பேசும் தெய்வம் J K SIVAN
12. ''பெரியவாளோடு ஐக்கியம்''
டாக்டர் பேராசிரியர், சுந்தரராமன் தனது முதல் மகன் குருப்ரசாத் திருமணத்தை திருப்பதியில் 18.1. 1993 அன்று நடத்தி முடித்து உடனே காஞ்சியில் மஹா பெரியவாளை 21.1.1993 அன்று குடும்பத்தோடு தரிசனம் செய்தார்.
சுந்தரராமன் பேசுகிறார் கேட்போம்:
''கிளம்பும் நேரம் திருப்பதி காட்டேஜ் ரூம் சாவியை எங்கோ வைத்துவிட்டு தேடுவதில் நேரம் ஓடிவிட்டது. உடனே கிளம்பமுடியாமல் கால தாமதம் ஆகியது. மோட்டார் ட்ரைவர்களிடம் காலை 11மணிக்குள் காஞ்சி சென்றால் தான் பெரியவா தரிசனம் கிடைக்குமென்று கேட்டுக்கொண்டேன். திருப்பதியிலிருந்து திருத்தணி வரை மூன்று ரயில்வே கேட்கள் . ஆகவே கால தாமதம் ஆகலாம். எப்படியாவது பெரியவா தரிசனம் கிடைக்கவேண்டுமே. ரெண்டாவது சந்தேகம் தான். எப்போதுமே சாத்தி இருக்கும். என்ன செய்வது?. என் சம்பந்தி ராஜகோபாலனிடம் ''எனக்கு பெரியவா தரிசனம் கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கு'' என்றேன். அப்போது எங்கள் டாக்சிக்கு முன்னாள் சர்ரென்று ஒரு கார் எங்களை ஓவர் டேக் செய்து முன்னாலே கேட் அருகே வந்து நின்றது. அந்த கார் பின் கண்ணாடியில் ''சந்திரசேகர்'' என்று எழுதி இருந்தது.
''அந்த சந்திரசேகரர் உதவி இருந்தால் கேட் திறக்கும் ''' என்று நான் சொன்னதின் அர்த்தம் என் சம்பந்தி ராஜகோபாலனுக்கு புரிந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆகவே ''சந்திரசேகரேந்த்ர ஸரஸ்வதி தான் உதவ வந்திருக்கிறார்'' என்று சொன்னேன். என் முன்னே நின்ற காரின் ட்ரைவர் இறங்கி கேட் கீப்பரிடம் ஏதோ சொல்ல உடனே கதவு திறக்கப்பட்டது. எங்கள் மூன்று டாக்சிகளும் அந்த காரை தொடர்ந்து கேட்டை தாண்டியது. இது தான் சந்த்ரசேகரரை நினைத்ததும் கிடைத்த அவர் உதவி.
விரைவில் மூன்றாவது கேட்டுக்கு சென்றோம். அதுவும் சாத்தி இருந்தது. ரெண்டாம் கேட்டில் நடந்ததே இங்கும் நடக்கவேண்டும் என்று சம்பந்தியிடம் சொன்னேன். ''சந்திரசேகர்'' கார் கேட்டில் நிற்காமல் சுற்றி வளைந்து எங்கோ எங்களை அழைத்து சென்றது. அது ஏதோ ஆந்திர அரசு மந்திரி, அல்லது உயர் அதிகாரி யாருடைய காராவது இருக்கலாம் என்று ராஜகோபாலன் சொன்னார். நாங்கள் அதை தொடர்ந்து சென்று விரைவில் காஞ்சிமடம் சென்றபோது மணி 11..40 என் சகோதரன் கணபதி மனைவியோடு ஏற்கனவே அங்கே வந்து காத்திருந்தான்.
''உங்களுக்காக தான் காத்திருக்கேன். சீக்கிரம் வந்தா பெரியவா தரிசனம் கொடுத்திண்டிருக்கும்போதே பார்க்கலாம் '' என்றான். 11.50க்கு அவர் முன் நின்றோம். பெரியவாள் அருகே நின்ற என் பழைய நண்பர்கள் என்னையும் என் குடும்பத்தையும் ஒவ்வொருவராக பெரியவாளுக்கு அறிமுகம் செய்வித்தார்கள்.
பெரியவா எல்லோருக்கும் பிரசாதம் கொடுத்தபின் திரை மூடப்பட்டது.
அடுத்த நாளே என் இரண்டாவது மகன் பிரபாகருடன் அமெரிக்கா சென்றுவிட்டேன்.
என் கட்டுரையில் ''என் பெரியவா'', கருணாமூர்த்தி, கடவுள்'' என்று தான் அவரைக் குறிப்பிட்டுள்ளேன். என்னால் கடவுளை இப்படித்தான் என்று நிர்ணயம் செய்து விவரிக்க இயலாது. பெரியவாளை இவர் தான் கடவுள் என்று இதற்கு மேல் எடுத்துச் சொல்லவோ, நிரூபணம் செய்யவோ என்னால் முடியாது. ஆழமாக என் மனதில் அவர் தான் என் கடவுள் என்பதில் எனக்கு துளியும் சந்தேகமே இல்லை. பெரியவா மனிதனாக தோன்றிய கடவுள். இரண்டுமே சேர்ந்த கலவை. என்னுடைய வாழ்வின் மிகச் சிறந்த அம்சம் பதினைந்து வருஷங்கள் நான் அந்த தெய்வத்தோடு அவர் பராமரிப்பில் வாழ்ந்த இளவயது வாழ்க்கை. ''
+++
ஜூலை 17, 2014அன்று அமெரிக்காவில் நியூ ஜெர்சி நகரத்தில் ஒரு குருவாரத்தில், வியாழன் அன்று, காஞ்சி மடப்பள்ளியில் பெரியவாளுக்கு அணுக்க தொண்டராக பணியாற்றிய துரைசாமி அய்யர் மகன் அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக பிரபல கணித பேராசிரியர், டாக்டர் சுந்தரராமன் மஹா பெரியவா தாமரை மலரடியில் இணைந்து விட்டார். சிறந்த பக்தர், படிப்பாளி, மஹா பெரியவா தொண்டர் ரொம்ப பாக்கியசாலி. பிறருக்கு கிடைக்காத பேரருள் பெரியவாளிடமிருந்து பெற்றவர். எல்லாம் அவர் புரிந்த பூர்வ ஜன்ம ஸத் கர்ம பலன். இன்னொருவரை அப்படி பார்ப்பது துர்லபம். அமெரிக்காவில் காஞ்சி காமகோடி சேவா நிறுவனம் KKSF தோன்றியதில் சுந்தர்ராமனுக்கு முக்கிய பங்குண்டு. நியூ ஜெர்ஸியில் பெரியவா பாதுகா மண்டபம் உருவாகும் செயதி கேட்டு மகிழ்ந்தார். அதற்கு முதல் காசோலை அளித்தார். அது கட்டி முடியும்போது சுந்தரராமன் இல்லை.
ரொம்ப நீண்ட கட்டுரையாக இருந்ததால் ஒரேயடியாக எழுதாமல் ஒரு டஜன் கட்டுரைகளாக இத்தனை நாள் என்னால் முடிந்தவரை உங்களுக்கு அளித்த பாக்யம் நான் பெற்றது. என் முயற்சிக்கு உங்கள் அனைவரின் ஏகோபித்த மனமுவந்த வரவேற்பு கிடைத்ததில் எனக்கு பத்து வயசு குறைந்து விட்டது. இன்னும் இது போன்ற கட்டுரைகள் எழுத முயல்வேன். ஒரு விஷயம் காஞ்சி மடத்தில் ஒருமுறை ஸ்ரீ சுந்தரராமனை நேரில் சந்தித்து இருவரும் புன்சிரிப்போடு பிரிந்தோம். என்னைவிட ஒன்றிரண்டு வருஷம் மூத்தவர்.
No comments:
Post a Comment