ஏன் இப்படி செயகிறோம் தெரியுமா ? J K SIVAN
அப்போதெல்லாம், ஆற்றில், ஏரியில், குளத்தில், கோவில் கிணற்றில் காசைப் போடும் வழக்கம் முட்டாள் தனமல்ல. அக்காலத்தில் எல்லோரிடமும் இருந்தது செப்புக் காசுகள் தான். காந்தி சிரிக்கும் காகித நோட்டுகள் எவரிடமும் கிடையாதே. வாழ்க்கையில் நல்லது நடக்கும், அதிர்ஷ்டம் வரும், என்ற நம்பிக்கை ஒருபுறம் இருக்கட்டும். தாமிரம் மனித உடலுக்கு ரொம்ப நல்லது. எல்லோரும் இப்படி தாமிரக் காசுகளை விட்டெறிந்து நீரில் மினரல் சத்து நிறைந்து சுத்திகரிக்கப்பட்டு, நாம் ஸ்னானம் செய்யும்போது குடிக்கும்போது மருந்தாக அந்த நீர் அமைந்து நமது உடலுக்கு கெடுதல் செய்யவில்லை. ஆரோக்கியத்தை அளித்தது. நிறைய காசு கொடுத்து இப்போது வீடுகளில் தாமிரக் குடம், டம்ளர்கள் வாங்கி தண்ணீர் குடிக்கிறோம். வெள்ளைக்காரனால் நாம் ரொம்பவே மாறி விட்டோம். இப்போது பழையபடி மாறுவது ரொம்ப லேட்.
''நமஸ்காரம் '' என்று கும்பிடும்போது ரெண்டு உள்ளங்கைகளை சேர்த்து வைத்துக்கொள்வது மரபு. வெகுகாலம் இதை மறந்துபோனாலும் எத்தனையோ கெட்டதில் ஒரு நல்லதாக கொரோனா கிருமி இதை கட்டாயமாக்கிவிட்டது. .விரல் நுனிகள் சேர்ந்து அழுத்தும்போது, கண்ணுக்கு, காதுக்கு, மனதுக்கு ரத்த அழுத்தத்தை செலுத்துகிறது. இதனால், ஒருவரை நெடுநாள் மனது ஞாபகம் வைத்துக் கொள்ள முடிகிறது. கிருமிகளும் நம்மை ஓட்ட வழியில்லை.
மெட்டி அணிவது இந்த பெண் மணமானவள் என்று காட்டுவதற்காக மட்டும் அல்ல. மெட்டியை எப்போதும் காலில் ரெண்டாவது விரலில் அணிவது வழக்கம். இதைத்தவிர விஞ்ஞான பூர்வமாக ஒரு உண்மையை
முன்னோர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். நமது காலில் நீளமான ரெண்டாவது விரலுக்கும் கருப்பைக்கும் நரம்பு உறவு உண்டு. கருப்பையை பலப்படுத்துவதற்கு, மாத விடாய் ஒழுங்காய் தொந்தரவு பண்ணாமல் நேர்வதற்கு ரத்தம் சீராக கருப்பை செல்வதற்கும், அங்கிருந்து வெளிப்படுவதற்கும் ,
கெட்டியாக அழுத்தமாக மெட்டி அணிவது ரத்த ஓட்டத்தை சீராக்கி மணமான பெண்களுக்கு மெட்டி போடுவதன் அவசியத்தை உணர்த்துகிறது. தவிர பூமியின் துருவ காந்த சக்தியை பூமியிலிருந்து உடலின் பல பாகங்களுக்கு அனுப்ப வெள்ளி மெட்டி உதவுகிறது .வெள்ளிக்கு மின் காந்த சக்தி அதிகம்.
நமது நெற்றியில் புருவ மத்தி என்பது நரம்புமண்டலத்தில் முகத்தில் ஒரு முக்கியமான சக்தி சேரும் இடம். ஆக்ஞா சக்ரம் . பழங்காலத்திலேயே இதை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள். சக்தி விரயமாகாமல் சிகப்பு குங்குமத்தை அங்கே அப்பி அந்த சக்ரத்தை அழுத்துகிறார்கள். முகத்திற்கு தசை நார்களுக்கு ரத்த ஓட்டம் சரியாக ஓட உதவுகிறது .சக்தியை பாதுகாக்கிறது. மனம் ஒருமைப்பட , CONCENTRATION க்கு இது பெரிதும் உதவுகிறது.
கோவிலுக்குள் நுழைந்ததும் கறபகிரஹம் சேர்வதற்கு முன் கயிறு கட்டி தொங்கும் மணியை ''டாங் டாங்'' என்று ஒரு முறை அடித்து விட்டு செல்லும் பழக்கம் முன்பு இருந்தது. இப்போது கோவில்களில் மணியைக் காணோம். ஒரு பொத்தானை அமுக்கி எங்கோ மாட்டி வைத்திருக்கும் டம் டம் என்ற மின்சார இயக்கத்தில் அடிக்கும் செயற்கை மணியை ஒரு சில நிமிஷம் சத்தப் படுத்துகிறார்கள்.
வெண்கல மணியின் நாதமே தனி. செவிக்கினியது . கோவில் மணி தீய சக்திகளை விரட்டக் கூடியது. தெய்வீகம் உணர வைப்பது. கோவில் மணி ஓசை நமது இடது வலது மூளை பாகங்களில் சில அதிர்வுகளை உண்டாக்கும். நாம் அந்த மணியை அடித்ததும் நமது மூளைக்குள் ஒரு ஏழு வினாடி அதன் எதிரொலி நல்ல விளைவுகளை ஏற்படுத்தி உடலில் பல பாகங்களில், சக்கரங்களில் நோயை குணப்படுத்துகிறது. தீய எண்ணங்கள் நம்மிடமிருந்து வெளியேறுகிறது. கோவிலுக்கு போய் வந்த புண்யம், சந்தோஷம், நிம்மதி, இது தான்.
துளசியை ஏன் புனிதமாக நமது ஆலயங்களில் பூஜை அறையில் கருதி உபயோகிக்கிறோம்? துளசியை பூஜிக்க படிப்பு தேவையில்லை. அது ஒரு சஞ்சீவினி. உயிர் காக்கும் ஒளஷதம். அதை கடவுளாக வழிபடுகிறோம். தினமும் ஒரு சில துளசி இலைகள் சாப்பிட்டால், பச்சையாகவோ, டீயில் சேர்த்தோ
சாப்பிடுபவனுக்கு வியாதி, நோய் உபாதை கிடையாது. உடலைச் சீராக்கும். வாழ்நாள் அதிகரிக்கும். துளசி ஜலத்திலே மட்டும் வாழ்ந்த ரிஷிகள் நூறு வயதை கடந்தவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். துளசி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள், பூச்சிகள் அண்டாது. பாம்பு துளசி அருகே செல்வதில்லை. வீட்டில் எல்லோரும் துளசி வளர்த்து தினமும் பூஜை செய்தவர்கள் நல்ல பலன் அடைந்தார்கள்.
நாமும் ஒரு தொட்டியில், டப்பாவில் மாடியில் பால்கனியில் கூட துளசி வளர்க்கலாம். தோட்டத்துக்கு அடுக்கு மாடி புறா கூண்டில் , பிளாட்டில் FLAT ல் இடம் எங்கே ?
No comments:
Post a Comment