மனிதன் பிரம்மாவுக்கு சல்யூட் அடித்தான்.'

'என்ன சிரிக்கிறாய், உன் குறை என்ன?  உனக்கும்   பாதி வயசாக  மாற்றவேண்டுமா? சீக்கிரம் சொல்'' 

''ஐயய்யோ, அப்படி எல்லாம் பண்ணாதீர்கள்.  ஒரு சின்ன  வேண்டுகோள் ....

'''ஏண்டா  மனிதா, மற்ற ஜீவன்கள் போல் இல்லா மல், உன்னை  அறிவுள்ளவனாக  படித்துள்ளேனே.  இருவது வயதும்  கொடுத்தேனே.   மற்ற  எல்லா  ஜீவன்களையும்  நீ  ஆட்டிப்படைக்கலாமே.  ஏன்  இன்னும் இங்கேயே  வட்டமிடுகிறாய். சட்டு புட்டென்று சொல்லிவிட்டு போ. என்ன  தயங்குகிறாய்?'

'''எனக்கு நீங்கள் கொடுத்த  இருபது வயது  ரொம்ப  குறைச்சல். கொஞ்சம்  கூட்டவேண்டும் என் வயசை.?

''என்னடா  நீ விசித்திரமாக கேட்கிறாய்?  'எப்படி நீயே  சொல்லேன்?'''

'அந்த கழுதைக்கு  நீங்கள்  குறைத்த  30 வருஷம், அதோடு  நாய்க்கு தள்ளுபடி செய்த  15 வருஷம்,  குரங்கு வேண்டாமென்று சொன்ன 10 வருஷம்  எல்லாம்  வீணாக தானே  போகிறது. அவற்றை எல்லாம்  எனக்கு  சேர்த்து  கொடுத்தால்  உங்களுக்கு ஒன்றும்  குறைந்து விடாதே'

'''சரி,  கொடுக்காவிட்டால்  நீ  நகரமாட்டாய்.  எனவே நீ கேட்டபடியே கொடுத்துவிட்டேன்.

''மனிதன் இப்படி சாமர்த்தியமாக  கேட்டுப்  பெற்ற 75 வருஷம்  எப்படி  நடந்தது அதற்கப்புறம் என்று பார்த்தால்  தான் விளங்குகிறது.

 முதல்  இருவது வருஷம்  மனித குணம்  உள்ளது (கல்யாணம் ஆகும்வரை).!! 
 கல்யாணம்  ஆகி முப்பது வருஷம்  கழுதையாக.   குடும்ப சுமை யாவும் அவன் முதுகிலும் தலை யிலும்!
 குழந்தை குட்டி பிறந்து வளர்ந்து  வரும்போது நாயாய் 15 வருஷம் பள்ளிக்கூடம், காலேஜ், ஹாஸ்டல்,வேலை ,ஆஸ்பத்திரி என்று எங்கெங்கோ அலைகிறான். கிடைத்ததை  முணுமுணுக்காமல் வாலைச் சுருட்டிக் கொண்டு தின்கிறான்.
 வயதாகியபின்  குரங்காக  ஓரிடம்  நில்லா மல்  ஓயாமல் ஒழியாமல்  பெண் வீடு கொஞ்ச காலம்,   பிள்ளை வீடு மீதி நேரம், என்று  ஓடிக்கொண்டு அவர்கள்  சொல்படி ஆடிக்கொண்டு  பேரன்   பேத்திக்கு  குரங்கு மாதிரி ஆடி ஓடி தாவி,  வேடிக்கை  காட்டிக்கொண்டு  காலம்  ஓட்டு கிறான்.  இப்படித்தான்  முக்கால் வாசி மனிதர் களுக்கு  வாழ்க்கை நடக்கிறதோ?  ஒருவேளை மனிதன்  கேட்ட  நீண்ட  ஆயுசு கிட்டத்தட்ட இப்படித்தானா?
எனக்குப் புரியவில்லை!   கொரோனா காலத்தில் இதற்கு மேல் சிந்திக்க முடியவில்லை.!.  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...