நம்மால் முடிந்த சில நற்செயல்கள். J K SIVAN
நண்பர்களே, எப்போதும் எல்லோருக்கும் தெரிந்ததையே தான் நான் சொல்பவன். எனக்கு உங்களை விட அதிகமாக எதுவும் தெரியாது. நமக்கு எப்போதும் ஞாபகப்படுத்த ஒருவர் வேண்டும் இல்லையா? . வீட்டில் இருந்து வெளியே கிளம்பும்போது மனைவியோ வேறு யாரோ ஞாபகப்படுத்துவார்களே, ''பர்ஸ், சாவி, குடை, மாஸ்க் எடுத்துக்கொண்டீர்களா, ஜாக்கிரதை, யாரையும் தொடாதீர்கள், மேலே படாதீர்கள். தூரவே ஆறடி தள்ளி நடந்து போகவேண்டும்'' அதுபோலவே தான் இதுவும்.
நம்மில் சிலரை நாம் பார்க்கிறோமே அவர்கள் முதன்மையாக நாம் வணங்கவேண்டியவர்கள். அவர்கள் யார் என்றால் பெற்ற தாயைப் போற்றி மரியாதையோடு நடத்தி பாதுகாப்பவர்கள். அவர்கள் தான் தெய்வம்.
பிறருக்கு உதவாத பணக்காரன் புழுவைக்காட்டிலும் அருவறுப்பானவன். நமது மதிப்பை அது போன்ற ஜீவன்களிடம் பழகி கெடுத்துக் கொள்ள வேண்டாம்.
ஒருநாளைக்கு ஒருதரம் ரெண்டுதரமாவது ''ஓம்'' என்று கண்ணை மூடிக்கொண்டு தனியாக சொன்னால் நல்ல பலன் உண்டு.
நல்லது செய்வோம். அங்கே தான் தெய்வம் வாசம் செய்கிறது. சுயநலத்தோடு கோவிலில் நமது பேரில் அர்ச்சனை செய்வதால் என்ன பயன்? நல்ல செயல்களே நம் வாழ்வில் மனா நிறைவைத் தரும். ஒருவனது முன்னேற்றத்தை தடை செய்வது அவனது அகம்பாவம், கர்வம். தற்பெருமை, சுயநலம்.
புண்ணிய தீர்த்தங்கள் என்பது பல கோவில்களின் குளங்களில் ஸ்னானம் பண்ணுவது இல்லை. மனதில் அழுக்கை போக்கும் எண்ணங்கள் தான் புண்ணிய தீர்த்தம் ஆகும்.
பரம ஏழையானாலும் சுய சம்பாத்தியத்தில் பிறரிடம் கையேந்தாமல், தன்னிடம் இருப்பதை கரைத்துக் குடித்துக்கொண்டு பிறருக்கும் உழைப்பவன் தான் உண்மையில் செல்வந்தன், உயர்ந்த மனிதன்.
மனதை நாம் எல்லோருமே அதன் போக்கில் விட்டு விடுகிறோம். அது எளிது.அதை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதும் அடக்குவதும் தான் கடினம். மனம் அடங்கினால் தான் ஞானம் பெற வழி உண்டு. வைராக்கியம் எல்லாம் அப்போதுதான் சாதகமாகும். எதிலும் திருப்தி அடையாமல் இருப்பதும், அடிமை வாழ்க்கையும் தான் துயரம் தருகிறது. உண்மையில் அதுவே நரகம். அதனால் வாழ்க்கை சீர் குலையும். நல்லவர்களோடு தொடர்பு கொள்வதும் அவர்களுடன் சம்பாஷிப்பதும் தான் ஸ்வர்கம் என்று தாராளமாக சொல்லலாம்.
கண்ணிருந்தும் குருடன் யார் என்றால் அன்போடு பழகும் வழி இருந்தும் தெரிந்தும், ஆசைவழி நடப்பவன்.
No comments:
Post a Comment