அப்போதே சுகர் சொன்னது.... J K SIVAN
''நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் ? என ஒருவரைக் கேட்டால், கோடம்பாக்கம், மாம்பலம், அடையார் என்று ஏதோ ஒரு ஊர் பேர் சொல்வது வழக்கம்.
''இப்போது கலியுகத்தில் ஸார் '' என்று பதில் வந்தால்? கொஞ்சம் கோணலாக அவரைப் பார்த்துவிட்டு பெருமூச்சுடன் 'ஐயோ பாவம், சின்ன வயசில் இப்படி....'' என்று நகர்வோம்.
நாம் இப்போது இருக்கும் கலியுகத்தில் என்ன நடக்கும் என்பதை அப்போதே ஐயாயிரம் வருஷத்துக்கு முன்பு யோசித்து ஸ்ரீமத் பாகவதம் ஒரு பதினைந்து விஷயங்களை சொல்லியிருக் கிறது. அதை படித்து 'ஆஹா'' என்று பிரமித்துப் போக உங்களை அழைக்கிறேன்..
சொன்னவர் துவாபர யுகத்தில், கிருஷ்ணன் காலத்தில், பரிக்ஷித்துக்கு சுக ப்ரம்மம் ..யார் இந்த பரீக்ஷித்? அர்ஜுனன் பேரன், அபிமன்யு பிள்ளை. ''தக்ஷன் என்ற பாம்பு கடித்து இன்னும் ஏழு நாளில் தான் சாகப் போகிறோம் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டவன். நம்மைப் போல வீடு வாசல், பணம், பெண்டாட்டி, குழந்தைகளை கட்டிக்கொண்டு நான் உங்களை விட்டு போகப்போகிறேனே என்று அழாமல் சுகப் பிரம்ம மகரிஷியை அழைத்து என்னென் னவோ நிறைய விஷயங்கள் இரவும் பகலுமாக கேட்டு துளைத்து எடுத்து தெரிந்து கொள்கிறான். நல்ல ராஜா. அவனால் நாம் எத்தனையோ ஞானம் பெறுகிறோம். இனி பரீக்ஷித் சுகர் சம்பாஷணையை கேட்போம்.
''அடுத்ததாக ஏதோ ஒரு யுகம் வருமாமே. அது என்ன?''
'' கலியுகம்.''
''பேரே நன்றாக இல்லையே. சரி, அதில் என்ன நடக்கப்போகிறது மகரிஷி ? சொல்ல முடியுமா?''
ஆஹா சாஸ்திரங்கள் அதைப் புட்டு புட்டு வைத்திருக்கிறதே. கேள். அரசனே ''
tataś cānudinaṁ dharmaḥ ,satyaṁ śaucam kṣamā dayā ,kālena balinā rājan naṅkṣyaty āyur balaṁ smṛtiḥ ஸ்ரீமத் பா.12.2.1.
''ஒவ்வொருநாளும் கொஞ்சம் கொஞ்சமாக மதம், சத்யம், உண்மை, நாணயம் ( காசு இல்லை நேர்மை)சுத்தம், மன்னிக்கும் குணம், தயை, கருணை, ஆயுள், உடல் வலிமை ஞாபகம் எல்லாமே குறைந்து கொண்டே வரும். காலம் இதை தீர்மானிக்கும். (நாமே இப்போதுள்ள நிலையில் இதெல்லாம் அனுபவிக்கிறோம். இன்னும் வேறு நிறைய இருக்கிறதோ?)
புத்தர் வருவார் என்று சொல்கிறார். கலியுக முடிவில் கல்கி அவதாரம் நடைபெறும் என்கிறார். சைதன்ய மஹா பிரபு பிறக்கப் போவதை முன்கூட்டியே சொல்கிறார்.
ஆரம்பத்தில் சத்ய யுகம் 18,00,000 வருஷ காலம். மனிதனின் வயது அப்போது பத்து லக்ஷம் வருஷம். எத்தனை பிள்ளை, குட்டி, பேரன் பேத்தி, கணக்கு கம்ப்யூட்டரில் கூட போடமுடியாது
.
அப்புறம் த்ரேதா யுகம் - ராமர் காலம் - 12,00,000 வருஷ காலம். அப்போது சராசரி ஒவ்வொரு மனிதனுக்கும் பத்தாயிரம் வருஷம் வயசு. LIC கிடையாது. அட சத்ய யுகத்தைவிட பத்து மடங்கு வயது குறைந்து விட்டதே.
அடுத்தது துவாபர யுகம் - கிருஷ்ணன் காலம் - 800,000 வருஷ காலம். மனிதன் வயது அப்போது சராசரி ஆயிரம் வருஷங்கள். ஐயோ இதென்ன அக்கிரமம். வயஸு பத்து மடங்கு குறைந்து விட்டதே.
இப்போது கலியுகம் நடக்கிறது. இதில் நமக்கு அதிக பக்ஷ வயஸு 100. இன்னும் பத்து மடங்கு குறைந்து விட்டது. நூறு வயதே ஜாஸ்தி. சராசரி 70 தாண்டினாலே அப்புறம் ஒவ்வொரு நாளும் போனஸ்.
இன்னும் போகப்போக 20 வயது 30 வயது ஆனா லேயே அவன் தொண்டு கிழவன். தாத்தா. எப்படி இருக்கு? இப்போதே அங்கும் இங்குமாக ஒரு சில 30-35 வயது ஹார்ட் அட்டாக் மரணங்கள் . படிக்கவோ கேட்கவோ ஷாக் அடிக்கிறது. ஞாபக சக்தி குறைந்து போய்விட்டது. கேட்க கேட்க படிக்க படிக்க எதுவுமே மறந்து கொண்டே போகிறது. நமது தாத்தா கொள்ளு தாத்தா, காவேரியில் வெள்ளத்தில் எதிர் நீச்சல் போட்டார், பனை மரம் ஏறி நுங்கு பறித்தார், தேங்காயை பல்லால் கடித்து உறித்தார். தோட்டத்தில் கரும்பு கண்ணில் பட்டால் ரெண்டு மூன்று கரும்பை கடித்தே நின்றார்.... இதெல்லாம் ஆச்சர்யமான விஷயங்கலாக வாயைப் பிளந்து கேட்கிறோம். ஆஞ்சநேயர் கோவில் மிளகு வடையை கூட நம்மால் கடிக்க முடியவில்லை. பல் அவ்வளவு வீக். WEAK.
மதம், பக்தி, மரியாதை, பதவிசு, எல்லாம் குறைந்துவிடும். இப்போதே மதம் என்று எவனாவது எசகு பிசகு பண்ணினால் சொன்னால் உடனே பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள். .....மத சார்பற்ற.... இதற்கு என்ன அர்த்தம் என்றே எனக்கு இன்னும் புரியவில்லை . கோவில்கள் சிலரது வாழ்க்கைக்கு சவுகரியங் களை தேடித்தரும் சுலப வழியாகிவிட்டதே. கிராமங்களில் கோவில்களில் ஆளே இல்லை. சில கோவில்களில் சாமியே காணோம். அமெரிக்காவுக்கோ எங்கோ சென்றுவிடுகிறது. கோவில் நிலங்கள் பிளாட் ஆகிவிட்டன.
அன்னதானம் நிச்சயம் என்று தெரிந்த சில கோவில்களில் பிச்சைக்காரர்கள், உழைக்காமல் பிழைப்பவர்கள் தான் சாப்பாட்டு நேரத்தில் கண்ணில் படுகிறார்கள். பக்தர்களுக்கு இலவச உணவு சுத்தமாக இல்லையே.
கருணையாவது, காருண்யமாவது, தயையாவது. ஒரு ரூபாய்க்கு குழந்தையை விற்கிறார்கள். அசந்தால் அறுபதுக்கு மேலே கிழவிகள் தங்கச் சங்கிலி தங்கள் உயிர் இரண்டையும் கோட்டை விடுகிறார்கள். மூன்று வயது பெண் குழந்தை யை பாலின வன்மையில் கொல்கிறார் கள். பத்திரிகை டிவி எல்லாமே நிமிஷத்துக்கு நூறு கொலை கொள்ளை பற்றி தான் செயதியும் படமும் போடுகிறது. நல்லவிஷயம் எதையும் சொல்ல பிடிக்கவில்லை.ஆமாம் நமது காலம் கலிகாலம் என்பதை மேற்படி ஸ்லோகத்தி லிருந்து உணர்கிறோம். எப்படி இவ்வளவு துல்லியமாக சுகர் சொல்ல முடிந்தது அதுவும் 5000 வருஷங்களுக்கு முன்னால் .....!
அடுத்ததாக ரெண்டாவது ஸ்லோகம் வரும்.சொல்கிறேன்.
No comments:
Post a Comment