பேசும் தெய்வம்: J K SIVAN
5. உண்ண உறங்கவும் ஏற்பாடு
மஹா பெரியவாவின் அத்யந்த பக்தர் ஸ்ரீ D.சுந்தரராமனின் 'கடவுளுடன் வாழ்ந்தேன்'' (I LIVED WITH GOD ) எனும் ஆங்கில கட்டுரையைப் படித்து சுருக்கி மூலத்திலிருந்து பிறழாமல் இதுவரை நான்கு பகுதிகள் கொடுத்தேன். இன்னும் மூன்று இருக்கும் என்று தோன்றுகிறது. இதை FACEBOOK WHATSAAP நண்பர்களுக்கு தொடர்ந்து அனுப்பி வருகிறேன்.
இனி ஐந்தாவது பகுதிக்குள் செல்வோம்.
''என்னை சிதம்பரத்தில் தங்க நகை வியாபாரி ரத்தினசாமி செட்டியார் என் அக்கா வீட்டில் வந்து சந்தித்த பிறகு நான் சின்ன காஞ்சிபுரம் சென்றேன் அல்லவா. அப்போது பெரியவாளிடம் ''செட்டியார் வந்து மன்னிப்பு கேட்டு பிறகு எனக்கு காலேஜ் படிப்பு முழுவதற்கும் உதவுவதாக சொன்னார். நான் சரி என்று சொல்லவில்லை. உங்களை சந்திக்கப்போகிறேன். வந்து பார்க்கிறேன் '' என்று சொன்னேன்.
''ஓஹோ செட்டியார் தானே நேரில் வந்து உன்கிட்ட மன்னிப்பு கேட்டாரா?
''ஆமாம், பெரியவா. அவரே நேரில் அக்கா வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்டார்''
பெரியவா சில கணங்கள் மௌனமாக இருந்தார்.
''செட்டியார் இங்கே காஞ்சிபுரத்தில் என்னைப் பார்க்க வந்தபோது நான் சற்று கடுமையாக இருந்துட்டேனோ, நீ அவர் கிட்டே பணம் கேட்க போனபோது நடந்துண்டதற்கு வருந்தரார் போல இருக்கு. செட்டியார் மேலே தப்பு சொல்றதுலே அர்த்தமில்லே. நான் செட்டியார் மேனேஜர் கிட்டே செட்டியார் கிட்டே என்ன அவர் செய்யணும்னு எதிர்பார்க்கறேன் என்று புரியும்படியாக சொல்லி இருக்கணும். அவர் உன்கிட்டே நிலம் இருக்கா, வயல் இருக்கா, வீடு இருக்கா, நகை இருக்கா ன்னு கேட்டிருக்க கூடாது தான். அதெல்லாம் இருந்தா நானே உன்னை அவர் கிட்டே அனுப்பி இருக்கமாட்டேன். சரி இப்போ செட்டியார் உன் காலேஜ் படிப்பு செலவெல்லாம் கடைசிவரை ஏத்துக்கறதுக்கு முன் வந்திருக்காரே நீ என்ன பண்றதாக உத்தேசம்?'' பெரியவா அஸ்திரத்தை என் மீது வீசினார்.
''செட்டியார் கிட்டேருந்து எந்த உதவியும் எனக்கு வேணாம்னு எனக்கு படறது பெரியவா''
''ஓஹோ, உனக்கு செட்டியார் மேலே கோவம் இன்னும் ஆறலை போல இருக்கு. அவர் தானாகவே தப்பு பண்ணிட்டோம்னு புரிஞ்சுண்டு பிராயச்சித்தம் பண்ண வரார். அதுக்கு மேலே அவர் என்ன பண்ணணும் னு நீ நினைக்கிறே ? அவரும் ஒரு பக்தர். எனக்காக அவர் தானாகவே உனக்கு உதவ முன்வந்தபோது அதை நிராகரிச்சா அவர் மனசு கஷ்டப்படும் இல்லையா? அப்படி நடக்கவேண்டாம்னு எனக்கு படறது'' என்றார் பெரியவா. 'சரி உனக்கு கைச்செலவுக்கு எவ்வளவு தேவைப்படும்?''
''மாசம் பத்து ரூபாய் ஜாஸ்தி பெரியவா''
''அப்படின்னா, மாசா மாசம் பத்து ரூபாய்னு, வருஷா வருஷம் ஒரு பத்து மாசம் , படிப்பு முடியற வரைக்கும் உனக்கு கொடுத்தா அவருக்கும் திருப்தியா இருக்கும் இல்லியா.''
நான் பேசாமல் தலையாட்டினேன்.
நான் சிதம்பரம் திரும்பி வந்து, பெரியவா சொன்னதை செட்டியாரைப் போய் பார்த்து கூறினேன். அவருக்கும் ரொம்ப சந்தோஷம். அப்புறம் மாசா மாசம் அவர் கடைக்குப் போய் பத்து ரூபாய் வாங்கிண்டேன். என்னை பார்க்கும்போதெல்லாம் பெரியவாளைப் பற்றி பக்தியா ஆர்வமா கேட்பார். என் படிப்பு எப்படி இருக்குன் னு கேட்பார்.
மஹா பெரியவா தான், இப்படி என்னை காலேஜில் சேர்த்து விட்டு, வருஷா வருஷம் ட்யூஷன் பீஸ் கட்டி, எனக்கு கைச்செலவுக்கும் வழி பண்ணினார். எனக்கு தங்க இடம், சாப்பாடுக்கு என்ன பிளான் வச்சிருக்காரோ தெரியல்லே . எத்தனை நாள் அக்கா வீட்டில் சாப்பிட்டுண்டு இருக்க முடியும். பெரியவா அதற்கும் வழி பண்ணி இருக்கார்னு தெரிஞ்சுது.
ஒருநாள் ஐம்பதுக்கு மேல் வயதான ஒரு தம்பதி சிதம்பரத்தில் என் அக்கா வீட்டுக்கு வந்தார்கள்
''வாங்கோ, உட்காருங்கோ, யார் என்ன விஷயம்,?'' என்று அக்கா மெதுவாக கேட்டாள் .
''நான் ஸ்வாமிநாதய்யர், இவ என் பார்யா. இங்கே தான் சிதம்பரத்தில் இருக்கோம். காஞ்சிபுரத்திலே பெரியவா தரிசனம் பண்ணிட்டு வரோம். பிறகு ஸ்வாமிநாதய்யர் மனைவி தான் விஷயம் சொன்னாள் .
''நாங்க கிளம்பும்போது பெரியவா என்கிட்டே, எனக்கு வேண்டிய ஒரு பையன் உங்க ஊர்லே இருக்கான்.அண்ணாமலை யூனிவெர்சிடிலே படிக்கிறான். அவன் சாப்பிட்டுண்டு , தங்கி இருக்க இடம் வேணும். உங்களாலே ஏதாவது ஏற்பாடு பண்ண முடியுமா? உங்களாலே முடியும்னா அது எனக்கு இட்ட பிக்ஷைனு நினைச்சுக்குங்கோ''ன்னு சொன்னார். எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துது.
''நாங்க எங்க ஜாகையிலே அவனை ஜாக்கிரதையா தங்கி சாப்பிட்டுண்டு படிப்பு முடியற வரைக்கும் எங்களோடு இருக்கறதுக்கு ஏற்பா டு பண்றோம்'' னு சொன்னோம்''
பெரியவா அதுக்கு ஒப்புக்கொள்ளவில்லை.
''வாரத்தில் ஒரு நாள் உங்களோடு தங்கி, சாப்பிட, இடம் கொடுத்தா போதும்'' னு சொல்லிட்டார்.
நாங்க சரின்னுட்டோம். எங்களுக்கு சந்தான பாக்யம் இல்லே. படிப்பு முடியற வரைக்கும் நாங்களே வச்சுக்கலாம் னு நினைச்சோம், சொன்னோம். பிராப்தம் இல்லை. பெரியவா ஒத்துக்கலே. வாரத்தில் ஒரு நாள்னு சொல்லிட்டார்.
எங்களுக்கு தெரிஞ்ச, ரெண்டு பேர் பட்டம்மா, கோகிலா கிட்டேயும் இதே மாதிரி வாரத்தில் ஒருநாள் அவர்கள் வீட்டிலே தங்கி சாப்பிட ஏற்பாடு பண்ண சொல்லிட்டார் . அவர்களும் பெரியவா பக்தர்கள். உடனே ஒத்துண்டுட்டா.
மடத்துலே உங்க அட்ரஸ் கொடுத்தா. அதனாலே சுந்தரராமனை கூப்பிட வந்தோம் ''
இதெல்லாம் கேட்டுண்டு இருந்த எனக்கு என்னவோ போலிருந்தது. என் மன நிலை அப்போ இருந்தது என்னன்னு இப்போ விவரிக்க தெரியலே. இந்த புரிந்து கொள்ளமுடியாத விசித்திர மஹா பெரியவா என்னை விடாமல் கவனிச்சுண்டே இருக்கார். நடக்கிற ஒவ்வொண்ணையும் முடிவு பண்றார்.இதை நினைச்சா மனது எவ்வளவு சந்தோஷமாகிறது. அவர் கிட்டே சொல்லவே இல்லை. என்னடா இது. அக்கா வீட்டிலே எத்தனை வருஷம் தங்கி சாப்பிட்டுண்டு படிக்கிறது வேறே இடம் இல்லையே, என்ன பண்றதுன்னு எனக்குள்ளேயே புழுங்கிண்டிருந்தது அவர் மனசிலே பட்டு இந்த ஏற்பாடுகளை யாருக்கும் சிரமம் இல்லாம, வாரத்தில் நாலு வீடுன்னு ஏற்பாடு பண்ணிருக்காரே.
நான் அவா ரெண்டு பேருக்கு சாஷ்டாங்கமா நமஸ்காரம் பண்ணினேன். ''பெரியவா என்கிட்டே ஒரு வார்த்தை கூட இப்படி ஒரு ஏற்பாடு செயதிருக்கார்னு சொல்லவே இல்லை'' என்று மெதுவாக சொன்னேன்.
அவர்கள் போகும்போது அரை மனதாக சென்றார்கள். ''சரிப்பா சுந்தரராமா, எங்க வீட்டுக்கு வா, வந்து எங்களுக்கு சந்தோஷத்தை கொடு'' என்றார்கள்
எங்க அக்கா மீனாட்சிக்கும் எனக்கும் ஆச்சர்யம். எப்படி கடகடன்னு ஒவ்வொரு விஷயமா முடியறது. இந்த ரெண்டு பேர் வந்தது, நான் அவர்கள் வீட்டுக்கு போவது, வாரத்தில் ஒருநாள் அவர்களோடு தங்குவது இதெல்லாம் இன்னும் மனதில் சரியாக பதியவில்லை. அதற்குள் மறுநாள் காலை ஒருவர் வந்தார். குள்ளமாக இருந்தார்.
தொடரும்
No comments:
Post a Comment