பேசும் தெய்வம் J K SIVAN
கன்னடியன் கால்வாய்.
உங்களில் எத்தனை பேருக்கு மிளகு பிள்ளையா ரைத் தெரியும்? தெரியாதவர்களுக்கு சொல்கி றேன்
.
மஹா பெரியவா, "ப்ராசீன லேகமாலா'' என்ற பழைய கல்வெட்டு, செப்பேடுகளில் கண்ட சில விஷயங்களை மும்பையை சேர்ந்த நிர்ணய
ஸாகர் அச்சுக்கூடத்தார் வெளியிட்ட "காவ்யமாலா' என்ற புத்தகத்தில் ஒரு கால்வாய் பற்றி படித்த ஒரு அதிசய விஷயத்தை சொல்கி றார்.
1916 வெள்ளைக்காரன் அரசு அரசாங்க பதிவு, GAZETTE ல் 367ம் பக்கத்தில் ''மிளகு பிள்ளையார்'' பற்றி சொல்கிறது. இந்த கால்வாய், மிளகு பிள்ளை யாருடன் இன்னொரு விஷயமும் சேர்த்தால் தான் விஷயம் முழுதுமாக புரியும்.
இந்த மிளகு பிள்ளையார் எங்கிருக்கிறார்?
சேரன்மஹாதேவி, திருநெல்வேலி பகுதியில், பிராஞ்சேரியில் இருக்கிறார். மழை இல்லா விட்டால் இந்த விநாயகருக்கு மிளகை அரைத்து தேய்த்து அபிஷேகம் செய்து அந்த மிளகு அபிஷேக நீர் பக்கத்தில் உள்ள கன்னடியன் கால்வாயில் விழவேண்டும். அவ்வளவு தான் . காரண்டீயாக மழை கொட்டோ கொட்டு என்று பிய்த்து உதறும். இதென்ன பத்தாம் பசலி நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை என்று சிரிப்ப வர்கள் சிரிப்பை கொஞ்சம் அடக்கிக்கொண்டு இதர பாராக்களையும் படித்து விட்டு உங்களைப்பார்த்தே சிரித்துக் கொள்ளுங்கள்.
ஏறக்குறைய 700 வருஷங்களுக்கு முன்பு திருவானந்தபுர மலையாள ராஜாவுக்கு ஏதோ தீராத ஒரு வியாதி. எந்த “ராஜ வைத்யம்” பண்ணி யும் குணமில்லை.
''பகவானே , ஏனிப்படி சோதனை பண்ணுகிறாய். என்னை குணப்படுத்தேன். நான் உன் பக்தன் இல்லையா? என்று அழுதான். கனவில் வானத் துக்கும் பூமிக்குமாக ஒரு உருவம் தோன்றி
“அடே , ராஜா, உன்னைப் பிடித்திருப்பது உன் கர்ம வினை.நீ அனுபவித்து தான் தீரணும். ஒரு வழி இருக்கிறது. உன் நிஜ அளவுக்கு உருவத்
துக்கு, எள்ளினால் ஒரு பொம்மை பண்ணு . அதற்குள் தங்கம் நிரப்பு. உன் பாபத்தை கர்மவினையை அதற்குள் செலுத்தி யாராவது ஒரு பிராமணனுக்கு அந்த எள் பொம்மையை தானமாக கொடு. நல்லமந்த்ர சக்தி உள்ள ஜபம் பண்ணும் பிராமணனை அது ஒன்றும் செய்யாது. உன் கர்மாவை வாங்கிக் கொள்வதற் காக உள்ளே நிறைய தங்கம் அவனுக்கு பரிசாக வை.. இது தான் பரிஹாரம் ''
எப்போது பொழுது விடியும் என்று ராஜா காத்தி ருந்து கனவில் சொன்னமாதிரி தங்கத்தை நிறைய துவரம் பருப்புமாதிரி மணி மணியாக நிறைய பண்ணி எள் பொம்மைக்குள் அடைத்து தானத்துக்கு ரெடி பண்ணினான். தண்டோரா போட்டு தேசம் முழுதும் அவனது தானம் பற்றி அறிவித்தான். விஷயம் கேள்விப்பட்டு யாரும் தானம் வாங்க முன்வரவில்லை. கேரளம் தாண்டி கர்நாடகாவிலும் தண்டோரா போட்டு தானம் செய்தி பரவியது.
மந்திர சக்தி, காயத்ரி ஜப சக்தி உள்ள ஒரு கன்னட பிரம்மச்சாரி வந்தான். தாரை வார்த்து ராஜா எள்ளு பொம்மையை அந்த பிராமண னுக்கு கொடுத்தான். ஓர் ஆச்சரியம் அப்போது நடந்தது. கால புருஷன் எனும் சக்தி வாய்ந்த ஒரு தர்ம தேவதை ராஜாவின் கர்மவினையை சூழ்ந்து கொண்டு அந்த பொம்மைக்குள் ப்ராண ப்ரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது. பிராமண னைப்பார்த்து கால புருஷன் வலது கையை உயரத் தூக்கிக் கொண்டு தனது சுண்டு விரலையும் கட்டை விரலையும் மடித்துக் கொண்டு மீதி 3 விரலை நீட்டியது. பிராமணன் அதை பார்த்து விட்டு தலையை ஆட்டி “அதெல்லாம் முடியாது” என்றான். காலபுருஷன் மோதிர விரலையும் மடக்கி 2 விரலை மட்டும் நீட்டியது. “அதுவும்கூட முடியாது” பிராமணன் தலையாட்டினான். கால புருஷன் அப்புறம் ஒரே ஒரு விரலை மட்டும் காட்டியது.
”போனால் போகிறது. உன்னிஷ்டப்படியே ஆகட்டும். சரி '' என்றான் பிராமணன். .கால
புருஷன் மறைந்தது.
நடந்தது ஒன்றும் புரியாமல் ராஜா வாயைப் பிளந்துகொண்டு நின்றான். அவனுக்கும் அங்கே இருந்த மற்ற பரிவாரங்களும் பிராமணன் விளக்கமாக சொன்னான்:
'' ஹே கால புருஷா, உனக்கு என்னுடைய மந்த்ர ஜபத்தில் எவ்வளவு பலனைக் கொடுத்தால் நீ என்னைப் பாதிக்காமல் விடுவாய்'' என்று மானசீகமாக கேட்டேன்.
''தினமும் நீ பண்ணும் மூன்று வேளை பண்ணும் திரிகால ஸந்த்யாவந்தன பலனைக் கொடு'' - என 3 விரலைக் காட்டியது.''
அதெல்லாம் முடியாது என்றேன்''
''அப்போ ரெண்டு வேளை பலனை தருகிறாயா உன்னை விடுகிறேன்?'' என்று 2 விரல் காட்டியது.''
அதுவும் முடியாது என்றேன் '
''' சரி ஒருவேளை பலனாவது தருகிறாயா?'' என்றதும் ''சரி போ உனக்காக விட்டுத் தருகி றேன்'' என்றதும் பெற்றுக்கொண்டு அது என்னை விட்டு போய்விட்டது.
( ஒரு வேளை ஸந்த்யாவந்தன மந்த்ர பலனில் அத்தனை கர்மவினையும் தீர்ந்தது. காயத்ரி மந்த்ர வீர்யம் புரிந்துகொண்டு விடாமல் ஒருவேளையாவது சந்தி பண்ணவேண்டும்.')
பிராமணன் ஒருவேளை சந்தியாவந்தன புண்யத்தை விட்டுக்கொடுத்ததால் ராஜாவின் கர்ம வினை தன்மீது இன்னும் ஒட்டிக் கொண்டி ருக்குமோ என்று சந்தேகித்தான். பொதிகையில் வசித்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவு செய்தான்.அதற்கு முன் என்ன செய்தான் தெரியுமா அந்த கன்னட பிரம்மச்சாரி. தங்கம் நிறைந்த எள் பொம்மையை அம்பாசமுத்திரம் என்ற ஊரில் ஒரு நம்பிக்கையான ப்ராமண
னிடம் கொடுத்து நான் திரும்பி வரும் வரை இதை ஜாக்கிரதையாக எனக்காக நீங்கள் வைத்திருங்கள்'' என்றான்.
அகத்தியரை பொதிகைமலையில் சந்தித்த போது அந்த கன்னட ப்ரம்மச்சாரியிடம் '' நீ பெற்றுக்கொண்ட ராஜாவின் கர்மம் தொலையவேண்டுமானால் தானத்தில் உன்னதமான ஜலதானம் செய் . இதோ இந்த பொதிகை மலையிலிருந்து நீ கீழே இறங்கிச் செல்லும் போது, வழியில் ஒரு பசு நிற்கும். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் குறித்துக் கொள். அந்த வழியாக கால்வாய் வெட்டு. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே பெரிய ஏரியைத் தோண்டு...' என்றார்.
அகஸ்தியரே பசுவாக மாறி, வழி காட்டி ஒரு இடத்தில் மறைந்து விட்டார். அவர் பசுவாக சென்ற வழியெல் லாம் கால்வாய் தோண்டினான். அவன் யார் என்ன பெயர் என்று தெரியாவிட் டாலும். இன்றும் அந்த கால்வாய் கன்னடியன் கால்வாய் என்று பெயரில் உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மிக நீண்ட பாசனக் கால்வாய் . அது முடியும் இடத்தில், "பிராஞ்சேரி' என்ற ஊரில் பெரிய குளம்/ஏரி , தோண்டினான்.
''பகவானே, நான் கால்வாய் தோண்டினாலும் வருஷம் முழுதும் ஜலம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமே என்று கவலை. மூன்றாண்டுகள் மழை பொழியாமல் கால்வாய் வறண்டு விட்டதே என்று அங்கே ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து வேண்டியதும்,
''எனக்கு மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அப்புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தால் மழை வரும்'' என்கிறார் விநாயகர். அப்படியே செய்தான். . மழை கொட்டித் தீர்த்தது.
அந்த விநாயகர் தான் "மிளகு பிள்ளையார்'
கால்வாய் வெட்டிய கன்னடியன் அம்பாசமுத்ரம் போய் தான் கொடுத்த தங்கம் நிறைந்த எள் பொம்மையை கேட்டபோது தங்கத்திற்கு பதிலாக மஞ்சள் துவரம்பருப்பை போட்டு அந்த மனிதன் கன்னடியனை ஏமாற்றினான். ''நீ கொடுக்கும்போது பொம்மைக்குள் துவரம்பருப்பை நிறைத்து வைத்துவிட்டு இப்போது தங்கத்தை கொண்டுவா என்கிறாயே, நான் எங்கே போவேன் தங்கத்துக்கு'' என்று நடித்து அழுதான்.
கன்னட பிரம்மச்சாரி வருத்தத்தோடு திருவனந் தபுரம் ராஜாவிடம் ஓடி விஷயம் சொன்னான். தன்னைக் குணப்படுத்திய இளைஞனின் உயர்ந்த நோக்கத்தை அறிந்த ராஜா ஏமாற்றிய அந்த அம்பாசமுத்திரத்துக்காரனை ஒரு சிவாலயத்தில் சிவனுக்கு முன்னால் சத்தியம் செய்யச் சொன்னார். அந்த மனிதன் பொய் சத்தியம் செய்ததால், எரிந்து போனான்.
வெள்ளைக்காரன் GAZETTE ல் பதிவு செய்த மிளகு பிள்ளையார், கன்னடியன் கால்வாய் நிதர்சன மாக இன்றும் இருக்கிறது. மஹா பெரியவா இந்த கதையை சொல்லியதை தெய்வத்தின் குரல் 7வது பாகத்தில் பார்க்கலாம்.
காலப்போக்கில் உண்மைகள் நிறம் மாறினா லும் அதன் உள் புதைந்திருக்கும் சத்யம் மாறாது. எனக்கு இந்த கதை ரொம்ப பிடித்ததால் உங்களுக்கும் சொன்னேன்.
No comments:
Post a Comment