Sunday, October 25, 2020

vijaya dasami

 

 மறக்க முடியாத  விஜய தசமி  -     விஷயம்  1. --- J.K. SIVAN



இன்று  விஜய தசமி,  வெகு முக்கியமான நாள் மட்டுமல்ல,  சில  அபூர்வ சம்பவங்கள் நடந்த தினம். குறிப்பாக ஒரு சிலவற்றை மட்டும் சொல்கிறேன்.

நம்மை விட  உயர்ந்தவர்கள்,  சிறந்தவர்கள்  தான் மஹான்கள்.  அதிகம் பேசாமல் ஆடம்பரமின்றி, அமைதியாக தக்க சமயத்தில் தேவையானவற்றிற்கு, தேவயானவர்க்கு மட்டும் தமது அதீத சக்தியை வெளிப்படுத்தி நன்மை புரிந்தவர்கள், இன்னும்  புரிபவர்கள்.

ஒருவர் குழந்தையானந்த ஸ்வாமிகள். புதிரானவர். நான்கு இடங்களில் ஜீவசமாதி யானவர். கிட்டத்தட்ட 250 வயது வாழ்ந்தவர் என்கிறார்கள்.   இவர் சமாதியாவதற்கு விஜயதசமியை தான்  தேர்ந்தெடுத்தார். 
.
ராமஸ்வாமி ஐயர் – திரிபுரசுந்தரி என்கிற ஸ்ரீவித்யா உபாசக தம்பதிகளுக்கு  புத்ர பாக்யம் இல்லை. மதுரை மீனாக்ஷியை  சென்று வேண்டினார்கள்: 

' அம்மா மீனாக்ஷி , உன்னருளால் ஒரு குழந்தை பிறந்தால், அதை உனக்கே அர்ப்பணிக்கிறோம்''  பிரார்த்தனை பலித்து ரெண்டு குழந்தைகள். ராமன், லட்சுமணன் என்று பெயர் வைத்தார்கள். மூத்தவன் ராமன் தெய்வீக சக்தி கொண்டவனாக இருந்தான். கண்களில் பளிச்சிடும் ஞான ஒளி. காலில் சங்கு, சக்கரரேகைகள். அழகான குழந்தை. அழவுமில்லை. அம்மாவிடம் பாலும் குடிக்கவில்லை.   இப்படி ஒரு குழந்தை இருந்தால் கவலை இருக்காதா? யார் யாரோவிடமெல்லாம் சென்று குழந்தைக்கு என்ன குறை, என்ன தெய்வ குத்தம் என்று கேட்டார்கள்.  ஆலய அர்ச்சகருக்கு அருள்வாக்கு வந்தது
  
''குழந்தை பிறந்தால் அம்பாளுக்கு அர்பணித்துவிடுவதாக சொன்னாயே? 
''ரெண்டு பிள்ளைகளில்  யார்   காலில்  சங்கு சக்ரம் உள்ளதோ  அவனை  அர்ப்பணி''. 
ஆகவே முதல் பிள்ளை ராமன் து.மதுரை மீனாட்சி கோவிலில் விடப்பட்டான்.  அம்பாள் அர்ச்சகர்கள் அருளால் வளர்ந்து , பராமரிக்கப்பட்டு, உபநயனமும் முடிந்து,  ராஜகோபாலன் என்று தீக்ஷா நாமமும் ராமனுக்கு  சூட்டப்பட்டது.  மதுரை மீனாட்சி தரிசனத்துக்கு காசியிலிருந்து வந்த கணபதி பாபா அவனை சிஷ்யனானாக ஏற்று காசிக்கு சென்றான்.   காசி கணபதி பாபாவிடமிருந்து சகல சாஸ்திரங்களையும் ராஜகோபாலன் பயின்று புனித ஸ்தல யாத்திரை சென்றான். வருஷங்கள் ஓடியது. ராஜ பூஜித ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் தனது குரு கணபதி பாபா மகா சமாதி அடைந்தவுடன் குருவின் சமாதிக்குப் பின் தனியறையில் பல வருஷங்கள் தியானம் நிஷ்டையில் இருந்தார். நேரம் வந்த பிறகு தாமும் ஒரு சமாதிக் குழியை ஏற்படுத்தி அதில் இறங்கி ஜீவ சமாதி ஆனார். அவரது இன்னொரு அவதாரம்  தான்  ''த்ரைலிங்க சுவாமிகள்''.  நேபாளத்தில் ஜீவசமாதி ஆனார்  மூன்றாவது அவதாரம் தென்காசியில் . அப்போது பெயர் குழந்தை வேலப்பன். பல்வேறு அற்புதங்களைச் செய்து அங்கேயே ஜீவ சமாதி ஆனார். நான்காவது அவதாரம் 
 மதுரையில் குள்ளமாக,  பருத்த தொந்தி, வட்ட முகம். எச்சில் ஒழுகும் வாயுடன் மழலைப் பேச்சுடன்,  குழந்தை தோற்றத்துடன்  சிரிக்கும்  குழந்தையானந்த ஸ்வாமிகள். 

''கண்ணுரெண்டும் எச்சி, கறந்த பாலும் எச்சி ‘ என்று யாரைப்பார்த்தாலும் சொல்வார்.  ஒரு தரம் மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் ரயிலில் ஏறி உட்கார்ந்து விட்டார். வெள்ளைக்கார அதிகாரி ஒருவருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட முதல் வகுப்புப் பெட்டி அது. வெள்ளைக்காரன் மூட்டை முடிச்சோடு வந்தவன் தனது ஆசனத்தில் ஒரு அழுக்கு ஆசாமி உட்கார்ந்திருப்பதை பார்த்ததும் கடும் கோபம் கொண்டான்.

''எழுந்து போ இதை விட்டு உடனே ''
சுவாமிகள் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் இருந்தார். வெள்ளைக்காரன் ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் செய்தான். ஸ்டேஷன் மாஸ்டர் கல்யாணராமய்யர் சுவாமிகளிடம் டிக்கட் இல்லை என்பதால் கீழே இறக்கி விட்டார்.
சுவாமிகள் ஒன்றும் பேசவில்லை. பிளாட்பாரத்தில் சென்று அமர்ந்து விட்டார். ரயில் கிளம்ப பச்சைக்கொடி காட்டப்பட்டது. டிரைவர் எஞ்சினை இயக்கினார். ரயில் கிளம்பவில்லை. பலமுறை முயன்றும் பலனில்லை. யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. என்ன காரணத்தால் ரயில் என்ஜின் இயங்கவில்லை என்று தெரிய வில்லையே.

அங்கிருந்த சிலருக்கு குழந்தையானந்தரையும் அவர் மகிமையும் பற்றி தெரியும். ஸ்டேஷன் மாஸ்டரிடம் சென்று சுவாமிகளின் பெருமை பற்றிச் சொல்லி, அவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லினர். கல்யாணராம அய்யரும் பணிவுடன் சுவாமிகளிடம் மன்னிப்பு வேண்டினார். சுவாமிகளை வண்டியில் ஏற்றி அவர் முதலில் அமர்ந்திருந்த ஆசனத்திலேயே அமர்த்தினார். வெள்ளைக்கார அதிகாரிக்கு வேறு ஒரு பெட்டியில் சீட் கொடுத்தார்கள்.

ஸ்வாமிகள் சந்தோஷமாக ''டேய், ரயில் இனிமேல் போகும்டா.கிளப்பு ’ என்றார். டிரைவர் உடனே எஞ்சினை இயக்க, ரயில் கிளம்பியது.

இன்னொன்றும் எனக்கு சொல்ல தோன்றுகிறது. அதையும் சொல்லி நிறுத்துகிறேன்.

குழந்தையானந்த சுவாமிகள் பக்தர் ஒருவர் வீட்டில் சுவாமிகளின் திருவுருவப் படத்தோடு அவர் முந்தைய உருவமான த்ரையலிங்க சுவாமிகளின் படத்தையும் வைத்து வழிபட்டு வந்தனர். அந்த வீட்டுக்கு திடீரென்று ஸ்வாமிகள் ஒருநாள் சென்றார்.

இரண்டு படங்களையும் பார்த்த வாமிகள், ‘அடேய், என்னுடைய ரெண்டு வேஷத்தையும் வைத்திருக்கிறாயா? பேஷ், பேஷ்’ என்றார் புன்னகையுடன்

 அவர்தான் முந்தைய அவதாரத்தில் த்ரி லிங்க ஸ்வாமிகள் என்று இதனால் ஊர்ஜிதமாகியது.
இந்த மஹான் 1932ம் வருடம் விஜயதசமி அன்று, மதுரை லட்சுமி நாராயணபுரத்தில் சமாதி அடைந்தார். மதுரை அரசரடியில் அமைந்திருக்கும் இவரது ஜீவ சமாதியிலிருந்து சூட்சும ரீதியாக பக்தர்களுக்கு இன்றும் ஸ்ரீ குழந்தை யானந்தர் உதவி வருகிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

 விஜயதசமி அன்று மகானை உளப்பூர்வமாக வழிபடுபவர்களுக்கு எல்லா நன்மையும் பெருகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.



அடுத்த கட்டுரையில் விஜயதசமி விஷயம். 2

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...