பேசும் தெய்வம் J K SIVAN
வெண்ணீறணிந்ததென்ன என்ன என்ன?
மஹா பெரியவா உருவத்தைப் பற்றி நினைக்கும்போது நம் கண்முன்னே தோன்றுவது அவரது நெற்றியில் உடலில் ஜொலிக்கும் பால் வெண்ணீறு அல்லவா. அதைப் பற்றிதான் இந்த கட்டுரை.
வெறும் மரக்கட்டை விறகினை எரித்து சாம்பலாக்கினால் மட்டும் விபூதி அல்ல. அதற்கு வேறு சில சாமான்களும் தேவை. எரிந்து பஸ்மமாக மிஞ்சுகிறது. ஞானம் என்கிற நெருப்பு மனித வாழ்வின் கர்மங்களை எல்லாம் எரித்து பஸ்மம் தான் மிச்சம். கீதையும் இதை சொல்கிறது. ஞானம் தான் எஞ்சியுள்ள பஸ்மம் .விபூதி! மஹா பெரியவா இதை அழகாக சொல்கிறார்:
‘பல வர்ணங்களைக் கொண்ட பொருள்களைக் காண்கிறோம். ஆனால், அவை அவ்வளவும் எரிந்தபின் மாறிவிடுகின்றன. கடைசியில் வெளுத்துப் போவிடுகின்றன. நாம் சாயம் வெளுத்துப் போய் விட்டது என்கிறோம். சாயம் என்பது வேஷம். வேஷம் போனபின் இருப்பதே மெய். என்றால், மெய்யான ஆத்மாவின் வடிவம் தூய வெண்ணிறம் – வடிவம் கொடுத்தால் அது விபூதி. பொய்யானது இந்த தேகம். இதன் மேல் விபூதியை பூசிக் கொள்கிறோம். ஒரு நாள் இதுவும் எரிந்து, இறுதியில் இந்த வெண்ணிற விபூதியை சார்ந்து நிற்கிறது. விபூதி நாம் யார், நம் முடிவு எப்படி? என்பதை தெளிவாக்குகிறது.
விபூதி சிவப் பிரசாதம். சிவன் காடுடைய சுடலைப் பொடி பூசிய உள்ளம் கவர் கள்வன். பஸ்மம் சிறந்த ரக்ஷை’, `திருநீறு’ ஸமஸ்க்ரிதத்தில் விபூதிக்கு எத்தனையோ அர்த்தம். மனத்தூய்மை அதிலொன்று.
அரிமர்த்தன பாண்டியனுக்கு அப்புறம் அவன் வம்சத்தில் 640 முதல் 670 வரை மதுரைக்கு ராஜா மாறவர்மன் அரிகேசரி பாண்டியன் எனும் 'கூன் பாண்டியன்'. அவன் மனைவி சோழர்குலத்தை சேர்ந்த மங்கையர்க்கரசி.
அரிகேசரி சமண சமயத்தின் மீது பற்று கொண்டு சைவ மதத்தை வெறுத்தான். ராணி மங்கையர்க்
கரசிக்கும் மந்திரி குலச்சிறையார் இருவரும் விபூதி கூட அணிய முடியாத அளவு தீவிர சமணப்பற்று ராஜாவுக்கு. இருவரும் மதுரை சொக்கநாதனிடம் எப்படியாவது அரிகேசரி பாண்டியன் திரும்ப சைவ மதத்திற்கு திரும்ப வேண்டிக்கொண்டார்கள். பாண்டிய நாட்டில் சமணர்கள் அதிகாரம் மேலோங்கி இருந்தது. இந்நேரம் தான் திருஞான சம்பந்தர் புகழ் எங்கும் பரவிக்கொண்டு வந்ததது. ராணியும் மந்திரியும் எப்படியோ பக்தர்களை அனுப்பி பாண்டிநாட்டில் சைவ வீழ்ச்சிபற்றியும், சமண ஆதிக்கம் பற்றியும் எடுத்துரைத்தார்கள். மன்னனை சைவத்துக்கு மீட்க அரும்பாடு பட்டனர்.
"வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்'' எனும் கோளாறு பதிகம் பாடினார். ஞான சம்பந்தர் காலில் விழுந்து ராணியும் மந்திரியும் அழைத்தனர். அடியார்களோடு ஒரு மடத்தில் மதுரையில் தாங்கினார். அன்றிரவே மடத்துக்கு சமணர்கள் தீ வைத்தனர். மடம் தீப்பற்றி எரிவதைக் கண்ட சம்பந்தர் சிறிதும் பதட்டமில்லாமல் சிவன் மீது பதிகம் பாடினார். மடத்தில் தீ அணைந்தது. ஆனால், அந்த தீ மன்னன் ராஜாவை தாக்கி திடீரென்று ராஜாவுக்கு தாங்கமுடியாத வெப்பு நோய். அனல் மாதிரி ஜுரம், மூன்று நான்கு நாட்களாகியும் உஷ்ணம் குறையவில்லை. வலி பொறுக்கமுடியாமல் துடித்த ராஜாவுக்கு சமணர்களின் மருத்துவம் பலனளிக்கவில்லை . வெப்பு தாங்காமல் பதறித் துடித்தான். ராணிக்கும் மற்ற எல்லோருக்கும் அரண்மனையில் கவலை. கண்ணீர். எப்படி குணமாகும்?. சமணர்கள் மருத்துவம் பலனளிக்க வில்லையே.
''நாதா, ஞான சம்பந்தரை அழிக்க சமணர்கள் வைத்த தீ தான் உங்களை வாட்டுகிறது. அவரால் தான் மடத்தை பாதித்த தீ அணைந்தது. உங்கள் நோயையும் தீர்ப்பார். நான் அவரை வேண்டி வரவழைக்கிறேன்''
''என் வெப்பு நோயை அவர் போக்கினால், நான் சமணத்தை விடுவேன். சைவமதத்தில் மீண்டும் இணைகிறேன்'' கூப்பிடு அவரை'.
அரண்மனைக்குள் சம்பந்தர் காலடி பட்டதுமே எங்கும் தென்றல் வீசியது. கம்மென்று பன்னீர் மணம் கமழ்ந்தது. பச்சிளம் பாலகனாக முருகனே நேரில் வந்தது போல் சம்பந்தர் அரசனை அணுகினார்.
''என்ன ஆயிற்று என்று வினவ, ராஜா தனது தாங்க முடியாத வலியை முக்கி முனகி ஒருவாறு சொன்னான். அவர் காலில் விழுந்தான். அவன் தலையை அன்பாக ஆதுரமாக தடவி, அவன் எதிரே அமர்ந்தார். ஒரு சில வினாடிகள் சிலையாகி கண்மூடி மதுரை சுந்தரேசன் மீனாட்சியை மனதில் வேண்டினார். கணீரென்று குரல் எழும்பியது. அரண்மனையில் பெரும் கூட்டம். ராஜாவை சுற்றி நிற்க இடம் இல்லை. எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
`மந்திரமாவது நீறு’ என துவங்கி 10 பாடல்கள் ஒலிக்க , ராஜாவின் உடல் மீது தனது பட்டுக் கையினால் சம்பந்தர் விபூதியை எடுத்துப் பூசினார். சில நிமிஷங்களில் இருந்த இடம் தெரியாமல் ராஜாவின் வெப்பு நோய் நீங்கியது. நன்றிக்கண்ணீரோடு பாண்டியன் சம்பந்தர் காலில் விழுந்தான். அப்புறம் அனல் வாதம் புனல் வாதம் போட்டிகள் நடந்தது. கூன் விழுந்த பாண்டியன் நிமிர்ந்து நின்றான் `கூன் நிமிர்ந்து நின்ற சீர் நெடுமாறன்' ஆனான். சைவ சமயத்தை ஏற்று சிறப்பாக ஆட்சிசெய்தான்.
நான் சொல்ல வந்தது 10 திருநீற்றுப் பதிகங்கள் பற்றி. முதல் ரெண்டு மூன்றாவது மனப்பாடம் செய்யவேண்டிய பதிகங்கள்.
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே. 1
வேதத்தி லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 2
முத்தி தருவது நீறு
முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு
தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு
பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே. 3
காண இனியது நீறு
கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம்
பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு
மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு
திருஆல வாயான் திருநீறே. 4
பூச இனியது நீறு
புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு
பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு
வந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு
திருஆல வாயான் திருநீறே. 5
அருத்தம தாவது நீறு
அவலம் அறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு
வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு
புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே. 6
எயிலது வட்டது நீறு
விருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு
பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு
சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்
தாலவா யான் திருநீறே. 7
இராவணன் மேலது நீறு
எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு
பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு
தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி
ஆலவா யான்திரு நீறே. 8
மாலொ டயனறி யாத
வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள்
மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும்
இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம்
மாலவா யான்திரு நீறே. 9
குண்டிகைக் கையர்க ளோடு
சாக்கியர் கூட்டமுங்கூட
கண்டிகைப் பிப்பது நீறு
கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார்
ஏத்துந் தகையது நீறு
அண்டத்த வர்பணிந் தேத்தும்
ஆலவா யான்திரு நீறே. 10
ஆற்றல் அடல்விடை யேறும்
ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும்
பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்னனுடலுற்ற
தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும்
வல்லவர் நல்லவர் தாமே.
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன், திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் மேனிமேல் பூசிக் கொள் வது. அழகு தருவது. நூல்களால் புகழப்படுவது.
குளிர்ந்த நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருஆலவாயிலில் விளங்கும் சிவபிரானது திருநீறு, வேதங்களில் புகழ்ந்து ஓதப்பெறுவது. கொடிய துயர்களைப் போக்குவது. சிவஞானத்தைத் தருவது. அறியாமை முதலியவற்றைப் போக்குவது. புகழ்ந்து போற்றத் தக்கது. உண்மையாக நிலைபெற்றிருப்பது.
திருஆலவாயான் திருநீறு மோக்ஷம் தருவது. முனிவர்கள் அணிவது. நிலையானது. பெரியோர்கள் போற்றுவது. சிவனிடம் பக்தி தருவது. சித்திகளை அளிப்பது. கண்ணுக்கினியது. அழகூட்டுவது. பெருமை தருவது. இறப்பைத் தடுப்பது. அறிவைத் தருவது. உயர்வு அளிப்பது. புண்ணியம் வளர்ப்பது. பேச இனியது. ஆசை அறுப்பது. நோய் தீர்ப்பது. துன்பம் போக்குவது. திரிபுரம் எரித்தது. இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் தருவது. செல்வமாக கருதப்படுவது. தூய்மையை அளிப்பது.ராவணேஸ்வரன் பூசி வரம் பெற்றது. நல்லோர் மனதில் இடம் பெற்றது. பராசக்தி வடிவம். பாபம் போக்குவது. மெய்ப்பொருளை உணர்த்துவது.
No comments:
Post a Comment