Thursday, November 12, 2020

ELLAM ONRE. ALL IS ONE

 எல்லாம் ஒன்றே - 6       J.K.  SIVAN   


             

அகம்பாவம்  நீங்கி, அஞ்ஞானம் ஞானமாகட்டும் 

எல்லாம்  ஒன்றே    என்ற இந்த தொடர் கட்டுரையில் ஒரு விஷயம் கவனித்தீர்களா?   எல்லாம் அவன் செயல் என்று மனது பக்குவம் அடைய  நிறைய  பயிற்சியும் முயற்சியும் வேண்டும்.  தனது சாமர்த்தியம் என்ற எண்ணம் எல்லோருக்கும் குறுக்கிடும். அதற்கு பெயர்   ''தான் ' தனது,  நான், எனது''  என்ற  ''அகம்பாவம்'' . இது தொலைய வேண்டும். அதைப்பற்றி  கொஞ்சம்  யோசித்தால் தான்  இந்த  தொடர் வெற்றி பெரும். 

அகம்பாவம் ஒன்றினால் தான்  சர்வ நாசமும்  ஏற்படுகிறது.  பல  தனி நபர்கள், பல சாம்ராஜ்யங்கள்,  மா மனிதர்கள், சக்திமான்கள் அழிந்தது அகம்பாவத்தினால் தான்.  ஞானிகள் அடிக்கடி  சொல்வது  இந்த  அகம்பாவத்தை ஒழிக்கவேண்டும் என்பதைத்  தான்.  ஆணவ மலம் என்று அதற்குப் பெயர்.   

பற்றற்றான் பற்றினை பற்றினால்  இப்பற்று  விலகும்.  இந்த  சின்ன   ''நான்''   அழிய  பெரிய ''நான்'' வேண்டும்.  ப்ரம்மஹம்பாவம்.  முள்ளை  முள்ளால் எடுப்பது போல.  இதில் என்ன வித்யாசம் என்றால்  சின்ன ''நான்''  அழியக்கூடியது.  பெரியது  அழிவற்றது.    நம்மிடம் உள்ள  சின்னது  பேதத்தை உண்டாக்குவது. பெரியது பேதத்தை போக்குவது. அபேதம்.  உனக்கு அவன் எதிரி, சத்ரு, அவனுக்கு நீ அப்படியல்ல.  அவனுக்கு நீ அவனில் ஒரு பாகம். உன்  ,பொய்மையை,  மாயையை  அழிப்பவன்.  சிறிய மீனை பெரிய மீன் சாப்பிட்டு அதனுள் ஐக்கியமாகிறது. 

அகம்பாவம்  ஒருவனை  அவன் எல்லாவற்றிலும் சிறந்தவன் என எண்ணவைத்து, பிறர் அவனை மதிக்கிறார்களா, இல்லை என்றால் அவர்கள் மேல் பகை உணர்வை செலுத்துகிறது,  தன்னை எல்லோரும் புகழ வேண்டும், போற்றவேண்டும் என்று எதிர்பார்ப்பை வளர்க்கிறது. மற்றவர்களுக்கும் இது  போன்ற  எண்ணம் உண்டு  என்பதை மறந்து  தொல்லைக்கு,உள்ளாகிறது. வல்லவனுக்கு  வல்லவன்  வையகத்தில் உண்டு என்று அறியும்போது வாடுகிறது.  அதன் அற்பத்தனம்  அதற்கு  வினையாகிறது. இன்றளவும்  மானிடம் இதற்கு இரையாகி,  இன்னும் பாடம் கற்க மறுப்பது தான்  அதிசயம்.   இந்த  அகம்பாவம் எல்லோருக்கும் சொந்தமானது என்று மறந்து உனக்கு மட்டும் அதிக பங்கு  கேட்பது  அநியாயம் இல்லையா?  இதனால்  விளையும் துக்கம், துன்பம்  இரு சாராருக்கும் அல்லவா நேர்கிறது?

நீ  உணரவேண்டியது  உன் பகைவன் என்று எவனை கருதுகிறாயோ அவனே  உற்ற நண்பன்.  அவனை  அன்போடு அணுகு,   உனக்கும்  அவனுக்கும் உள்ள  ஒரே வித்யாசம்,  நீ  தீங்கு நினைப்பவன் செய்பவன்,  அவன்  தீங்கே  அறியாதவன்.  அவன் எல்லாம்  ஒன்றே, அது அவனே  என  உணர்ந்த  பெரியவன். அவனைச் சரணடைந்தவன் அவனாகவே  ஆகிவிடுவான். ஆகவே  உனக்கு உன்னதமான உயர்வு தான்  இது.  எதையும் இழக்க வழியில்லை உன் அகம்பாவத்தை தவிர.

உன் சோம்பலை, கவலையா,  தூக்கத்தை, கனவை விடு.  அவனைச்சரணடை. அவனாகவே மாறு. உன்னை வரவேற்க அவன் கை  நீட்டி  அன்போடு காத்திருக்கிறான்.  இதனால் இரு நன்மைகள்.  உனக்கும்  நன்மை. உன்னால் தீங்கு விளையாததால் மற்றவர்க்கும் நன்மை.  அதனால்  தான்  வெள்ளாளர்   அருட்பெருஞ்சோதி  தனிப்பெருங் கருணை என்று அவனைப் புகழ்ந்தார்.  அந்த  ப்ரம்மஹம்பாவத்தை  பெரிய  ''நான் ''  என்பதை  தெளிவாக அனுபவித்து சொன்னார். 

இத்துடன்   எல்லாம் ஒன்றே  என்ற  ஆறு பகுதி கட்டுரை நிறைவு பெறுக.   எல்லோரும் இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றுமறியேன்  பராபரமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...