Saturday, October 3, 2020

SVKARAI AGRAHARAM

 சரித்திரம் படைத்த சாம்பவர் வடகரை-12        J K   SIVAN  


சாம்பவர வடகரை அக்ரஹாரம்   என்ற மலர் .மாலையில் மணம் வீசிய, இன்னும் வீசும் சில வண்ண  மலர்கள் பற்றி  கூறும்போது  ஒண்றோடு ஒன்றை  ஓப்புமை இடுவது தவறு.  ஒவ்வொன்றும் ஒரு ரகம் என்பதோடு அனைவருமே  வணக்கத்துக்குரியவர்கள்.

ஸ்ரீ  சங்கர கிருஷ்ணய்யர்
ஒரு  சிறந்த  ஓவியர். சாம்பவர் வடகரை அக்ராஹார மனிதர்களை படம் போட்டு காட்டியவர்
அவரது சித்திரங்கள்   அவர் காலத்தில்  வாழ்ந்த சில  கிராமத்தார்களை  நமக்கு  காட்டுவது நமக்கு  அதிர்ஷ்டம் என்று சொல்லலாம். இத்துடன் இணைத்திருக்கும்  படங்களில்  அவர்களை  அறிமுகம்  செயகிறோம்.  காலஞ்சென்ற  இந்திய ஜனாதிபதி  அப்துல் கலாமை வரைந்து அவருக்கு அனுப்பி   திரு கலாம் அவர்கள்  நன்றியோடு அதை பெற்று கையெழுத்து  அனுப்பியுள்ள  படமும்  காண்க. .திரு சங்கர கிருஷ்ணன் அருகே  ஆய்க்குடி பள்ளியில்  ஓவியராக பணியாற்றி,  இந்த கிராமத்தை விட்டு தனது குடும்பத்தோடு  இலத்தூர் சென்று  அங்கே சில காலம் வாழ்ந்தாலும்  சாம்பவர் வடகரைக்கு வருஷாவருஷம் வேதநாராயணப்பெருமாள் கருடசேவைக்கு    தவறாமல் சக்கர நாற்காலியின் அமர்ந்தவாறு வந்து பங்கேற்பார்.  பிறந்த மண்ணான  சாம்பவர் வடகரை யில்  நடக்கும் முக்கிய  நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை  மறக்கவில்லை.  தவிர்க்கவில்லை.  சிருங்கேரி மஹா சன்னிதானம் வருகை தந்தபோது உடல்நலம் சரியின்றி இருந்த நிலையிலும்  சாம்பவர் வடகரைக்கு வந்து ஆச்சார்யரை  தரிசித்து ஆசி பெற்றார். அது தான் அவரது கடைசி சாம்பவர் வடகரை நிகழ்ச்சிகளில்  பங்கேற்பு.   ஸ்ரீ வேத நாராயணனை பெருமாள்  கூட முழுக்கு விழாவில் கலந்து   கொண்டார்.   அவரது மனைவியாரை  இலத்தூர் இல்லத்தில் சந்தித்தபோது   ஸ்ரீ சங்கரகிருஷ்ணன் வரைந்த   ஓவியங்களை  சிலவற்றை காண்பித்தார். இடவசதி காரணமாக அத்தனை படங்களையும் இதில் இணைக்க வாய்ப்பில்லை.

வடக்கு தெருவில் வாழ்ந்த சிலரின் பெயர்கள்.
ஸ்ரீமான்கள் அய்யாசாமி தீக்ஷிதர், கோபால கனபாடிகள், சிதம்பர சாஸ்திரிகள், கிருஷ்ண
சாஸ்திரிகள் என்ற சாஸ்திரி, சங்கரலிங்க வாத்தியார், அவர் குமாரர் கணேச வாத்தியார், சங்கர வாத்தியார்.  
தெற்கு தெருவில் வாழ்ந்த சிலரின் பெயர்கள்
சீத தீக்ஷிதர், நாராயண கனபாடிகள், வெங்கட்ராம வாத்தியார், சுப்பையா வாத்தியார், எஸ் ஆர்  கிருஷ்ணய்யர்.  ஆகியோர்.  இவர்களில்  ராமச்சந்திர அய்யர், S .R . கிருஷ்ணய்யரின் சகோதரர்.   கிருஷ்ணய்யர்  அந்தக்காலத்தில் சக்தி டூரிங் டாக்கிஸ் நடத்தி பிரபலமானவர். கருப்பு வெளுப்பு படங்கள் நிறைய ரீல் ரீலாக ஓடி இருக்கிறது. 
 
தெற்கு தெருவில்  உள்ள ஸ்ரீ  வரசித்தி விநாயகர் ( வரத விநாயகர் என்று பெயர் பலகை தப்பாக காட்டுவதை திருத்தவேண்டும். கோவிலை ஒரு காலத்தில்  சுப்பையா வாத்தியாரும்  வடக்கு தெரு 
ஸ்ரீ  வேதநாராயண பெருமாள் கோவிலை வடக்குத் தெருவில் கிருஷ்ண அய்யங்காரும், ஸ்ரீ ஸ்ரீமூலநாதர் சிவன் கோவிலை கைலாச பட்டர், சுப்பையா பட்டர் என்ற சகோதரர்களும், ஸ்ரீ பவழ  கொத்து  ஐயப்ப ஸ்வாமி கோவில் பூஜையை வெங்கடாஜலம் ஐயர் என்பவரும் ஆகம முறைப்படி  நித்ய பூஜை செய்து கவனித்துக் கொண்டிருந்தனர் .

 கிருஷ்ண அய்யங்கார் விந்தன் கோட்டை பெருமாள் கோவில் பூஜையையும் முறைப்படி செய்து வந்தார்.  அரசடி பிள்ளையார், மற்றும் விநாயகர் கோவில் பூஜையை சுப்பையா வாத்தியார் அல்லது கைலாச பட்டர் ஆகியோர் செய்து வந்தார்கள்.

 முன்பே சொன்னபடி,  நீலகண்டி அம்மன் கோவிலில் சுத்தம் செய்து, விளக்கேற்றி, பூஜை செய்ய  'வைராவி'  என்று அழைக்கப்படும்  நெல் அளப்பவர்  ஒருவர்  அக்ரஹார வீடுகலுக்க்கெல்லாம் வந்து  பிடி அரிசி, எண்ணெய் போன்றவற்றை சேகரித்து வாங்கி பூஜை செய்து வந்தார்.  "சுப்பிக்கா" (சுப்பையா) என்ற தெலுங்கு பிராமணருக்கு சிவன் கோவில் மடைப்  பள்ளியை கவனித்து வந்தார்  என்று கேள்விப்பட்டேன். பெயர்கள் எல்லாம் வேடிக்கையாக இருக்கிறது.

சமீபத்தில் நான் கேள்விப்பட்டது, பட்டிமன்றங்களில் நடுவராக செயல்படும் பிரபல  திரு சாலமன் பாப்பையா இந்த  சாம்பவர் வடகரை பூர்வீகத்தை சேர்ந்தவர். எப்போது அந்த ஹிந்து குடும்பம் கிருத்தவமத்தை  தழுவியது என்றெல்லாம் தெரியவில்லை.

வடக்குத்தெருவில், ஸ்ரீ ஹரிஹர குஹ  பஜனைமட நிகழ்ச்சிகளை கணேச வாத்தியார் கவனித்துக்கொண்டார்.

 ஸ்ரீ  R  முத்துகிருஷ்ணன்
மண் வாசனை அறிந்த  ஸ்ரீ  R  முத்துகிருஷ்ணன்    ஒய்வு பெற்ற  ஒரு அதிகாரி. அவர் சகோதரர் ஸ்ரீ வேதநாராயணன் தான என்னை  இந்த அக்ரஹாரத்துக்கு  அழைத்துச் சென்றவர்.  முத்து கிருஷ்ணன் சாம்பவர்  வடகரை கிராமத்தை அழகாக நினைவு  கூர்கிறார்.  80+ வயது குறுக்கே தொந்தரவு செய்யவில்லை. சுறுசுறுப்பானவர்.  அவரை சாம்பவர் வடகரைக்கு  நான் சென்றபோது  பார்த்தேன். குடும்பத்தோடு கருட சேவை விழாவுக்கு வந்திருந்தார்.  கலகலவென்று பேசும் அவரிடம் அக்ரஹாரம் பற்றிய சரித்திரம் நிறைய தெரிந்துகொண்டேன்.  அவ்வளவையும் என்னால் நினைவில் வைத்துக்கொள்ளமுடியாதே. சில குறிப்புகள் எழுதிக் கொடுக்க சொன்னேன். அதில் சில விஷயங்கள்.

ஹனுமான்  நதி தவிர சுந்தரபாண்டியபுரம் குளத்துக் கால்வாய் ஒன்று கிராமத்தின் மேற்குப்புறம் ஓடிக் கொண்டிருக்கும். ஊருக்கு மேற்கே ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் "பெரிய குளம்" என்று அழைக்கப்படும் பாசன ஏரி  இன்றும் உள்ளது.  
 
இந்த அக்ரஹார  மக்கள் பேச்சில் மலையாள வாசனை  சற்று தூக்கலாக இருப்பதால்  பாலக்
காட்டில் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது.  
 
பொதுவாக  எல்லா  கிராமங்களிலும்  70-75 வருஷங்களுக்கு முன்பு,  ஆஸ்பத்திரி, பேங்க் வசதி எதுவும் கிடையாது. பக்கத்து ஊர்  ஆய்குடி அல்லது தென்காசிக்கு தான் போக வேண்டும்   தமிழ்நாட்டு  பல கிராமங்களில் அது மாதிரி நிலை இன்றும் கூட சில இடங்களில்  உண்டு. சிசேரியன்  CEASARIAN  பிரசவம் தெரியாது.  பிரசவம் எல்லாம் வீட்டிலேயே  தான்.  யார்  டாக்டர்கள் தெரியுமா?  நாவிதர்  வீட்டு பெண்கள். மருத்துவச்சிகள்  என்று  சொல்வார்கள். வலி அதிகமாக  எடுத்தவுடன்  சொல்லி அனுப்பினால்  கத்தி, வெற்றிலைபாக்கு புகையிலை பெட்டியோடு  வந்து விடுவார்கள்.  தொப்புள் கொடி அறுத்து  எத்தனையோ பெண்களுக்கு  சுகப்பிரசவம் தான்.  நானே அப்படி  வீட்டில்  பிறந்தவன்  தான். 

பிரசவம் என்பது ஒரு  மறுபிறவி  எத்தனை  தாய்கள், குழந்தைகள்,  வயிற்றில் குழந்தை யோடு தாய்கள் பிரசவத்தில் இறந்தது  எல்லா குடும்பங்களிலும் ஒரு சாதாரண சம்பவம். ரங்கையர் என்ற ஒரு LMP  டாக்டர் தெற்கு தெருவில் தங்கி இருந்தார்.  எப்போது வேண்டுமானாலும் கதவை தட்டலாம்.

அரசமரத்துக்கு   வடக்கே அத்தான் துறை   என்ற  ஆற்றங்கரையில்  ஒரு பெரிய ஆலமரம் உண்டு. அங்கேதான் நாவிதர்கள் அமர்ந்து கிராம மக்களுக்கு முடி வெட்டுதல் முக க்ஷவரம் செய்து விடுவார்கள்.  இதன் வடபுறம் பிராமணருக்கென  ஒரு  சுடுகாடு. (ருத்ர பூமி ) இருந்தது. (இப்போதும் இருக்கிறது).   புதியவன் என்ற  நாவிதர்  தான் கைராசி டாக்டர். கை வைத்தியம் பார்ப்பார்.  ஒரு பட்டு துணியை கைமேல் போட்டு நாடி பார்த்து சூர்ணம் கொடுப்பார்.  எந்த வியாதிக்கும் அதே சூரணமா?  சர்வ வியாதி நிவாரணியா அது ?  அதைத் தேனில் கலந்து சாப்பிட வேண்டும். பாதி போய்விடும். பாதி பிழைக்கும்.    


















No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...