Thursday, November 19, 2020

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்  J K  SIVAN  


                                       இவன் உன் பிள்ளை தான்

மஹா பெரியவா  என்றால் என்ன  அர்த்தம்?

ஆச்சர்யம், அதிசயம், அதீத அன்பு, ஆதரவு, அருள்   இதெல்லாம்  ஒன்று  சேர்த்தால்  கிடைக்கும் மனித உருவம். மனித உருவத்தில் ஒரு தெய்வம்.  நம்மிடையே  நூறு ஆண்டுகள் வாழ்ந்து நம்மை பெருமையடையச் செய்தவர். நாம் கொடுத்து வைத்தவர்கள்.   நேரில்  பலர்  பார்த்து தரிசிக்காவிட்டாலும் அவர் வாழ்ந்த காலத்தில் அவர் சுவாசித்த காற்றை ஸ்வாசித்தவர்கள். அவர் நடந்த மண்ணில் நடந்தவர்கள்.  மஹா பெரியவா  ஆயிரம் ஆண்டுகள்  ஆனாலும் மறக்க முடியாதவர்.

அவர் எங்கே முகாம் இட்டிருந்தாலும்  அங்கே  பக்தர்கள் கூட்டத்துக்கு பஞ்சமே இல்லை.  எங்கிருந்தெல்லாமோ வந்து தரிசனம் பண்ணும்போது  அந்தந்த ஊரிலே   இருப்பவர்கள், அருகாமையில் உள்ள  ஊர்களில்  இருப்ப
வர்கள் ஓடி வருவதில் என்ன அசஹாயம். 

திருச்சியில் ஒரு பக்தர்.  ரயில்வே  டிபார்ட்மெண்டில் உத்யோகம்.  அவருக்கு  ரெண்டு  பிள்ளைகள் ஒரு பெண். அடிக்கடி  காஞ்சிபுரம் முடிந்தபோதெல்லாம்  ரயிலில் வந்துவிடுவார்.   வேறு எந்த ஊரில் முகாம்  போட்டிருந்தாலும்  விசாரித்து அங்கெல்லாம் போய்விடுவார்.  ரயில் பாஸ் உண்டு  என்பது அவரது பக்தி விஸ்வாஸத்துக்கு  கிடைத்த  போனஸ்.  குடும்பத்தோடு தரிசனம் பண்ண கிளம்பிவிடுவார்.  ஒவ்வொருமுறையும்  ஓரிரு நாட்கள் தங்கி அதிக பக்ஷம் பெரியவாவோடு இருந்து விட்டு தான் செல்வது வழக்கம். 

"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து,உபநயனம் நடத்தணும். பெரியவா அனுகிரஹத்தோடு''
"என்று   மகா பெரியவா கிட்டே ஒரு தடவை  விண்ணப்பித்துக்கொண்டார்.

"தாராளமா செய்யேன்.."

''இல்லை  பெரியவா.. வந்து... வந்து....

''என்ன தயக்கம் உன் பிள்ளைக்கு  பூணல் போட  ... பணம் பிராப்ளமா..''

"அப்படியில்லை பெரியவா...ஒரு குறை.... பையனுடைய  கோத்திரம்..சூத்திரம் தெரியல்லே..."

"உன்னோட பையன் தானே எப்படி  கோத்ரம் தெரியாம போயிடும்?''

''இல்லை பெரியவா,   இந்த பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். அவனை இரண்டு மாச  குழந்தையா  விட்டுட்டு தாயாரும் போய்ச் சேர்ந்துட்டாள்.  கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?    நாங்கள்  குழந்தையை எடுத்துண்டு வந்தோம்.ஊர்,பெயர், பந்து, ஜனங்கள் தெரியலை,   திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."

பெரியவா புன்சிரிப்போடு பார்த்தார்.  அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், " கண்ணா, இதை பாருடா,  யாரோ ஒரு அநாதைக் குழந்தையை எடுத்து ,வளர்த்து, பூணல் போடப் போறேன்கிறார். என்ன மனஸ், இவருக்கு.."

" பெரியவா இவர்  ஒவ்வொருதடவையும்  அந்த பிள்ளையோடு இங்கே வரும்போதெல்லாம்  அது அவருடை ய  சொந்தப் பிள்ளைனு தான் நாங்களும் நினைச்சிண்டு  இருந்தோம்!"

''உனக்கு  ஒரு விஷயம் தெரியுமோ?  கோத்திரம் தெரியாதவர்களுக்குன்னு  ஒரு  கோத்ரம் இருக்கு. அது காசியப கோத்திரம்; ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு ,போதாயன ஸூத்திரம் னு சொல்றதுண்டு.   அதையே சொல்லி  பூணல் போடு,  ஆனா,   குழந்தையை என்னிக்கும்  அந்நியமா நினைச்சுடாதே  எந்த காலத்திலேயும்  அவன்  உன் பையன்தான். அமோகமா சுபிக்ஷமா இருப்பான்''

பக்தர் குடும்பம்  பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள். பகவானுக்கு நாம்   எல்லோ ருமே  அவன் குழந்தைகள் தான். நம்ம கோத்ரம்  சூத்ரம் பற்றி  அவன் கவலைப் படறதில்லை. அவன் அன்பும் கருணையும்  எல்லோருக்கும் சமமாகவே  நிறைய  உண்டு.  பெரியவா பேசும் தெய்வம் ஆச்சே. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...