பேசும் தெய்வம்: J K SIVAN
9. என் வாழ்வில் தெய்வம்
டாக்டர் D சுந்தரராமன் நினைவு கூர்கிறார். அவர் சொல்லும் விஷயங்கள் சுவாரஸ்யமானவையாக இருப்பதற்கு முக்கிய காரணம் அவை நேரடியாக அவர் வாழ்வில் மஹா பெரியவா சம்பந்த முள்ளவை.:
''நங்கவரம் ஜமீன்தார் மஹா பெரியவா பக்தர். அடிக்கடி பெரியவா தரிசனம் பண்ண காஞ்சி புரத்துக்கு வருவார். ரொம்ப தாராளமான மனசு. அவர் திடீரென்று என் பூணலுக்கு முதல்நாள் காஞ்சி மடத்திற்கு வந்தார். அவர் வந்ததும் யாரோ மறுநாள் எனக்கு இங்கே உபநயனம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஜமீன்தார் சொல்கிறார் கேளுங்கள்:
“நேற்று சாயங்காலம் நானும் என் மனைவியும் காஞ்சி மடம் போய் மகா பெரியவா தரிசனம் பெற்று வருவோம் என்று தீர்மானித்தோம். இங்கே வந்து மஹா பெரியவாளை சந்தித்தோம். அவர் மூலமாகவே அவருக்கு ஒரு பையன் மேல் ரொம்ப அபிமானம் அவனுக்கு உபநயனம் பண்ணவேண்டும் என்று பெரியவா தீர்மானித்து நாளைக்கு இங்கே நடக்கிறது. நீங்களும் இருந்து அவனை ஆசீர்வாதம் பண்ணுங்கோ'' என்றார்'' எங்களுக்கு ரொம்ப சந்தோஷம். ''
ஜமீன்தார் உடனே வெளியே சென்று புஷ்பங்கள் , பழங்கள், இனிப்புகள், எனக்கு, என் தாய் தந்தைக்கு புது வேஷ்டி, புடவை, வஸ்திரங்கள் வாங்கி வந்துவிட்டார். மறுநாள் விடி காலை மாட்டு கொட்டகையில் பூர்வாங்கம் முதல் மத்தியானம் போஜனம் வரை ரெண்டு பேரும் இருந்தார்கள். உபநயனம் கோசாலையில் நடக்கும் போது முகூர்த்த நேரத்தில் மகா பெரியவா சந்திரமௌலீஸ்வரருக்கு சந்தன அபிஷகம் ஹாலில் பண்ணிக்கொண்டிருந்தார். சுவற்றுக்கு அந்தப்புரம் ஹாலில் பூஜை. இந்தப் பக்கம் கோசாலை. இப்படி ஒரு சாஸ்த்ரோக் தமான உபநயனம் யாருக்காவது நடந்திருக்குமா?
ப்ரம்மோபதேசம் ஆயிற்று, நானும் என் அப்பா அம்மாவும் கோசாலையில் பெரியவா பூஜை பண்ணி முடிவதற்காக காத்திருந்தோம். பூஜை முடித்து பெரியவா நேராக கோசாலை வந்தார். நாங்கள் அவருக்கு குடும்பத்தோடு நமஸ்காரம் பண்ணினோம். தட்டிலிருந்து ஒரு பழத்தை எடுத்து எனக்கு ஆசீர்வாதம் பண்ணி கொடுத்தார்.
''எல்லோரும் ஒண்ணாக சேர்ந்து பொது சமாராதனையில் சாப்பிடுங்கோ. இன்னிக்கு கல்யாண சாப்பாடு சொல்லி இருக்கு''
இப்படி ஒருவனுக்கு உபநயனம் நடந்தால் புத்தியுள்ள எவனாவது அவன் வாழ்நாள் பூரா சந்தியாவந்தனம் பண்ண மறப்பானா?
ஆனால் நான் அப்படி பண்ணவில்லையே. காயத்ரி மந்திரத்தை எப்போதோ எங்கோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் தான் சொல்லிக் கொண்டிருந்தவன். அந்த மந்திரமாவது என்னை காப்பாற்றும். எத்தனையோ சந்தர்ப்பங்களில் மனதில் துயரம், ஒரு அமைதி இன்மை. கவலை, துக்கம் வந்துவிடும். மார்பில் உள்ள பூணலை கழற்றி எறிந்து விடுவோமா என்று கூட தோன்றும். பாம்பு மாதிரி என் உடம்பை சுற்றிக்கொண்டிருக்கிறதே. அந்த நேரங்களில் இந்த பூணல் யாரால் எப்படி எப்போது எந்த விதத்தில் எனக்கு அணிவிக்கப்பட்டது என்ற ஞாபகம் சட்டென்று வரும். அமைதியாகி விடுவேன். பழையபடி அமைதியாகிவிடுவேன்.
ஒருவேளை மஹா பெரியவாளுக்கு எனக்கு இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலைகள் வாழ்வில் வரும் என்று முன்பே தெரிந்து அந்த ஞாபகத்தை நான் மறக்காமல் இருக்க இப்படி ஏதாவது ஒரு யுக்தி பண்ணி இருப்பாரோ?
1986ல் ஜூலை மாதம் இந்தியா வந்தேன். மஹா பெரியவாளை காஞ்சிபுரத்தில் போய் பார்த் தேன். அவரைப் பார்த்து ஆறு வருஷங்கள் ஆகிவிட்டதே. அப்போது நான் மெக்ஸிகோவில் இருந்தேன். ஒரு சிறிய இடைவெளியில் இந்தியா வர முடிந்தது. ஒரு நாள் சாயங்காலம் என் மனைவியோடு காஞ்சி புரம் சென்றேன்.
அடுத்த நாள் ஆவணி அவிட்டம். மந்திரங்கள் சொல்லி புதிய பூணல் அணிந்துகொண்டு பழசைக் களையும் நாள்.
மடத்தில் ஆவணி அவிட்டம் சிறப்பாக நடக்கும். மற்றவர்களோடு சேர்ந்து மந்திரங்கள் சொல்லி புது பூணல் மாற்றிக் கொண்டேன். அன்று மத்தியானம் மஹா பெரியவாளைச் சந்தித் தோம். பெரியவாள் பக்கத்தில் அப்போது பாட்டு ராமமூர்த்தி இருந்தார். பெரியவாளிடம் ''துரைசாமி அய்யர் புத்ரன் சுந்தரராமன் மனைவியோடு பெரியவாளை தரிசனம் பண்ணி ரெண்டு பெரும் தம்பதியாநமஸ்காரம் பண்ணறா '' என்று என்னை அறிமுகப் படுத்தினார்.
எங்களை பெரியவா பார்த்தார். பெரியவா ஜாடையாக ராமமூர்த்தியிடம் என்ன கேட்டார் தெரியுமா?''
''பூணல் போட்டுண்டு இருக்கானா?'' (எனக்குள் நான் என்ன சொல்லிக்கொண்டேன் தெரியுமா அப்போ:''உங்க எதிரிலே நான் வெறும் மார்போடு நிக்கலே '')
ராமமூர்த்தி பெரியவாளிடம் ''பூணல் போட்டுண்டு இருக்கார்'' என்று பதில் அளித்தார்.
மறுபடியும் பெரியவா ராமமூர்த்தியிடம் ''இன்னிக்கு ஆவணி அவிட்டம் புது பூணல் மாத்திண் டானா?கேளு;''
''ஆமாம் பெரியவா, இன்னிக்கு மடத்திலே ஸ்ராவணம் க்ரூப்பா GROUP ஆ போட்டுண்டார். நான் பார்த்தேன்''
பெரியவா எங்களுக்கு பிரசாதம் வழங்கினார். என் வாழ்வில் அப்போது ஒரு ப்ரதிஞை எடுத்துக் கொண்டேன். ''இனி என் பூணலைக் கழற்ற மாட்டேன். சந்தியாவந்தனம் விடாமல் பண்ணு வேன். எந்த சந்தர்ப்பத்திலும் அது இனி தவறாது. ''
அடுத்த வாரம் அமெரிக்காவுக்கு லாஸ் ஏஞ்செல்ஸ் போக வேண்டியிருந்தது. எனக்கு கலிபோர்னியா யூனிவெர்சிடியில் ஒரு புது ப்ரொபஸர் வேலை கிடைத்தது.
அடடா எங்கேயோ என்னவோ சொல்லிக்கொண்டிருந்தவன் திசை திரும்பி தேசம் காலம் மாறி சொல்லிக்கொண்டிருக்கிறேனே. மறுபடியும் என் பழைய வாழ்க்கை சரித்திரத்துக்கு திரும்புகிறேன். 1956-60 கோடை விடுமுறைக்கு இப்போது திரும்பிவிட்டேன்.
ஒருநாள் மடத்தில் பெரியவா கிட்ட உத்தரவு வாங்கிக்கொண்டு நான் சின்ன காஞ்சிபுரத்தில் எங்கள் வீட்டுக்கு போனேன். தோய்த்து வைத்திருந்த வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு ரயில்வே ஸ்டேஷன் நடந்தேன். அப்போது தான் அப்பாவிடம் சொல்லிக் கொள்ளவில்லையே என்று தோன்றியதால் மடத்துக்கு திரும்பினேன். சட்டையை கழட்டி இடது கையில் சுருட்டி வைத்துக் கொண்டு அப்பாவைத் தேடினேன். மடத்தின் பின் பக்கம் ஏதோ வேலையாக இருந்தார்.
''அப்பா நான் போய்ட்டு வரேன்''
''பெரியவா கிணத்தங்கரையில் உட்கார்ந் திருக்கார், அவருக்கு நமஸ்காரம் பண்ணி ட்டு போ''
''நான் அவர் கிட்டே ஏற்கனவே சொல்லிண்டு ட்டேன் அப்பா''
''ஒண்ணும் குடி முழுகி போயிடாது, இன்னொரு தடவை அவாளுக்கு நமஸ்காரம் பண்ணு போ''
வேண்டா வெறுப்பாக, அரை மனதோடு பெரியவா இருக்கும் இடம் சென்றேன். கால்களை நீட்டிக்கொண்டு கண்களை அரை மூடிக் கொண் டு தியானத்தில் இருந்தார்..
தொடரும்
No comments:
Post a Comment