அப்பவும் இப்பவும். J.K. SIVAN
முன்பெல்லாம் தீபாவளி நெருங்கிவிட்டது என்பதை பட்டாசு சப்தம், நாய்களை வெறிகொண்டு பீதியுடன் ஓட்டுவதிலிருந்து புரிகிறது. பறவைகள் மிருகங்கள் கதி கலங்கும். இனி
மையான குரலில் சப்திக்கும் கண்ணுக்கு தெரியாத பறவைகள் கப் சிப். நல்லவேளை கொஞ்சம் மழை பெயர்கிறது. எங்கோ இன்னும் சில நல்லவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
எங்கும் மன நிறைவில்லாத மனிதர்கள். எல்லோர் கண்களிலும் ஏதோ ஒரு ஏமாற்றம், எதிர்பார்ப்பு தெரியும் தூர பார்வை.
எனக்கு தீபாவளி ஏதோ ஒரு இன்னுமொரு நாள். அவ்வளவு தான். நிறைய 81 வருஷம் பார்த்துவிட்டேன். புதிதாக ஆடைகள் வாங்கிக்கொள்ளும் எண்ணம் எப்போது மறைந்தது? எத்தனை வருஷங்களாக? என்பதே நினைவில்லை. ஒரு துண்டு, ஒரு வேஷ்டி நிச்சயம் வீட்டில் புதுசு ஏதாவது இருந்துகொண்டே இருக்குமே.
இப்போது
எங்கும் எதிலும் டிஜிட்டல். தீபாவளி மலர்கள் பேச்சையே காணோம். புத்தகங்கள் படிக்கும் பழக்கமே நின்றுவிட்டது. மொபைல் வாட்சாப் கம்பியூட்டர் கூட இன்னும் கொஞ்ச நாளில் புராதன பழங்கால வஸ்துவாகிவிடும் போல் இருக்கிறது.
இனி எந்த ஜென்மத்தில் வாசலில்
குடுகுடுப்பாண்டி ''நல்ல காலம் பொறக்குது'' குடுகுடு என்று உரக்க சொல்லப்போகிறான் ? தோளில் நிறைய பழைய துணிகள் போர்த்திக்கொண்டு தலையில் தலைப்பாகையோடு அவன் சொன்ன ''நல்ல காலம்''இனிமேல் இல்லையோ? பூம் பூம் மாடும் இனி வராதோ? அபஸ்வரமாக நாதஸ்வரம் அந்த மாட்டுக்கு மட்டும் பழக்கமாகி இருந்த காலம் இனி எவ்வளவு கொடுத்தாலும் கிடைக்காது. தெருவில் ''கோவிந்தா கோவிந்தா'' இப்போதெல்லாம் புரட்டாசி மாசம் தினமும் ரோட்டில் புரண்டு புரண்டு அங்கப்ரதக்ஷணம் எவன் உருள்வான்? மூடியிறக்க பல மாதங்கள் நீளமாக வளர்த்து சடை பிடித்த குடுமித் தலைக்கு மேல் மஞ்சள் துணி வாயைக்கட்டிய நாமம் போட்ட பளபளக்கும் பித்தளை சொம்பை வீட்டுக்கு வாசலில் யார் படுத்துக்கொண்டே நீட்டப்போகிறார்கள்? . சனிக்கிழமைகள் நிறைய வரிசையாக ''கோவிந்தா கோவிந்தா'' என்று அரிசி , காசு கேட்கும் குழந்தைகள், மஞ்சள் வஸ்திர பெண்கள் காணமுடியவில்லை. காலம் மாறிப்போச்சு. போய்விட்டது. தலையில் நீண்ட முடி, தாடி எல்லாம் ''மலைக்கு போய் முடி இறக்க '' வளர்த்தவர்கள் மோக்ஷம் அடைந்து விட்டார்களோ?
மரத்தடியில் கலாய் பூசுகிறேன் என்று பாய் ஒருவர் ஒரு சின்னப்பையனோடு மறந்து துருத்தியில் காற்று செலுத்தி தணலில் வெள்ளி ஈயம் பூசி கருப்பு பாத்திரத்தை வெள்ளியாக மாற்றிக் காட்டுவாரே.
தினமும் சட்டியில் மோர், தயிர், புளி ,நெய், பனஞ்சாறு, நெய் விற்றவள் வழி மறந்து விட்டாளோ? ஆஞ்சநேயர் ராமர் வேஷதாரிகள் வாசலில் இனி நின்று காசு கேட்க மாட்டார்களோ? எங்கோ சில இடங்களில் இன்னும் அத்திப் பூக்களாகி விட்டார்களோ?. கையில் கூண்டு பெட்டி , டப்பாவில் நெல், அரிசியோடு குருவி, கிளி ஜோசியன் தெருவிலோ, மரத்தடியிலோ காணுமே. கிளி, குருவி பறந்துவிட்டதோ?
பிள்ளையார் கோவில் பின்னால் பெரிய ஆலமரத்தடியில் சுப்பையர் அவர் மகன் வெங்கிட்டு ரெண்டுபேரும் சுட சுட அலுமினியம் குக்கரில் அடுப்பு மூட்டி இட்டிலி தேங்காய் சட்னி (நீர்க்க தான்) மொளகாப்பொடி, எண்ணெயோடு கொண்டு தருவார்களே , இனிமேல் அவர்களை எங்கே பார்ப்பது அரையணாவுக்கும் ஓரணாவுக்கும் இட்லி வடை எங்கே கிடைக்கும்?
தென்னந்தோப்புகள், பனைமரக்கூட்டங்கள், நிறைய நுங்குகள், அதற்கடியில் சாயந்திரம் தெருக்கூத்துக்கு வேஷம் போட்டுக்கொண்டு இரவெல்லாம் ஆடிப் பாடிய கூத்தாடிகள் பட்டணத்தை விட்டு மாயமாக மறைந்து விட்டார்கள்.
கல்யாண மாசம் வந்துவிட்டால் போதும், எங்காவது கல்யாணம் நடந்துகொண்டே இருக்கும் என்பதற்கு அடையாளம், தெருவெல்லாம் காது பிளக்க பராசக்தி, மனோகரா வசனம் சிவாஜி கணேசன் குரல் அங்கங்கே மரத்தில் கட்டிய கோன் ஸ்பீக்கரில் காதை பிளக்கும். இப்போது அதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
கல்யாண வீட்டு வாசலில் நின்று பழைய A .M ராஜா, கண்டசாலா பாடல்களை காதை செவிடாக்கும் ஒலி பெருக்கியில் கேட்டு நெட்று பண்ண நின்றிருக்கிறேன். அதிகம் தெருவில் சைக்கிள் மட்டுமே ஓடிய காலம் அது. குதிரை வண்டி கை ரிக்ஷா , ஏன் பின்னால் வந்த சைக்கிள் ரிக்ஷா கூட மணிஅடித்துக்கொண்டு மிதித்து ஒட்டியது நின்று போய் விட்டது. கை ரிக்ஷா வுக்கு ஹார்ன் ''ஓரம்போ'' கத்தல் தான்.
அப்புறம் மோட்டார் சைக்கிள் ரிக்ஷா வந்து அதுவும் மறைந்து போய் விட்டது. மாட்டு வண்டி பற்றி பேசுவதில் அர்த்தமே இல்லை. கூண்டு வண்டியில் ஊருக்கு சென்ற சுகம் எனது சின்ன வயதோடு போய்விட்டதே.
வாசலில் யாரும் இனிமேல் புலி வேஷம் போட்டுக்கொண்டு ஆடப் போகிறார்களா. கழைக்கூத்தாடி சவுக்கினால் முதுகில் பளீர் பளீர் என்று அடித்துக்கொண்டு காசு கேட்கப்போவதில்லை. ரெண்டு பக்கம் கொம்பு X மாதிரி கட்டி நடுவில் கயிற்றில் நடந்து அலுமினியம் தட்டில் காசை ஆட்டி ஆட்டிக் காட்டப்போவதில்லை. அவன் விரும்பினாலும் இப்போதெல்லாம் ரோட்டில் இடம் இருக்கிறதா இப்போது? வேஷக்காரனை ஏதாவது ஒரு வேகமான வண்டி அரைத்துவிடும்.
இப்படியே பட்டாசு வெடிக்காமல் நின்றுபோனால் நல்லது தான். நிறைய இப்போதெல்லாம் எல்லார் வீட்டிலும் மோட்டார் கார்கள் வீட்டில் நிறுத்த இடமில்லாமல் தெருவில் வரிசையாக ரெண்டு பக்கமும். பெட்ரோல் வண்டிகள். ஜாக்கிரதை. நடுரோட்டில் தான் வேகமாக பறக்கும் வண்டிகளுடன் நடக்கவேண்டும். காது கண் சரியில்லாத பெருசுகளுக்கு பெரும் சோதனை.
ஒருவருக்கு அருகில் இன்னொருவர் வசிக்க flat முறை system வந்துவிட்டாலும் கூட ஏனோ மனிதர்கள் தூரமாக தான் வாழ்கிறார்கள். சுவருக்கு அடுத்த பக்கம் வசிக்கும் குடும்பம் மனதளவில் பல மைல்களுக்குப்பால் வாழ்கிறதே.
காலம் மட்டுமா மாறுதல் கொண்டது. மனிதன் மனமும் அதைவிட வேகமாக மாறுகிறது ஆச்சர்யமாக இருக்கிறது. நாகரீகம் முற்ற முற்ற மனித நேயம் குறையவேண்டும் என்பது ஒரு வேலை காலத்தின் விதியா? தாத்தா பாட்டிகள் காணாமல் போனாலும் கொஞ்சம் வருத்தம் தான் என்று வைத்துக்கொண்டாலும் அப்பா அம்மாவையே வீடுகளில் காணோமே?? கோவில்களுக்குச் சென்ற பெரிசுகள் முதியோர் இல்லத்தில் அடைக்கலம் ஆகிவிட்டதா?
No comments:
Post a Comment