Thursday, October 8, 2020

GEETHA GOVINDHAM


 

கீத கோவிந்தம்         J K  SIVAN  
ஜெயதேவர் 


                     1.   ராதா,   நீ   யாரம்மா?

ஆத்மார்த்தமான, நம்மிடம் உண்மையிலே  அன்பு, பாசம், தூய நட்பு கொண்டவர்  ஒருவர் கிடைத்தாலே போதும். உலகில்   நம்மை  விட  மிகப் பெரிய அதிர்ஷ்ட சாலி எவருமில்லை. இத்தகைய  நட்பில்  ஆண்பால், பெண்பால், வயது, ஜாதி மத , கற்றவர் கல்லாதவர் வித்யாசம் எதுவும் குறுக்கே வராமல் இருப்பது தான்  தெய்வ சங்கல்பம்.   இம்மாதிரி நட்பு  திடீரென்று  ஒரே நாளில்  மலரலாம், அல்லது  பல வருஷங்களாக பழகி  கனியலாம்.  எல்லாமே எதிர்பாராதவை.  இதற்கு எந்த வித  சுயலாபமும் கருதாத உள்ளன்பு தான் அஸ்திவாரம்.   இன்னொரு  அம்சம், இதில் தற்புகழ்ச்சி, கர்வம், எதிர்பார்ப்பு  எதுவும் இருப்பதில்லை.  இருமனங்களிலும்  ஒன்றாக மலரும்  சந்தோஷம் தான் அடிநாதம்.

கிருஷ்ணன் ராதா நட்பு  இதையெல்லாம் விட  சிறந்த பாசமும் நேசமும் கூட  சேர்ந்தது.    நாம் இருவரல்ல ஒருவரினி தெரியுமா டைப்.  ஒரே ஆத்மாவின் இரு உடல் உருவம்.   இதை மனதில் கொண்டு  ஜெயதேவரின் கீத கோவிந்தத்தை அணுகவேண்டும்.  மிருகத்தனமான  ஆண் பெண் உறவு எண்ணத்தோடு  நெருங்கவே கூடாது.
                                                                           
ஜெயதேவரின்  கீத கோவிந்தம் எனும் அஷ்டபதி  ஸ்லோகங்களை அறியும் முன் கட்டாயம்  ராதவைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.   ராதாவை அறியாமல் கிருஷ்ணனையோ  கீதகோவிந்தத்தையோ அறிய முயல்வது போகவேண்டிய  ஊருக்கு சரியான ரயிலில் 
மூட்டை முடிச்சோடு ஏறுவதற்கு பதில்  வேறு ஏதோ ஒரு ரயில் வண்டியில் ஏறி   தெரியாத ஊருக்கு பிரயாணம் பண்ணுவது  ஆகிவிடும். பலனே  இல்லை. .
  
அவளுக்கு எத்தனையோ பெயர்கள்.ராதா, ராதிகா, ராதா ராணி, ராதிகா ராணி. கிருஷ்ண னுக்கு பிரியமானவளுக்கு கிருஷ்ணனைப்போல் பல பெயர்கள் இருந்ததில்  என்ன ஆச்சர்யம்? . வல்லப, கௌடிய வைஷ்ணவ சம்பிரதாயத்தில் அவள் சக்தி ஸ்வரூபம். நிம்பர்கா வகுப்பினர் ராதாவும் கிரிஷ்ணனும் சத்யத்தின் உருவகம் என கும்பிடுகிறார்கள்.  என்னவோ தெரியவில்லை, மகாபாரதத்திலோ, விஷ்ணு புராணத்திலோ, ஹரி வம்சத்திலோ, பாகவத புராணத்திலோ, ராதாவைக்  காணோம்.  பிரம்ம வைவர்த்த புராணம், கர்க சம்ஹிதை, ப்ருஹத் கெளதமிய தந்த்ரா, போன்ற  நூல்கள் ராதாவைப் பற்றியும் கிருஷ்ணனுடன் அவள் உறவு பற்றியும் பேசுகின்றன.

நம்மைப்  பொறுத்தவரை  ராதா ஒரு முக்ய கோபி.   கிருஷ்ணன் இள வயதில் பல கோபிய ருடன் பிருந்தா வனத்தில் களித்து  விளையாடி வளர்ந்தான். பன்னிரண்டு வயதில் குருகுலத் துக்கு கிருஷ்ணன் சென்றான். பத்து வயது ஏழு மாதம் நிரம்பிய பாலகனாய் கிருஷ்ணன் மதுரா விற்கு சென்றான் என்று  பாகவத புராணம் சொல் கிறது.   க்ரிஷ்ணன் வயதில் தவறு  எங்கோ    இருக் கட்டுமே.  கிருஷ்ணனை விட ராதா பன்னிரண்டு வயதுபெரியவள் என்று கூட சொல்கிறார்கள்.

கீத கோவிந்தம் ராதாவைப் பற்றி நிறைய   பாடு கிறது.   ராதா கிருஷ்ணன் என்று  குழந்தை களுக்கு பேரிடுகிறோம். ஊரெல்லாம் வருஷா வருஷம் ராதா கல்யாணம் நடக்கிறது.   ஆனால்  ராதாவை  கிருஷ்ணன் மனைவியாக பாரதத் திலோ பாகவதத்திலோ  எங்குமே சொல்லவில் லையே?  நிம்பர்கா ஆச்சாரியார், ஜெயதேவர் மூலமாகவே ராதாவை நன்றாக கேட்டு படித்து களிக்கிறோம்.  என்னவோ புரியவில்லை?

நமக்கு தெரிந்தது ராதை கிருஷ்ணனின் நண்பி. பக்தை. விஸ்வாசி, ஆலோசகி. மற்ற கோபியர் அவளது தோழிகள். நாம் பாகவத ஸ்கந்த புராணத்தில் தெரிந்து கொள்வது கிருஷ்ணனுக்கு கணக்கற்ற பக்தைகள். அவர்களில் 16000 பேர் அறியப்பட்டவர்கள். 108 பேர் முக்யமானவர்கள். அவர்களில் 8 பேர் பட்ட மகிஷிகள்.

கிருஷ்ணனோடு  விளையாடிய  கோபியர் அனைவரிலும் பிரதானமானவள் ராதா. மிகவும் நெருக்கமானவள் ருக்மிணியா ராதாவா என்றால் கிருஷ்ணனுக்கு ராதை தான். எல்லா கோபியரும் லக்ஷ்மி அம்சம் தான். ராதா- கிருஷ்ணன் உறவு இருவகைப்படும்.  ஒன்று  ஸ்வகீய ரசம், (நெருங்கிய உறவு)   மற்றது பரகீய ரசம் (உள்ளத்தின் உறவு) சைதன்யரின் பக்தி,  ராதா -கிருஷ்ணனின் இதய பூர்வ - உள்ள உறவு ஒன்றிலேயே லயித்து அது உயர்ந்த அன்பு என்பதே.  உடலால்  தனித்திருந்தாலும்  உள்ளத்தால்  இணைந்தவர்கள். எண்ணத்தால் ஒன்றானவர்கள். கோபியர் கண்ணனிடம் கொண்ட காதல் உத்தம மன நிறைவானது. உடளுக்கு அப்பாற்பட்டது.  மனதில் ஊற்றாக வெள்ளமாக ஊறிய காதல்.  இதற்கு பிரேமை என்று பெயர்.

ராதா யார்? வ்ரிஷபானு என்கிறவர் பூர்வ ஜன்மத்தில் ராஜா சுச்சந்திரா. அவருக்கும் அவர் மனைவி கலாவதிக்கும் பிரம்மா கொடுத்த வரத்தின் பயனாக த்வாபர யுகத்தில் லக்ஷ்மி தேவியே பெண்ணாக அவதரித்தாள். அவளே ராதா.     கலாவதி ராணியே வ்ரிஷ பானுவின் மனைவி கீர்த்தி குமாரி .

ராதை குழந்தையாக இருக்கும்போது நாரதர் அவளைப் பார்க்க வந்தபோது வ்ரிஷபானுவிடம் என்ன சொன்னார் தெரியுமா?

'' இந்த குழந்தை சாதாரணம் இல்லை. லக்ஷ்மிதேவி/.    தாயாராகவே இவளை வளர்த்து வா. இவள் காலடி பட்ட இடம் நாராயணன் இருக்குமிடம். அவரே கிருஷ்ணன் என அறிவாய். '' வ்ரிஷபானுவிடம் ராதை அவ்வாறே வளர்ந்தாள்
.
இன்னும் சொல்கிறேன். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...