அறுபத்து மூவர் J K SIVAN
திரு நாளைப் போவார்
நந்தனார் தென்னாட்டில் வாழ்ந்த சிவ பக்தர் கோபாலக்ரிஷ்ண பாரதியாரின் கற்பனை பாத்திரம் என்றாலும் மனதிலும் வெளியில் கல் கோயிலிலும் குடி கொண்டு வணங்கப்படும் சிவனடியாராக, அறுபத்துமூவரில் ஒன்றாக திருநாளைப்போவாராக ஆகிவிட்டார்.
தமிழகத்தில் காவிரி கொள்ளிட நதி செழிப்பான பூமியில் ஒரு சிற்றூர் ஆதனூர். அதில் இருந்த ஏழைகள் வாழும் சேரியில் நந்தனார் என்று ஒருவர். சிறந்த சிவபக்தர். அந்த ஊருக்கு அருகே இன்னொரு சின்ன ஊர். திருப்புன்கூர். அங்கே அருமையாக ஒரு சிவன், பெரிய நந்தி. வெளியே இருந்து தான் தரிசனம் செய்ய வேண்டிய நிலைமை. சிவனைப்பார்க்க முடியாமல் பெரிய நந்தி மறைத்தது.
''மலை போல் மாடு படுத்து மறைக்குதே'' என்று வருந்தி பாடுகிறார். ''சற்றே விலகியிரும் பிள்ளாய்'' என்று சிவன் நந்திக்கு கட்டளையிட, நந்தி அழகாக விலகி நிற்கிறது. மூன்று நான்கு முறை அந்த ஊருக்கு சென்று சிவனையும், நந்தியையும், அங்கே உள்ள நந்தனார் சந்நிதியிலும் தரிசனம் செய்யும் பாக்யம் கிடைத்தது.
வைத்தீஸ்வரன் கோவில் அருகே 2 கி.மீ. தூரம் தான். சிவன் பெயர் சிவலோகநாதன்.
நந்தனார் நமஸ்கரித்துவிட்டு வீதிவலம் வரும்போது ஒரு பள்ளம் கண்ணில் படுகிறது. இதை குளமாக்கலாமே என்று தோண்டி சிவன் கோவில் குளமாக்கினார். நிறைய கோவில்களுக்கு சென்று திருப்பணிகள் செய்தவர்.
ஒருநாள் சிதம்பர நடராஜ தரிசனம் பெற ஆசை. எப்படிப்போவது. அன்றிரவு தூக்கமில்லை. விடிந்ததும் எப்படி சிதம்பரம் போகமுடியும், சிவதரிசனம் செய்யமுடியும், பிறப்பு குறுக்கே நிற்கிறதே என்று வாடினார். ஆசையை அடக்கமுடியாமல் '' நாளைக்கு போவேன்” என்று சொல்லிக்கொண்டு தனக்குத்தானே சமாதானம் செய்தவராக காலம் போக்கினதால் அவருக்கு திரு ''நாளைப் போவார்'' என்று பெயர் ஒட்டிக்கொண்டது. ஒருநாள் தில்லை சென்றார். தூரத்தில் எல்லையில் நின்று வணங்கி நின்று அங்கு எழும் யாக யஞ புகைமண்டலத்தையம் வேத சப்தத்தையும் ரசித்தார்.
‘மை வண்ணத் திரு மிடற்றார் மன்றில் நடங்கும்பிடுவது எவ்வண்ணம்? என்று எண்ணி ஏக்கத்துடன் துயில் . ‘இன்னல்தரும் இழிபிறப்பாகிய இது இறைவன் ஆடல் புரியும் பொன்னம்பலத்தை வழிபடுவதற்குத் தடையாயுள்ளதே? என்று ஏங்கினார்.
சிதம்பரம் நடராஜானுக்கு தெரியாதா? கனவில் வந்தார்.
“இப்பிறவி போய் நீங்க ஏரியினிடை நீ மூழ்கி, முப்புரிநூல் மார்புடன் முன்னணைவாய்” என்று அருள்புரிந்தார்.
அதாவது அக்னி மூட்டி அதில் தீக்குளித்து என்னை அடைவாய் என்று சொல்லியபடி தில்லை வாழ் மூவாயிரவர் கனவிலும் நந்தனார் அக்னி பிரவேசம் பண்ணி என்னை அடைய அவரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்கிறார்.
பொழுது விடிந்ததும் தீட்சிதர்கள் திருநாளைபோவார் எனும் நந்தனாரை சென்று சந்தித்து உமக்கு இறைவன் கட்டளைப்படி நாங்கள் அக்னிப்ரவேச ஏற்பாடுகள் செய்கிறோம் என்று சொல்கிறார்கள்.
நடராஜன் ஆலயம் முன்பு தீக்குழி அமைத்து ஊர் மக்கள் பக்தர்கள் ஏராளமாக கூடி இருக்க திருநாளைப்போவார் நடராஜனை மனதில் துதித்து மும்முறை தீக்குழியை வலம் வந்து தீயில் மூழ்குகிறார். அடுத்த கணமே ஜெகஜோதியாக பொன்வண்ண மேனியுடன் ப்ரம்ம தேவன் போல் வெளி வருகிறார் தில்லை வாழ் தீட்சிதர்கள் கைகூப்பி வணங்கி அவரை உபசரித்து ஆலயப்பிரவேசம் செய்ய வேண்டுகிறார்கள்.
சிதம்பர ஆலய கோபுர தரிசனம் செய்தபின் ஆலயத்தில் பிரவேசித்து நடராஜன் சந்நிதியில் தன்னை மறந்து நந்தனார் தியானத்தில் ஆழ்கிறார்.
பல வருஷங்களாக மனதில் மட்டுமே உறைந்திருந்த நடராஜனை கண்ணார நேரே காண்கிற பாக்யம் கொடுத்ததற்காக அவனை மனதார போற்றுகிறார். போற்ற வார்த்தைகள் கிடைக்கவில்லை. பரமானந்தத்தில் திளைத்து மெளனமாக வணங்குகிறார்.
எத்தனை நேரம் கற்சிலையாக நந்தனார் நின்றார் என்று சொல்ல முடியாத வண்ணம் அவர் உடலிலிருந்து ஒரு ஒளி தோன்றி நடராஜன் கருவறைக்குள் புகுந்து நடராஜனோடு ஐக்கியமானது. இங்கே நின்றிருந்த நந்தனார் எங்கே என்று எல்லோரும் ஆச்சர்யமாக தேடினார்கள். இனி அவர் திருநாளை போவார் அல்ல. திருநாளில் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். நடராஜனோடு ஐக்கியமான பின் அவர் வேறு அவன் வேறு அல்லவே?
சிவாலயங்கள் சென்றால் அறுபத்து மூவர் கற்சிலைகள், மூர்த்திகள் இருக்குமே. அதில் திருநாளைப்
போவார் என்று எழுதியிருக்கும் மூர்த்திக்கு இதை நினைந்து தனியாக ஒரு நமஸ்காரம் செலுத்துவோம்.
No comments:
Post a Comment