பேசும் தெய்வம்: J K SIVAN
11. '''கஷ்டப்பட்டு படி''
ஸ்ரீ D சுந்தரராமன் மஹா பெரியவா நினைவு
களை கூறுவதை இதுவரை 10 பாகங்களாக பார்த்தோம்.
மேற்கொண்டு சொல்வதையும் கேட்போம்.
''விஞ்ஞான வளர்ச்சி மனித நேயத்தை வளர்ப்பதற்கும், ஒற்றுமையான வாழ்விற்கும் தான் பயன்பட வேண்டும் என்று சொல்லிவிட்டு பெரியவா சற்று மௌனமாக சிந்தித்தார். அணு ஆயுதமில்லாத உலகை விரும்பினார். கல்வி முடிந்தது. 1960 ஜூன் மதம் அண்ணாமலை கலைக்கல்லுரியிலேயே கணித பேராசிரியராக சேர்ந்தேன். அப்போது நிர்வாகத்தில் ஒரு நிபந்தனை. குடுமி வைத்திருக்கும் ஆசிரியர் கள் பாடம் கற்பிக்கும்போது தலைப்பாகையால் தலையை மூடிக்கொள்ளவேண்டும். இதில் எனக்கு சம்மதம் இல்லை. என் ப்ரொபஸர் வி. கணபதி ஐயரிடம் என் எதிர்ப்பை தெரிவித்தேன். பலன் இல்லை. .இதன் காரணமாக அடுத்த வருஷம் என் வேலையைப் பற்றி நான் கவலைப் படவில்லை. யூனிவர்சிட்டி தலைவர் ஸ்ரீ நாராய ணஸ்வாமி பிள்ளை, குடுமி இல்லா விட்டா லும் கூட தலைப்பாகை அணிபவர். வெள்ளைக்கார அரசாங்கம் விட்டுச் சென்ற பழக்கம் இது. எனக்கு வேலை தேவை. என்ன செய்வது? ரெண்டு வக்கீல்கள் எனக்கு எப்படி தலைப்பாகை அணிவதுஎன்று சொல்லிக் கொடுத்தார்கள். என் சிகை புஸ் என்று அடங்காமல் இருக்கும். அதை தலைப்பாகையை திணிப்பது அசௌகரியமாக இருந்தது. என்ன செய்வேன். ஆதி சங்கரரர் பஜ கோவிந்தத்தில் சொல்வது போல் வயிற்றுக் கொடுமைக்காக வெளி வேஷம் போட்டுத்தான் ஆக வேண்டும். மாணவர்கள் என்னைப்பார்த்து சிரிப்பது தெரியும்.
ஒருநாள் தலையை மழுங்க மொட்டை அடித்துக் கொண்டேன். பிறகு கிராப்பு தலையனானேன். காஞ்சிபுரத்திலிருந்து வந்த அம்மாவுக்கு கடுங்கோபம். என்னோடு பேசவே இல்லை. உலகத்தை சந்திக்கும் தைர்யம் எனக்கில்லை யோ? ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியோ?
ஒரு வருஷம் பூரா பெரியவாளைப் போய் பார்க்கா மல் எனக்கு நானே தண்டனை விதித்துக் கொண்டேன். 1960 செப்டம்பர் முதல் 1961 ஆகஸ்ட் வரை காஞ்சிபுரம் போகவில்லை.
ஒரு வருஷம் அனலிலிட்ட புழு. மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரை போய் பார்க்கவேண்டும் என்று முடிவு செய்தேன் ''நல்லவனோ கெட்டவனோ யார் வேண்டுமானா லும் என்னை சந்திக்கலாம்'' என்று சொல்வாரே.
என்னிடம் பேசவே இல்லை. அப்புறம் அடிக்கடி போக ஆரம்பித்தேன். என்னோடு நேரடியாக பேசுவதில்லை. பக்கத்தில் யார் மூலமாவது கேள்வி வரும், பதில் பெற்றுக் கொள்வார். இது எனக்கு ஒரு ஆச்சர்யமான புது அனுபவம். இது என்னை அதிர்ச்சி அடைய வைக்க வில்லை. நேரம் கிடைத்தபோதெல்லாம், நான் அவரை அடிக்கடி காஞ்சிபுரம் சென்று தரிசனம் செய்தேன் .
1962 ஜூன் மாதம் என்னோடு நேரிடையாக பேசினார் 1960ல் செப்டம்பரிலிருந்து அம்மா வோடு சிதம்பரத்தில் ஒரு ஜாகையில் இருந்தேன். அப்பா மடத்தில் பெரியவாளின் உடும்புப் பிடியில் இருந்தாரே.
''உன் அம்மா எப்படி இருக்கா?'' உன் உத்யோகம் எப்படி இருக்கு? எவ்வளவு மாசாமாசம் சேமிப்பு முடிகிறது?'
'நான் சௌகர்யமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டு பிறகு,
''எனக்கு பிக்ஷை கொடுப்பியா?'''
என் கண்களில் பொலபொலவென்று நீர் அருவி..
''கொடுப்பேன் '' என்று அழுது கொண்டே தலை
யாட்டினேன்.
''சரி கண்ணை துடைச்சுக்கோ''
''பகவானே, இது என்ன கூத்து. எனக்காக பிச்சை எடுத்த நீ என்னிடமே பிக்ஷை கேட்கிறாயா?''
நான் அழுது தீர்த்தேன். அவர் காலடியில் வீழ்ந்தேன்.
''அப்படின்னா நான் உன்னை கேட்கிற பிக்ஷை என்ன தெரியுமா?
காரைக்குடியில் ஒரு மஹா வித்வான் இருக்கார். அவரை எனக்கு நன்னா தெரியும். அவர் பைய னுக்கு சிதம்பரத்துலே உன் யூனிவெர்சிட்டியில் தான் M .Sc க்கு அட்மிஷன் கிடைச்சிருக்கு. ரொம்ப பெரிய குடும்பம் அவருக்கு. எப்படியோ பையனை படிக்க வச்சிருக்கார். நீ அந்த பையனை ரெண்டு வருஷம் உன்னோடு வச்சுண்டு அவனுக்கு தங்க இடம், சாப்பாடு தந்து படிக்க உதவணும் . செய்வியா? ''
''நிச்சயம் செய்றேன் பெரியவா''
சில நாட்களுக்கு பிறகு ராமச்சந்திரன் என் வீட்டுக்கு வந்தான். என்னைக் காட்டிலும் கொஞ்சம் சின்னவன். நல்ல நண்பனாகிவிட்டான். என் குடும்பத்திலே ஒருத்தனானான். இப்போது இந்திய ஜியோலாஜிக்கல் சர்வேயில் விஞ்ஞானி. சென்னையில் தான் வாசம். அவன் அப்பா மஹா வித்வான் காலமாகிவிட்டார். இது போல மஹா பெரியவாளுடன் பழகிய அவர் அனுசரணையில் வளர்ந்து பெரியவர்களாகிவிட்ட பலரை எனக்கு தெரியும்.
1963 ஜூன் 30 அன்று எனக்கு கல்யாணம். என் மனைவி லட்சுமி. மதுரை அருகே ஒரு கிராமம். நாராயணபுரம் என்று பேர். அங்கே மஹா பெரியவா முகாம் போட்டிருந்தார். அங்கே சென்றோம். அவர் ஆசி பெற்றோம். பெரியவா கிட்டே எங்கப்பாவை மடத்திலிருந்து எங்க வீட்டுக்கு அழைத்துச் சென்று எங்களோடு இருக்க அனுமதி வேண்டினேன். சந்தோஷமாக அனுப்பினார். அப்பாவும் அம்மாவும் என்னோடு வாழ்வதில் லக்ஷ்மிக்கு ரொம்ப மகிழ்ச்சி. சிதம்பரத்தில் யூனிவர்சிட்டி அருகேயே அண்ணாமலை நகரில் ஒரு ஜாகை அமைத்துக் கொண்டேன். வாழ்க்கை அமைதியாக கழிந்தது.
1966ல் அமெரிக்க கொலம்பியா யூனிவெர் சிட்டி க்கு மேற் படிப்புக்கு விண்ணப்பித்தேன். FULLBRIGHT நிறுவனத்திடம் என் பயணத்துக்கு உதவி கேட்டேன். 1967 ஏப்ரல் மாதம் fellowship கிடைத்தது. பயண சலுகையும் கிடைத்தது.
சிதம்பரத்தில் அண்ணாமலை யூனிவர்சிட்டி எனக்கு மேற்படிப்பு படிக்க ''சம்பளமில்லாத லீவ் கொடுக்க மறுத்தது . வேலையை விட்டுவிட வேண்டிய நிர்பந்தம்.
பெரியவாளை நேரில் சென்று பார்க்க நேரம் கிடைக்க வில்லை. கடிதம் எழுதினேன். பிரசாதம் அனுப்பினார்.
1971ல் கொலம்பியா யூனிவர்சிட்டி டாக்டரேட் Ph .D பெற்றேன். பாலாற்றில் ஸ்னானம் செய்யும்போது 1955ல் மஹா பெரியவா எனக்கு செய்த ''கீதோபதேசம்'' காதில் ஒலித்தது
“உன்னால் எவ்வளவு உசந்த படிப்பு படிக்க முடியுமோ நீ அதற்கு கஷ்டப்பட்டு படி''.
நான் மஹா பெரியவா யூனிவர்சிட்டி ஸ்டு டென்ட். அங்கே படிக்க, ஆர்வம், உழைப்பு, நேர்மை, நாணயம், கூரிய பார்வை, அசையாத கடவுள் நம்பிக்கை, அதிகம் பேசாத அமைதி, எளிமை அவசிய தேவைகள்.
அடுத்த கட்டுரையோடு இந்த தொடர் நிறைவு பெறும்.
No comments:
Post a Comment