தான தர்மம் - ஒரு சிந்தனை. J K SIVAN
மனித வாழ்க்கையின் மிகச் சிறந்த அம்சம் தான தர்மம் என்று நிறைய படிக்கிறோம் கேட்கிறோம். தானம் தர்மம் என்ற செயலுக்கு ரெண்டு பேர் வேண்டும். தருபவர். பெறுபவர்.
புண்யநதிகளை எடுத்துக் கொண்டாலும் கங்கையோ, யமுனையோ, சரஸ்வதியோ, காவேரியோ, தன்னுடைய புனித ஜலத்தை அருந்தவில்லை. பிறர்க்கு தான் அளிக்கின்றன. அருமையான கனிகள் சுவை மிக்க பழங்களை தரும் மரங்கள் தமது கனிகளை சுவைப்பதில்லை, மற்றவர்க்கு தான் அளித்து மகிழ வைக்கிறது.
செல்வந்தனிடம் உள்ள காசு மற்றவர்களுக்கு, உதவி தேவையானவர்களுக்கு அளிக்கவே இவ்வாறு பயன்பட வேண்டும். திருவள்ளுவர் ஒரு குறளில் '' ஊருணி நீர் நிறைந்தற்றே, உலகு அவாம் பேரறிவாளன் திரு'' கிராமத்தில் பொதுக்கிணறு என்று ஒன்று இருக்கும். பெரிய அந்த கிணற்றில் நிறைய நீர் ஊற்று இருக்கும். அதில் நீர் எடுத்து கிராமமே உயிர் வாழும். அப்படி வற்றாத கிணறு போல ஞானம் உள்ள, அறிவு மிக்க அன்புள்ளம் கொண்ட செல்வந்தனின் பணம் உபயோகப்படும் என்கிறார்.
தானம் தர்மம் எப்போது கொடுப்பது? என்று ஒரு கேள்வி எழுகிறது. அதற்கு மஹாபாரதத்தில் ஒரு குட்டி கதை உண்டு.
தர்மபுத்ரன் எனும் யுதிஷ்டிரனிடம் ஒரு ஏழை, வறியவன் வந்து தானம் கேட்கிறான்.
''அப்பா இன்று இருந்ததை எல்லாம் கொடுத்து முடித்து விட்டேன். நீ நாளை காலை வாயேன். உனக்கு தேவையானதை தருகிறேன்'' என்கிறான். இதைக்கேட்டு அருகில் இருந்த சகோதரன் பீமன் ஆனந்தப் படுகிறான். ஏன்?
''ஆஹா என் அண்ணா, மரணத்தை வென்றவர். நாளை இருப்பேன் என நம்பிக்கையோடு சொல்கிறாரே 'என்று மகிழ்கிறான். நாளை நடப்பதை யார் அறிவார்? தான தர்மம் போன்ற நல்ல காரியங்களை அன்றே அப்போதே செய்துவிடவேண்டும் . மனது மாறிவிடும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது.
''சரி தானம் தர்மம் எல்லாம் எவ்வளவு என்று ஒரு கணக்கு இருக்கிறதா?
இதற்கும் ஒரு சம்பவம் சொன்னால் புரியும்.
ராணா ப்ரதாப் முகலாயர்களோடு போரிட்ட மா வீரன். போரில் தோற்றுவிட்டான். அவன் படை வீரர்கள் அழிந்தனர், யானையில் குதிரைகள் சரிந்தன. நம்பிக்கை இழந்தவேளையில், அவனது மந்திரி ஒருவன் பாமாஷா என்பவன் தான் திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் கொண்டு தருகிறான். வாடிய செடிக்கு நீர் போல் இந்த செல்வத்தை உபயோகித்தும் மீண்டும் ஆட்கள் யானை குதிரை ஆயுதங்கள் திரட்டி ராணா பிரதாப் தனது யுத்தத்தை தொடர்ந்தான். ஆகவே விடை : ''எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடு''
அடுத்தது தானம் தர்மம் என்றால் எதை கொடுப்பது? மனதில் பணம் என்று மட்டும் நினைக்கவேண்டாம், பூக்கள் புன்னகை, உற்சாகம் இதெல்லாம் கூட தானம் தர்மம் தான். நலிந்தவனுக்கு எது தேவையோ அது.
துன்பத்தில் வாடுபவனுக்கு ஆறுதலான சொல், அமிர்தம். தேக உதவியை ஒருவனுக்கு தக்க சமயத்தில் செய்தால் கடவுளுக்கு சமமாக போற்றுவான். இதய பூர்வமாக கொடுப்பது எல்லாமே தானம் தான்.
தானம் தர்மம் யாருக்கு கொடுப்பது?
நமக்கு ஒரு பழக்கம். தான தர்மம் யாசிப்பவனை சந்தேகப்படுவது. இவன் ஏமாற்றுப்பேர்வழியா? இது அவசியமில்லாதது. யாசிப்பவனை ஆராயவேண்டாம்.
தான தர்மம் எப்படி கொடுப்பது ?
பெறுபவன் மனம் வாடாமல், புண்படாமல் கொடுப்பதோடு மட்டும் அல்ல, தருபவன் தான் தருகிறேன் என்ற கர்வம், அகம்பாவம் இல்லாமல் கொடுக்க வேண்டும். வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் கொடுத்தவன் கர்ணன் என்று பாட்டு கேட்கிறோமே. ரெண்டாம் பேருக்கு தெரியாமல் கொடுக்க வேண்டும். கோவிலில் ஒரு சின்ன பாதரச விளக்கு, ஒரு கம்பிக்கதவு பொருத்திவிட்டு அதன் மேல் முழுசாக ''இது இன்னாரால் வழங்கப்பட்டது'' என்று யானை அளவு விளம்பரம் இல்லாமல்.
நாம் வழங்கிய பொருள்கள் நமதல்ல . நம் கைக்கு வந்தது. நாம் கொண்டுவரவில்லை, கொண்டு போகப்போவதில்லை, என்ற எண்ணம் மனதில் நிரந்தரமாக இருக்க வேண்டும். பகவான் கிருபையால் நமக்கு கொடுக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்ற கடவுளுக்கு நன்றி செலுத்தும் சந்தோஷம் இருக்க வேண்டும்.
தானம் தர்மம் வழங்கிய பின் மனது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் ஒரு கதை இருக்கிறது. சொல்கிறேன்.
ஏகலைவன் அர்ஜுனனைக் காட்டிலும் வில் வித்தையில் நிபுணனாக காரணம் அவன் துரோணரின் மண் பொம்மையை வணங்கி அதன் எதிரே பழகியதால் அவர் அமானுஷ்ய குருவாக அவனுக்கு அருள் புரிந்தார். துரோணர் ஏகலைவனிடம் குருதக்ஷிணையாக அவனது கட்டை விரலை கேட்டபோது மறுயோசனை இல்லாமல் அதை வெட்டி அன்போடு கொடுத்தான். வெகுகாலத்திற்கு பின்னர் ஏகலைவனை யாரோ கேட்டார்கள்.
''ஏகலைவா, நீ உன் கட்டைவிரலை குருதக்ஷிணையாக தானமாக கொடுத்ததற்கு வருத்தம் உண்டா?'
''ஆமாம் ஒரே ஒரு முறை வருந்தினேன். என் குருநாதரை அவர் ஆயுதமின்றி தேர் தட்டில் அமர்ந்திருந்த போது, அவர் மகன் அஸ்வத்தாமன் கொல்லப்பட்டான் என்று பொய் சொல்லி கொன்றபோது...... என் கட்டை விரல் மட்டும் இருந்தால் அப்போது அங்கே நான் இருந்தால் நடப்பதே வேறு. எவனும் என் குருவை நெருங்கி இருக்க முடியாதே'' ஆகவே கேள்விக்கு விடை : கொடுத்தபின் வருந்தாதே. திருப்தியாக கொடு. கொடுத்ததை மறந்துவிடு .
''இப்படி எல்லாத்தையும் கொடுத்து விட்டால் நமது சந்ததிக்கு என்ன மிஞ்சும்?''
இப்படி ஒரு கேள்வி கேட்டால் அதற்கும் ஒரு பதில் உண்டு. . குழந்தை குட்டிகள் நன்றாக வளர்ந்து அவர்கள் வேண்டுவதை அடைய தகுதியாக்கி உழைத்து வேண்டியதைப் பெற வசதி செய்தாலே போதும். ஒன்றுமே தெரியாமல், ஒன்றுமே செய்யாமல் நமது சொத்தை அனுபவித்து சாப்பிட வைத்தால் அது அவர்களுக்கு செய்யும் துரோகம்.... நமது அரசியல் தலைவர்கள் பெரும் தனவந்தர்கள் தங்கள் வாரிசுகளுக்கு இதைத் தான் செய்கிறார்கள்.
கொடுப்பது ஒரு கலை . வீட்டில் செல்வம் நிறைந்துவிட்டால் அது ஒரு படகில் நீர் நிரம்பி விடுவது போல். இருகையாலும் வாரி வாரி நீரை படகில் இருந்து வெளியேற்றினால் படகு ஜாக்கிரதையாக மறுகரை போகும் அல்லவா?
அது போல் மறு உலகத்துக்கு பெருமையோடு நாம் போய் சேர்வோம்.
No comments:
Post a Comment