பேசும் தெய்வம் J K SIVAN
ஆசார்யாளும் அரியக்குடியும். 9
அரியக்குடி ராமாநுஜய்யங்கார் தேவகோட் டைக்கு மஹா பெரியவா அழைக்கிறார் என்று கேள்விப்பட்டு பக்தியோடு, ஆர்வத்தோடு காரைக்குடியிலிருந்து வந்தபோது இப்படி ஒரு ஆனந்த அனுபவம் தனக்கு பகவான் அனுக்ரஹத்தால், பகவான் மூலமாகவே கிடைக்கப் போகிறது என்று நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். பாக்யவான் அவர். அவரை முன்னிட்டு அன்று அங்கிருந்த மற்ற பக்தர்கள் ஐயங்காரை விட அதிகம் புண்யசாலிகள் ஆனார்கள். ஏன் நாமும் தான் அங்கே நடந்ததை எத்தனையோ வருஷங்கள் கழித்து இங்கே அறிந்து கொள்கிறோமே! இதைவிட என்ன பாக்கியம் வேண்டும்? பெரியவாவின் குரல் அந்த சின்ன அறையின் ஜன்னலுக்கு உள்புறம் இருந்து கேட்கிறதா?
''சுப்ரமண்யன், பாலன் போல் நமக்கு தோன்றினாலும் பரம ஞானி. நம்மை கஷ்டங்களிலிருந்து, விருப்பு வெறுப்பு களிலிருந்து நீக்குபவன்.
'' வீரானுத '' - புத்திசாலித்தனமும் திறமையும் கொண்டவன். நமக்கு கற்பிப்பதில் நிபுணன். ஞானி. கிருஷ்ணன் ''அர்ஜுனா , எடு உன் காண்டீபத்தை, தொடு கணைகளை'' என்கிறான். இது வெறும் கட்டளை அல்ல. ஞானோபதேசம். உள் அர்த்தத்தை உணர்ந் தால் '' உன் கடமையை மற்ற எண்ணங்கள் கலக்காமல் செய்'' என்று உணர்த்துவது புரியும். சுப்ரமண்யன் ஞான வீரன்: ''னுதா'' என்றால் வணங்கப்படுகிற என்று அர்த்தம். தேவாதி தேவர்கள் முதலாக தொழப்படு கிறவன். சுப்ரமண்யனின் ஒன்பது உதவியாளர்களுக்கும் வீர என்று தான் பெயர் தொடங்கும். வீரபாஹு , வீர கேசரி, வீரமஹேந்திரன்.... என்று. அதனால் கூட இப்படிப்பட்ட வீரர்களால் வணங்கப்படுகிற என்று அர்த்தம் கொள்ளலாம்.
''குருகுஹாய'': என்று வரும்போது ஞான பண்டிதன் என்று காட்டுகிறது என்று ஏற்கனவே சொன்னேன். சுப்பிரமண்யன் வாழும் இடங்கள் முக்கியமாக மலைகள் குகைகள், குன்றுகள், ''குன்று தோராடும் குமரா'' என்கிறோம். டில்லியில் கூட சிறிய மலையில் மலை மந்திர் எனும் மேட்டில் இருப்பவன். '' குஹாய'' குகை, அடர்ந்து படர்ந்த மறைந்து என்று புரிந்துகொள்ளலாம். குறிஞ்சிக் கடவுள் என்கிறோம். கோடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவன் இருக்கிறான். ஒவ்வொருவர் மனக் குகை யிலும் நிச்சயம் வாழ்பவன். வெளியே வந்து உபதேசிக்கும்போது குரு குஹன். குருகுஹ என்பது முத்துசாமி தீக்ஷிதரின் ஒவ்வொரு க்ரிதியிலும் காணும் முத்திரை. ''த்வாந்தம் '' என்றால் இருட்டு. சவிதா: சூரியன். சூரியன் எப்படி இருட்டை அகற்றுகிறானோ அப்படி மனதிலிருந்து அஞ்ஞான இருளை போக்கு பவன் சுப்ரமண்யன் . சூரியனுக்கு வேறு சில பெயர்களும் உண்டு: ஆதித்யன், பூஷா , பாஸ்கரன், பானு, மார்த்தாண்டன், தினமணி. இன்னும் ''ஆதித்ய ஹ்ருதய'' த்தில் பலவற்றை பார்க்கலாம். ''சவிதா'' காயத்ரி மந்திரத்தில் வருகிறது. காயத்ரி மந்திரத்தின் அர்த்தமே, ''காயத்ரி, பரமாத்மாவான ப்ரம்மம் , சூரியன் போல் ஒளிவீசி, என்னுள் புதைந்திருக்கும் அஞ்ஞான இருளை மாற்ரி ஞானத்தைத் துவக்க வேண்டும் '' அஞ்ஞானத்தை அழி என்று சொல்லாமல் அதை மாற்றி எழச்செய் என்பது சிறப்பு.
''ப்ரஸவம்'' : பிறப்பு. அஞ்ஞானத்திலிருந்து ஞானத்தைப் பிறக்கச் செய் . சூரியன் அழிப்பவன் மட்டும் அல்ல. இருள், அசுத்தம், கிருமிகள் போன்றவற்றை அழிக்கும்போதே, மழையை உண்டாக்கி, பயிர்களை, தாவரங் களை உயிர்களை வாழச் செய்கி றான். உடல் ஆரோக்யம் தருகிறான்., மனதை வளம்பெறச் செய்கிறான். சுப்ரமண்யன் அக இருள் நீக்குபவன். ஞானத்தை வளர்ப்பவன். ஆகவே தான் முததுசாமி தீக்ஷிதர் ''சவிதா'' என்று மிகப் பொருத்தமான வார்த்தையை அழகா கப் பிரயோகித்திருக்கிறார். திருமுருகாற்றுப் படையில் நக்கீரரும் இவ்வாறே ஞாயிறு எனும் சூரிய உதயத்தை சொல்கிறார். ''உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டா''
மொத்தத்தில் இந்த '' சுப்ரமண்யாய நமஸ்தே'' க்ரிதி காயத்ரி மந்திரத்தின் சாரம் போல் தெரிகிறது. வடிகட்டிய வேத சாரம். ''சு ''ப்ரம்மண்யாய'' என்று பிரம்மத்தை நினைத்து, அனுபல்லவியில் உச்சத்தில் ''வரேண்யாய'' சரணத்தில் உச்ச கட்டத்தில் ''ஸவித்ரு'' !.
''விஜயவள்ளி பர்த்ரே'' சுப்ரமண்யனை வேடிக்கையாக எப்படியெல்லாம் காட்டு கிறார். ஞானியாக, வீரனாக, அழகனாக, தயாளனாக, திருச்செந்தூரில் சூர சம்ஹார மூர்த்தியாக, பழனியில் ஆண்டியாக, சந்நியாசி யாக, சுவாமிமலையில் பிரம்மச் சாரி ஞானபண்டிதனாக, திருப்பரங் குன்றத் தில் தேவசேனா பதியாக , திருத்தணியில் வள்ளிக்கணவனாக. விஜயவல்லி ஸ்ரீ வள்ளி தான். தேவசேனா தான் ஜெயந்தி. ஜெயா விஜயா இருவரின் பதி அவன். வள்ளிக் கல்யாணம் எவ்வளவு ஆனந்தத்தை தருகிறது. இதில் தத்வம் என்ன? மனதை லேசாக்குவது. இந்திரியாதிகளிலிருந்து விடுபட்டு பிரம்மத் தோடு சேர்ப்பது தான் கல்யாணம்.
''தீன சரண்யாய '' ஏழை எளியோருக்கு எளிதில் அருள்புரிபவன், கருணாசாகரன், உலகநாதன், நாயகி குமாரன் அல்லவா? உலகமக்கள் மேல் காருண்யம் இல்லாமலா இருக்கும்? அவள் வள்ளி, வாரிவழங்கும் அவன் வள்ளல். .
'சக்திஆயுத தர்த்ரே;; சக்தி வேலாயுதன். ஞானவேலன். 'தீராய'' - அவனை தீரனாக, வீரனாக, பயம் இல்லாதவனாக, காட்டுகிறார் என்பது மட்டும் அல்ல. இன்னொரு உள்ளர்த்தம். ''புத்தி கூர்மையானவன்''. அதீத புத்திசாலித்தனம் '' தீ'' dhee எனப்படும். காயத்ரி மந்திரத்தில் வருகிறதே. புத்தி. அறிவு. பரமாத்ம தேஜஸ். ப்ரம்ம ஞான ஒளி. ' இந்த க்ரிதியை பாடுபவன் அந்த ஒளி பெற வேண்டுகிறான். பெறுகிறான். வேதத்தை ஒலிப்பது போல் தான் பாடுவதும்.
இந்த பாடல் ஒரு ''சங்கீத காயத்ரி'' என்று தாராளமாக சொல்லலாம். அதனால் தான் காயத்ரி மந்த்ர சொற்களை இதில் கடன் வாங்கி இணைத்திருக்கிறார். சங்கீதத்தில் ஆதார ஸ்வரம் எது? ''ஸ'' எனும் ஷட்ஜம். சேவலின் கூவல் விடியலை காட்டுவது அழைப்பது போல. அதனால் தான் அருண கிரிநாதர் எனும் ஞானியும் ''மரகத மயூர பெருமாள் காண் '' என்கிறார். சுப்ரமண்யன் ஆதார ஸ்வரன் சங்கீத நாதன் அல்லவா? அவன் மீது சங்கீத காயத்ரி தேவை தானே? அதனால் தானே தகுந்தவனாக முத்துஸ்வாமி தீக்ஷிதரை தேர்ந்தெடுத்து கூப்பிட்டு, சிரஸைத் தடவிக் கொடுத்து, அவர் வாயில் கற்கண்டை போட்டு பாட வைத்தான்...
''நாத விதாத்ரே'' விதாதா என்பது பிரம்மாவை.
மேற்கொண்டு பெரியவா விளக்கத்தை தொடர்ந்து கேட்போம்.
No comments:
Post a Comment