Friday, November 27, 2020

ARUNACHALA DEEPAM

 பேசும்  தெய்வம்   J K  SIVAN  

 
               


 அண்ணாமலைக்கு  அரோஹரா 

ஐப்பசி தீபாவளிக்குப் பிறகு   கார்த்திகை இன்னொரு தீப ஒளி பண்டிகை. முக்யமாக  திருவண்ணா மலையில் தீபம் விசேஷமானது.

கார்த்திகை  முழுதும்  ஹிந்துக்கள் வீடுகள் எல்லாம்  ஜெகஜோதியாக தீபலங்காரம் செய்யப்பட்டிருக்கும். அகல் விளக்கு மறக்கமுடியாத ஒரு  தீபம். வரிசையாக  வீடுகளில் வாசலில், சுவர்களில் மின்னும்  அழகே அழகு.   தீபம் ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.

கீடா: பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா: |
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா: ||

”புழு,  பக்ஷிகள்,  ஏன்  கொசு கூட,   உயிரற்றது என்று நாம்  நினைக்கிற  தாவரங்களோ,  மற்ற  தரையிலும்   தண்ணீரிலும்  வாழும் அனைத்து  ஜீவராசிகளும்  , மனிதர்களில் வித்த்யாசமில்லாமல் அனைவரும்,   கார்த்திகை  தீபத்தை  ஒருமுறை பார்த்து விட்டால் போதுமாம்,   சகல பாபங்களும்  நிவர்த்தி ஆகிவிடும், ஆகவே  மறுபிறப்பும்  கிடையாது என்று இந்த ஸ்லோகம் சொல்கிறது.

 தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ? அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்”- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று மஹா பெரியவா சொல்கிறார். 

பெரியவா  மேலும்  விளக்கமாக சொல்வதைக் கேளுங்கள்: 
தீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்  என்று  பொருளுரைக்கிறார்  மஹா பெரியவா.

முன்பெல்லாம்   ஊர் எங்கும்  சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து   பொது இடங்களில் பெரிதாக ஏற்றுவார்கள்.   இன்னும்  சில  இடங்களில் இது தொடர்கிறது.  திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே,  எதற்காக?  அதன் அர்த்தம் என்ன?  தெரியுமா?

சின்ன அகலாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி ஒரு பெரிய மலைஉச்சியில்  ஏற்றி வைத்து விட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகள் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்  தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

ஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாலு கால் ப்ராணிகள்தான் அதிகம். மற்றபடி   வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ண முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி ‘த்விபாத்” சதுஷ்பாத்’ என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்டாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.

பரம ஞானிக்கு பிராம்மணன்   பிராமணன் இல்லாதவன் என்றெல்லாம்   (ப்ராம்மணே … ச்வபாகே) வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது. நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம் பண்ணியிருக்கிறான். 

மேலே சொன்ன  கார்த்திகை தீப   ஸ்லோகத்திலும் ”ஸ்வபசா ஹி விப்ரா: என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் வித்தியாசமின்றி சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை.   நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது. மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நமது  சாஸ்த்ரம். 

ஒரு சமயம்  யார் பெரியவர் என்ற போட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது  அந்த போட்டிக்கு நடுவராக வந்து  பரம சிவன் ஒரு பெரும்  ஜோதியாக  எழுந்து நின்று  அதன்  அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும்,  அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களே  பெரியவர் என்று  அசரீரி  ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்ட இருவரும் தமது  தேடலைத் தொடங்கினார்கள்.  அன்னப்பறவையாக பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார், பன்றியாக உருமாறிய விஷ்ணு   பூமியைத் துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார்.  பல ஆண்டுகள் பயணித்தும்  இருவராலும்  தங்கள் இலக்கை அடைய முடியவில்லை. கடைசியில் தமது தோல்வியை இருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி  ஜோதிப்  பிழம்பாக , அடிமுடி காணமுடியாத  ஒளி ஸ்தம்பமாக சிவன் தோன்றியதை உலகில் அனைவருக்கும் காட்ட வேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக் கொள்கிறார், அதன்படி ஒவ்வோர் ஆண்டும் கார்த்திகை நாளில்  ஒளிமயமாய்  சிவன்  வெளிப்பட்ட நாள்  கார்த்திகை தீபம். அக்னி மயமான திருவண்ணாமலையில் தீபத்தை மலை மீது   அன்று  இதனால்  தான் ஏற்றி வைக்கிறார்கள்,

கந்த புராணத்திலே  மேலே சொன்ன  சம்பவத்தைத்  தவிர  இன்னொரு  விவரமும்  இருக்கிறது: 
தேவர்களை  வதைக்கும் சூரபத்மனைக்  கொல்ல வேண்டும் என்ற தேவர்கள் சிவனிடம்  முறையிட, அதற்கான காலம் விரைவில் வரும், சூரனை அழிக்க தமது படைப்பில் ஒருவன் வருவான் என பரமேஸ்வரன்  வாக்களிக்கிறார்.  அவ்வாறே   பரமேஸ்வரன் நெற்றிக்கண்  தீப்பொறிகள்  ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கையை அடைகின்றன.  சக்தியால் உருவான  ஆறு   கார்த்திகைப்
பெண்களிடம்  ஆறு  தீப்பொறிச்சுடரும்  ஆறு குழந்தைகளாக வளர்கிறது. பின்னர்   ஆறுகுழந்தைகளும்  ஒரே குழந்தையாக ,  ஷண்முகனாய், ஆறுமுகத்தோடு  தோற்றம் அளிக்கிறது.  கார்த்திகைப் பெண்கள்  சிவனருளால்  நக்ஷத்ரங்களாகின்றனர்.   நெற்றிக்கண் தீப்பொறிச்  சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த  நாள் கார்த்திகை.  முருகனுக்கு கார்த்திகேயன் என்று பெயர்.

ஒரு பழமொழி அடிக்கடி  சொல்கிறோமே   ‘குன்றிலிட்ட விளக்குபோல’ என்று.   உயரமான ஒரு மலை மேலே  ஏற்றிய விளக்கு போல  என்று.   இது அண்ணாமலைத் தீபத்தை நினைவூட்டும்.   உயரமான இடத்தில் ஏற்றிய தீபம் பலருக்கும் ஒளி வழி காட்டும்.   இது பற்றிய  ஒரு பழங்கதை உண்டு. சுருக்கமாக சொல்கிறேன்.

மலாடபுரம் என்ற ஊரில்  சில  புத்த பிக்ஷுக்கள் வாழ்ந்தனர்.    ஆமணக்கு  விதையில் எண்ணெய்  இருப்பதை  முதலில்  கண்டுபிடித்த  அவர்கள்  இருளைப்போக்க  தீபத்துக்கு  அது பயன் படும் என்பதால்  எல்லோருக்கும் அதன் ஒளி  பயன்பட  அரசனின் ஆணையோடு   ராஜ்யத்துக்கு   வெளியில்   அண்ணாந்து  மலை என்ற  குன்றின் உச்சியில்  அரசன் உத்தரவுடன்    சேவகர்கள்  ஒரு பள்ளத்தை வெட்டி,  அதில்   நிறைய ஆமணக்கு  எண்ணையை  ஊற்றி, பெரிய திரியை ஏற்றி  கொளுத்தினார்கள்.   அண்ணாந்து மலை
உச்சியில் பெரிய தீபம் எரிந்ததைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். அந்த ஒளியினால், புகையினால்,   மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்தவிதமான தீங்கும்  விளையாமல் அனைவருக்கும்
ஒளி கிடைத்தது.  

பிறகு என்ன ?  மக்கள்  வீடுகளில்  அப்புறம்   ஆமணக்கு எண்ணையை  பயன்படுத்தி தீபம் ஏற்ற  ஆரம்பித்தார்கள்.  முதல் மூன்று நாட்கள் தீபத்தை வீட்டுக்கு வெளியே வைத்து சோதித்துப்  பார்த்தார்கள்.  அதனால் புகையோ, நோயோ  விளையவில்லை.    வீட்டுக்குள்ளும்  அந்த விளக்கை  உபயோகித்தனர்.  புத்த பிக்ஷுக்கள் முதலில்  கண்டுபிடித்த அந்த ஆமணக்கு எண்ணையை  பரிசோதித்த  அண்ணாந்துமலை  தான்  ஒருவேளை   திருவண்ணாமலையாக இருக்குமோ?   பிக்ஷுக்கள் கண்டுபிடித்து சோதித்த காலம் முன்பனிக்காலம்.   புத்தமதத்தினர் எதையும்  பௌர்ணமி அன்றுதான் தொடங்குவார்கள்.   புத்த பூர்ணிமா  அவர்களுக்கு  விசேஷமாயிற்றே.   ஆகவே   மழைக்காலம் முடிந்து முன்பனி தொடங்கும் காலத்தின் முதல் பௌர்ணமியில் அவர்கள் கண்டுபிடித்த  ஆமணக்கு எண்ணெய்  சோதனையைச் செய்தனர். கார்காலமும் முன்பனிக் காலமும் இணையும் நாட்கள் குளிராகவும் இருட்டாகவும் இருக்கும். கார் என்பதற்கு இருள், கருமை என்று பொருள். கரிய கார் காலத்தின் இருட்டை துலக்கும் ஆமணக்கு எண்ணெய்   
கண்டு
பிடிக்கப்பட்டதால் அம்மாதத்திற்கு '' காரைத்  துலக்கும்'' என்ற  அர்த்தத்தில்  அந்த மாதத்தை  ''கார்த்துல மாதம்''  என  அழைத்து அதுவே  பின்னால் ''காத்திகை மாதம்''  என்று  ஆகியிருக்கலாம் என்று  ஒரு  பழைய ஆராய்ச்சி. 

இந்த   மலாட புரம் எங்கிருக்கிறது?   திருவண்ணமாலை  அருகே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லவாடி எனும் கிராமமாக இருக்குமோ?    அண்ணாந்து மலை  சைவ சமய  க்ஷேத்ரமாக  மாறி  அங்குள்ள  சிவன் கோயிலை சிவ பக்தர்கள்  பாடிய  பிறகுதான் அது   ''திரு''  அண்ணாமலை  ஆனதோ?. 

'அண்ணாந்து பார்ப்பது என்றால் உயரே பார்ப்பது.   தன்னைக்காட்டிலும் பெரியவனை உயர்ந்திருப் பவனை  அண்(ணா)  மூத்தவனை  அண்+அவன் = அண்ணன் என்கிறோம்.  செங்குத்தாய் உயர்ந்த குன்று அண்ணாந்து பார்க்க வைப்பதால் அது அண்ணாமலை.  மறைந்து போன ஓலைச்சுவடி  கதையாக இது இருந்திருக்கலாம்.

திருவண்ணாமலை  உச்சியில் இன்றும்   சிவபெருமான்   தாமிர, செப்பு,   எண்ணெய்க் கொப்பரை யில் அர்த்தநாரீஸ்வரராக  காண்கிறார்.   எண்ணெய்க்  கொப்பரையில் காடா துணியால் திரியிட்டு, நெய் விட்டு ஏற்றுவார்கள். இரவும் பகலும்  ஒளிமயமாக எரியும் .  எரியும் போது தோன்றும் சூட்டினால், கொப்பரையினை சுற்றி  மேல் பாகத்தில் பெயின்டினால் வரையப்பட்ட  அர்த்தநாரீஸ்வரர்  உருவம் உஷ்ணத்தில்  உருகி  உரிந்து போவது இல்லை.  இது ஒரு அதிசயம். அருகில் சென்று  தீபம் ஏற்றுபவர் களையும்  உஷ்ணம்  தீண்டுவதில்லை . எதற்கு  தாமிரத்தில்,  செம்பிலான கொப்பரையில்  எண்ணெய்  தீபம்?   சிவன்  தாமிர வர்ணன்.  உண்ணாமுலை அம்மன்  உடனுறைவதால்  அர்த்தநாரீஸ்வரன் உருவம்.  ஜோதிமயமானவன்.  சிவனை  தமிழ்  பாடல்கள் செம்பொன்மேனியன் என்று போற்றுகிறது.  செம்பொனார் கோவில் என்று ஒரு ஊரே இருக்கிறது.

திருவண்ணாமலை  தீப  உற்சவம்  பத்து நாட்கள்.  ஊர்வலங்கள்.   மூன்று நாள் தெப்ப திருவிழா, அடுத்து   சண்டிகேசுவர் உற்சவம்.   பரமேஸ்வரன்  காத்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில்,  விஷ்ணு, ப்ரம்மா  இருவருக்கும்  அக்னியாக  காட்சி தந்ததால்  அன்று தான்   கார்த்திகை தீபம். 

அன்று அதிகாலையில்  அருணாசலேஸ்வரர் சன்னதியில் ஒரு   தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி  பூஜை.   அப்புறம் அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள். ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’   தத்துவம்   இதுதான்.   பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக  அருள்பாலிக்கிறார்  என்று பொருள். 

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின் றனர்.

மஹா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரம்.  மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சி  தருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீப  தரிசனம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...