பேசும் தெய்வம் J K SIVAN
ஆசார்யாளும் அரியக்குடியும். 6
அந்த காலத்தில் பரமாச்சாரியார் நிறைய உபன்யாசங்கள் செய்வார். எல்லோரிடமும் பேசுவார். அவரது ஞானம், இனிமையான பேச்சு ஆர்வம், ஞானம், ஆதரவு, அன்பு எல்லோரையும் நாக பாசம் போல் கட்டிப்போட்ட காலம் அது. பிற்காலத்தில் அவரால் அதிகம் பேச இயலவில்லை. மௌனம். ஜாடையில் சம்பாஷணை.
அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் , தேவகோட்டையில் சுப்ரமண்யனைப் பற்றி பேசியதை ரசித்துக் கொண்டு வருகிறோம். தொடர்ந்து மகா பெரியவா ''ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே'' பாடலை ஒரு ஆராய்ச்சி கட்டுரை போல தொடர்கிறார்.
''எதற்கு இந்த க்ரிதி மட்டும் வித்யாசம் என்று கேள்வி கேட்டேனே? காரணம் என்ன தெரியுமா? சுப்பிரமணியன் துடிப்பான பாலகன். அங்கும் இங்கும் ஓடுபவன்.துறுதுறு விளையாட்டுப் பிள்ளை.
முத்துசாமி தீக்ஷிதர் ''பூசுராதி ஸமஸ்த ஜன பூஜிதாப்ஜ சரணாய'' என்று பிராமணர்களும் மற்றவரும் அவனது தாமரைத் திருவடியை தொழுவதைச் சொல்கிறார். ''பூ சுரா'' என்றால் பூமியில் தேவர்கள்.... மந்திரங்களை யாகங்களை யஞங்களை புரியும் வேத பிராமணர்கள் தேவர்களாக மதிக்கப்படுகிறார்கள். சுப்ரமணியன் பிராமணனுக்கு மட்டுமா தெய்வம்? இல்லை, அவன் எல்லோருக்கும் பொதுவானவன். சொந்தமானவன். அவனது தேவியர்களில் ஒருவள் இந்திரன் மகள், தேவ சேனா, மற்றவள் வேடுவர் குல வள்ளி அல்லவா? வாரியார் ஸ்வாமிகள் அவள் வள்ளி அவன் வள்ளல் என்பார். சுரமகளும் குற மகளும் மணந்த சுப்ரமணியனை, முருகன் என்ற தமிழ்க்கடவுள் என்று சொல்வதுண்டு. முருகன் பிராமணருக்கு மட்டும் கடவுள் அல்ல, எல்லோருக்குமானவன் என்று புரிவதற்கு தான் வள்ளி மணாளனைப் பற்றி சொன்னேன். நாம் அனைவரும் ஒன்றே. நம்மில் எந்த வித்யாசமும் கிடையாது.
''பூஜிதாப்ஜ சரணாய'' அப்ஜம் என்றால் தாமரையை குறிக்கிறது. தாமரைத் திருவடிகள் கொண்டவன் சுப்ரமண்யன். அப் என்றால் நீர். நீரில் பிறந்த, உதித்த, தோன்றிய தாமரை. தாமரையை நாம் ஜலஜம், அம்புஜம், சரோஜம், நீரஜம் என்கிறோம். எல்லாமே நீரில் உதித்த என்ற பொருள் தருபவை. வனஜம் என்றால் வனத்தில் தோன்றிய என்று அர்த்தம். காட்டில் எப்படி தாமரை வளரும்? வனம் என்றாலும் நீர் தான். கம் என்றாலும் நீர். கம்ஜம் என்ற தாமரைக் கண்ணாள் இதை சேர்த்துச் சொல்லும் போது கம்ஜலோசனி, கஞ்சதளாயதாக்ஷி என்று சொல்கிறோம். இந்த வார்த்தைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது அர்த்தம் புரிந்து கொள்ளலாம். வரிஜம் என்றாலும் தாமரை. தாமரை பற்றி நிறைய சொல்லியாகி விட்டது. எல்லோருக்குமே நிறைய தெரியும். அடுத்த வார்த்தைக்கு போவோம்.
''வாசுகி தக்ஷகாதி சர்ப்ப ஸ்வரூப தரணாய'' - இதற்கு என்ன அர்த்தம்?
வாசுகி தக்ஷன் போன்ற கொடிய பெரிய சர்ப்பங்களின் உருவமான என்று அர்த்தம். ஆத்ம ஞான சம்பந்தமாக சொல்வதானால் சர்ப்பம் என்பது மூலாதாரத்தில் கிடக்கும் குண்டலினி. அதை மேலே எழுப்புவது தான் குண்டலினி யோகம். சர்ப்பம் வளைந்து வளைந்து நகரும். அதுபோல் தான் குண்டலினி சக்தியும் மேலே நகரும். மனத்தை அடக்கி தியானம் செய்யும்போது அது சௌகர்யமாக மேலே எழும்பும். ஸஹஸ்ராரத்தில் பரமாத்வாவோடு இணையும் . ஆத்ம ஞான யோகத்திற்குள் இப்போது செல்ல வேண்டாம். பிறகு பார்ப்போம்.
சுப்பிரமணியனின் ஆயுதம் வேல். அவனுக்கே வேலாயுதன் என்று பெயர். சக்தி ஆயுதம். வேலும் வேலவனும் இணை பிரியாதவை. வேறு எந்த தெய்வத்தையும் அதன் ஆயுதத்தையும் இப்படி பிணைத்து சொல்வதில்லை. சுப்பிரமணியம் என்றால் சர்ப்பங்கள் என்றும் சொல்வதுண்டு. பாம்புக்கும் அவனுக்கும் அவ்வளவு நெருக்கமான உறவு.
கனவில் சர்ப்பம் வந்தால் பெரியவர்கள் ''ஷஷ்டி பூஜை பண்ணு உன்னை நினைவூட்டுகிறது'' என்று சொல்வார்கள். ஷஷ்டி பூஜை தான் சுப்ரமண்யனுக்கு ப்ரீத்தி. இதை சில இடங்களில் நாகார்ஜுன பூஜை என்று வழிபடுவார்கள். புத்ர பாக்யத்துக்கு சர்ப்பம் வாழும் புற்றுக்களை சுற்றி வந்து பால் வார்ப்பது ஒரு வழக்கம். நம்பிக்கை. எத்தனையோ பேர் பலனடைந்ததால் தானே இது பழக்கமாயிற்று?
தேவர்களை ரக்ஷிக்க தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி தேவசேனாபதியாக சுப்ரமணியன் தோன்றினான். அசுரர்களை வென்றான். அடக்கினான். கர்நாடகாவில், தெலுங்கு பிரதேசங்களில் , ஆந்திராவில் ஆலயங்களில் சுப்ரமணியன் உருவச்சிலை வைப்பதில்லை. அதற்கு பதில் நாகத்தை, சர்ப்பத்தை வணங்குவார்கள். கர்நாடகாவில் ஒரு ஊரே சுப்ரமண்யா என்று இருக்கிறது. புண்ய க்ஷேத்ரம். அங்கும் சர்ப்ப வழிபாடு. சுப்ரமண்யம் என்றால் பாம்பு அந்த ஊர் மக்களுக்கு. தெலுங்கர்களும் சுப்பராயுடு என்று சுப்ரமண்யனை வழிபடுகிறார்கள். அங்கும் சர்ப்பம் என்று தான் அர்த்தம்.
மஹா பெரியவா ஒரு பிரமாதமான சொற்பொழிவு நடத்துகிறார். எவரும் இதை கேட்காமல் படிக்காமல் விட்டுவிடாதீர்கள். அற்புதமான ஒரு சுய ஆராய்ச்சி விளக்கம். எழுதவே எனக்கு கையே கூட தித்திப்பாக இனிக்கிறது.
தொடரும்
No comments:
Post a Comment