Friday, November 13, 2020

PESUM DEIVAM

 

பேசும் தெய்வம் J K SIVAN


' கங்கா ஸ்னானம் ஆச்சா?''     

ஸார்வரி  வருஷ தீபாவளி  இன்று  விடிகாலை  அதிக  '' டமால் டுமீல்'' எங்கும் காதை கிழிக்காமல்  தெருவெல்லாம் காகித குப்பை பறக்காமல் , பல வித காரணங்களால்  முக்கியமாக கொரநேசனை  நினைத்து, அடக்கி வாசித்து பறவைகள் விலங்கினத்துக்கு  ரொம்ப.  வருணதேவன்  கருணையும் இந்த வருஷம்  அமோகம். ஆனால் ரொம்ப முக்கியம் தீபாவளிக்கு கங்கையோடான பரிச்சயம்.

காஞ்சி மஹா பெரியவா, பேசும் தெய்வம், தீபாவளி பற்றி கூறிய வாசகங்களை சுருக்கமாக நினைவு கூர்வோம்:
'' தீபாவளி அன்றைக்கு ஒரு நாள் மட்டும் எல்லா வெந்நீரிலும் கூட அருணோதயதிலிருந்து ஸூர்யோதயம் வரை ஒரு முஹூர்த்தம் – அதாவது இரண்டு நாழிகை – கங்கை இருக்கிறாள். அதனால் தான் தீபாவளி அன்று ''என்ன சார் கங்கா ஸ்னானம் ஆயிற்றா?'' என்று கார்பொரேஷன் குழாயில் குளித்தவனை கேட்டாலும் அது தப்போ .பைத்தியக்காரத்தனமோ இல்லை. 

தீபாவளியன்று முதலில் நாம் அருணோதயத்தில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு கங்கா ஸ்மரணத்தோடு வெந்நீர் ஸ்நானம் பண்ண வேண்டும். அப்புறம் ஸூர்யோதயமானபின், ஆனால் ஆறு நாழிகைக்குள், பச்சை ஜலத்தில் இன்னொரு ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த கங்கா ஸ்னானத்தில் காவேரி ஸம்பந்தமும் இருக்கிறது ஏனென்றால் துலா (ஐப்பசி) மாஸம் முழுக்கவே அருணோதயத்தில் ஆரம்பித்து ப்ராதக்காலம் முடிகிறவரை, அதாவது ஸூர்யன் உதித்து ஆறு நாழிகை வரை காவேரியில் கங்கை உள்பட ஸகல தீர்த்தங்களும் இருக்கின்றன.

இந்த நன்னாளில் கிருஷ்ண ஸ்மரணை தான் உண்மையில் புண்ணிய ஸ்நானம். ''உள்'' அழுக்கை யெல்லாம் அகற்றி ஜீவனைக் குளிப்பாட்டிப் பளிச்சென்று பரிசுத்தம் பண்ணுவது அதுதான். ‘கோவிந்தேதி ஸதா ஸ்நானம்’ என்பதுண்டு. இப்படிச் சொன்னதால் வெளியே இருக்கிற கங்கா, காவேரியெல்லாம் அவசிய மில்லை, பிரயோஜனமில்லை என்று அர்த்தம் ஆகாது. அந்த கோவிந்தனேதான் நம்மிடம் கருணை யோடு நமக்கு கங்கா ஸ்நானத்தைக் கொடுத்து, தானே காவேரி ஸ்நானம் பண்ணிக் காட்டியிருக் கிறான். அவனுடைய ஸ்மரணத்தோடு இப்படி ஸ்நானம் பண்ணினால் அது உள்ளத்துக்கு ஸ்நானம் என்பது மட்டுமில்லை, உள்ளத்துக்குப் புது வஸ்திர அலங்காரம், மதுரமான பக்ஷணம் எல்லாமும் அதுவேதான்!
இந்த நாளில் ஒரு யுகத்திற்கு முன்பு கிருஷ்ணர் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுவைப் போல் கருடனை அழைத்து அவன் மேலேறிக் கொண்டு, ஸத்ய பாமாவையும் துணை சேர்த்துக் கொண்டு ப்ராக்ஜ்யோதிஷ புரத்துக்குப் புறப்பட்டு விட்டார்.
ஸத்யபாமாவை எதற்கு அழைத்துக்கொண்டு போனார்? அவள் பூமாதேவியின் அவதாரம் அல்லவா அதனால் தான். பாமாவுக்கு அஹங்காரம் ஜாஸ்தி என்பது தவறு. இப்போது ஸத்ய பாமாவிடம் இருந்த உயர்ந்த குணங்கள் உலகுக்கு தெரிவதற்காகவே அவளை அழைத்துக் கொண்டு போனார். பெற்ற தாயே  தன் பிள்ளையைக்  கொல்லப் போகிறாள் .லோகத்துக்கே விரோதியாகத் தன் பிள்ளை இருக்கிறான் என்பதால் அவன் சாக வேண்டியது தான் என்று ஒரு தாயார் நினைப்பது தான் மிகச் சிறந்த விஷயம், விசேஷமும் கூட. இப்படி நினைத்துத் தன் துஷ்டப் பிள்ளை தன்னால் தன கண் முன்னே சாவதையும் பார்த்து லோக ‌க்ஷேமத்தை நினைக்கக் கூடிய உயர்ந்த குணம் ஸத்ய பாமாவுக்கு உண்டு என்று உலகத்துக்கு தெரியப் படுத்துவதற் காகவே சத்யபாமாவை தன்னுடன் அழைத்துக் கொண்டு போகிறார்.

தர்மத்துக்காகப் போராடிய வீராங்கனைகளை சரித்திரம் சொல்கிறது. அநேக ராஜ ஸ்திரீகள் ஆதியிலிருந்து, ஸமீபகால ராணி அஹல்யா பாய், ஜான்ஸி ராணி வரை இருந்திருக்கிறார்கள். கைகேயி ஸம்பராஸுர யுத்தத்தின் போது தசரதருக்கு ரத ஸாரத்யம் செய்தவள். இங்கே சத்யபாமா கிருஷ்ணனை வைத்து தான் ரத்தத்தை செலுத்துகிறாள் .

முன்னொருநாளில் பொறுமையே பூஷணமான பூமாதேவி துஷ்ட ராஜாக்கள் படுத்தும் பாடு தாங்க முடியாமல், பசு ரூபத்தில் மஹாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்துக் கொண்டதால் பூபாரம் தீர்ப்பதற்கு விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுக்கிறார். அதில் கம்ஸன், சிசுபாலன், ஜராஸந்தன், துர்யோதனன் முதலானவர்களைத் தீர்த்துக் கட்டினால் மட்டும் போதாது. இவர்களை யெல்லாம் விட க்ரூரமான நரகாஸுரனையம் வதம் பண்ண வேண்டும் என்று தம்பதியாகப் போகிறார்கள்.

நரகாசுரனின் தலைநகரம் ப்ராக்ஜ்யோதிஷ புரத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி அநேக கோட்டை களைக் கட்டிக் கொண்டு உள்ளே பாதுகாப்பாக வஸித்தான் நரகன். வெளி எல்லையில் முதலில் மலைகளையே கோட்டையாக அமைத்துக் கொண்டிருந்தவன் அதற்குள்ளே ஆயுதங்களாலேயே ஆன கோட்டை, அப்புறம் ஜலத்தை மந்திர சக்தியால் எழுப்பி நிறுத்தி அமைத்துக் கொண்ட ஜலக் கோட்டை, அதற்கப்புறம் உள்ளே நெருப்பா லேயே ஆன அக்னிக் கோட்டை, அப்புறம் வாயுக்கோட்டை என்று பலவற்றைக் கட்டிக் கொண்டு உள்ளுக்குள்ளே இருந்தான்.

பகவான் கிருஷ்ணன் ஒவ்வொரு கோட்டையையும் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஊருக்குள்ளே வந்து, பாஞ்சஜன்ய (சங்க)த்தை முழக்கி நரகாசுரனை யுத்தத்துக்குக் கூப்பிட்டார்.
முதலில் நரகாஸுரனுடைய ஸேனாதிபதி முரன் என்கிறவன் கிருஷ்ணனோடு மோதுகிறான். அவனுக்கு ஐந்து தலை. வீர பராக்கிரமன். கடும் யுத்தத்தில் பகவான் ஸுதர்சன சக்ராயுதத்தால் அவனுடைய ஐந்து தலைகளையும் அறுத்து அவனை ஸம்ஹாரம் செய்தார்.
கருடன் எப்படி விஷ்ணுவின் வாஹனமோ, அப்படியே ஸுதர்சன சக்ரம் விஷ்ணுவின் ஆயுதம். கருடாரூடரான கிருஷ்ணர், இந்தச் சக்கரம், விஷ்ணுவின் கதையான கெளமோதகீ நந்தகி, முதலான ஆயுதங்களையும் தரித்திருக் கிறார். ராமர் முதலான அவதாரங்கள் இப்படிச் செய்ததில்லை. இதனால்தான் கிருஷ்ணரையே மஹாவிஷ்ணுவின் பூர்ணாவதாரம் என்பது. கிருஷ்ணன் தான் கடவுள் என்கிற பிரஞையோடு மனிதனாக உருவெடுத்தவர்.
முரனை வதைத்ததாலேயே கிருஷ்ணனுக்கு முராரி, முரஹரி என்ற பெயர்கள். முரனுக்கு அரி (சத்ரு) முராரி. த்ரி-புரம் என்ற மூன்று புரங்களில் உருவமாயிருந்த அஸுரர்களுக்கு விரோதியானதால் ஈச்வரனுக்குப் புராரி என்று பெயர். முரஹரி என்றாலும் முரனை அழித்தவர்.முரன் கதை முடிந்தது. அவனுடைய ஏழு பிள்ளைகள் சண்டைக்கு வந்தனர். தோற்றனர். அப்பா போன கதிக்கே தாங்களும் போய்ச் சேர்ந்தார்கள். கடைசியில் ஒரு பெரிய யானை மேல் ஏறியவாறு நரகாஸுரனே யுத்த பூமிக்கு வந்தான்.
கருடனின் மேலிருந்து கொண்டு பகவான் அவனோடு சண்டை போட்டார். அவனுடைய ஸைன்யத்தை வதம் பண்ணுவதில் கருடன், ஸத்யபாமா இரண்டு பேரும் அவருக்கு ஸஹாயம் செய்தார்கள். தாமே எதையும் ஸாதித்துக் கொள்ள முடியுமாயினும், அவர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்ததாக இருக்கக் கூடாது என்று நினைத்து, அவர்களுக்கும் இப்படி ஸேவா பாக்யத்தைக் கொடுத்தார் கிருஷ்ணன். அஸுர ஸைன்யம் முழுவதும் நிர்மூலமான பின் பகவானுக்கும் நரகாஸுரனுக்கும் நேருக்கு நேர் உக்ரமான யுத்தம் நடந்தது. பகலோடு முடியாமல் ராத்திரியெல்லாம் சண்டை நீடித்தது. ரா வேளையில் அஸுரர்களுக்கு பலம் விருத்தியாகும். ஆனாலும் பரமாத்மா வானதால் தான் சத்யபாமாவை விட்டு அவனை தாக்குகிறார். அவன் தாக்குத லைச் சமாளித்தார். அவனால் ஒரு நேரத்தில் கிருஷ்ணன் சத்யபாமாவுக்கு ஈடு கொடுக்க முடிய வில்லை. முடிவிலே அருணோதய காலத்தில் பகவான் சத்யபாமாவை உபயோகித்து நரகாஸுரனைச் சக்ராயுதத்தால் ஸம்ஹாரம் செய்துவிட்டார்.
அன்று பொழுது விடிந்தபோது லோகத்துக்கே பெரிய விடிவு காலமாயிற்று! இப்படியாக தீபாவளியை நினைத்துக் கொண்டே பகவத்பாதாள் இந்த ச்லோகத்தைப் பண்ணின மாதிரி இருக்கிறது. அது இருக்கட்டும்.
’பிள்ளை போன நாளைப் பண்டிகையாக எல்லோரும் எந்தக் காலத்திலும் நின்று போகாமல் செய்து வரவேண்டும்’ என்று பூமாதேவி ஆசைப்பட்டாள். பண்டிகை என்பதால் மங்கள ஸ்நானம், புது வஸ்திர தாரணம், பக்ஷண போஜனம் எல்லாவற்றையும் ஏற்படுத்திக் கொடுத்தாள். இதிலே பிள்ளை நினைவு வரும்படி புதிசாக, நூதனமாக ஏதாவது இருக்க வேண்டுமென்று உதயத்துக்கு முந்தியே தைல ஸ்நானம் செய்ய வேண்டும் என்று வரம் வாங்கினாள். பகவானே இதற்கு ஒப்புக் கொண்டும் கூட, இப்படி சாஸ்திர விரோதமாக அப்யங்கனம் பண்ண யாராவது பயப்படப் போகிறார்களே என்று நினைத்து, பயம் போகும்படியாக என்ன செய்யலாம் என்று பார்த்தாள். ‘அன்றைக்கு அந்த வேளையில் தேய்த்துக் கொள்கிற எண்ணையில் லக்ஷ்மியும், குளிக்கிற வெந்நீரில் கங்கையும் வஸிக்கும்படி செய்துவிட்டால் யாரும் பயப்பட மாட்டார்கள்; லக்ஷ்மியும் கங்கையும் வேண்டாம் என்று எவருமே நினைக்க மாட்டார்கள். இதனால் ஸகல ஜனங்களுக்கும், பண்டிகை என்ற ஸந்தோஷத்துடன் புண்ணியம் என்பதும் கிடைக்கும்’ என்று நினைத்தாள். இதனால்தான் அந்த ஸ்நானத்துக்கு கங்கா ஸ்நானம் என்றே பேர் ஏற்பட்டது.

இருந்தாலும் நரகனை நேரே தான் பெற்றதால் (பூமியின் மகன் பௌமாசுரன்) அவனிடம் அதிகப் பிரியம் வைத்து அவன் மறைந்த இந்த நாளுக்கு ‘நரக சதுர்த்தசி’ என்றே பேர் ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கிக் கொண்டாள். ஆனாலும் இப்போது பஞ்சாங்கத்தில்தான் அந்தப் பேர் போட்டிருக்கிறதே தவிர, நாம் தீபாவளி என்றே சொல்கிறோம். ‘தீபாவளி’ என்றால் தீப ஒளி, தீப வரிசை. வடக்கேதான் இப்படி விளக்கேற்றி வைத்து நிஜ தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். நாம் கார்த்திகை தீபோத்ஸவம் என்று வைத்துக் கொண்டு விட்டோம்.

இதுவரைக்கும் நான் சொன்னதில் ஸார்மான கதாபாகம் அநேகமாக எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இப்போது தெரியாத கதைக்கு – காவேரி ஸ்நானக் கதைக்கு – போகிறேன்.

காவேரி முழுவதிலும் இப்படி துலா(ஐப்பசி) மாஸத்தில் ஸகல தீர்த்த ஸாந்நித்யம் இருப்பதாகச் சொன்னாலும், ஏதாவது, ஸ்பெஷல் ஆக ஒன்று வேண்டும் போலிருக்குமே, அதனால் – மாயவரத்தில் [மயிலாடுதுறையில்] மட்டும் துலா ஸ்நானம் அதி விசேஷமாகச் சொல்லப்படுகிறது. மாயூரம் என்பது அதன் சரியான பெயர். மயில் என்று அர்த்தம். மயிலாப்பூரில் எப்படி கற்பகாம்பாள் மயிலாகி பரமேச்வரனைப் பூஜித்தாளோ அப்படியே அபயாம்பாள் மயிலாக ஈச்வராராதனை செய்ததால் மாயூரம், கெளரீ மாயூரம் என்று அந்த க்ஷேத்திரத்துக்குப் பெயர் .

அங்கே ஒரு படித்துறைக்கு ‘லாகடம்’ என பெயர். ‘துலா கட்டம்’ என்பதுதான் இப்படி முதலெழுத்தை தொலைத்து விட்டு ''லாகட'' மாகியிருக்கிறது! ‘தொள்ளாயிரம்’ என்பது ‘த்ளாயிரம்’ ஆனது போல். ‘மாயவரம்’ என்பதை ‘மாயரம்’, வியாபாரம்’ என்பதை ‘யாபாரம்’ என்பார்களே அது போல் தான் , ‘மூட்டை’யில் ‘ட்’ போய் ‘மூடை’ என்கிறது போல ‘லாகட்டம் ''லாகட ’மாகியிருக்கிறது!
இந்தத் துலா கட்டத்தில் ஐப்பசி மாஸம் பூராவும் ஸ்நான விசேஷத்துக்காக ஜனங்கள் சேருவார்கள். அங்கேதான் கிருஷ்ணரை வீரஹத்தி நிவ்ருத்திக்காக ஈச்வரன் ஸ்நானம் பண்ணச் சொன்னார். சொன்ன தோடில்லாமல் தாமும் கூட வந்தார்.
யமுனாதீர விஹாரி கிருஷ்ணன் தீபாவளி யன்று நம் எல்லோருக்கும் கங்கா ஸ்நானம் கிடைக்கும்படியாக அநுக்ரஹம் செய்துவிட்டுத் தாம் காவேரிக்கு வந்து துலா ஸ்நானம் பண்ணினார். வீரஹத்தி தோஷம் போய்விட்டது. அதற்கு visible proof-ஆக [பிரத்யக்ஷ நிரூபணமாக] ஹத்தி தோஷத்தால் மங்கியிருந்த அவருடைய தேஹ காந்தி இப்போது முன் மாதிரியே பளீரென்று ஜ்வலிக்கிற நல்ல நீலமாக மாறிற்று.

ஸகல தேவதைகளும் இந்த ஆச்சரியத்தைப் பார்த்து, ஈச்வரன், பெருமாள் இரண்டு பேரையும் ஒன்றாகத் தரிசிக்கிற பாக்யத்தைப் பெற்று, தாங்களும் காவேரி ஸ்நானம் செய்தார்கள்.

பூமாதேவி இந்த ஸந்தர்ப்பத்தில்தான் நரகாஸுரன் ஞாபகமாக கங்கா ஸ்நானம் முதலான வரங்களைக் கேட்டதாகக் காவேரி புராணத்தில் இருக்கிறது.
பூர்வாவதாரத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தது போலவே, இப்போதும் கிருஷ்ண பரமாத்மா வீரஹத்தி போக என்ன வழி என்று பரமசிவனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள கைலாஸத்துக்குப் போனார். 
“பரமேஸ்வரா, என்னுடைய வீரஹத்தி தோஷம் விலகுவதற்கு ஒரு பிராயச்சித்தம் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.
சைவ-வைஷ்ணவர்களாகிய நம்மில் சில பேருக்குத் தான் சிவன், விஷ்ணு என்ற இர்ண்டு பேரில் யார் யாரை விடப் பெரியவர் என்று கட்சி கட்டுகிறோம். சிவனுக்கும் விஷ்ணுவுக் கும் ‘தாங்கள் இரண்டு பேருமே ஸாரத்தில் ஒன்றுதான். லீலைக்காகவும், லோகாநுக்ர ஹத்துக்காகவும், நிர்வாஹம் – ஸம்ஹாரம் என்று தொழில் பிரிவினைக்காக வேறு வேறு மாதிரி வேஷம் போடுகிறோம்’ என்று தெரியும். ஆகவே இருவரும் ஒருவர் காலில் இன்னொருவர் விழுவார்; அடித்துக் கொண்டு சண்டையும் போட்டு ஒரு ஸமயம் ஒருவர் தோற்பார்; இன்னொரு ஸமயம் மற்றவர் தோற்பார். அன்பிலே நெருக்கமாகித் தாங்கள் இரண்டு பேருமே ஒரே தேஹத்தில் பாதிப்பாதியாகச் சேர்ந்தும் இருப்பார்கள்.

''ப்ராயச்சித்தான்–யசேஷாணி தப: கர்மாத்மகாநி வை   யாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாநுஸ்மரணம் பரம்.''
அதாவது, “ப்ராயச்சித்தங்களாக அநேக வித தபஸ்கள், கர்மாநுஷ்டான்ங்கள் என்று எத்தனையோ இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலான ஸர்வப் பிராயச்சித்தம் என்னவென்றால் க்ருஷ்ண ஸ்மரணை தான்” .

மஹா பெரியவர் அழகாக சொல்வது போல் இன்று எல்லோரும் ஸ்ரீ கிருஷ்ணனை ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே   ஹரே  கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே என்று ஒரு தரமாவது போற்றி .பாடுவோம்.
அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்     கிருஷ்ணன் அருள் பெருகட்டும்.  ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா சங்க சார்பில்   பெரியோர்களுக்கு நமஸ்காரம்,  82க்கு கீழே இருப்பவர்களுக்கு  ஆசிகள், வாழ்த்துக்கள்.  பெரியவா கம்பி மத்தாப்பு  கொளுத்தும் காட்சி இணைத்திருக்கிறேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...