Sunday, November 8, 2020

GITA

 

                                                             
                கீதா..... ஒரு முன்னோட்டம்.   J.K. SIVAN

''கீதாவா?  யார் அது? ....

''ஒரு பெண் இல்லை.   இது   ஒரு பேச்சு. சம்பாஷணை. அதை புஸ்தகமாக போட்டு  அதற்கு   வைத்த பெயர்  கீதை.''

''    ஓஹோ.  அப்படியா,  யார்  பேசியது, எங்கே, எப்போது, எதற்கு?

'' ஒரு  ராஜ்யத்துக்காக  ரெண்டுபேருக்குள்ளே சண்டை. பெரியப்பா சித்தப்பா மகன்களுக்குள் .  இந்த
 உரிமைப் போராட்ட சண்டைக்குப் பெயர்  மஹா பாரத யுத்தம்.  குருக்ஷேத்ரம் எனும்   போர்க்களத்தில்  ஒருவனுக்கு கூறப்பட்ட  அறிவுரை அது.'' 

''யார் அவர்கள்?எங்கே யுத்தம் நடந்தது? அறிவுரை கூறியது யார்?

''நூறு சகோதரர்கள் கொண்ட ஒரு குடும்பம் ஒருபக்கம். கௌரவர்கள் என்று பெயர்.  ஐந்து சகோதரர்கள் கொண்ட ஒரு குடும்பம்  பாண்டவர்கள் என்று பெயர். இன்னொருபக்கம்.   18 நாள்  யுத்தம் நடந்தது.  யுத்தம் ஆரம்பிக்கும் முன்னால்  இந்த அறிவுரை கிருஷ்ணனால் கொடுக்கப்பட்டது. அது எக்காலத்திலும்
 எல்லோருக்கும் பொருந்தும். சொன்னவன்  கடவுள்  கிருஷ்ணன். கேட்டவன்  அவன் பக்தன், அர்ஜுனன்,  தோழன்''பாண்டவ வீரன். 

இது  வேறு யாருக்கும் தெரியாதோ? 
ஏன்  தெரியாது.  அப்போதே தெரியும்:  அர்ஜுனன் தேரின் மேல் இருந்த ஹனுமான், சஞ்சயன், அவன் மூலம் த்ரிதராஷ்டிரனுக்கு இது முழுவதும் தெரியும்.  அப்புறம்  இப்போது படிக்கும் நமக்கு.  கிருஷ்ணன் நமக்காகவும்  சொன்னது.  ''அர்ஜுனா , உன்னை உத்தேசித்து நான் பொதுவாக இதை  உபதேசிக்கிறேன் ''  ''நிமித்ர மாத்திரம் பவ  சவ்யசாசி. இந்த  கீதை அறிவுரை  பதினெட்டு அத்தியாயங்கள்கொண்டது.  . ஒவ்வொன்றும்    ஒரு  ''யோகம்'' என்று முடியும்.''

'கீதை தெரியாவிட்டாலும் அதன்   பதினெட்டு  அத்தியாயங்கள் பெயராவது தெரிந்துகொள்கிறேன்.  சொல்லுங்க ஸார் ''

''அர்ஜுன விஷாத யோகம்,  சாங்கிய யோகம், கர்ம யோகம், ஞான யோகம், கர்ம  சந்யாச யோகம்,  ஆத்ம சம்யமன யோகம், விஞ்ஞான யோகம்,  அக்ஷர பரப்பிரம்ம யோகம், ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்,  விபூதி யோகம்,  விஸ்வரூப யோகம், பக்தியோகம்,  க்ஷேத்ர க்ஷேத்ரஞ விபாக யோகம், குணத்ரய  விபாக யோகம்,  புருஷோத்தம பிராப்தி யோகம், தேவாசுர சம்பத் விபாக யோகம், ஷ்ரத்தாதரய  விபாக யோகம், மோக்ஷ சந்யாச யோகம்.''

''அடேயப்பா, இதில் எத்தனை ஸ்லோகங்கள்?  அதுவும் சமஸ்க்ரிதத்திலா?''

''அந்தக்காலத்தில் பேச்சு வழக்கு எழுத்து  எல்லாமே   ஸம்ஸ்க்ரிதத்தில் தான். மொத்தம் 700 ஸ்லோகங்கள்.''

''யுத்தத்தில் போய் எதற்கு  அறிவுரை?  வேளைகெட்ட  வேளையில், வேலையில்லாமல்?''

''நல்ல விஷயம் சொல்வதற்கு எது வேளை?  அறிவுரை கொடுப்பதே நல்ல  வேலை தான் . மஹா வீரன் அர்ஜுனன்,  போர் புரிய  மனம் இல்லாமல் தவித்தான். பயம் இல்லை,  இத்தனை உறவுகள், நெருங்கிய  ரத்த பாசம் கொண்டவர்களை நான் எப்படி  ராஜ்யத்துக்காக கொல்வேன்   கிருஷ்ணா ? என்று இரக்கத்தால் மனம் துவண்டவனை எழுந்து நிற்கச்செய்து  வாழ்வின் அநித்யத்தை உணரவைத்து, எல்லாம் தெய்வச்செயல் என்று புரிய வைத்து, நீ ஒரு கருவி,   பலன் எதிர்பாராமல் உழைப்பது மட்டுமே உன் கடன், கடமை, தர்மம் என்று எடுத்துச் சொல்லி உன்னை  வழி நடத்துபவன்  நான் என்று புரியவைத்தது . நடப்பது யாவரும்  தெய்வச்செயல் என்ற அறிவுரை தான் கீதை.'' 

''தன்னொழுக்கத்தை  தவிர  பெரிது ஒன்றுமில்லை""  என்று  கிருஷ்ணன் ஏதோ ஸ்லோகம் சொன்னாராமே  அது எது?
''ந ஷ்ரேயா  நியமம் வினா..'' ஒழுக்கத்தை கடைபிடிக்காவிட்டால்  எதுவும் நல்லதாகாது ".
''உன்னை நீயே உயர்த்திக் கொள் ''  என்ற ஸ்லோகம் எது?
''உத்தரேத்  ஆத்மநாத்மானம்,  நாத்மாநம் அவஸாதயேத்  ஆத்மைவ  ஹி   ஆத்மனோ பந்து,  ஆத்மைவ  வை ரிபுராத்மனா''

'' ஒவ்வொருவனும் தானாகவே தன்னை உயர்த்திக் கொள்ளட்டும்.  எதற்கு தன்னை தாழ்த்திக் கொள்ளவேண்டும்? அவனுக்கு அவனே நண்பன், எதிரி. எல்லாம் அவன் எண்ணங்களால் செயலால் விளைவது.  

வேதவியாசர் கீதையை  அழகாக ஒரு உதாரணத்துடன் ஒப்பிடுகிறார்.  ''உபநிஷதங்கள் எனும் பசுவிடமிருந்து கீதாம்ருதம் எனும்  சுவை மிகுந்த பால் கோபாலன் எனும்  பால்காரனால் கறக்கப்பட்டு  அர்ஜுனன் எனும் 
கன்றுக்குட்டி வயிறு முட்ட  குடித்தது.  மற்ற  சுத்தமான புத்தியுள்ளவர்களுக்கும் கிடைத்தது''.'

கீதையின் கடைசி ஸ்லோகம்  அதிசயமானது:  எங்கெல்லாம்  கிருஷ்ணன் எனும்  லோகக்ஷேமம் அனுக்ர ஹிக்கும்  தெய்வீகன்,  தியாக புருஷன்,  யோகேஸ்வரன் இருக்கிறானோ, எங்கெல்லாம் அவனோடு  மஹாவீரன்,   காண்டீபம்   எனும் வில் ஏந்திய  அர்ஜூனன்  இருக்கிறானோ,  அங்கே  எல்லாமே  வளமை, பெருமை, புகழ், தார்மீகம்   சந்தோஷமும்  செழிப்புமாக  இருக்கும்.   மோக்ஷம் அடைய அவர்களின்  அன்பும்    ஆசிர்வாதமும் உண்டு. 

கீதை  ஒரு சமுத்திரம்.  கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே  செல்லலாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...