Saturday, October 3, 2020

svkarai agraharam

 சரித்திரம் படைத்த சாம்பவர் வடகரை-13        J K   SIVAN    


இனி சாம்பவர் வடகரை மக்களின் வாழ்க்கை எப்படி இருந்தது  என்று ஒரு  கண்ணோட்டம் செலுத்துவோம்.
நூறு வருஷங்களுக்கு முன்பு  வெள்ளைக்காரன் காலத்தில்  நம்மவர்கள் யாராவது  B.A.பாஸ்  பண்ணிவிட்டால்  ஊரிலேயே  அதிகம், பெரிய படிப்பு, படித்தவன் என்ற மதிப்பு இருந்தது. கிராமத்தில்  ஒன்றிரண்டு பேர் தான்  B.A.  படித்தவர்களாக இருந்தார்கள்.   சாம்பவர் வடகரையில் அப்படி BA  பாஸ் செய்தவராக  ஒன்றிரண்டு  பெயர் சொன்னார்கள்.

வருஷா வருஷம் பஜனைமடத்தில் ஸ்ரீராமநவமி மிக விமரிசையாகவும் விசேஷமாகவும் கொண்டாடினார்கள்.  அக ண்ட  ராம நாமம், திவ்ய நாம   பாராயணம்,  பஜனை, தீபபிரதக்ஷிணம் என  விசேஷங்கள் இன்றும்  நடந்து வருகிறது.              
இந்த ஊரில்  தமிழ்  மலையாளம் கலந்ததாக இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா. ஒவ்வொருவ ருக்கும் அவர் சொந்த பெயர் தவிர ஒரு அடையாள பெயர் உண்டு. வேடிக்கையான சில பெயர்கள் :  கண்ணாடி சார், கிச்சன், சங்கரி (பெண் இல்லை ஆண்) வேதநாராயணனுக்கு  செல்லப்பா,   எஸ் ஆர்  கிருஷ்ணனுக்கு  கண்ணன்,  ஆண்டு அய்யர் பேரன் சங்கரராமன், வேம்பன்.  தெல்லான் (ராமசாமி)   இதெல்லாம்  சில  வினோத பெயர்கள்.

பிரம்மோத்ஸவத்தின் போது அண்டை அசல் கிராமத்து மக்களும் வந்து கலந்து கொள்வார்கள்.  ஜேஜே என்று கூட்டம்.  பத்து நாட்கள் நிறைய கடைகள், விளையாட்டு பொருள்கள், ராட்டினம்,  பலவித விளையாட்டுகள் எல்லாம் இருக்கும்.  கிராம  பிள்ளைகள் கோவில் மாடி மேல் ஏறி விளையாடுவார்கள்.   பத்து நாட்களும் ஸ்வாமி அம்பாள் திருவீதி உலா தேரோட்ட வீதி வழியாக அக்ரஹார  மூன்று தெருக்களுக்குள்ளும்  தரிசனம் தருவார்கள்.  பெரிய தேர் ஒன்று இருந்தது எல்லோரும் வடம் பிடித்து தேரை  இழுப் பார்கள். இந்த தேர் சிதிலம் அடைந்து விட்டதால்,  SVK அக்ரஹார  டிரஸ்ட் நிறுவனம்  ஒரு  நவீன சப்பரம் ஒன்று செய்து அதில் கருடோத்சவம்  நடந்து வருகிறது.

 கார்த்திகை மாதம் 1-ம் தேதி முதல் மார்கழி 11-ம் தேதி வரை ( 41 நாட்கள்) ஒவ்வொரு நாளும் மாலையில் "சிறப்பு" பூஜை நடக்கும்.  ஒரு நாள் பூஜையை ஒவ்வோரு வீட்டாரும் ஏற்றுக் கொள்வார் கள். 41-ம் நாள் மண்டலாபிஷெகம் விமரிசையாக நடத்தப்படும். (தேரோட்ட  திருநாள்)  முதலான
விசேஷங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.  மாதம் இரண்டு முறை பிரதோஷ வழிபாடு தவறாமல் நடக்கும்.  ஸ்வாமி அம்பாளை விருஷ (ரிஷப) வாகனத்தில் ஏற்றி கோவிலை பிரதக் ஷணமாக நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்து வருவார்கள். மற்ற விசேஷ நாட்களில் ஸ்வாமி அம்பாள் அக்ரஹார தெருக்களின் வழியாக வலம் வந்து தரிசனம் அளிப்பார்கள்.

 கோட்டை வாசலை ஒட்டி ஒரு பெரிய மில் கட்டடம்,  தாசில்தார் / கிராம அதிகாரி அலுவலகம், அஞசல் ஆபீஸ், சானிட்டரி ஆபீஸ்-பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம், ஆரம்ப பள்ளிக்கூடம் முதலானவை இருந்தன. சானிட்டரி ஆபீஸ்- பிறப்பு /இறப்பு பதிவாளர் மேற்பார்வையாளர் ஸ்ரீ முத்து கிருஷ்ணய்யர் வடக்குத் தெருவில் வசித்து வந்தார்.  அதே மாதிரி ஆரம்ப பள்ளிக்கூட தலைமையாசிரியர்  ஸ்வாமிநாத சார் ஒற்றைத் தெருவில் வசித்து வந்தார்.

கிட்டு ஐயருக்கு பிறகு கோவிந்த ஐயர், என்ற ஒரு சம்ஸ்கிரத‌ பண்டிதர், சத்திரத்தை நிர்வகித்ததோடு, மாணவர்களுக்கு ஹிந்தி மற்றும் சம்ஸ்கிரதம் பாடமும் நடத்தி வந்தார்.  மேலும் அவ்வப்போது ஊரில் நடக்கும் வைதீக விசேஷங்களிலும் பங்கேற்று ஜப பாடனமும் செய்து வந்தார்.  இவருக்கு பிற்பாடு கிச்சன் என்பவர் சத்திரத்தை கவனித்து வந்தார்.. ஏற்கனவே  சொன்னேனே  இந்த கிச்சனின்  உறவினர் ஒரு பெண்மணி என்னோடு  தொடர்பு கொண்டு சந்தோஷமாக என் கட்டுரை படித்ததை சொன்னார்.

 கிராமத்தில் எல்லா வீடுகளிலும் கிணறு அல்லது கைப்பம்பு  உண்டு. இந்த தண்ணீர் தான் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் மற்ற உபயோகங்களுக்கும் உரியதாக இருந்தது.  ஹனுமான் நதியிலிருந்து சுந்தர பாண்டியபுரம் குளத்திற்கு செல்லும் கால்வாயில் குளிப்பதற்கு அரசடி, புளியமரத்தடி, அத்தான் துறை, பள்ளிவாய்க் கால் என்றும் தெற்கு தெருவில் பிள்ளையார் கோவில் அருகே படித்துறையும் உண்டு. அநேகமாக ஸ்த்ரீகள் அரசடியில் அதிகமாக குளிப்பார்கள்.  ஆண்கள் எல்லா துறைகளிலும் குளிப்பார்கள்.  அரசடியில் ஒரு பெரிய அரச மரமும் அரசமரத்தடி பிள்ளையாரும் உண்டு.  அங்கு அமாவாசை திங்கள் கிழமை அன்று பெண்கள் அரச பிரக்ஷிணம் 108 முறை சுற்றுவார்கள்.
ஊரில் எல்லோருக்கும் தொழில் விவசாயம்தான்.  ஊரிலும் அதன் அருகிலுள்ள குக்கிராமங்களான கம்பிளி, ஒட்டன்குளம்,  ஊர்மேனழகியான் என்ற இடங்களிலும் நம் கிராமத்தார்க்கு நிலம் உண்டு.  பாட்டம் அல்லது குத்தகை என்ற ஒப்பந்த முறையில் மற்ற ஜாதியினருக்கு பயிரிட ஒப்படைத்து, வரும் மகசூலில் ஒப்புக்கொண்ட  விகிதாச்சாரப்படி பாட்டக்காரர்கள் நெல் அளந்து கொடுப்பார்கள். குத்தகைக்காரர்கள் பணமாக கொடுப்பார்கள்.  தங்களுக்கு கிடைக்கும் நெல் அல்லது தானியங்
களில் ஒரு பகுதியை கிராமத்தார்கள்  மொத்த கொள்முதல் வியாபாரிகளுக்கு விற்றும்,  லேவாதேவி என்கிற வட்டிக்கும் கொடுத்து வருமானம் ஈட்டுவார்கள்.  திருவிதான்கூர் சமஸ்த்தானத்தில் நிலச்சுவான்தாரர்கள் அவர்கள் சொத்து உள்ளபடி ஒரு குறிப்பிட அளவு நெல்லை சர்க்காருக்கு கொடுக்க வேண்டும்.  அதற்கு சர்க்கார் நிர்ணயித்த விலைப்படி அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.
வசதியானவர்கள் வீடுகளில் எல்லாம் பசு, எருமை முதலிய கறவை மாடுகளும், சவாரிக்காக காளை மாடுகளும், உழவு மற்றும் கிணற்று இறவை இவற்றிக்காக காளை மாடுகளும் இருக்கும்.   அவரவர் வீட்டில் ஒன்றின் பின் ஒன்றாக கொட்டில்களில் மாடுகள் கட்டப்பட்டிருக்கும். மாடுகளின் பால் கறப்பதை வேலைக்காரர்கள் காலை, இரவு இரண்டுவேளைகளிலும் செய்வார்கள்.  மாட்டு தீவனமாக வைக்கோலும், அரைத்த பருத்திக்கொட்டையும், அரிசி களைந்த தண்ணீரும் கொடுப்பார்கள். பச்சை புல்லும் கொடுப்பதுண்டு.   S  R  கிருஷ்ணன் வீட்டில் நான் தங்கியிருந்தபோது பெரிய பெரிய  அம்மி, இயந்திரம், கல்லுரல்கள்,தொட்டிகள்,தேங்காய் துரு விகள் அடுப்புகள் சில பாத்திரங்கள் இன்னும் இருப்பதை பார்த்தேன்.   
சாம்பவர் வடகரை அக்ராஹாரத்தில் வழக்கமாக நடந்த/நடக்கும்  பண்டிகைகளை மக்கள் எவ்வாறு கொண்டாடினார்கள் என்று கொஞ்சம் சொல்கிறேன்: 
ஒவ்வொரு  ஆவணி அவிட்டம்  அன்றும் பிரம்மச்சாரிகள், கிரகஸ்தர்கள் எல்லோரும் விடியற்காலையிலேயே ஸ்னானம் செய்து சந்தியாவந்தனம் செய்து பிறகு  சமிதாதானமும், காமோகரிஷித் ஜபமும் செய்வார்கள்.  பிறகு காலை சிற்றுண்டி உண்டபின் சுமார் 9 மணி அளவில்  மாத்யானிகம் சந்தி, பிரும்மயஞம் செய்து முடித்துக்கொண்டு எல்லோரும் அரசடி பிள்ளையார் கோவிலில் கூடுவார்கள். அங்கு ஸ்ரீ கோபால கனபாடிகள் எல்லோருக்கும் ஸ்நான சங்கல்பம் செய்து வைப்பார்.  அதன்பின் எல்லோரும் அரசடி படித்துறை கால்வாயில் ஸ்நானம்  செய்வார்கள். ஸ்னானம்  செய்ய முடியாதவர்கள் ப்ரோக்ஷணம் செய்து கொண்டு பின் புத்தாடை அணிந்து பூணல் மாற்றி கொண்டு கண்டரிஷி தர்ப்பணம் செய்து வைப்பார்.  அப்புறம்  அனைவரும் வடக்கு தெரு ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோவிலில் கூடுவார்கள். அங்கு எல்லார் சார்பிலும்  கும்பம் வைத்து ஆவாஹனம் பண்ணி  வ்யாஸ ஹோமம் வளர்த்து தலை ஆவணி அவிட்ட குழந்தைகளுக்கு ஆஹுதியும் காண்டரிஷி ஹோமமும்  நடக்கும்.  ஸ்ரீ ஐயாசாமி தீக்ஷிதர் சுமார் முக்கால் மணி நேரம் வேதாரம்பம் ஜபம் சொல்லச் சொல்ல  எல்லோரும் அதை திரும்ப சொல்வார்கள்.  முடிவில் கும்பத்திற்கும் ஹோமத்திற்கும் நிவேதனம் தீபாராதனை செய்து எல்லோருக்கும் பிரசாதமாக தேங்காய் அப்பம் பழம் முதலியவையெல்லாம்  விநியோகம் செய்வார்கள்.  சிறியவர்கள் பெரியவர்களை நமஸ்காரம் செய்து ஆசிர்வாதம் பெற்றுக்  கொள்வார்கள்.  அதன் பின் எல்லோரும் ஊர்வலமாய் மேளதாளத்தோடு அவரவர் வீடுகளுக்கு முன்பு அவர்கள் வீட்டு பெண்கள் ஹாரத்தி செய்ய  அவரவர்கள் வீடு சென்றடைவார்கள்.

இதே போல் ஜென்மாஷ்டமி (கோகுலாஷ்டமி) அல்லது ஸ்ரீஜெயந்தி வைபவம் பெருமாள் கோவிலில் விசேஷமாக ஆவணி மாதத்தில் கொண்டாடப்படும்.  அவரவர் வீடுகளிலும் கிருஷ்ணர் படம் வைத்து பூஜை செய்வார்கள். உறியடி திருநாளும் நடக்கும்.
 
புரட்டாசி மாசம் நவராத்ரி கொலு அநேகமாக எல்லார் வீடுகளிலும் பெரிதாக வைப்பார்கள்.  எல்லா நாட்களிலும் பூஜை நடக்கும்.  பெண்கள் கலர் கோலம் எல்லாம் போடுவார்கள். சிறுவயது பெண்கள் தட்டில் கலர் கோலம் போட்டு சிவன் கோவில் சென்று ஸ்ரீ மதுரவாணி அம்பாளை ஆராதிப்பார்கள். வீடுகளில் குழந்தைகளையும் சுமங்கலிகளையும் அழைத்து மஞ்சள் குங்குமம் தாம்பூலம், மற்றும் எதாவது நைவேத்தியமும் கொடுப்பார்கள். பெருமாள் கோவிலிலும் நவராத்ரி விசேஷமாக கொண்டாடப்படும்.  சனிக்கிழமை மற்றும் திருவோண நாட்களில் பெருமாள் கோவிலில் கருட சேவையும் நடக்கும்.

ஐப்பசி  மாசம்  தீபாவளி திருநாள்  கொண்டாட்டம் பலே  ஜோர். புத்தாடை அணிந்து, குதூகலமாய் இனிப்பு கார பலகாரங்கள் உண்டு, நிறைய பட்டாசுகள் வெடிப்பார்கள். சிறுவர்கள் தங்களுக்குள் யார் நிறைய பட்டாசு வெடிப்பதென்று ஒருவருக்கொருவர் போட்டி போடுவார்கள். பெண்கள் கோலாட்டம் வைபவம் தொடங்குவார்கள். 40 நாட்கள் ஆன பிறகு கோலாட்டத்தை வெகு விமரிசையாக முடிப்பார்கள். பெண்குட்டிகள் இதற்காக ஒவ்வொரு வீட்டிலும் பணம் பிரிப்பார்கள். வெளியிலிருந்து வரும் பிரமுகர்களின் முன்பும் கோலாட்டம்  ஆடி பணம் அன்பளிப்பாய் பெறுவார்கள்.
 சிவன் கோவிலில் ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.   வெகு வருடங்களாக சுவாமி அம்பாள் சப்பரங்கள் வடக்கு தெரு  மத்தியில் நிறுத்தி வைத்து  அம்பாள் ஸ்வாமியை சுற்றி வந்து சுவாமி அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.   இதையொட்டி  ஸ்கந்த சஷ்டி உற்சவமும் தொடரும்.  

ஸ்கந்தஷஷ்டியை ஒட்டி கோட்டைவாசலில் சூரசம்ஹாரம் நடக்கும். ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோவிலில் இருந்து  சிங்க முகன், யானை முகன், மஹாசூரன்  வேஷமிட்டுக்கொண்டு கோட்டை வாசலில் ஸ்ரீ முருகன் சப்பரம் முன்பு ஆட்டங்கள் ஆடி பின்பு ஸ்ரீ முருகனால் சம்ஹாரம்  செய்யப்படுவார்கள்.  நமது ஊரை விட அருகிலிருக்கும் ஆய்க்குடியில்  ஸ்கந்த  ஷஷ்டி உத்ஸவம் மிகவும் விமரிசையாக இன்றும் கொண்டாடப் படுகிறது. இதை தான் சங்கரகிரிஷ்ணன் படம் போட்டு காட்டினார்.    

கார்த்திகை மாசம் ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோவிலில் கார்த்திகை  1 -ஆம் தேதி முதல் மார்கழி 11-ஆம் தேதி வரை சிறப்பு வழிபாடு நடக்கும்.   பத்ர தீபம் ஏற்றுவார்கள்.  கார்த்திகை பௌர்ணமி கார்த்திகை நக்ஷ்த்திரம்  அன்று அரசடி பிள்ளையார் கோவில், கோட்டைவாசல், தெற்கு தெரு  வரசக்தி விநாயர் கோயில் எல்லா கோயில்களிலும் சொக்கப்பனை தீபம் என்ற (மரம் ஓலை எல்லாம் கூம்பு போல் கட்டி அதனடியில் கோயிலில் இருந்து கொண்டு வரும் தீப்பந்தத்தால் தீ மூடுவார்கள்)  இது திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை ஒட்டிநடக்கும்.  எல்லோரும் அவரவர் வீட்டின் உள்ளும் வாசல் முன்பும் நிறைய தீபம் ஏற்றுவார்கள். சொக்கப் பனையிலிருந்து ஒரு குச்சியில் தீ பற்றவைத்து அதன்மூலம் வீட்டிலுள்ள சுவாமி தீபத்தை ஏற்றுவார்கள். கார்த்திகை அவல் பொரி, நெல் பொரி, அதிரசம் , எல்லாம்  நைவேத்தியம் செய்து உண்பார்கள்.  சிறுவர்கள்  சொக்கப் பனையிலிருந்து ஒரு பத்தை குச்சிகளில் தீ பற்ற வைத்து அதில் கூந்தலிங்கம் தூவி அதில் மத்தாப்பு போல் பொறி பரப்பி விளையாடுவார்கள்.

மார்கழி மாசம் 11-ஆம் தேதி பெருமாள் கோவிலில் மண்டலாபிஷேகம் நடைபெறும்.  மார்கழி மாசம் எல்லா நாளும் பஜனை மடத்திலிருந்து விடியற்காலம் 5 மணிக்கு சுவாமி படத்தை கையிலேந்தி ஊர்வலமாய் மூன்று தெருக்களின் வழியாக பஜனை செய்துகொண்டு சுற்றி வருவார்கள்.

 காலை  5  மணிக்கு சிவன் கோயிலில்,  பெருமாள் கோயிலில் சங்கு ஊதுவது கேட்கும்.   தை அமாவாசை, மாத பிறப்பு, முதலியவை நன்றாக அனுஷ்டிக்கப்படும்.  சிவன் கோவிலில் சிவராத்திரி, மாசி மகம் உத்சவங்கள் உண்டு. பங்குனி உத்திரம் அன்று திருக்கல்யாணம் நடைபெறும்.  சித்திரை மாதம் சிவன் கோவிலில் ப்ரமோத்ஸவம் தேரோட்டம் நடைபெறும்.

சித்திரை  மாச பிறப்பன்று மலையாள வழக்கப்படி சித்திரை விஷு கொண்டாடுவார்கள்.  விடியற்காலை கனி காணும் நிகழ்ச்சி உண்டு.   சுவாமி படம் முன்பு ஒரு தட்டில் தானியங்கள், பழங்கள், தங்கம், வெள்ளி முகம் பார்க்கும் கண்ணாடி, வெற்றிலை பாக்கு எல்லாம் வைத்து, அவற்றை விடியற்காலை எழுந்தவுடன் கண் முழித்து பார்ப்பது தான் கனி காண்பது என்பது.  வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி பேருக்கு (பதினெட்டாம் பெருக்கு) ஆடி அமாவாசை  முதலியவை விசேஷ தினங்கள் .

அப்போதெல்லாம் ஊரில் மின்சாரம் வசதி வரவில்லை.  ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் தான் படிக்கவேண்டும்.

 கணபதி என்ற மினிபஸ் (சிற்றுந்து) சாம்பவர்வடகரைக்கும் செங்கோட்டைக்கும்  இடையே  ஓடும்.
வண்டியின் ஒரு பக்கம் பூரா திறந்திருக்கும். நீள நீளமாக வரிசையாய் இருக்கைகள் இருக்கும்.   வண்டி கிளம்பும் நேரமெல்லாம் கூட்டம் சேருவதை பொறுத்ததுதான். வண்டி தணல்கரி வாயுவில் தான் இயக்கப்படும்.  பெட்ரோல் டீசல் எல்லாம்  கிடையாது. சில வருடங்கள் சென்ற பிறகு ஆயக்குடி செல்லமையர் பாலசுப்ரமணியம் என்ற பஸ் சேவையை துவக்கினார்.  இவ்வண்டி பெட்ரோலில் இயக்கப்பட்டது.  
பள்ளி செல்லும்  மாணவர்கள்  ஒவ்வொரு  நாளும் ஒவ்வொருவருடைய வீட்டு  மாட்டு வண்டியில் பள்ளி  செல்வார்கள்.  மாடுகள் உழவுக்கு போய்விட்டு வண்டி வரவில்லை யென்றால் மூன்று மைல் நட ந்து போவார்கள். 

சர் சி பி ராமசாமி அய்யர் திவானாக இருந்தபோது ஒரு முறை சாம்பவர் வடகரை வந்திருந்தார். கிராம ஜனங்கள் அரசடி பாலம் அருகே பூர்ண கும்ப வரவேற்பு அளித்தார்கள்.  ரயிலில் அப்போதெல்லாம் ஸ்லீப்பர் ரிசேர்வஷன் வசதி எல்லாம் கிடையாது. தென்காசி - மதராஸ் ரயில் கட்டணம் ஐந்து  ரூபாய்.  பத்து மாணவர்கள் சேர்ந்துகொண்டு சலுகையில் பயணசீட்டு எடுத்து பிரயாணம் செய்வார்கள். போய் வர ஐந்து ரூபாய்தான்.  தென்காசிக்கு மாட்டு வண்டி வந்து  மாணவர்களை கூட்டிக்கொண்டு போகும்.   அகரக்கட்டு என்கிற ரயில்வே கேட் அப்போது   இருந்தது. பேருந்தில் ஏறி சாம்பவர் வடகரை வருவார்கள்.   இந்த ஸ்டேஷன் தென்காசிக்கும் கடையநல்லூருக்கும் இடையில் இருந்தது. இப்போது இல்லை.

அந்த காலத்தில் பெண் கல்விக்கு  ஆதரவு இல்லை. பெண்கள் பள்ளிக்கு சென்றாலும் பருவமடைந்த வுடன் படிப்பு முக்கால்  வாசி  நிறுத்தப்பட்டது.  ஆச்சாரமான குடும்பங்களில் பருவமடைந்த பெண்களை வீட்டில் தனியாக ஒரு மறைவில் வைத்து மூன்று நாட்கள் தங்க வைப்பார்கள். அவள் ஸ்நேகிதிகள் ஓரிருவர் அவளோடு  கூட துணையாக இருப்பார்கள். நாலாவது நாள் காலை அவளை ஆற்றிக்கு அழைத்துப்போய் ஸ்நானம் செய்து வைத்து புத்தாடை மாலை எல்லாம் அணிவித்து மேளதாளத்துடன் வீட்டிற்கு அழைத்து "திரண்டகுளி" (இக்கால மஞ்சள் நீராட்டு விழா ) என்று விசேஷமாக கொண்டாடுவது வழக்கம்.  இதெல்லாம்  மறைந்து போய்விட்டது. பெண்கள் மாதவிடாய் காலத்தில் வீட்டின் பின்புறம் ஒரு தனி அறையில் (குச்சில்) தான் இருப்பார்கள். வீட்டிற்குள் அவர்கள் வருவதில்லை. உணவும் அவர்களுக்கு எல்லாரும் உண்ட பிறகே.  அவர்களை மற்றவர்கள் ஒரு பத்தடி தள்ளி நின்றே பார்ப்பதோ பேசுவதோ முடியும் என்பது வழக்கமாய் இருந்தது. மூன்று நாட்கள் கழித்து அவர்கள் ஸ்நானம் செய்து தீட்டு கழித்த பின் தான் வீட்டிற்குள் வரமுடியும்.  இப்படிப்பட்ட இடங்களை  இன்னும்  பழை பெரிய வீடுகளில் கிராமத்தில் பார்க்கலாம். நான்  SRK  வீட்டில் பார்த்தேன்.   தீட்டு  சமாச்சாரம் இப்போது  மறைந்து விட்டது.

1940 ஆம் வருஷம் முன்பு சாம்பவர்வடகரை, சுந்தரபாண்டியபுரம், இலத்தூர்,இந்த மூன்று ஊர்களிலும் ஒருவருக்கு ஒருவர் பெண் கொடுப்பதும் எடுப்பதுமாய் இருந்தது. அதனால் இந்த மூன்று ஊர்காரர்களுக்கும் உறவு முறை நெருக்கமாக இருந்தது.  ஒருவேளை இக்காலம் போல் தொடர்பு  வசதி மிக குறைவாக இருந்ததால் தூரத்து வெளியூர்காரர்களை பற்றிய விபரங்களை விசாரிக்க முடியாததனால் இவ்வாறு இருந்திருக்கலாம். 1950 ஆம் வருஷம் பிறகுதான் தூரத்து வெளியூர் சம்பந்தங்கள் உண்டாக ஆரம்பித்தன.

 தாசில்தார் என்பவரின் புதல்வி I A  S படித்திருந்ததாக சொல்வார்கள்.   ''ஆச்சாமி'' என்கிற சின்ன ராமசாமி  அய்யர் ஹிந்து பத்திரிகை வாங்குவார்.  மற்றவர்கள் தினமணி பேப்பர் தான் வாங்கு
வார்கள்.  பேப்பர் படிப்பதும், பொது விஷயங்களை விவாதிப்பதும்தான் பெரியவர்களின் பொழுதுபோக்கு.  சிலர் மதியம் சீட்டு விளையாடுவார்கள்.

விவசாயத்தில் கார், பிசானம், என்று இரண்டு போகம் உண்டு.  பிசானம் ஆறு மாதங்கள்.  கார் மூன்று மாதங்கள். கார் என்பது வைகாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை இருக்கும்.  இந்த போகத்தில் அநேகமாக மிளகாய் செடி (மிளகு செடி) காய்கறி மற்றும் சில பணபயிர் வகைகள் பயிரிடுவார்கள்.  பிசானம் ஆவணி தொடங்கி  தை  மாசி வரை இருக்கும். இந்த பருவத்தில் அநேகமாய் நெல்  தான் பயிரிடுவார்கள்.  நெல் கதிர் அறுவடை செய்து களம் என்ற வெற்றிடத்தில் போட்டு அடித்து நெல் மணியும் வைக்கோலும் தனி தனியாக பிரித்து எடுப்பார்கள். பின் தானியத்தை குவித்து வைத்து குறியிடுவார்கள்.  நெல் அறுவடை எல்லாம் ஊர்  ஜனங்கள் தான் செய்வார்கள். அவர்களுக்கும், வைத்தியர், நெல் அளக்கும் வைராவி போன்ற எல்லோருக்கும் சம்பளமாக நெல் தான் கொடுப்பார்கள். இந்த தானியத்தை விற்றுதான் நிலச்சுவான் தார்களுக்கு   பணம்
கிடைத்தது. இதில் ஒரு பகுதியை சர்க்காருக்கு அவர்கள் நிர்ணயித்த விலையில் கொடுக்க வேண்டும்.

அறுவடை காலம் கடும் வெயில் காலமாகவே இருக்கும். அங்கங்கு மோர்பந்தல் அமைத்து நெற்கதிர் சுமந்து வருபவர்களுக்கும் மற்றோருக்கும் மோர் இலவசமாக கொடுப்பார்கள்.

புழுங்கல் அரிசி சாதம் தான் அநேக வீடுகளில்.  வேலையாட்கள் நெல்லை அளந்து கொண்டு போய் புழுங்கி, குத்தி அரிசியாக கொண்டுவந்து கொடுப்பார்கள். ஒரு சிறிய அளவு பச்சரிசியும் செய்து வைத்து கொள்வார்கள். இது விசேஷ நாட்களில் மட்டும் சமையலுக்கு உபயோகிக்கப்படும். ரைஸ் மில் வசதி யெல்லாம் அப்போது  ஊரில் கிடையாது.
கிராமத்தில்  நிறைய சிறிய பையன்கள் பெண் பிள்ளைகள் பொழுது போக்கு பற்றி சொல்கிறேன்.   இளைஞர்கள்  படிக்கும் நேரம் தவிர பம்பரம், கிட்டிப்புள், முதலியவை விளையாடுவர். பெண்கள் பாண்டி, நொண்டி, ஸ்கிப்பிங்,
தட்டாமாலை, பல்லாங்குழி. சதுரங்கம் முதலிய விளையாட்டுகளில்   ஈடுபடுவார்கள். ஆற்று மணலில் சடுகுடு என்கிற கபடி, கிளித்தட்டு போன்றவைகளும் பையன்கள் விளையாடுவதுண்டு.   இளைஞர்கள் வாலிபால் பால் பேட்மின்டன் முதலியவை  அப்போதே  இருந்தது.
  திண்ணைகளில்   சீட்டு  கச்சேரிகள் பெரியவர்களால்  மும்முரமாக   பாக்கு புகையிலை,    கூஜா,   சொம்பு  நிறைய தண்ணீர்.. நடு நடுவே  காப்பி யோடு  ஜமாவாக நடக்கும்.   வம்புக்கு பஞ்சமே இல்லை.  கூட்டமாக    அரசியல்  விவாதங்களில்  காரசாரமாக ஈடுபடுவார்கள்.

அடுத்த கட்டுரையோடு  நாம்  சாம்பவர் வடகரையிலிருந்து திரும்புகிறோம் .







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...