பேசும் தெய்வம் J K SIVAN
ஆசார்யாளும் அரியக்குடியும். 10
இந்த பத்து கட்டுரைகளுடன் மஹா பெரியவாளின் அற்புதமான ''ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே'' காம்போதி ராக, முத்துஸ்வாமி தீக்ஷிதர் கீர்த்தனை விளக்கம் முடிகிறது. இதை எழுதுவதற்கு அந்த மஹா பெரியவா தான் அனுக்ரஹம் பண்ணி இருக்கிறார் என்று நம்புகிறேன். இன்னும் எத்தனையோ அற்புத விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வழி வகுப்பார் என்று இரு கரம் சிரமேற்கொண்டு அந்த தெய்வத்தின் முன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து வேண்டிக்கொண்டு இதை நிறைவு செயகிறேன்.. இதில் பெரும் பங்கு என்னை ஊக்குவித்த உங்களையே சேரும். அனைவருக்கும் நமஸ்காரம்.
++
அரியக்குடி ராமாநுஜய்யங்காரும் மற்றவர்களும் சிலையாக கை கட்டிக்கொண்டு தேவகோட்டையில் அந்த சின்ன அறையின் ஜன்னலுக்கு வெளியே நிற்க உள்ளே தெய்வம் பேசுகிறது.
''உங்க எல்லோருக்குமே பிரணவ மந்திரம் கதை தெரியுமல்லவா? ஒருநாள் திடீரென்று சுப்ரமண்யன் ப்ரம்மா கிட்டே போய் ''உனக்கு பிரணவ மந்திரம் அர்த்தம் தெரியுமா?'' ன்னு கேட்கிறான்.
''என்ன இப்படி ஒரு கேள்வி இந்த சிறிய விளையாட்டுப் பையன் கேட்டுவிட்டானே ? என்று திகைத்த ப்ரம்மா பதில் சொல்லவில்லை.
சுப்ரமணியன் விடுவானா? அப்படியென்றால் இனி நானே உன் படைப்புத் தொழிலைச் செய்கிறேன் என்று அவனைச் சிறையில டைத்தான். சில கோவில்களில் சுப்ர மண்யனை ருத்ராக்ஷ ஜபமாலை, கமண்டலு வோட பார்க்கலாம். காஞ்சிபுரத்தில் குமரகோட்டத்தில் இருக்கு. இது ப்ரம்மா வுடைய மாலை, கமண்டலு. சுப்ரமணியன் பிரம்மாவை சிறையிலிட்டுவிட்டு அவனி டமிருந்து எடுத்துக் கொண்டது. அங்கே பரமேஸ்வரன் வந்தார்.
''சுப்ரமண்யா, ப்ரம்மாவுக்கு ப்ரணவ மந்திரத்துக்கு அர்த்தம் தெரியலே. உனக்கு தெரிந்தால் நீயே சொல்லு''
''மந்திரத்துக்கு அர்த்தம் தெரியணும் என்றால் இப்படி எல்லாம் கேட்டால் எப்படி சொல்றது? பவ்யமா ஒரு சிஷ்யன் குரு கிட்டே எப்படி கேட்கணுமோ அப்படி கேட்டால் தான் சொல்வேன்''
(நமது வீடுகளில் குழந்தைகள் சில சமயம் டீச்சர் விளையாட்டு விளையாடும். நாம் மண்டியிட்டு அதற்கு முன் உட்கார்ந்தால் தான் அது அதிகாரமாக நமக்கு ஏதாவது சொல்லும்.... எனக்கு அந்த ஆனந்த அனுபவம் உண்டு).
பரமேஸ்வரன் கைகட்டி சுப்ரமணியன் எதிரே அமர்ந்தார். தகப்பன் சுவாமி ப்ரணவோ பதேசம் செய்வதை தான் சுவாமிமலையில் தரிசிக்கிறோம். ஞானம் பெற குருவின் வயது, குலம் , படிப்பு, ஆண் பெண் வித்யாசம், வெட்கம் எதுவும் அவசியம் இல்லை என்ற பாடம் இதன் மூலம் படிக்கிறோம். சிவனால்
ப்ரம்மாவும் சிறையிலிருந்து விடுபட்டு சிருஷ்டியில் மீண்டும் ஈடுபட்டான். கீர்த்த னையை தொடர்வோம்.
''தேவராஜ ஜாமாத்ரே''' என்று அடுத்து வருகிறதே. இந்திரனின் மாப்பிள்ளை என்று அர்த்தம். தேவயானியை மணந்தவன் அல்லவா
''பூராதி புவன போக்த்ரே '' - பூமியும் மற்ற லோகங்களும். பதினாலு லோகங்கள், மேலே ஏழு, கீழே ஏழு என்பார்கள். காயத்ரி மந்திரத் தில் வருமே ''பூர் புவ சுவர் '' கீழே, நடுவே மேலே உள்ள லோகங்கள். ஒவ்வொருக்கும் முன்னே ''ஓம்'' சேர்த்துக் கொள்ளவேண்டும். எதற்காக இப்படி என்றால் நமது மந்த்ர உச்சாடனத்தின் பயன், எல்லா உலகத்திலும் உள்ள மக்களை, ஜனங்களை சென்று அடைய வேண்டும் என்பதற்காக.
''போக்தா'' என்றால் அனுபவிப்பவர் . ஜப , மந்திர பலனை அனுபவிப்பவர்கள். இந்த பிரபஞ்சத்தில் எல்லா காரியங்களும் சர்வேஸ் வரனால் நடப்பது, அதன் பலனை எல்லோரும் அனுபவிப்பது தானே லீலானுபவம். அதனால் தான் ''அவனன்றி ஓர் அணுவும் அசையாது'',
கடைசியாக ''போக மோக்ஷ ப்ரதாத்ரே'' - அவன் தான் ஆளுமை செய்கிறான். 'அனுபவிக்கிறான், நாம் அனுபவிப்பது மாதிரி ஒரு மாயை, பிரமை. அவ்வளவு தான்.
''தாதா': அருள்பவன். கொடுப்பவன். ''ப்ரதாதா'' அருமையாக, கொடுப்பவன். சிறந்த அருளாளன். நமக்கு அனுபவிப்பதில் ஆனந்தம் அவனுக்கு அருள்வதில் ஆனந்தம். அருளானந்தம். மாயையில் திளைத்து அதுவே நிஜம் என்று நம்பும் நாம் இந்த நாடகம் முடிந்ததும் நமது இயற்கையான ஆனந்த பரவச நிலைக்கு திரும்பவேண்டும். ஆத்மாவை உணர முடியும். எல்லாம் மாயை அழிவது. ஆத்மா ஒன்றைத் தவிர என்பது புலப்படும். அந்த நிலையை தான் தீக்ஷிதர் இந்த க்ரிதியில் பொருத்தமாக '' அஞ்ஞான த்வாந்த சவிதா, மோக்ஷ ப்ரதாதா'' என்கிறார்.
மோக்ஷம் வேண்டும் என்று தனலட்சுமியை, தான்ய லட்சுமி, வீர லக்ஷ்மி , சந்தான லக்ஷ்மி யையா கேட்பது? கேட்டால் தான் . தக்ஷிணா மூர்த்தியிடம் , செல்வம், சந்தானம் , போகம் கேட்கிறோமா? சுப்ரமண்யன் போகமும் மோக்ஷமும் தருபவன் என்கிறார்.
இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. க்ரிதி முடிவு பெறுகிறது.
மஹா பெரியவா ஜன்னலிலிருந்து அரியக்குடி ராமாநுஜய்யங்காரையும், மற்றவர்களையும் பார்த்து புன்னகைக்கிறார்.
''உன்னைப் பார்த்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நீ பெரிய குரு சிஷ்ய பரம்பரையில் வந்தவன். சங்கீதத்தை நன்றாக போஷிக்கிறாய். அவசியம் அது. அதேபோல் நீயும் நல்ல சிஷ்ய பரம்பரை உண்டாக்கி இந்த சங்கீத தர்மம் தொடரவேண்டும். வேதம் கற்ற பிராமணன் மற்றவனுக்கு அதை கட்டாயம் நன்றாக கற்றுத் தரவேண் டும் ( (அத்யா பனம்). அது கடமை. மற்ற சாஸ்தி ரங்கள், சங்கீதத்துக்கும் அது பொருந்தும்
சங்கீத வித்தவான்களுக்கு இன்னொன்று சொல்லவேண்டும். தெலுங்கு, ஸமஸ்க்ரிதம் கீர்த்தனைகள் பாடும்போது அதன் அர்த்தம் முழுசும் தெரிந்திருக்கவேண்டும். தமிழ் கீர்த்தனை போதும் என்று விட்டு விடக்கூடாது. மஹான்கள் மற்ற மொழிகளிலும் நிறைய படைத்திருக்கிறார்கள். காதால் கேட்பதற்கே ரொம்ப இனிமையானவை. அவற்றை மறந்தால், இழப்பு நமக்கு தான். ''எனக்கு அர்த்தம் புரியாது, தெரியாது'' என்று நொண்டி சாக்கு கூறக்கூடாது. நமக்கு வேண்டும் என்றால் எத்தனை வேண்டாத விஷயங்களில் மனசை செலுத்துகிறோம். சுத்தமான சுகமான சங்கீதம் சரியான அக்ஷர ப்ரயோ கத்தோடு அர்த்தம் புரிந்து கொண்ட பின் கிடைக்குமே. அறிந்து கொள்ள வெகு நேரம் ஆகாது. மொழி தடையாகாது .
நீ இப்போது சங்கீத உலகத்தில் ஒண்ணாம் நம்பர் ஆசாமி. உன்னால முடிந்ததை இதற்கு செய்யவேண்டும். சுப்ரமண்யன் அருள் உனக்கு அமோகமாக கிடைக்கட்டும்.
அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் , திகைத்து வாயைப் பிளந்து நின்றார்.
''இந்த அபூர்வ ஆனந்த அனுபவம் வாழ்க்கையில் இன்று தான் கிட்டியது. இது ஒன்றே என் வாழ்வின் மிகச்சிறந்த நாள்''
மஹா பெரியவா மீண்டும் மௌன விரதத்துக்கு சென்றுவிட்டார். யூ ட்யூபில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரின் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஸ்தே கீர்த்தனையை கேளுங்கள். லிங்க்
https://youtu.be/b8_33lhjzW4
https://youtu.be/b8_33lhjzW4
No comments:
Post a Comment