பேசும் தெய்வம் J K SIVAN
ஆசார்யாளும் அரியக்குடியும். 7
நான் சுப்ரமணிய புஜங்கத்தை தமிழில் விளக்க முயலும்போது ஆதி சங்கரரின் அற்புத வார்த்தை பிரயோகத்தில் மகிழ்ந்தேன். அவரது பக்தி பூரணமாக அந்த ஸ்தோத்ரத்தில் பிரதிபலித்தது.
தேவகோட்டையில் மகா பெரியவா அரியக்குடி ராமானுஜ அய்யங்காருடன் சம்பாஷிக்கும்போது மேலும் சில விஷயங்களை சொல்கிறார்:
''ஆதிசங்கரர் சுப்ரமணிய புஜங்கம் எழுதியபோது சுப்ரமண்யனோடு எப்படி சர்ப்பத்தை இணைத்தார் என்று வியந்தேன். புஜங்கம் என்றாலே சர்ப்பம். அதற்கு கையோ காலோ கிடையாது. உடல் முழுதுமே புஜம் தான். புஜம் தான் அதன் அங்கம். வளைந்து நெளிந்து ஊர்ந்து போகும். இப்படி வளைந்து நெளிந்து செல்லும் சங்கீத சந்தம் , சந்தஸ் , தான் புஜங்க பிரயாதம். ஆதி சங்கரர் பல புஜங்கங்களை இப்படி இயற்றி இருக்கிறார் என்றாலும் புஜங்கம் என்றால் முதலில் ஞாபகம் வருவது சுப்ரமண்ய புஜங்கம் தான். மற்ற தெய்வங்கள் மீது அஷ்டகங்கள், பஞ்சரத்னங்கள் பல எழுதி இருந்தாலும் சுப்ரமணியன் மீது இந்த புஜங்கம் ஒன்று தான். சுப்ரமண்யனே ஒரு புஜங்கம் தான் என்று விளக்கவே.
இந்த க்ரிதியில் முத்துசாமி தீக்ஷிதர் வாசுகி தக்ஷன் என்ற சர்ப்பங்களை குறிப்பிடுகிறார். ஷஷ்டி பூஜையில் சப்த நாகங்களை வழிபடுவார்கள். வாசுகி தான் நாகராஜன். நாகலோக ராஜா. பாற்கடலில் அம்ரிதம் கடையும்போது மந்திரகிரி தான் மத்து. வாசுகி தான் கயிறு. விஷத்தை தன்னுள் கொண்ட நாகம் அம்ரிதத்தை பெற உதவியது. இன்னொரு வேடிக்கை. சுப்ரமண்யனின் வாஹனம் மயில். சர்ப்பத்தின் பரம எதிரி. அவன் முன்னிலையில் எதிரிகள் இணைவர். இதேபோல் இன்னொரு உதாரணம். யானைக்கு சிங்கம் என்றால் சிம்ம சொப்பனம் என்போம். எதிரிகள். இருந்தும் சிங்கத்தின் மேல் யானை அமர்ந்திருக்கிறது. ஹேரம்ப விநாயகரின் வாஹனம் சிம்மம். இன்னொரு எதிரிகள் இணையும் உதாரணம். மஹாவிஷ்ணுவின் படுக்கையான ஆதிசேஷன். அவர் வாஹனம் அதன் எதிரி கருடன்.
சர்ப்பமான ராகு சந்திரனை விழுங்குபவன். ஆனால் சிவனின் சிரத்தில் சந்திரனும் சர்ப்பமும் சேர்ந்தே அமர்ந்திருப்பது தெரியும் அல்லவா? சிவபெருமான் பார்வதி இருவரும் சேர்ந்து இருக்கும் படங்களில் ரிஷபம் எனும் காளை மாடும் சிங்கமும் அருகருகே இருக்கும்.
மேலே சொன்னதெல்லாம் எதைக் குறிக்கிறது? பகவான் சந்நிதியில் நமக்கு ''த்வேஷ பாவம்'' BHAVAM., எதிரி மனப்பான்மை இருக்க கூடாது என்று விளக்க.
ஸ்ரீ சுப்ரமண்யாய க்ரிதியில் ''வாசுகி தக்ஷாதி''என்று வருகிறதே. வாசுகி, ஆதிசேஷன் போல என சிலர் சொல்வதும், சிலர் இல்லை என்று சொல்வதும் உண்டு. திருப்பதியில் வெங்கட்ரமணஸ்வாமி சுப்ரமண்யனுடன் சம்பந்தப்பட்டவர். திருமலைக்கு சேஷகிரி, சேஷாசலம், சேக்ஷசைலம் என்று பெயர்.
''ஸர்ப்ப ஸ்வரூப தர'' என்று வருகிறதே. சுப்ரமண்யன் தான் திருமலை உருவம். வேங்கட சுப்ரமண்யன். திருச்செங்கோட்டில் அர்த்தநாரீஸ்வர ஆலயத்தில் சுப்ரமண்யன் உண்டு. சிவனையும் உமையையும் சேர்த்திணைப்பவன் சோமாஸ்கந்தன். திருச்செங்கோட்டுக்கு ஒரு பெயர் என்ன தெரியுமா? நாகாசலம், நாககிரி. சேஷாசலம் சேஷகிரி மாதிரியே.
அடுத்து '\வாசவாதி சகல தேவா வந்திதாய'' என்று க்ரிதியில் வருகிறதல்லவா? இதுவரை பூ சுரர்களை பற்றி சொன்ன தீக்ஷிதர் உண்மையான தேவர்களை, சுரர்களை, சொல்கிறார். பூசுராதி என்று கீழ் ஸ்தாயியில் பாடிவிட்டு, ''வாசவாதி'' என்று உச்ச ஸ்தாயியில் எடுப்பு அர்த்தமுள்ளது. வாசவன் எனும் இந்திரனாலும் மற்ற தேவர்களாலும் பூஜிக்கப்படுபவன் சுப்ரமண்யன் என்று அர்த்தம். அஷ்டவசுக்கள் என்பவர்கள் இந்திரனின் பரிவாரம். வசுக்கள் தலைவன் வாசவன். சூரபத்மன் தேவர்களை சூறையாடி வாட்டி வதைத்து இந்திரனை விரட்டி இந்திரலோக அதிபதியானபோது சூரனை வென்று தேவர்களைக் காத்தவன் சுப்ரமண்யன் . இந்திரன் வெறுமே வணங்குவதோடு தனது நன்றிக்கடனை தீர்த்துக் கொள்ளவில்லை. தனது மகள் தேவசேனாவை சுப்ரமண்யனுக்கு திருமணம் செய்து வைத்தான். இதனால் தேவசேனாதிபதி தேவசேனா பதி யானான்!
விஷ்ணு யார்? அம்பாளின் சோதரன். சுப்ரமண்யனுக்கு மாமா. வேடர் தலைவன் நம்பிராஜன் மகள் வள்ளியும் சுப்பிரமண்யனுக்கு மாமன் மகள் உறவு என்பார்கள். அருணகிரிநாதர் தனது திருப்புகழில் எவ்வளவுக்கெவ்வளவு ''முருகோனே'' என்பாரோ அவ்வளவு ''மருகோனே'' என்றும் சொல்வது இதனால் தான். சிவனின் நேத்ராக்னியில் மரித்த மன்மதன் குமாரத்திகளும் சுப்பிரமண்யன் மனைவிகள் என்று ஒரு கூற்று உண்டு.
இதெல்லாம் பார்க்கும்போது சைவ வைஷ்ணவ வேறுபாடுகள் கிடையாது என்று புரிகிறது. அம்பாளே
விஷ்ணு சகோதரி தானே. சுப்ரமண்யன் விஷ்ணுவின் மருகன் தானே. மீனாட்சியை சுந்தரேஸ் வரருக்கு கல்யாணம் பண்ணிவைத்ததே மஹாவிஷ்ணு தானே. மதுரை ஆலய பிரதான சித்திரம் சிலை அது தானே.
அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் தனது வாழ்நாளில் இப்படி ஒரு பிரசங்கத்தை எங்காவது எவரிடமாவது கேட்டிருப்பாரா? அதுவும் ஒரே ஒரு கீர்த்தனை ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே காம்போதியில் பாட அதற்கு எவ்வளவு உள்ளர்த்தங்கள்! . இன்னும் இருக்கிறதே. சுடச்சுட விருந்து காத்திருக்கிறதே --- சூடு ஆறட்டும் பொறுங்கள்.
No comments:
Post a Comment