பேசும் தெய்வம்: J K SIVAN
3. ''கை விரித்த செட்டியார்''
இதுவரை நான் டாக்டர் சுந்தரராமன் பெரியவாளுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவு பற்றி ரெண்டு கட்டுரை எழுதியிருந்ததற்கு நண்பரகள், பெரியவா பக்தர்கள் அனைவரிடமிருந்தும் அமோக வரவேற்பும், எனக்கு வாழ்த்துகள் வந்ததும் எனது பாக்யம் என கருதுகிறேன். ஸ்ரீ சுந்தரராமனின் ''கடவுளோடு வாழ்ந்தேன்' என்று தமிழ் கட்டுரையும், ''I LIVED WITH GOD என்று ஆங்கிலத்திலும் அவர் நீளமாக எழுதி இருந்ததை அநேகர் படித்திருக்கலாம். நான் ஆங்கிலத்தில் எழுதியதை மட்டுமே படிக்க நேர்ந்தது. படித்தவுடன் எனது வழியில் சுருக்கமாக அதை எழுதவேண்டும் உங்களோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் பிறந்தது. மூலத்திலிருந்து பிறழாமல் எழுதினேன். இது மூன்றாவது அத்யாயம். நிறைய இடங்களில் சுந்தர்ராமனும் பெரியவாளும் பேசுவது போல் சித்தரித்து, முழுக்க முழுக்க அவரே தனது வாழ்க்கைப் பயணத்தை சொல்வது போல் தான் அமைத்திருக்கிறேன்.
சுந்தரராமன் பெரியவா சொல்படி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்துக்கு காலேஜ் அட்மிஷனுக்கு அப்ளிகேஷன் கொடுத்தார் அல்லவா. அப்புறம் என்ன நடந்தது என்பதிலிருந்து தொடர்வோம்.
''சில வாரங்களில் அண்ணாமலை யூனிவர்சிட்டி லே எனக்கு இடம் கிடைச்சதா லெட்டர் வந்தது. சந்தோஷத்தோடு அதை எடுத்துண்டு பெரியவா கிட்டே சொல்லப் போனேன். காஞ்சி மடத்தில் யாரோடயோ பேசிண்டிருந்தார். ஓரமா நின்னேன். பேசறதை நிறுத்திட்டு, ''என்ன யூனிவெர்சிட்டிலே இடம் கிடைச்சுட்டுது. அப்படி தானே' 'ன்னு சிரிச்சுண்டே கேட்டார். லெட்டரையே பாக்கலை . எப்படி யூகிச்சார் . அது தான் பெரியவா. யாரவது அவரை சந்தித்து பேசவேண்டும் என்றால் அது அவர் சங்கல்பத்தால் மட்டுமே நடக்கும். தலை கீழ நின்றாலும் மற்றவர் முயற்சியில் நடக்காது.
யூனிவெர்சிட்டிலே இடம் கிடைச்சுடுத்து அப்படித்தானே என்று கேட்டதற்கு ''ஆமாம்'' னு சந்தோஷத்தோடு. தலையாட்டினேன்''
எதிர்க்க பேசிண்டு இருந்தவர்களில் ஒருவரிடம் ''நீங்க தானே சிதம்பரம் தங்க நகை வியாபாரி ரத்தினசாமி செட்டியார் மேனேஜர்'' என்று கேட்டார்.
''ஆமாம் பெரியவா''
''நான் ஏதாவது உதவி கேட்டா உங்க செட்டியார் பண்ணுவாரா?''
''ஆஹா, செட்டியார் பெரியவா பக்தர். எதுவேணுமானாலும் செய்வார்''
“நான் ஒண்ணும் பெரிசா கேக்கலே.இந்த பையன் நல்லவன். எனக்கு அவன் மேலே அபிமானம். உங்க ஊர் யூனிவெர்சிட்டிலே மேல் படிப்புக்கு இடம் கிடைச்சிருக்கு. இவனுக்கு ஏதாவது உதவி பண்ண சொல்லுங்கோ செட்டியார் கிட்டே''
''முடிஞ்சதா எடுத்துக்குங்கோ பெரியவா''
எனக்குத்தூக்கி வாரி போட்டது. எப்படி சிதம்பரத்தில் இருக்கிற ஒரு பெரியமனிஷர் மேனேஜர் அந்த நேரத்திலே அங்கே பெரியவா எதிரே உட்கார்ந்து பேசிண்டிருக்கார், நான் வர சமயத்தில்! அதே நேரம் என் கையில் கடிதாசிலே என்ன இருக்குன்னு நான் சொல்லாமலே தெரியறது. எனக்கு சிதம்பரத்தில் படிக்க உதவிக்கு ஏற்பாடு பண்ணறார். எதுவும் நான் சொல்லாமலேயே, கேக்காமலேயே!!
''என்னடா உன் பிரச்னை தீர்ந்ததா. போ நன்னா படி''
அப்புறம் நான் அந்த செட்டியார் மேனேஜரிடம் போய் ''சார், யூனிவர்சிட்டி லே முதல் ட்யூஷன் பணம் 110 ரூபாய் கட்ட சொல்லி இருக்கு........'' என்று இழுத்தேன்...
''அது ஒரு பிரச்னை இல்லை. சிதம்பரம் நீ வந்ததும் செட்டியாரை பார்க்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்''
அடுத்து எங்கே தங்கறது, பூவாவுக்கு என்ன வழி? அது அடுத்த ப்ராபளம் , நெருங்கி வரும்போது பார்த்துக் கொள்ளலாம்.
அப்பா ஆபரேஷனுக்காக அம்மா அப்பா சின்ன காஞ்சிபுரம் வந்துட்டா. மறுபடியும் பெரியவா கிட்டே போய் தொந்தரவு பண்ண மனம் இடம் கொடுக்கலே. அவர் மேலே அபார நம்பிக்கை இருந்தது. என்னாலே வேறே எதுவும் பண்ண முடியலே. ரெண்டாவது அக்கா சிதம்பரத்தில் இருந்தா. சிலநாள் அவர்கள் வீட்டிலே இருக்க எண்ணம். அதுக்குள்ளே பெரியவா ஏதாவது ஏற்பாடு பண்ணுவார் னு எனக்கு அசாத்திய நம்பிக்கை. அவர் தானே என்னை கண்டிப்பா மேலே படிக்கணும்னு ஊக்குவிச்சது.. பார்த்துப்பார்...''
சிதம்பரத்தில் ரத்தினசாமி செட்டியார் தங்க மாளிகைக்கு சென்று செட்டியாரை நேரில் பார்த்தேன்.
நமஸ்கரித்தேன்.
''உங்க மேனேஜர் உங்களை வந்து இங்கே பார்க்க சொன்னார். யூனிவெர்சிட்டிக்கு அட்மிஷன், ட்யூஷன் பணம் 110 ரூபாய் உங்க கிட்டே வாங்கிக்கலாம் னு சொன்னார்''
''நீ ஏதோ தப்பா புரிஞ்சுண்டிருக்கே தம்பி. . அதெப்படி 110 ரூபாயை எடுத்து தெரியாத உனக்கு கொடுக்கமுடியும். ஏதாவது நிலம், நகை அடமானம் வைக்க வைச்சிருக்கியா.?''
''எதுவுமே இல்லையே செட்டியார் ''
''அப்படின்னா பணம் கொடுக்க முடியாது''
மானேஜரை தேடினேன். அவரை எங்கேயும் பார்க்க முடியல. ஷாக் எனக்கு. இந்த அவமானம் இதுக்கு முன்னே பட்டதில்லே. பெரியவா மேலே நம்பிக்கை ஒரு நிமிஷம் ஆட்டம் கண்டுவிட்டது. என் ஆசை, எண்ணத்திலே பேரிடி. என்ன பண்றதுன்னு தெரியாம, நேரே போஸ்ட் ஆபிஸ் போய் காஞ்சி மடத்து மேனேஜருக்கு ஒரு தந்தி அனுப்பினேன். ''சிதம்பரத்தில் செட்டியார் பணம் கொடுக்க விரும்பலை ன்னு பெரியவா கிட்டே சொல்லவும்'' னு தந்தி அனுப்பினேன்.
ஒண்ணும் புரியாம, உடல் தளர்ந்து உள்ளம் உடைந்து, அக்கா வீட்டுக்கு போனேன். மேற்கு கோபுரம் வடக்கு கோபுரம் வழியாக தான் போனேன். சிதம்பரம் நடராஜா வை தரிசனம் பண்ணினேன். சாயந்திரம் ஆயிடுத்து.
காஞ்சிபுரத்திலிருந்து ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்கிற மடத்துக்கு வேண்டிய ஸமஸ்க்ரித பண்டிதர் அக்கா வீட்டுக்கு வந்தார் . என்னை பத்தி விசாரிச்சார். அவர் வந்ததை லக்ஷியம் பண்ண கூட முடியாம என் கவலை எனக்கு. உள்ளே போய் தரையிலே படுத்தேன். என்கிட்டே வந்து முதுகிலே தட்டி “உன்னை எனக்கு பிடிக்கும். கவலைப்படாதே ' என்றார்.
''ஆமா, பெரியவா என்கிட்டே அன்பா இருக்கார்னு உங்கள் எல்லாருக்கும் என்னை பிடிக்கிறது. இப்போ பெரியவா என்னை கைவிட்டுட்டா. இன்னிக்கு அவமானப்பட்டுட்டேன்.''
' நிறுத்துடா. மேலே ஒரு வார்த்தை பெரியவா பத்தி பேசாதே. அவசரக்காரா. என்னை இங்கே உன்கிட்டே அனுப்பினதே பெரியவா தான். என்னைப்பாருடா , நீ கேட்ட பணத்தோடு வந்திருக்கேன்'' நான் கோபமா பார்த்தேன்.
'என்கிட்டே கோவிச்சுக்கோ பரவாயில்லே. ஆனா அந்த கருணாமூர்த்தியை பத்தி மட்டும் ஒரு வார்த்தை சொல்விடாதே. ''
நீ போனப்புறம் காஞ்சிபுரத்தில் என்ன நடந்தது தெரியுமா உனக்கு? பூஜை முடிஞ்சு பெரியவா என்னை கூப்பிட்டனுப்பினா.
''சாஸ்திரிகளே , எனக்கு அந்த பயல் சுந்தரராமன் பத்தி தான் கவலை. செட்டியார் பணம் கொடுப்பாரா மாட்டாரா னு தெரியல. எதுக்கும் நீங்க மடத்தில் 110 ரூபாய் நான் கேட்டதா சொல்லி வாங்கிண்டு அடுத்த ரயில்லே சிதம்பரம் போங்கோ '' ன்னு சொல்லி ரயில் பிடிச்சு வந்திருக்கேன்.
''அங்கே என்ன நிலைமைன்னு பாரத்து, செட்டியார் பணம் குடுத்தா சரி, குடுக்கலேன்னா இந்த பணத்தை கொடுங்கோ பீஸ் கட்டட்டும்'' என்றார் டா. நீ புண்ணியம் பண்ணவன்'' 110 ரூபாயை துணியில் சுற்றி மடிசஞ்சியில் வைத்திருந்ததை எடுத்து கொடுத்து விட்டு காஞ்சிபுரம் ரயில் பிடிக்க போய்ட்டார். எனக்கு பேச்சே வரலே.
எவ்வளவோ பெரிய முட்டாள் நான். துரோகி. இதெல்லாம் பெரியவா ரஹஸ்யம். ட்யூஷன் பீஸ் காட்டினேன். யூனிவெர்சிட்டிலே சேர்ந்தேன். ஐந்து வருஷத்துக்கு மடத்துலேர்ந்து எனக்கு பீஸ் கட்ட பெரியவா ஏற்பாடு பண்ணினா.
ரெண்டு மாசம் ஓடிடுத்து. ஒரு நாள் எங்க அக்கா வீட்டுக்கு ஒரு பெரிய கார்லே ரத்னசாமி செட்டியார் வந்தார். என்னை தேடினார். எங்களுக்கு ஆச்சர்யம்.
ரெண்டு கையை கும்பிட்டு, ''மன்னிச்சுடுப்பா, தப்பு பண்ணிட்டேன். கொஞ்ச நாள் முன்னாலே காஞ்சிபுரம் போனேன் பெரியவா தரிசனம் பண்ண. ''உங்களை சுந்தரராமன்னு ஒரு பையன் சிதம்பரத்துலே வந்து பார்த்தானே , ஞாபகம் இருக்கா?'' ன்னு கேட்டார். பக்தர்கள் நிறையபேர் இருந்தார்கள்.
''நான் தலையை ஆட்டினேன்''
''எப்படி அந்த பையன் மனசை உடைக்க தோணித்து உங்களுக்கு?னு அடுத்த ஒரு வார்த்தை எல்லார் எதிரிலும் என்னை கேட்டார்.
பேயறைஞ்சா மாதிரி ஆச்சு எனக்கு. வாய் திறக்கலே. இத்தனை நாள் நான் பெரிய பணக்காரன் னு மிதப்பில் இருந்தேன் .அன்னிக்கு எவ்வளவு பிச்சைக்காரன்னு புரிஞ்சுது.''
தலையை குனிஞ்சு வாங்கிண்டு காஞ்சிபுரத்திலிருந்து வந்தேன். நேரே உன்னை பார்த்து மன்னிப்பு கேட்டுட்டு அடுத்த காரியம். உன் படிப்பு செலவு பூரா நான் மொத்தமா ஏத்துக்கறேன் பா '' என்கிறார் செட்டியார்.
என்னாலே என் காதை நம்பவே முடியலே.
''செட்டியார், நான் அடுத்தவாரம் காஞ்சிபுரம் போகலாம்னு இருக்கேன். பெரியவாளை பார்த்து சொல்லிட்டு அப்புறம் உங்க கடைக்கு வரேன்''
''சீக்கிரமே வாப்பா'
No comments:
Post a Comment