Friday, October 16, 2020

MEDITATION

     ஆசையை விட விட  ஆனந்தமாமே.  J K  SIVAN 




ரெண்டாம்  உலக மஹா யுத்தம் நடந்தபோது நான் ஐந்து வயது பையன்.  யுத்தம் என்றால் என்னவென்றே தெரியாது. பத்திரிகைகள் அதிகம் பரவ வில்லை. இப்போது நினைத்துப் பார்த்தால் ரொம்பவே பயமாக இருக்கிறது.  ஒருவேளை  வெள்ளைக்காரர்கள்  தோற்று  இந்தி யாவை  ஜெர்மனி  ஆண்டு, ஹிட்லர்  சர்வாதிகாரியாக  இருந்தால் நம் நிலை என்னவாகி யிருக்கும்?   நம்மை யூதர்கள் கதிக்கு தள்ளி இருந்தால் எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும்?.  கொதிக்கும்   வெந்நீர் பாத்திரத்திலிருந்து அடுப்புக்குள்  நெருப்பில் விழுந்த கதியாகி இருந்தால்?.  ஏதோ ஒரு  தெய்வீக சக்தி நம்மை எப்போதும் காப்பாற்றி வருகிறது. நாம் அதை வணங்காவிட்டாலும் நம்மை அது விடாமல் அன்போடும்  பாசத்தோடும் அணைக்கிறது.  இது நிச்சயம்.  உணர்ந்தவர்கள் இரு கரம் சிரத்துக்கு மேல் கூப்பி நன்றிக்  கண்ணீர்  வடிக்கிறோம்.

ரமண மகரிஷிக்கு  யுத்த காலத்தில் கூட  தினமும் செய்தி வாசிப்பார்கள். கண்ணை மூடி கேட்டுக்கொண்டி ருப்பார்.  யுத்தமோ இல்லையோ எதுவுமே பாதிக்காத  மன நிலை அவரது. கர்ம வினையாக எதையும் ஏற்பவர்.
ஒருநாள்  '' யார் கண்டா.  ஒருவேளை ஹிட்லர் ஒரு ஞானியோ என்னவோ? பகவான் சிருஷ்டி எப்படியோ? கர்ம வினை யாரை விட்டது'' என்றார். 

ஆத்மாவை  புரிந்துகொண்டவன் மறுபடியும் எப்போதாவது அதை இழக்க முடியுமா?  இப்படி ஒரு விசித்திரமான கேள்வியை யாரோ கேட்டபோது பகவான் ரமணர் சொன்ன பதில் ''முடியும்''.   அருகில் இருந்த  கைவல்ய நவநீதம் புஸ்தகத்தை பிரித்தார்.  அதில் ஒரு பக்கத்தை படிக்க சொன்னார்.   ஆரம்ப கால  சாதனையில்  அது நடக்கலாம். ஆசை, விருப்பம் பாசம்,  பந்தம்  மனதில் இருக்கும் வரை எதுவும் நடக்கலாம்.  நமது இயற்கை  ஆனந்த நிலையில் இல்லாமல் தடுப்பது  நமது ''வாசனை''கள்  ATTACHMENT   தானே. பரம பதம்  விளையாடும்போது  பெரிய  பாம்பு வாயில் நமது  சோழி மாட்டிக்கொண்டு வால் வழியாக முதல் கட்டத்துக்கு கீழே இறங்கும் கதி தான். எத்தனை முறை  வேண்டாத புள்ளி  தாயக்கட்டையில் விழுந்து என்னை கீழே இறக்கிவிட்டு, கை கால் உதைத்துக்கொண்டு அழுதிருக்கிறேன். 

 வாசனையிலிருந்து தப்பிக்க உடனே முடியாது. பூர்வ ஜென்ம முயற்சி பாக்கி  கொஞ்சம் இருந்தால் வேண்டுமானால்  இந்த ஜென்மத்தில் முயற்சி பயிற்சி செய்து அதிலிருந்து விடுபடலாம். எல்லோராலும் முடியாத காரியம்.

ஒரு  சின்ன  நிறைவேறாத ஆசை, அட்டச்மெண்ட் இருந்தால் கூட போதும்.  அப்படியே நம்மை புரட்டிப் போட்டுவிடும் என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் கூட சொல்வார்.  ஒரு உதாரணம் சொல்வார்.   ''எனக்கு பட்டு சட்டை,பட்டு குல்லா, போட்டுக்கொண்டு  தங்க மோதிரங்கள் விரலில் அணிந்து  ஹுக்கா பிடிக்கணும்னு  ஆசை. இதெல்லாம் எனக்கு கொண்டுவறுகிறாயா?''  அருகே இருந்த  மதுர நாத் என்பவரிடம் சிரித்துக் கொண்டே கேட்டார்.   மதுரநாத் எல்லாம் கொண்டுவந்து கொடுத்தார்.     கங்கைக்கரையில் பட்டு வேஷ்டி, சட்டை,   தங்க மோதிரங்கள் அணிந்து  ஹுக்கா  எதிரே  அமர்ந்தார்.   

''மதுரா, என்னைப்பார்த்தாயா ? பட்டு  ஆடை, தங்க நகை, ஹுக்கா புகை.   அடுத்த கணம்   தங்க மோதிரங்களை  கங்கையில் எறிந்தார்.  பட்டு ஆடைகளை கிழித்தார்  காலால் மிதித்தார். ஹுக்கா  சட்டியை உடைத்தார்.   ஆசை தீர்ந்து விட்டது. அதுவும் என்னை விட்டு போய்விட்டது. அப்பாடா  நிம்மதி என்று சிரித்தார். 

ஆரம்ப காலத்தில்  ஒருவன் விடாமல் தியானிக்கும்போது மயக்க நிலை வரும்.  அரைமணி நேரம் கூட அந்த  தன்னை மறந்த நிலை இருக்கும்.  விடாமல்  தபஸ்  பண்ணிக்கொண்டே வந்தால்   அடிக்கடி  அந்த ''சமாதி''  நிலை  கை கூடும்  என்று ரமணர் சொல்வார்.   இதை அனுபவித்தவன்  எங்கோ தனியாக  ஒரு மூலையில் எந்த தொந்தரவுமில்லாமல்  அமர்ந்து ஈடுபடுவான். அவனைச்சுற்றி நடப்பது  எதுவுமே அவன் அறியமாட்டான். ஆத்ம ஞானம்  இப்படி தான் வளரும்.   இயற்கை நிலையான  சஹஜ சமாதி இப்படி அடைவார்கள்.  இதற்கு ஒரு  ரூல் கண்டிஷன் எதுவும் இல்லை.  சத்தம் போடாமல் நம்மிடையே  இப்படி சில ஞானிகள் இருக்கலாம். இந்த ஆள் அடிக்கடி நம்மோடு பேசிக்கொண்டே தூங்குபவன் என்று நினைத்துக் கொள்வோம். ஆமாம்  அப்படி தூங்குபவர்களும் உண்டு.   

ஆத்ம ஞான வளர்ச்சியில்  படிப் படியாக கட்டங்கள் என்று எதுவும் இல்லை. சாதனை விடாமல் தொடரவேண்டியது தான் முக்கியம். விடாமல் தொடர்ந்து பழகவேண்டும்.  முழுமை பெறலாம். 

மனோ லயம், சவிகல்ப  சமாதி, நிர்விகல்ப சமாதி, சஹஜ சமாதி என்றெல்லாம் வார்த்தைகள் கேள்விப்பட்டதுண்டா?  தலையை சுற்றுகிறதா? புரியவில்லை இல்லையா.  கொஞ்சூண்டு சொல்கிறேன்.   பேர் மட்டும் தெரிந்து கொள்வோம். உள்ளே போக முடியாது. 
மனோ லயம் என்பது    காலி மனம்.  மனம் எப்படி காலியாகும், ஒன்றுமே உள்ளே இல்லாமல் ?? அது தான் விஷயம்.    

கங்கை நதிக்கரையில் ஒரு யோகி  தவம் செய்தான். ''அடே சிஷ்யா  இந்த  கமண்டலத்தில் கங்கை நீர் கொண்டுவா''  என்று  சீடனை அனுப்பிவிட்டு  தியானத்தில் அமர்தான்.  அவன் கண் விழித்தபோது  ஆயிரம் வருஷங்கள் ஆகி இருந்தது?    கண் விழித்தவன்   கடைசியாக  நினைவில் இருந்த  வாசனை:''தண்ணீர் கேட்டேனே  எங்கேடா??''  எதிரே  சிஷ்யன் எலும்புக்கூடாக கிடந்து பல வருஷங்கள் ஆகி இருந்தது. கங்கை  தடம் புரண்டு எங்கேயோ ஓடியது. அடிக்கடி  வெள்ளத்தில்  கங்கை  கரையை மாற்றிக்கொள்ளும். அதன் போக்கு மாறும் அல்லவா  ஆயிரம் வருஷத்தில் எத்தனை  மாற்றங்களோ?  கண் விழித்துப் பார்த்தால்  எல்லாமே  மாறி இருக்கிறதே!  ஆயிரம் வருஷம் அவன் ''மனோ லயம்'' அடைந்து என்ன பலன் கண்டான்?
மற்றதெல்லாம் அடுத்த கட்டுரையில் சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...