பேசும் தெய்வம் J K SIVAN
என்றும் நிதர்சன தெய்வம்
அற்புதமான பக்தி உள்ளம் படிப்பினால், குலத்தால், பணத்தால், பரம்பரையால் வருவதல்ல. அதற்கு பூர்வ ஜென்ம சத் கர்ம பலனும் தேவை. இதை நிரூபித்தவர்கள் பலர் உண்டு. இப்படிப்பட்டவர்களை பூஜித்து அடி பணியலாம்.
இப்படிப்பட்ட புண்யசாலிகள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் செய்வதைப் போல இருக்காது. அதில் சுயநலம் இருக்காது, அன்பு பாசம் பண்பு எல்லாம் தூக்கலாக இருக்கும். தெய்வமே மகிழும்படியாக வாழ்பவர்கள்.
காஞ்சி மகா பெரியவா மடத்தின் வாசலில் ஒரு புண்யாத்மா இப்படி இருந்ததைப் பற்றி சொல்கிறேன்.
யாருக்குமே தோணாத, யாருமே செய்யாத ஒன்றை செய்து அந்த பூக்காரி காமாக்ஷி செய்ததால் அந்த பூக்காரிக்கு அடிச்சுது அந்த லக்கி ப்ரைஸ் . அப்படி என்ன செய்துவிட்டாள் காமாக்ஷி.
நீங்களும் நானும் சொல்லாத, சொல்ல தைர்யமில்லாத ஒரு சொல். நாம் நம்மை அன்னியப்படுத்திக் கொள்வதால் சொல்ல முடியவில்லை. அவள் சர்வ சுதந்திரமாக மஹா பெரியவாளை "அப்பா"என்று தான் எப்போதும் அழைப்பாள். தினமும் ஒரு கூடை பூவினால் பெரியவாளைஅர்ச்சிப்பாள். நாம் செய்யமுடியுமா?
"ஏன் இப்படி பூவை வீணாக்கறே? பைத்தியமா நீ? இதை வித்தா உன் குடும்ப செலவுக்கு காசு கிடைக்குமே!" -- மஹா பெரியவா.
"காசு பெரிசா சாமி! உன் தலையில் நான் இந்த பூவை ஆசையா போட்டு பூசை செஞ்சா அதுக்கு மேலேயே எல்லாம் கிடைக்கும்" -- பூக்காரி காமாக்ஷி.
அடடா, அவள் பெயரே எப்படி திவ்யமா அமைஞ்சிருக்கு . அவள் பெயர் காமாக்ஷி. பெரியவாளுக்கும் உலகமறிந்த பெயர் -- காஞ்சி காமாக்ஷி ஸ்வரூபம். .
மடத்தில் ஒரு சிஸ்டம். அதாவது மஹா பெரியவா சயனத்துக்குப் போய் விட்டால் அப்புறம் யாரும் எழுப்பக் கூடாது. ஆனால், இந்த பூக்காரி காமாட்சி மட்டும் விதி விலக்கு. எப்போ வேணுமானாலும் வரலாம். எப்படி என்றால் அது மஹா பெரியவா போட்ட கண்டிஷன் :
"காமாக்ஷி, நீ உன் பூ வியாபாரத்தை முடித்துக் கொண்ட பிறகு தான் என்னிடம் வரணும். பாதியில் விட்டு வரக்கூடாது!" அவளது பிழைப்பை தனக்காக அவள் தனக்காக தியாகம் பண்ண விடுவதற்கு அந்த பேசும் தெய்வம் சம்மதிப்பாரா?
ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா?
மஹா பெரியவா, நாகராஜன் என்பவரை ''ராத்திரி 9 மணி நியூஸ் என்னன்னு கேட்டு சொல்லு?'' என்கிறார். அவர் சொல்ல கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சந்நியாசியாக இருந்தாலும் வேதாந்த தத்துவங்கள் தவிர, நாட்டு, உலக நடப்பையும் தெரிந்து கொள்வது அவசியம் என்று நினைப்பவர். இல்லாவிட்டால் ஜகதகுரு என்ற பெயருக்கு அர்த்தமில்லையே. லோக சம்ரக்ஷணத்துக்கு லோகத்தில் என்ன நடக்கிறது என்று தெரியவேண்டுமே . காதில் விழுந்த செய்திகளை மனதில் அலசி ஆராய்ந்து தக்க பிரார்த்தனை செய்த பிறகு தான் படுக்கப் போவார்.
அன்று, புதுக்கோட்டையிலிருந்து ஒரு பக்தை மஹா பெரியவா தரிசனத்துக்கு வந்திருந்தாள் . அவள் பெயர் ஜானா, பெரியவாளுக்கு வெல்வெட்டில் பாதுகை செய்து கொண்டுவந்திருந்தாள். அதை அன்று முழுதும் மஹா பெரியவா ஏனோ காலை விட்டு கழற்றவே இல்லை. ராத்திரி படுக்கைக்குப் போகு முன் கொட்டகை சென்று, தேக சுத்தி பண்ணிக் கொண்டு வரச் சென்றார். வழக்கமாக அவருக்கு நியூஸ் படிக்கும்நாகராஜன் அந்த பாதுகை மேல் கண் வைத்துவிட்டார்.
"இன்று பெரியவா பாதுகையைக் கழட்டினதும் நான் தான் எடுத்துக்கொள்வேன், என்னிடம் பெரியவர் பாதுகையே இல்லை பூஜை செய்வதற்கு !" என்று பெரியவா பாதுகையைக் கழட்டுவதற்குக் காத்திருந்தார். பெரியவாளோ இன்னும் பாதுகையைக் கழட்டவில்லை.
அப்போது வழக்கம்போல பூக்காரி காமாக்ஷி வியாபாரம் முடித்து வழக்கம் போல அங்கு வந்து பெரியவா ளுக்கு நமஸ்காரம்பண்ணினாள். மஹா பெரியவா ஆச்சர்யமாக தன்னுடைய பாதுகையைக் கழற்றி பூக்காரியிடம் நீட்டி
"இந்தா இது உனக்காகத் தான் இத்தனை நேரம் வைச்சிருக்கேன், எடுத்துக்கோ!"
"நாமொன்று நினைத்தால் தெய்வமொன்று நினைக்கும் ! என்று நியூஸ் படிக்கும் நாகராஜன் கு றையோடு திரும்பினார். எந்த அளவுக்கு மஹா பெரியவாளின் தூய அன்புக்கு அந்த ஏழைப் பூக்காரி காமாக்ஷி பாத்திரமாயிருந்தாள்.
அப்புறம் நடந்தது இதைவிட ஆச்சர்யம். எத்தனையோ பேர் அவளிடம் லட்ச ரூபாய் தரோம், இந்தப் பாதுகையைக் கொடு'' என்றனர். அவள் அசையவேயில்லை. பெரியவா அவளுக்கு இந்த உலக வாழ்க்கைக்கு வேண்டிய வசதிகளெல்லாம் கிடைக்கச்செய்தார்.அவள் வீட்டுத் திருமணங்களுக்குவண்டி,வண்டியாக கல்யாண சாமான்கள்அனுப்பினார்.
பெரியவா ஸித்தியான பிறகும், சமாதிக்கு இரவில் பூக்களால் அர்ச்சிப்பதை காமாட்சிவிடவில்லை. ஆனால், பெரியவா இருக்கும்போது பூக்கூடையை வெறுமனே திருப்பாமல் ஏதாவது பழம் முதலியனபோட்டுத்தான் அனுப்புவார்.அவர் மறைவுக்குப் பின் வெறுங்கூடையைப் பார்க்கவே அவளுக்கு வருத்தமாக இருந்தது. கண்களில் வெள்ளம்.
"அப்பா, நீ இருந்தா இப்படி என்னை வெறுங்கூடையுடன் அனுப்புவியா!". புலம்பினாள்.
கூடையை வைத்துக் கொண்டுஉட்கார்ந்தவளுக்கு, தூக்கிவாரிப்போடும்படிஅதிஷ்டானத்திலிருந்து ஒரு செம்பருத்தி பூவை யாரோ வீசி எறிந்தது போல் காற்றில் பறந்து வந்து வந்து அவள் கூடையில் விழுந்தது.
மஹா பெரியவா அதிஷ்டானத்துக்கு முன்னால் முறையிட்டால் இன்று மட்டும் அல்ல என்றும் பதில் சொல்லக் கூடிய அந்த மஹா ஸ்வாமியை ''அவர் போய்ட்டார், தெய்வம் போயிடுத்து" னு யாரும் சொல்லக் கூடாது. என்னிக்கும் இருக்கார் '' -- இப்படித்தான் காமாக்ஷி எல்லோரிடமும் சொல்லுவாள்.
மஹா பெரியவா ஒரு கண்கண்ட ப்ரத்யக்ஷ கலியுக தெய்வம். சந்தேகமே இல்லை. இதை அனுபவித்த பக்தர்கள் கோடி கோடி விஷயங்கள் சொல்வார்கள். அவர் காருண்யம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நம்பினோர் கெடுவதில்லை.....இது நான்கு மறை தீர்ப்பு.
No comments:
Post a Comment