கீதை என்றால் ஓட வேண்டாம்.. J K SIVAN
எவ்வளவு பெரிய மஹா வீரன். தீரன். ஒரு நொடியில் கலங்கி விட்டான். மயங்கிவிட்டான் இருளில், குருடன் போல் தடுமாற்றம். எங்கு நோக்கினும் பதில் தெரியாத கேள்விகள் அல்லவோ தொங்குகிறது? எது விடை, எங்கே விடை? எந்த பக்கம் திரும்புவது. எங்கும் இதே நிலை தான். என்ன தான் செய்வது நான்? இது தான் அர்ஜுனன் குருக்ஷேத்திர யுத்த களத்தில். எதிரே 18 அக்ரோணி சைன்யங்களுடன் கௌரவர்கள், சே சே, தாத்தா, மாமா, அண்ணன் தம்பி, அத்தன், மாமன், மைத்துனன், பிள்ளை முறை , பெரியப்பா சித்தப்பா....... அடப்பாவிகளா. உங்களை நான் எப்படியடா தாக்குவேன், கொல்வேன் ?
இந்த கேள்விகளுக்கு விடை தான் பகவத் கீதை. சொல்பவன் கண்ணன். அர்ஜுனனுக்கு அல்ல, அவனை சாக்கிட்டு நமக்கு.
கீதை கதை யல்ல, நீண்ட கதையில் ஒரு அத்யாயம் அல்ல. வாழ்க்கை முறை. கடைசி மனிதன் இருக்கும் வரை என்றும் பொருத்தமானது. வாழ்வு, சாவு, வலி, பயம், பந்தம், பாசம், அன்பு, எதிர்ப்பு, கோபம், வெறுப்பு அனைத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கும் விடை. மொத்தம் 18 அத்தியாயங்கள். அத்தனையும் துவண்டு விழுந்தவனை தலை தூக்கி நிற்க வைக்கும் தெம்பு கொடுக்கும் டானிக். பலமளிக்கும் பீம புஷ்டி ஹல்வா.
வாழ்க்கையில் வெற்றிக்கு வழிகாட்டி.
மனிதன் ஒரு ரகசிய சுரங்கம். அவனுள் இருப்பதை அவன் அறியாமலேயே மறைகிறான். பல ஜென் மங்கள் இப்படியே. கழிகிறது. அவனை உள்ளே செலுத்தி அமைதி, சந்தோஷம் காண செய்வது கீதை. மனதை புரிந்து கொள்ளச்செய்யும் மாய மந்திர சொல். தன்னைத் தானே வெல்லும் தந்திர வித்தை.
பயனளிக்கும் பொக்கிஷம். புரியவில்லையே என்று விடாமல் மேலே மேலே படித்துக் கொண்டே போகவேண்டும். ஹிந்துக்களின் ஏகபோக பிரத்யேக சொத்து. கோட்டை விட்டால் நமது துரதிர்ஷ்டம். கிருஷ்ணன் என்ன செய்வான். யோகம், பக்தி, கர்மம், வேதாந்தம் விஞ்ஞானம், ஞானம் சகலமும் அதிலே இருக்கிறது.
புதையலை கையில் கொடுத்தாலும் பிச்சையெடுப்பேன் என்று திரிந்தால் என்ன செய்வது?
701 ஸ்லோகங்கள். மணி மணியான வார்த்தை
கள் கோர்த்தவை. ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த சம்பாஷணையாக பீஷ்ம பர்வம் எனும் பகுதியில் அடங்கியது. சுய கட்டுப்பாடோடு அதை அணுகி பயனுற்றவர்கள் எத்தனையோ பேர். ஆத்ம ஞானம் பெற்றோர் எண்ணில் அடங்காதவர்கள்.
மார்கழி ஏகாதசி சுக்ல பக்ஷத்தில் சஞ்சயன் மூலம் உலகுக்கு தெரிந்தது. உலகத்தில் கீதைக்கு இணையான புத்தகம் எதுவுமில்லை. ஹிந்து சனாதன தர்மம் என்ன வென்று புரியவைக்கும் அழியாத ஞான பீடம். அமிர்த கடல்.
எல்லா உபநிஷதங்களும் ஒரு பசு என்று எடுத்துக் கொண்டால், அந்த பசுவிடம் பால் கறந்து தருபவன் கிருஷ்ணன். பால் தான் பகவத் கீதை. முதலில் பாலை ருசித்தவன் அர்ஜுனன் எனும் கன்றுக்குட்டி, கீதையில் அர்ஜுனன் அனுபவிக்கும் பிரச்னைகள், கவலைகள் எல்லாமே உலகில் அனைவரும் சந்திப்பவை. கடலடியில் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற முத்துக்களை போல் கீதையில் ஞானம் அடங்கியுள்ளது.அதில் ஆழ்ந்து மூழ்கி சிந்தித்து அறிந்து கொள்பவன் செல்வந்தன்.
கீதையைப் பற்றி இன்னும் சொல்வதாக உத்தேசம். கிருஷ்ணன் வழி காட்டட்டும். ஒரு சின்ன கீதை கதை சொல்லி முடிக்கிறேன்.
கங்கை நதிக்கரை ஓரத்தில் ஒரு குடிசையில் வெங்கோப ராவ், அவர் பேரன் ரகோத்தம ராவ் ரெண்டு பேர் மட்டும் வாழ்ந்தனர்
“ தாத்தா!! எப்பவும் நீ கீதை படி படி என்கிறாய். நானும் நிறைய தடவை படிக்கிறேன். ஒண்ணும் புரியலையே. நீயானால் படித்துக் கொண்டே இரு புரியும் என்கிறே. புரியாமல் படித்து என்ன பிரயோஜனம் ?''
வெங்கோப ராவ் பதில சொல்லவில்லை. குமுட்டியை ப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். (ரொம்ப ஆச்சாரமான குடும்பங்களில் காஸ் அடுப்பு உபயோகிப்பதில்லை. இன்னும் சில வீடுகளில் சமையல் கட்டில் குமுட்டி உயிர் வாழ்கிறது) கை எல்லாம் கருப்பா ஒரே அழுக்கு கரித்தூள், எதிரே கரிப்பொடி , நிரம்பிய, ஒரு ஓட்டை பித்தளை பக்கெட்.
''ரகு!! இந்தா இந்த பக்கெட்ல நிறைய தண்ணீர் பிடித்துக் கொண்டுவா.ஓடு !!
ரகு வீட்டின் பின் புறம் சென்று கங்கையில் நீர் மொண்டு உள்ளே வருவதற்குள் நீரெல்லாம் ஒழுகி பக்கெட் காலி.
“போ! மீண்டும் போய் நீர் கொண்டுவா” ஒவ்வொருமுறை நீர் மொண்டு வரும் போதும் ஓடி வேகமாய் வந்தபோதிலும் பக்கெட் நீரெல்லாம் ஓட்டை வழியாய் வெளியேறியது.
“ தாத்தா!! வேறே பக்கட் குடு. தண்ணீர் கொண்டுவரேன்.” – இது பேரன்
“ ஏன் நீ இந்த பக்கெட்லேயே கொண்டுவா” - இது தாத்தா.
கடைசியில் வெறுத்துப் போய் பேரன் ரகோத்தம ராவ் தாத்தாவிடம் கத்தினான் .'' ஏ, தாத்தா! இந்த ஓட்டை பக்கெட்லே எத்தனை தடவை தண்ணீர் ரொப்பினாலும் ரொம்பவே ரொம்பாது . தண்ணீர் மொண்டு ஒரு பிரயோஜனமும் இல்லை”
“ஏன் பிரயோஜனம் இல்லை என்கிறே. பக்கெட் உள்ளேயும் வெளிலேயும் பார்”
பலமுறை கங்கை நீரில் மூழ்கி நீர் நிரப்பியதால் அந்த பித்தளை பக்கெட் உள்ளேயும் வெளியேயும் இருந்த அழுக்கு, கரித்தூள், கறை எல்லாம் போய் பளிச்சென்று மினுமினுத்தது.
எத்தனை முறை படித்தாலும் புரியலை என்றாலும் இந்த கதையிலே வருகிற பித்தளை ஓட்டை பக்கெட் மாதிரி கீதையை படிப்பதால் அர்த்தம் புரியாவிட்டாலும் அது படிப்பவனை உள்ளும் புறமும் மாற்றிவிடுமே. இதுவே போதுமே. இது தான் பிரயோசனமே! இதுக்கு மேலே என்ன வேணும். ''
No comments:
Post a Comment