பேசும் தெய்வம் J K SIVAN
ஆசார்யாளும் அரியக்குடியும். 2
எப்படித்தான் அந்த சிறிய கிராமத்தில் செய்தி வேகமாக பரவியதோ தெரியவில்லை. சங்கீத சக்ரவர்த்தி என்று கொடி கட்டி பறக்கும் ஸ்ரீ அரியக்குடி ராமாநுஜய்யங்கார் மஹா பெரிய வாளை பார்க்க வந்திருக்கிறார், பாடப் போகி றார்...... அந்த சிறிய வீட்டின் பின்புறம் நிற்க இடமில்லை. ஜன்னலுக்கு வெளியே அரியக்குடி உள்ளே பெரியவாளுமாக சங்கீத சம்பாஷணை. பெரியவா சொல்கிறார்:
"என்னுடைய தரம்பாரிலே ரத்ன கம்பளம், சௌகரியமான ஆசனங்கள், பங்கா விசிறி எல்லாம் எதுவுமே கிடையாது. இங்கே வெறும் கல்லும் முள்ளும் காட்டு செடிகளும் கட்டாந் தரையும் தான். உனக்கு பக்க வாத்யம் எதுவும் இங்கே ஏற்பாடு பண்ணலை ஒலி பெருக்கி எதுவும் கிடையாது. ஸ்ருதி பெட்டி கூட இல்லை. ஆனால் நிரடலான அந்த காம்போதி ராக க்ரிதி யை நீ பாடணும். மற்றதெல்லாம் இல்லாட் டாலும் லக்ஷியம் பண்ணாம எனக்காக பாடணும்.''
அரியக்குடி கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது. அப்படியே விழுந்து வணங்கினார் .
''பெரியவா உங்களுக்கு முன்னாலே பாடறேனே அந்த பெருமை, கிடைக்க முடியாத பாக்யம் ஒண்ணே போறும். எவ்வளவு பெரிய மனசோடு, பெருந் தன்மையோடு, என்னை மதிச்சு, கௌர விச்சு, கூப்பிட்டு பாட சொல்றீர்கள். எனக்கு நன்றி சொல்ல வார்த்தையே தெரியவில்லை, என்னையும் ஒரு பொருட்டா மதிச்சு இந்த வாய்ப்பு கொடுத்தீர்கள். என்ன கைம்மாறு செய்வேன்?'' பெரியவாளுடைய அருள் தான் எனக்கு ஸ்ருதி , பக்க வாத்தியம் எல்லாம், அது தான் நீங்க எதிர்பார்க்கிற அளவுக்கு என்னை பாடவைக்கணும்'' அய்யங்கார் தொண்டையை கனைத்து பாட தயாரானார்.
''இந்த க்ரிதி காம்போதியில் பாடறது ன்னு சொல்றா. ஆனால் புஸ்தங்கங்களில் காம்போஜி ன்னு போட்டிருக்கு இல்லையா?''
''ஆமாம் பெரியவா''
''அதுக்கும் ஒரு காரணம் இருக்கணும். காம்போ ஜம் என்கிற தேசம் இப்போது கம்போடியா, தென்கிழக்கு ஆசியாவிலே இருக்கு. அங்கே நமது பாரத தேச பண்பாடு, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் இன்னும் இருக்கு. வெகு காலமாக வேரூன்றி இருக்கு. காம்போஜத்திலே இருந்து வந்த ராகமா காம்போஜி?ன்னு கேட்டா சங்கீத சாஸ்திரிகள், விற்பன்னர்கள், நம்ப ப்ரொபஸர் புலுசு சாம்பமூர்த்தி மாதிரி இருக்கி றவா அப்படி இல்லேங்கிறா. காம்போஜ காரா கிட்டே இருந்து நாம் எதையும் இங்கே கொண்டு வராவிட்டாலும் அவர்கள் நம்மிடமிருந்து நிறைய விஷயம் எடுத்துண்டு போயிருக்கலாம். அதுவும் சங்கீதத்தில் நாம் மற்றவர்கள் கிட்டே இருந்து தெரிஞ்சுக்க ஒண்ணுமே இல்லை.
காம்போஜத்திலிருந்து நாட்டுப்பாடல் ஏதாவது ஜன ரஞ்சகமாக இருந்திருக்கலாம். அதை காம்போஜி ன்னு சொல்லி இருக்கலாம். அந்த மெட்டில் இந்த கீர்த்தனையை அமைச்சிருக் கலாம்.
இன்னொரு விஷயம் தெரியுமோ? நமது தேசத் துக்கு வடக்கு பாகத்திலேயே ஒரு காம்போ ஜம் இருந்திருக்கு. காளிதாசனுக்கு தெரியாத விஷயமே இல்லை. ''மேக சந்தேச'' த்திலே
''அடே யக்ஷனே, நீ இப்படிப்போ அப்படிப்போ என்று ரூட் போட்டு கொடுக்கிறான். அதிலே காம்போஜத்திற்கு வழியும் சொல்றான். அதே மாதிரி ''ரகுவம்சத்தி'' லேயும் காம்போஜம் பத்தி வருது. சிந்து நதிக்கு அப்பாலே ஹிமாசலத்திலே இருக்கு என்கிறான். அகண்ட பாரதத்தில் காம்போ ஜம் ஒரு பாகமா இருந்திருக்கு. ஹிந்து குஷ் மலைகள் பக்கம் ஒரு காம்போஜம் இருக்கு. நம்ம காம்போதி ராகம் அங்கிருந்து வந்ததோ என்னவோ? நிறைய ராகங்களுக்கு அந்தந்த பிரதேசத்திலே உண்டானது போல் அதன் பேரே கொடுத்திருக்கு. உதாரணமா, சௌராஷ்ட்ரம், கன்னடா, நவரஸ கன்னடா , சிந்து பைரவி., யமுனா கல்யாணி, இன்னும் எத்தனையோ. காம்போஜத்திலிருந்து அதனாலே காம்போஜி என்கிற காம்போதி வந்திருக்கலாம். ஆராய்ச் சியாளர்கள் மோஹனம் காம்போஜி எல்லாம் பழங்கால ராகங்கள் என்கிறா. காலவெள்ளத்தில் அந்த ராகங்கள் புதுப்புது பாலிஷ் போட்டு ண்டி ருக்கு.
கேதாரம் அதே போல் கேதாரநாத், கௌளை, கேதார கௌளம், எல்லாம் கௌடர்கள் சம்பந் தப்பட்டது. வங்காளத்தில் கௌடர்கள்னு நிறைய பேர் இருக்காளே. இதெல்லாம் நமது தென்னிந் திய கர்நாடக சங்கீதத்தில் எப்படி நுழைந்தது? அந்தந்த பிரதேசத்து வித்வான்கள் அந்தந்த ராகத்தில் ஸ்பெஷலிஸ்ட்கள் இங்கே வந்து பாடி நம்மவர்களுக்கு அது பிடித்துப் போய் இருக்க லாம். ஊர் பேரை வச்சே வித்வான்கள் பிரபல மாகிறதும் உண்டு. உன்னையே இப்போ அரியக்குடி என்று தானே கூப்பிடறா''
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் மட்டும் அல்ல. அங்கே இருந்த அனைவரும் பெரியவாள் பேசுவதை ஆச்சர்யமாக கேட்டுக் கொண்டிருந் தார்கள். என்ன திவ்ய சங்கீத ஞானம். மகா பெரியவா எவ்வளவுஆராய்ச்சி மனதுக்குள்ளே பண்ணி இருக்கார் ராகங்களை பற்றி. இன்னும் சொல்லாதது எவ்வளவு இருக்கோ?
''எப்போவாவது நீ பாடுற சங்கீதத்தைப் பற்றி ஆராய்ச்சி பன்னதுண்டா?'' ஆர்வம் உண்டா?
''ஆர்வம் உண்டு, ஆராய்ச்சி பண்ற அளவுக்கு ஞானம் இல்லை பெரியவா''
''இல்லை நீ ஆராய்ச்சி பண்ணி இருக்கே. எனக்கு தெரியும். தேவாரம் மாதிரி பண் ராகம் எல்லாம் திருப்பாவைக்கு கிடையாது. ஆனால் நீ எவ்வளவு அழகா அதுக்கு ராகம் செட் பண்ணியிருக்கே. ஆச்சர்யம் திவ்ய பிரபந்தம் பாடறவா ஒரே விதமான ஏத்தம் இறக்கம் ப்ராஸமா படிப்பா, ஒப்பிப்பா. . உன் மனோதர்மத்தை யூஸ் பண்ணி அற்புதமா நீ ராகங்களை அமைச்சது ரொம்ப நன்னா இருக்கு.
''ஏதோ என்னாலே முடிஞ்சதை பண்ணினேன்''
''எல்லா வித்வான்களும் அதையே பின்பற்றி பாடறா. தேவாரம் ஒன்றில் தான் நமது பழைய ஒரிஜினல் பண் இசை இன்னும் இருக்கு ''
மேலே அவர் சொன்னதை, அங்கே நடந்ததை, அடுத்த பதிவில் கவனிப்போம்.
No comments:
Post a Comment