ராமாயணம் J K SIVAN
10. ராவண வதமும் ராம பட்டாபிஷேகமும்
''ஹனுமா, நீ உடனே பறந்து போய் அந்த மூலிகையை சீக்கிரம் கொண்டுவா என்று எவரும் சொல்லும் முன்பே, ஹனுமான் குபீரென தாவி விண்ணில் பறந்தான். கண நேரத்தில் அவன் ஒரு புள்ளியாக கண்ணிலிருந்து விண்ணில் மறை ந்தான். அவ்வளவு வேகம். மேற்கே படுவேகமாக பரந்த ஹனுமான் கடல் வெண்ணிறமாக மாறுவதை கண்டு மகிழ்ந்தான். பாலாக கீழே கடல் தெரிந்தது. அதில் சற்று நேரத்தில் ஒரு பச்சை தீவு தோன்றியதை கவனித்தான். அதில் உன்னிப்பாக பார்க்கும்போது இரு சிறு மலைகள் காணப்பட்டது. ஓஹோ இது தான் சுஷேணன் சொன்ன மலை என்று இறங்கினான். அதில் விஷல்யா மூலிகை எது? தெரியவில்லை, என்றாலும் நேரம் வீணாக்க முடியாது. சந்தேகம் எதற்கு? நிறைய மூலிகைகள் கொண்ட பெரிய மலையை அப்படியே தூக்கிக்கொண்டு மீண்டும் சுக்ரீவன் இருந்த இடத்துக்கு பறந்தான். அந்த மலையை சுமந்த போதே ஹநுமானுக்குள் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது. அவன் உடலில் ஒரு புது உற்சாகம், வீரம் அதிகரிக்க அந்த மலையை யுத்தகளத்தில் இறக்கி வைத்தான். அதன் காற்று பட்ட போதே பலர் கண் விழித்தனர். சுஷேணன் மிகவும் மகிழ்ந்து விஷல்யா மூலிகையை எடுத்து ராம லக்ஷ்மணர்கள் அருகே ஸ்வாசிக்கும்படி வைத்தான். அவர்கள் உடல் காயங்கள் உடனே மறைந்தது. கண் விழித்தார்கள், மயக்கம் கலைந்தது. முன்னைவிட அதிக பலம் பெற்றார்கள். எழுந்தார்கள். அவர்களை மறுபடியும் பழையபடி கண்ட சுக்ரீவன் ஆனந்தத்தில் குதித்தான். அப்படியே மற்ற வானர வீரர்களும், உயிர் பெற்ற மற்றவர்களும். ஹனுமான் கணநேரத்தில் அந்த மலையை அங்கிருந்து தூக்கிக்கொண்டு பழையபடி அந்த தீவில் வைத்துவிட்டு வந்துவிட்டான்.
இந்திரஜித் கொன்றதாக சொன்ன ராம லக்ஷ்மணர்கள், மற்றும் எல்லா வானர வீரர்களும் மீண்டும் விழித்தெழுந்து யுத்தம் தொடர்கிறார்கள் என்று அறிந்த ராவணன் கலங்கினான். அதிசயித்தான்.
மீண்டும் இந்திரஜித் மாயமாக வந்து அம்புகளை செலுத்தினான். விபீஷணன் இந்திரஜித் ரகசியம் அறிந்தவன். தனது பார்வையால் இந்திரஜித்தின் மாயத்தோற்றத்தை அகற்றும் சக்தி பெற்றவன். விபீஷணன் இப்போது ராம லக்ஷ்மணர்கள் அருகே இருந்து அடையாளம் காட்டியதால், இந்திரஜித் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது. லக்ஷ்மணன் மேகநாதன் எனும் இந்திரஜித் விண்ணில் மறைந்திருந்த இடத்தை கண்டுவிட்டதால் கூறிய அம்பு ஒன்றை விடுத்து இந்திரஜித்தின் கவசங்களை பிளந்து, மார்பைத் துளைத்து இந்திரஜித்தை கொல்கிறான் . அவனது உயிரற்ற உடல் கீழே விழுகிறது.
ராவணனின் அனைத்து வீரர்களும் உறவுகளும் முடிந்துவிட்டன. ராவணன் ஒருவனே இனி தனியனாக ராமனை எதிர்க்க வேண்டும்.
அகஸ்தியர் போதித்த ஆதித்ய ஹ்ருதய மந்திர ஜபம் ராமனுக்கு அதிக பலத்தை அளித்து எதிரியை ஸம்ஹாரம் செய்ய உதவுகிறது. நான் ஆதித்ய ஹ்ருதயம் மந்திரத்தை விளக்கமாக எழுதியதை ஒரு தனி கட்டுரையாக இதைத் தொடர்ந்து மீண்டும் பதிவு செயகிறேன். அனைவரும் படித்து பயன்பெறவேண்டும்.
நம்மை சுற்றி இந்த்ரஜித்தாக மாயமாக தாக்கும் கொரோனா ராக்ஷஸனை சஞ்சீவனியாக, விஷல்யா மூலிகையாக ஆதித்ய ஹ்ருதயம் விரட்டட்டும். அநேகருக்கு மனப்பாடமாக தெரிந்த ஜெப மந்திர ஸ்லோகங்கள் தான் அவை.
ராவணன் ஆயுதங்களை ரதத்தை இழந்து காயமுற்று வெறுங்கையனாக நிராயுதபாணியாக நிற்கும்போது ராமன் அவனுக்கு உயிர்ப்பிச்சை அளித்து, ''இன்று போய் நாளை வா'' என்று கருணையோடு அனுப்புகிறான். மறுநாள் காலையில் யுத்தத்திற்கு வந்த ராவணன் மரணமடைகிறான். ராவணன் கொல்லப்பட்ட மறு வினாடியே மற்றவர்கள் உயிர் தப்பி ஓடினார்கள். சிறைப்பட்ட தேவர்கள் விடுதலை யாகிறார்கள்.
இலங்கை ராஜ்ஜியம் விபீஷணன் ஆட்சியில் தொடர்கிறது. அசோக வனத்தில் இருந்து சீதை வெளிப்படுகிறாள். சீதை அக்னி பிரவேசம் செய்து தான் நிரபராதி என்று நிரூபிக்கிறாள் என்று சிலர் அர்த்தம் சொன்னாலும் ராவணன் அவளை பஞ்சவடியில் கடத்தியபோதே உண்மையான சீதை அக்னிப்ரவேசம் செய்து மாய ஸீதையாகத்தான் ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டவள் . ஆகவே மீண்டும் அக்னிப்ரவேசம் செய்து மாய சீதை மறைந்து உண்மையான சீதை மீண்டும் ராமனை அடைகிறாள் என்று அத்யாத்ம ராமாயணத்தில் படித்தேன். எழுதி இருக்கிறேன். என்னுடைய ''ரமே ராமே மனோரமே'' வேத வியாசர் எழுதிய அத்யாத்ம ராமாயணத்தின் தமிழ்ப் பதிவு.
பதினான்கு வருஷங்கள் கடந்து விட்டது. தந்தை தசரதர் இட்ட கட்டளையை நிறைவேற்றியாகி விட்டது. ராமன் அயோத்தி திரும்ப ஏற்பாடுகள் செய்தான் விபீஷணன். புஷ்பக விமானம் தயாராக நின்றது. ராமலக்ஷ்மணர்கள், சீதாவோடு விபீஷணன், சுக்ரீவன், ஆஞ்சநேயன் மற்றும் முக்கிய வீரர்கள் விமானத்தில் அயோத்தி திரும்புகிறார்கள்.
விமானத்தில் பறந்து செல்லும்போது சீதைக்கு ராமன் கீழே நளன் அமைத்த சேது பாலத்தை காட்டுகிறான். அங்கதன் தலைமையில் வானரவீரர்கள் சம்பாதியை சந்தித்த இடம், ஹனுமான் கடலைத் தாண்டிய இடம், ஜடாயு ராவணனோடு மோதி உயிர்விட்ட இடம் எல்லாம் ஆச்சர்யமாக சீதை பார்க்கிறாள். கண்களில் நீர் பெருகுகிறது. கீழே தண்டகாரண்ய வனம் தெரிகிறது, பஞ்சவடியில் கடைசியாக சீதை பர்ணசாலையிலிருந்து கடத்தப்பட்ட இடம், குகனின் கங்கைக்கரை படகுகள் எல்லாம் தெரிகிறது. விமானத்தை இறக்கி ராமர் ஹனுமனை அனுப்பி பரதனைப் போய் சந்திக்க அனுப்புகிறார். ''ராமன் வருகிறான்'' என்ற சொல் பரதனுக்கு ஆனந்தத்தைத் தருகிறது. அப்படியே ஆஞ்சநேயரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆனந்த கண்ணீர் உகுக்கிறான் பரதன்.
ராமன் மட்டுமல்ல பரதனும் சொன்ன வார்த்தை தவறவில்லை. இந்த பதினான்கு ஆண்டுகளும் அவன் ராமன் பாதுகையே அரசாட்சி நடத்த அதற்கு சேவகனாக, தானும் மரவுரி தரித்து எளிய பர்ணசாலை வாழ்க்கை நடத்தி நந்தி கிராமத்தில் இருந்தபடியே அயோத்தியை அரசாண்டான். பரதன் ஹநுமானோடு குகன் ஆளும் நிஷாத ராஜ்யத்துக்கு வருகிறான். அங்கே தங்கியுள்ள ராமலக்ஷ்மணர்கள் சீதையை தரிசிக்கிறான். ராமன் காலடியில் பாதுகையை வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறான். பரதன் உட்பட அனைவரும் அயோத்தி திரும்புகிறார்கள்.
பதினான்கு வருஷங்களுக்குபிறகு ஒரு நல்ல நாளில் மீண்டும் வசிஷ்டரே ராமனுக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்கிறார்.
தொடரும்
No comments:
Post a Comment