புராண சாகரம் ஸ்ரீமான் வசிஷ்ட பாரதிகள் தமையனார் சீதாராம சாஸ்திரிகளுடன் திருச்சியில் காலை காவேரி ஸ்னானம் நித்ய கர்ம அனுஷ்டானங்கள் முடித்து, மலைக்கோட்டை வெங்கப்பய்யர் ஓட்டலில் போஜனம் முடித்தார்கள். ஒருவாரம் அங்கேயே தங்க உத்தேசம்.
சாயந்திரம் உச்சி பிள்ளையார் கோயிலில் தரிசனம். சுகந்தகுந்தலாம்பாள் சமேத ஸ்ரீ மாத்ரு பூதேஸ்வரர் (தாயுமானவர்) சந்நிதியில் தரிசனம். அடுத்தநாள் காலையில் காவேரி ஸ்னானம்.
இங்கே என்ன செய்வது. புது ஊராக இருக்கிறதே? யாரை சந்திப்பது. யாரையும் தெரியாதே. கையில் காசில்லை. எப்படி சென்னைப்பட்டினம் போவது. என்று அண்ணா கவலைப்பட்டார்.
''அண்ணா எல்லாவற்றுக்கும் நமக்கு ஸ்ரீ ராமன் இருக்கிறான், கவலைப்படாதேங்கோ, வழிகாட்டுவான்'' என்கிறார் வசிஷ்ட பாரதிகள்.
மலைக்கோட்டை அருகே தான் வக்கீல் நீலகண்ட சாஸ்திரி என்று ஒருவர் இருப்பதாக சொன்ன ஞாபகம். ரொம்ப நல்லவர். தர்ம புத்தி, தெய்வ பக்தி நிரம்பியவர் என்று கேள்வி. அவரைத்தேடி பிடிப்போம்.
வீட்டின் பக்கத்தில் தனி அறையில் ஆஃபீஸ் . '' வாங்கோ என்று வரவேற்றார்.
''இவர சீதாராம பாகவதர், என் அண்ணா, நான் தமிழ் புராணங்கள், ராமாயணம் பிரசங்கம் செய்பவன். என் கண் பார்வை சிகிச்சைக்காக சென்னை செல்ல உத்தேசம். இங்கே டவுன் ஹாலில் கம்ப ராமாயண பிரசங்கம் உங்கள் வக்கீல் குழுவின் ஆதரவோடு நடத்திக்கொடுத்து ஆதரிக்க வேண்டும்'' என்று பாரதிகள் சொன்னார்.
இந்த தெருவில் இன்னும் ரெண்டு வக்கீல்கள் இருக்கிறார்கள், அவர்களையும் மற்றவர்களையும் கலந்து பேசி சொல்கிறேன்.மாலை ஆறுமணிக்கு வாருங்கள்''என்றா நீலகண்ட சாஸ்திரி. ஆறுமணிக்கு சென்றபோது டவுன் ஹாலில் ஒரு ஆங்கில சொற்பொழிவு ஏற்கனவே ஏற்பாடு பண்ணியாச்சு. அடுத்த ஞாயிறு ஏற்பாடு பண்ண முடியும், பார்க்கலாம் என்றார் சாஸ்திரிகள்.
வெங்கப்பய்யர் ஹோட்டல் ஒருவாரம் காத்திருந்தார்கள். தினமும் காவேரி ஸ்னானம், மாத்ரு பூதேஸ்வரர் தரிசனம். தினப்படி இருவருக்கும் சாப்பாடு, தங்க செலவு, ஒரு ரூபாய் (100 வருஷங்களுக்கு முன்பு ) . இது வரை பத்து ரூபாய் ஓட்டலுக்கு கட்டி ஆகி விட்டதே. இன்னும் எட்டு ரூபாய் ஆகுமே என்ன செய்வது?
''சாஸ்திரிகளே , டவுன் ஹாலுக்கு காத்திருக்க வேண்டாம். உங்கள் கிரஹத்திலேயே நண்பர்கள் சிலர் சேர்ந்து நிகழ்ச்க்கு ஏற்பாடு பண்ண முடியுமா?''
''ஓ.. இது நல்ல ஐடியா, இப்படி பண்ணிடலாம். நாளை திங்கள் கிழமை சாயந்திரம் என் ஜாகையில் 6.30 மணிக்கு வைத்துக் கொள்ளலாம். ரெண்டு பேரில் யார் பிரசங்கம் பண்ணப்போகிறீர்கள். என்ன தலைப்பு ?''
''என் தம்பி வசிஷ்ட பாரதி பிரசங்கம் பண்ணுவான். கம்ப ராமாயணத்தில் எதை கேட்க இஷ்டமோ அதை கேட்கலாம். சீதா கல்யாணம், வைக்கலாம் என்று நினைக்கிறோம்''
மறுநாள் மாலை அனுஷ்டானங்கள் முடித்து 6.15க்கு தயாராக நீலகண்ட சாஸ்திரிகள் வீட்டில் கூடினார்கள். கேட்பதற்கு 10 பேர் வந்திருந்தார்கள். அப்புறம் சிலர். மொத்தம் 30 பேர் கூட்டம். சீதா கல்யாண உபன்யாசம் தொடங்கி பூர்வாம்சங்களை ஒரு மணி நேரத்தில் முடித்து, பிறகு வால்மீகி ஸ்லோகம் ''இயம் சீதா மம சுதா'' விற்கு சமமான கம்பரின் அற்புத பாடல்
''கோமகன் முன் சனகன் குளிர் நன்னீர்
’பூமகளும் பொருளும் என நீ என்
மாமகள் தன்னொடு மன்னுதி’ என்னாத்
தாமரை அன்ன தடக்கையில் ஈந்தான்'''
சக்கரவர்த்தித் திருமகன் ஸ்ரீ ராமனுக்கு எதிரே வந்து நின்ற சீதையின் தந்தை ஜனக மகாராஜன் அவனுடைய தாமரை போன்ற கையில் குளிர்ந்த நல்ல நீரை வார்த்து சீதையைத் திருமணம் செய்து கொடுத்தான்.
பரமாத்மா மஹா விஷ்ணுவும் தாமரையில் வாழும் ஸ்ரீ லக்ஷ்மியைப் போல என் சிறந்த மகளாகிய சீதையுடன் நீ என்றென்றும் வாழ்க!'' என்று ஆசிர்வதித்தான். தனக்கே உரிய உவமைகள்,வார்த்தை ஜாலங்களுடன் வசிஷ்ட பாரதியார் அற்புதமாக ஒருமணிநேரம் பிரசங்கம் செய்து முடித்தார்.
நீலகண்ட சாஸ்திரிகள் தட்டில் ஐந்து ரூபாய் போட்டார். மற்றவர் ஒரு ரூபாய், ரெண்டு ரூபாய், மூன்று ரூபாய் என்று போட்டதில் மொத்தம் 35 ரூபாய் ராமன் கொடுத்தான்.
இன்னும் நிறைய செய்ய ஆசை. விஷயம் நன்றாக சொல்கிறீர்கள். இப்படி தமிழில் சொல்பவர்கள் அரிது. எங்கும் கேட்டதில்லை. ருசி யாக இருந்தது. சந்தோஷம்.
சென்னபட்டணம் நாளை ராத்தரி போவதற்கு முன் என்ன செய்யலாம் என்று யோசித்து சீதாராம சாஸ்திரிகள், ''திருச்சி பக்கத்தில் திருவானைக்காவில் கோயில் திருப்பணி செய்யும் கானாடு காத்தான் ஊர் காரர் சி.தா. ராமசாமி செட்டியாரை போய் பார்க்கலாம். அவர் அங்கு இருந்தால் அனுகூலம்'' என்றார் .
'அவர் மதுரை போயிருக்கிறார். எப்போது வேண்டுமானாலும் இன்று வரலாம்''என்று செட்டியார் வீட்டில் சொன்னதால் திண்ணையில் ஒதுங்கி பத்து நிமிஷம் கூட ஆகவில்லை. வாசலில் குதிரை வண்டி வந்து இறங்கியது.
''அடடா வரணும் வரணும். ஒரு பத்துநிமிஷத்தில் வந்துடறேன்'' ரயில் பிரயாணம் செய்ததால் ஸ்நானம் பண்ணி, காலை ஆகாரம் முடித்து வந்துவிடுவார் என்றார்கள் வீட்டில். சொன்னபடி வந்தார் பத்தே நிமிஷத்தில். மேலே துண்டு, இடுப்பில் வேஷ்டி.
''என்ன பாகவதர்வாள் சௌக்கியமா? கூட யார், தம்பியா ?''உடம்பு சௌக்கியமா இருக்கீர்களா''
செட்டியார் தமிழ், சங்கீத பிரியர்.
''என்ன விஷயமாக இவ்வளவு தூரம் ?''
''புதுக்கோட்டையிலிருந்து கிளம்பி திருச்சி வந்தோம். சுவாமி தரிசனம், ஒரு நிகழ்ச்சி, சென்னைப்பட்டணம் தம்பியின் கண் பார்வை சிகிச்சைக்கு போகிறோம். ரெண்டு ஒரு நாள் தாமதித்து போனால் இங்கே சில பிரசங்கங்கள் நிறைவேற்றலாம் என்று உத்தேசம்''
''நான் மறுபடியம் அவசரமான ஜோலியாக மதுரை மீண்டும் போகிறேன். திரும்ப தாமதமாகும்'' என்று சொல்லிக்கொண்டே செட்டியார் யோசித்தார். கைப்பையை திறந்தார். ஐம்பது ரூபாய் நோட்டுகள் கொடுத்தார். சென்னை போனால் அங்கே பவழக்கார தெருவில் நமது கடை இருக்கிறது. கைச்செலவுக்கு எப்பவாவது பணம் தேவைப்பட்டால் அங்கே போய் என் பெயர் சொல்லி கடிதம் எழுதி கொடுத்தால் நான் தரச்சொல்லி ஏற்பாடு பண்ணுகிறேன். வாங்கிக்கொள்ளுங்கள்'' என்கிறார்.
இது போல் நிறைய சம்பவங்கள் நிறைந்த என் தாத்தா காஞ்சி பரமாச்சார்யாள் மஹா பெரியவாவிடம் புராண சாகரம் என்ற விருது வாங்கியவர். அவர் மறைந்து நாளை 18.10.2020 எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைகிறது. இன்று நூறு வயது கடந்த என் மாமா சுப்ரமணிய ஐயரை அவர் பிறந்த வீடான புரசைவாக்கம் வெள்ளாள தெரு இல்லத்தில் போனில் தொடர்புகொண்டு வணங்கி ஆசி பெற்றேன். இரு கண்கள் பார்வை பல வருஷங்களுக்கு முன்பே இழந்தவர். அவர் தாத்தாவின் மறைவு நாளான 18.10.1945 அன்று ''எனக்கு திரிகூட ராசப்ப கவிராயரின் திருக்குற்றால மாலை படி த்து காட்டு '' என்று சொல்ல சொல்லி அதை கேட்டு அன்று மாலை இறைவனடி சேர்ந்ததை நினைவு கூர்ந்தார். 100+ மாமா சுப்ரமணிய ஐயர் சொன்னதை கேட்டபோது பட்டினத்தார் திருக்குற்றால நாதனை பற்றி பாடியதுநினைவுக்கு வந்தது. என்ன ஆச்சர்யம். கடைசியில் குற்றால நாதனை நினை என்று பட்டினத்தார் பாடியதை தாத்தா ஞாபகத்தில் வைத்தா கவிராயரை படிக்க சொன்னார்?
பாலுண் கடைவாய்ப்படுமுன்னே மேல்வி ழுந்தே
உற்றார் அழுமுன்னே ஊரார் சுடுமுன்னே
குற்றாலத் தானையே கூறு !
அதோ எருமை தெரிகிறதே, மெதுவாக நகர்ந்துஎன்னை நோக்கி வருகிறது. மேலே அமர்ந்து கையில் என் மீது வீச தயாராக கயிற்றோடு என்னை பார்க்கிறான் யமன். என் கண் பார்வை மெதுவாக மறைகிறது. பஞ்சடைகிறது. வாயில் ஊற்றிய பால் கடைவாய் வழியாக வெளியே தான் திரும்புகிறது. உள்ளே செல்லவில்லை. சொந்தக்காரர்கள் எல்லோரும் என் மேல் விழுந்து அழுகிறார்கள். ஊரார்கள் கூட்டமாக கூடி என்னை எரிக்க தயாராகிறார்கள். இந்த நேரத்திலாவது குற்றால நாதா நான் உன்னை நினைக்க வேண்டாமா?
No comments:
Post a Comment