அற்புத பாடல்கள் மூன்று
தாயுமானவரை ஞானி என்போமா, அறிஞர் , சாது, கவிஞர், ஞானப் பைத்தியம்-- என்னவென்று சொல்லலாம்? தாயுமானவர் அப்படியே, எங்கு தோன்றுகிறதோ அங்கு மரக்கட்டையாக சமாதியாக அமர்ந்து விடுவார். அடிக்கடி எங்காவது தனியாக ஒரு காடு, தோட்டம் என்று கண்ணில் பட்டால் அங்கே அமைதியாக ஆத்ம சிந்தனையில் ஆழ்ந்துவிடுவார்
.
அப்படித்தான் ஒரு முறை ராமநாதபுரத்தில் எங்கோ ஒரு பெரிய தோட்டத்தில் அவர் நாள் கணக்கில் தொடர்ந்து அமர்ந்திருந்தது தெரியாமல் தோட்டக்காரர்கள் வெட்டிய கிளைகள், சருகுகள், இலைகள், மண் எல்லாவற்றையும் மலையாக அவர் மேல் குவித்து மூடி பற்ற வைத்து விட்டார்கள். உடல் வெந்து கருகி அவர் எதுவுமறியாமால் பரமனோடு இணைந்தார் என்று கேள்விப்படுகிறோம்.
தாயுமானவர் என்றால் மனசு சம்பந்தப் பட்டவை தான். மனசை அடக்கி, ஒடுக்கி, தியானம்.
ராமணருக்கு ரொம்ப பிடித்த ஞானி தாயுமானவர்
அவர் பாடல்கள் எவ்வளவு எளிமையானதாக இருக்கின்றன பாருங்கள்:
''பூதலய மாகின்ற மாயைமுத லென்பர்சிலர் பொறிபுலன் அடங்குமிடமே
பொருளென்பர் சிலர்கரண முடிவென்பர் சிலர்குணம்
போனஇட மென்பர்சிலபேர்
நாதவடி வென்பர்சிலர் விந்துமய மென்பர்சிலர்
நட்டநடு வேயிருந்த
நாமென்பர் சிலர்ருவுஉருவ மாமென்பர் சிலர்கருதி
நாடில்அரு வென்பர்சிலபேர்
பேதமற வுயிர்கெட்ட நிலையமென் றிடுவர்சிலர்
பேசில்அரு ளென்பர்சிலபேர்
பின்னும்முன் னுங்கெட்டசூனியம தென்பர்சிலர்
பிறவுமே மொழிவர்இவையால்
பாதரச மாய்மனது சஞ்சலப் ப்டுமலால்
பரமசுக நிட்டை பெறுமோ
பார்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூர ணானந்தமே.''
இந்த மாயை இருக்கிறதே அது தான் பஞ்ச பூதங்களின் தாய் . இல்லாததை எல்லாம் இருப்பது போல் காட்டுவது என்பார் சிலர். அதோடு மட்டுமா, நமது ஐம்பொறியையும் அல்லவா சேர்த்துக்கொண்டது என்பார் சிலர். கரணங்களை உட்கொண்டது என்று காரணம் காட்டுவார்கள் சிலர். கர்மாவை வளர்ப்பது என்பார்கள் சிலர். குணங்களின் இருப்பிடம் அதுவே என்பார் சிலர். அது தான் உண்மையே என்று அடித்துச் சொல்ப வர்களும் உண்டு. யார் சொன்னது, அப்படி ஒன்றும் கிடையாது. அது தான் நாதம் என்பார்கள் சிலர். ஆன்மாவே அது தானே என்று வேறுபடுபவர் சிலர். பிந்து அதன் பேர் என்று புதிதாக ஒன்றை கற்பிப்பவர்களும் உண்டு. உருவங்களின் ஆதி காரணம் அது ஒன்றே என்று உரக்கச் சொல்பவர்கள் சிலர். அதற்கு ஏதய்யா உருவம், நீ சரியாக ஊன்றிப் பார்க்கவே இல்லை என்று எதிர்ப்போர் சிலர். அமைதியாக இதை கேளுங்கள், எங்கே ஜீவன் தன்னை முற்றிலும் இழந்து சத்யத்தோடு ஒன்று சேர்கிறதோ அது தான் என்று வலியுறுத்தி சொல்பவர் சிலர்.
இறைவன் அருளப்பா அது தான் முடிவான சாஸ்வதம் என்று தலையாட்டுபவர் சிலர். முடிவே இல்லாத பரவெளி என்று ஒரு சிலர். எதுவுமில்லாத வெறுமை தானே அது என்று சிலர்.
அடேயப்பா எத்தனை வியாக்கியானங்கள். விமர்சனங்கள். மனதிலே மயக்கமா? கலக்கமா? நடுக்கமா? மனது பாதரச நிலையை அடைகிறது. என் மனம் இதெல்லாம் நீங்கி நிஷ்டையில் சமாதி நிலையில் ஈடுபடுமா? எங்கும் நிறை பரப்பிரம்மம் நீ தான் அப்பா எனக்கு அருளவேண்டும்.
இன்னொரு அற்புதமான பாட்டு நான் அடிக்கடி பாடுவது ஒன்று சொல்கிறேன்.
''அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி
அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே
அகிலாண்ட கோடியெல்லாந்
தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்
தழைத்ததெது மனவாக்கினில்
தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாந்
தந்தெய்வம் எந்தெய்வமென்
றெங்குந் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது
எங்கணும் பெருவழக்காய்
யாதினும் வல்லவொரு சித்தாகி இன்பமாய்
என்றைக்கு முள்ள தெதுஅது
கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுஅது
கருத்திற் கிசைந்ததுவே
கண்டன வெலாமோன வுருவெளிய தாகவுங்
கருதிஅஞ் சலிசெய்குவாம்''
.
அந்த பேரொளியை என்னவென்று விவரிப்பேன்?
அது எது? பரி பூரண மாக யாவிலும் எப்போதும் நிறைந்த ஆனந்தமாய் அல்லவோ இருக்கிறது! அந்த தெய்வீக அம்ரிதத்துக்கு எது ஈடு? பிரபஞ்சம் பூரா பரவி இருக்கிறதே. துளி இடம் பாக்கி இல்லாமல் எங்குமே, எப்போதுமே, பாயும் கருணை வெள்ளம்.கோடி கோடி அண்டம் என்கிறார்களே அங்கெல்லாமும் தனது பேரன்பை பொழியும் ஜீவ சக்தி எதுவோ அதுவே என் தெய்வம். மனம் வாக்கு காயம் எல்லாவற்றிலும் நிறைந்த பேரமைதி. பேரன்பு. இரவு பகல் காலம் நேரம் எதுவும் இல்லாதது. எண்ணத்திலும் அமைதியிலும் சாந்தத்திலும் பெரு வெளியிலும் நிறைந்தது. அதை தான் நான் போற்றிப் பாடுகிறேன் வணங்குகிறேன்.
இன்னொன்று மூன்றாவது. இத்தோடு 'நிப்பாட்டிக்' (சென்னை தமிழ்) கொள்கிறேன்
''ஊரனந் தம்பெற்ற பேரனந் தஞ்சுற்றும்
உறவனந் தம்வினையினால்
உடலனந் தஞ்செயும் வினையனந் தங்கருத்
தோஅனந் தம்பெற்றபேர்
சீரனந் தஞ்சொர்க்க நரகமும் அனந்தநற்
றெய்வமும் அனந்தபேதந்
திகழ்கின்ற சமயமும் அனந்தமத னால்ஞான
சிற்சத்தியா லுணர்ந்து
காரனந் தங்கோடி வருஷித்த தென அன்பர்
கண்ணும்விண் ணுந்தேக்கவே
கருதரிய ஆனந்த மழைபொழியும் முகிலைநங்
கடவுளைத் துரியவடிவைப்
பேரனந் தம்பேசி மறையனந் தஞ்சொலும்
பெரியமௌ னத்தின்வைப்பைப்
பேசரும் அனந்தபத ஞான ஆ னந்தமாம்
பெரியபொரு ளைப்பணிகுவாம்.''
நான் தான் கண்டு அதிசயிக்கிறேனே. எத்தனை எத்தனை ஜீவராசிகள். எத்தனை எத்தனை பெயர்கள் அதற்கெல்லாம்! என்னன்னவோ உறவு முறைகள் . வித விதமான உடல்கள் உறுப்புகள்! எல்லாம் கர்ம வினையால் தோன்றினவை தானே. மறக்கலாமா? ஆமாம். மறக்க கூடாது. விடாமல் நாம் கர்மம் செய்து கொண்டே அல்லவா இருக்கிறோம் அந்த கர்மங்களின் விளைவு தானே இதெல்லாம். எண்ணங்கள் தான் எத்தனை? இதில் பேர் புகழ் வேறு தேடிக்கொண்டு இருக்கிறோம். எத்தனையோ முறை பார்த்து அனுபவித்த ஸ்வர்க நரகங்கள். எண்ணற்ற பெயர் உரு கொண்ட தெய்வங்களை வணங்கியாய்விட்டது. எதெல்லாமோ மதங்கள் அனைத்தையும் பின்பற்றியாகி விட்டது. எல்லாம் கடந்த எனது துரீய தெய்வமே, உன்னை அறியும் ஞானம் வேண்டும். ,அதற்கு உன் கருணை அல்லவா தேவை. அதைத்தான் தேடுகிறேன்.
வேதங்கள் சொல்லும் நாமமே, விழிப்பு உறக்கம் எல்லாம் கடந்த நீ ஆனந்த மழை பொழியும் தெய்வீக மேகம். துரீயமே. மொழி, பேச்சுக்கெட்டாத பேரின்பமே, ஞான ஆனந்தமே, பெருசுக்கெல்லாம் பெரிசான , சின்னதில் சின்னூண்டான ஏதோ ஒன்றே! உன்னை விழுந்து வணங்குகிறேன்.
தாயுமானவர் புரிகிறாரா? பிடிக்கிறாரா? இன்னும் கொஞ்சம் படிப்போமா?
No comments:
Post a Comment