பட்டினத்தார் J K SIVAN
அற்புத பாடல்கள் சில
பட்டினத்தாரை படித்து வெகுநாள் ஆகிவிட்டதே. இன்று கொஞ்சம் பட்டினத்தார் சொல்வதை கேட்போம். அற்புதமான வேதாந்தி. எங்கே கற்றார் இப்படி எளிமையாக தமிழ் எழுத. அதில் எத்தனை அர்த்தம், உயர்ந்த உண்மைத் தத்துவம் பொதிந்துள்ளது.
பட்டினத்தார் நமது சென்னைப்பக்கம் கரும்பைப் பிடித்துக்கொண்டு காலாற நடந்து எண்ணூர் வந்தார். அப்படியே கொஞ்சம் நகர்ந்த போது திருவொற்றியூர் வந்தது. அங்கே தியாகராஜனை தரிசித்தார். மனம் மகிழ்ந்தது. இனி எங்கேயும் சுற்றவேண்டாம். தேடியது இங்கேகிடைத்தது. தங்கிவிட்டார். பட்டினத்தாரை திருச்சி தேவதானம் நன்றுடையான் விநாயகர் கோவிலில் பார்க்கலாம்.
பட்டினத்தார் பாடல்களுக்கு தனியாக விளக்கம் தேவை இல்லை. எளிதில் புரிகிற தமிழ். அர்த்தம் ஆழமான சொற்கள். இன்று சிலவற்றை ரசிப்போம்.
நினைமின் மனனே ! நினைமின் மனனே
சிவபெரு மானைச் செம்பொனம் பலவனை
நினைமின் மனனே ! நினைமின் மனனே !
அலகைத் தேரின் அலமரு காலின்
உலகப்பொய் வாழ்க்கையை உடலை ஓம்பற்க !
தம்பி கவனமாக இரு. சிவனை மறைந்தவர் எவர் வாழ்ந்தார்? சிவனை நினைத்தவர் எவர் தாழ்ந்தார்? இந்த உடம்பை நினைத்து ஒவ்வொரு நாளையும் ஒட்டுகிறாயே. இது பேய்த்தேர். கண்மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போகக் கூடியது. இதுவா சாஸ்வதம்?
பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்;
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்;
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்;
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்;
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்;
இந்த உலகத்தில் வாழும் எல்லா உயிர்களுக் கும் ரூல் ஒண்ணு தான். பிறப்பு X பிறப்பு, தோற்றம் X மறைவு, பெரிசு X சிறிசு, நினைவு X மறதி, சேர்வது X பிரிவது இதெல்லாம் மாறி மாறி வந்தே தீரும். ஒன்றுக்கு மகிழ்வது இன்னொன் றுக்கு அழுவது எதற்கு. மகிழ்ந்தாலும் அழுதாலும் அது மாறப்போவதில்லை.
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்;
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்;
என்றிவை அனைத்தும் உணர்ந்தனை; அன்றியும்;
பிறந்தன பிறந்தன பிறவிகள் தோறும்
கொன்றனை அனைத்தும், அனைத்து நினைக்கொன்றன.
தம்பி புரிஞ்சுக்கோ. நேற்று சாயந்திரம் நீ விலை அதிகம்கொடுத்து வாங்கி சாப்பிட்டாயே பாதாம் அல்வா எங்கே அது.? இதோ பாத்ரூமில் உட்கார்ந் து கொண்டிருக்கிறாயே. அது தான். நேற்று கம கமவென்று நெய் மணத்ததே .அதுவா? நிறைய தண்ணீர் விட்டு வெளியேற்றா விட்டால் அந்த பக்கமே போகமுடியாது.
எது ஒரு நாள் பிடிக்குமோ மறுநாள் அது பிடிக்காமல் போகிறது. அப்படியும் ஏன் நாம் இதை மறக்கிறோம். பி திரும்ப திரும்ப பல பிறவிகளில் நாம் கொஞ்சமும் மாறாமல் அரைத்த மாவையே திரும்ப ஏன் அரைக் கிறோம். செய்ததையே செயகிறோமே. நாம் ரொம்ப பிடித்து செய்தது சொன்னது தின்றது எல்லாமே திரும்ப நமக்கு வேட்டு வைத்து கொல்கிறது இல்லையா?
தின்றனை அனைத்தும், அனைத்து நினைக் கொன்றன;
பெற்றனை அனைத்தும், அனைத்து நினைப் பெற்றன;
ஓம்பினை அனைத்தும், அனைத்து நினை ஓம்பின;
செல்வத்துக் களித்தனை, தரித்திரத்து அழுங்கினை;
சுவர்க்கத்து இருந்தனை, நரகில் கிடந்தனை;
சர்க்கரை (ஸ்வீட்) நிறைய சாப்பிட்டாயே , இப்போது சர்க்கரை (இனிப்பு) உன்னை தின்கிறதே! முற்பகல் நீ செய்தது உன்னை பிற்பகலில் ஆட்டுவிக்கிறதே. பார்க்கிறோமே நிறைய பேர் தவிப்பதை. இன்னுமா புரிய வில்லை? எதை நீ தேடி ஒரு சமயம் சென்றாயோ
அது உன்னைத் தேடி விஸ்வரூபத்தில் வந்து இச்சமயம் உன்னை வாட்டுகிறதே.
ஒருகாலத்தில் பெரிய செல்வந்தனாக இருந்தாய். ஒருநாள் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் போனாய். ஸ்வர்கத்தில் உனக்கு ஈடு இணை எவரும் இல்லை என்று கொடிகட்டி பறந்தாய். இதோ இப்போது எங்கே இருகிக்கிறாய்? இது நரகம் இல்லையென்றால் வேறு எது?
பட்டினத்தாரை மீண்டும் சந்திப்போம்
No comments:
Post a Comment