Saturday, October 31, 2020

PESUM DEIVAM


 பேசும் தெய்வம் J K SIVAN


ஆசார்யாளும் அரியக்குடியும். 4

இந்த பாரத தேசத்தில் பிறந்து அதிக புண்யம் பண்ணவர்களை எல்லாம் ஒன்றாக கட்டிக் கொண்டுவா என்று தர்மராஜன் ஒரு கட்டளை இட்டான் என்றால் அதை நிறைவேற்றுவது நிச்சயம் ரொம்ப ரொம்ப முடியாத காரியம். ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் அது சுலபமான வேலை. துளி கூட கஷ்டமே இல்லை. ஆமாம். அன்று ஒருநாள் சாயங்காலம் தேவ கோட்டையில் ஒரு சிறிய வீட்டின் பின்புறம் இருந்தவர்கள் அத்தனைபேரும் யாரும் பண்ணாத புண்யம் பண்ணவர்கள். மஹா பெரியவா நடுநடுவே பாடிப் பேசியபடி, ஒரு சிறந்த முத்துஸ்வாமி தீக்ஷிதர் க்ரிதியை அரியக்குடி ராமாநுஜய்யங்காரை விட்டு காம்போதி ராகத்தில் பாட வைத்ததை நேரில் கேட்டார்கள் பாருங்கள் அவர்கள் தான் அந்த அதிக புண்யசாலிகள்.

மஹா பெரியவா அர்த்தம் சொல்லிக் கொண்டே வருகிறார்:

''வேத மந்த்ரங்கள் சொல்வதில் முக்கிய விஷயம் என்ன? அக்னியை உபாசிப்பது. சுப்ரமணிய சுவாமி தான் அக்னிஸ்வரூபம். சிவனின் நெற்றிக்கண் நெருப்புப் பொறி களில் இருந்து உருவானவர். திரிபுரமெரித்த தீயின் ஜ்வாலை. ஆறு பொறிகளால் சிவனின் நேத்ராக்னியால் உருவானவர். ஆகவே, சுப்பிரமணியன் வேதங்களின் தலைவன், தேவன், அப்பனுக்கே பிரணவ மந்திரத்தை பாடம் சொன்ன சுப்பையா .

ஆதி சங்கரரின் ''சுப்ரமணிய புஜங்கத்தில், ''மஹீதேவ தேவம், மஹா வேத பாவம்,'' (bha ) என்று வரும். மஹீதேவா என்றால் பிராம் மணர்கள். மஹீதேவதேவம் என்றால் பிராமணர்களின் தெய்வம். நக்கீரரின் திருமுருகாற்றுப்படையில் கூட ஒரு இடத்தில் முருகனின் ஆறுமுகம் ஒவ்வொன்றும் பக்தனின் வித விதமான ஆசைகளை, வேண்டுதலை நிறைவேற்றும் என்று சொல்கிறார். ''ஒருமுகம் மந்த்ர விதியின் மரபுளி வாழா அந்தணர் வேள்வியோர்க் கும்மே'' .

திருவேரகம் எனும் சுவாமிமலையில் பண்டிதர் கள், அக்னி ஹோம யஞங்களை சுப்ரமண்ய னுக்கு பண்ணுகிறார்கள். வேதம் ஓதி இப்படி ஒரு யஞ கர்மா பண்ணுபவன் தான் ரித்விக். 16 விதமான ரித்விக் குகள் இருக்கிறார்களே அதில் ஒருவன் ஸ்ரீ சுப்ர மணியன்.

சங்கீத மும்மணிகள், திரிமூர்த்திகளில் ஒருவ ரான முத்து சுவாமி தீக்ஷிதர் சுப்ர மணிய பக்தர். ஆதி சங்கரரைப் போலவே இவரும் பல க்ஷேத்ரங் களுக்கு சென்று சுவாமி மேல் பாடியவர். தேவி உபாசகர். தீக்ஷித ருடைய கடைசி க்ரிதி ஞாபகம் இருக்கிறதா? '' ''மீன லோசனி பாச ''.... என்று மதுரை மீனாட்சி அம்மன் மேல் தியானத்தோடு மறைந்தவர். பிறந்தது வளர்ந்தது கிருதிகள் இயற்றியது எல்லாம் சுப்ரமணியன் சம்பந்தப் பட்டவை. அவர் பேரே முத்துசாமி. முத்துக்குமாரசுவாமி சுப்பிரமணியன் பெயர் அல்லவா?.
வைத்தீஸ்வரன் கோவிலில் அற்புத மான சந்நிதி கொண்டவன். தீக்ஷிதருக்கு அந்த பெயர் வந்த காரணம் என்ன தெரியுமா? தீக்ஷிதர் அப்பா ராமஸ்வாமி சாஸ்திரிகள் ஸ்ரீ வித்யா உபாஸகர் . நாற்பது வயதாகியும் புத்ர பாக்யம் இல்லாமல் சோகம். வைத்தீஸ்வரன் கோவில் வந்து, தம்பதிகள் பக்தி ஸ்ரத்தையோடு 45 நாள் விரதம் இருந்தனர்.ராமஸ்வாமி சாஸ்த்ரிகளின் மனைவி கனவில் வயதான ஒரு சுமங்கலி அவள் வயிற்றில் மட்டை தேங்காய், வெற்றிலை பாக்கு தாம்பூல மங்கள வஸ்துக்களை முடிந்து விடுகிறாள். ஏதோ ஒரு ஒளி அவள் கருப்பையில் குடியேறு கிறது. உரிய காலத்தில் பங்குனி க்ரித்திகையில் வைத்டீஸ்வரன் கோவில் முத்துகுமாரஸ்வாமி முத்துஸ்வாமியாக பிறக்கிறான். ஸ்ரீ வித்யா உபாசனை அப்பியாசம் பெறுகிறான். சங்கீதம் கற்கிறான். காசி யில் குருகுல வாசம். தேக வியோகம் அடையும் முன் முத்துசாமியின் குரு,

''நீ தெற்கே போ. முதலில் திருத்தணி சுப்ர
மணியனை நமஸ்கரித்து வணங்கு. அவன் உன் வாழ்க்கையை அப்புறம் எப்படி நடக்க வேண்டும் என்று வழி நடத்துவான் '' என்கிறார்.
முத்துஸ்வாமி தீக்ஷிதர் திருத்தணி சென்றார். கோவில் புஷ்கரணியில் ஸ்னானம் செய்தார். மலை ஏறும்போது எதிரே ஒரு வயதான முதியவர் ''முத்துசாமி இங்கே வா'' என்று கூப்பிடுகிறார். அவரை அணுகி வணங்கிய முத்துஸ்வாமியி்ன் வாயில் ஒரு கல்கண்டை போட்டுவிட்டு ஆசிர்வதித்து கிழவர் மறைகி றார் '' வந்தது யார் என்று முத்துஸ்வாமிக்கு புரிந்து விட்டது. அந்த கணம் முதல் கல்கண்டு போல் இனிமையான சாஹித்யங்கள் அவரிட மிருந்து புறப்பட்டது.
அந்த க்ஷேத்ரத்திலேயே எட்டு கிருதிகள். எட்டு வேற்றுமைகளில் வழங்கினார்.

அவரது ஒவ்வொரு க்ரிதியிலும் ''குரு குஹ'' என்று வரும். அது மாதிரி வரும் பாடல்கள் முத்து சாமி தீக்ஷிதர் இயற்றியவை என அடையாளம். ''முத்திரை'' என்று சொல்வது. குகன் குகையில் இருக்கிறான் என்று அர்த்தம். குகை மனம். நெஞ்ச குகையில் வீற்றிருக்கும் குகன் சுப்ரமணியன்.''


மஹா பெரியவா முத்துஸ்வாமி தீக்ஷிதர் பற்றி, அவர் கீர்த்தனை ''சுப்ரமண்யாய நமஸ்தே'' பற்றி அரியக்குடி ராமானுஜ அய்யங்காரிடம் சொல்லியதை மேற்கொண்டு அறிவோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...