Monday, November 2, 2020

PURANDHARA DASA

 


                                செல்லாத காலணா....J.K. SIVAN 

மஹாராஷ்டிராவில்  ஒரு  பிரபல நகரம்  பூனா.  அதில் புரந்தரகத்  என்று  சிற்றூர். அதில் ஒரு பிராமணன் கொள்ளை லாபம் சம்பாதித்துக்கொண்டிருந்தான்.  வைரம் போன்ற நவரத்ன கற்கள்  வாங்கி விற்கும் வியாபாரி. அவன் மனைவி ரத்நா பாய்.  அவள் உடம்பில்  உச்சந்தலை முதல் உள்ளங்கள் வரை வைர வைடூர்யங்களை அணிவித்தான். அவ்வளவு இருந்தும் எது இருக்கவேண்டுமோ அது இல்லை.  குழந்தைச் செல்வம்!.  கொஞ்ச ஒரு குழந்தை இல்லையே  என்ற ஏக்கம் பிடுங்கி  தின்றது.  ''திருப்பதி ஸ்ரீநிவாஸா,  எங்கள் குலதெய்வமே, எங்கள் மேல் கருணை காட்டு'' என  அந்த தம்பதியர் வேண்டினார்கள். 1484ல்  ரத்நா பாய் ஒரு ஆண்குழந்தை பெற்றாள்.  நன்றியோடு  ஸ்ரீனிவாச நாயக் என்று  ஸ்ரீனிவாச பெருமாள் பெயரையே  வைத்தார்கள். செல்லமாக சீனியப்பா  என்று அழைத்தார்கள்.  பிள்ளை வளர்ந்தான். உபநயனம் ஆகியது. அப்பாவின் வைர நவரத்ன கல் வியாபாரத்தில் தேர்ந்தான்.  18வயதில் லட்சுமிபாய் மனைவியானாள். அப்பாவின் மறைவுக்கு பிறகு  பிரபல  வைர நவரத்ன வியாபாரி  கோடீஸ்வரன்  ஆகி  நவகோடி சீனியப்பா, நவகோடி நாரயணன்  என்றெல்லாம்  அழைக்கப்பட்டான். செல்வத்தில் மிதந்தாலும்  சீனியப்பா கருமி, படு கஞ்சன்.  எச்சைக் கையால் காக்கையை ஒட்டாதவன். தானம் கொடுப்பதற்கென்றே செல்லாத காசுகள் வைத்திருப்பவன். 

ஒருநாள் கனவில் அவன் மனைவி வீட்டு வாசலில் வந்து கத்தி பிச்சையெடுத்தவனுக்கு  தானம் கொடுத்ததை பார்த்தான்.  அப்போதுமுதல்  அவளை துளைத்து எடுத்துவிடுவான்   ''லக்ஷ்மி,  இன்று யாருக்காவது ஏதாவது வீட்டிலிருந்து  சாப்பாடு பணம் எடுத்துக் கொடுத்தாயா?   தொலைத்துவிடுவேன் ஜாக்கிரதை''  
அவள் இல்லையென்றாலும் நம்ப மாட்டான்.  

காலம் இப்படி ஓடுகையில் ஒரு ஏழை பிராமணன் சீனியப்பாவின் வைரக்கடைக்கு வந்தான்.
''என்ன ஐயரே  வேணும்?''
''உங்க உதவி வேணும்''
'ஏதாவது விக்கணுமா, வாங்கணுமா  அப்படின்னா மட்டும் சொல்லுங்க'' 
''நான் பரம ஏழை எதை வைப்பேன் வாங்குவேன்,  என் பிள்ளைக்கு உபநயனம் பண்ணனும். நீங்க ஏதாவது உதவணும்''
''ஐயா பணம் கிணம்  என்று கேட்டு என் நேரத்தை வீணாக்காதீங்க  வேறெங்காவது போய் கேளுங்க''
பிராமணர் சிறிது நேரம் நின்று அவனிடமிருந்து எந்தவித  உதவியும் வராது என்று புரிந்துகொண்டு சென்றுவிட்டார். 
அடுத்த நாள் காலையும் அதே பிராமணர் வந்தார். 
''ஐயா  நீங்கள் ஊரிலேயே  மிகப்பெரிய  பணக்காரர்........
''அதற்காக உங்களுக்கு வாரி வழங்கணுமோ?''
'இல்லை இந்த  விஜயநகர  ராஜாவே சில சமயம் உங்க கிட்டே  பணம் கடன் வாங்குவார் ,  உதவி
 பெறுவார்''னு பேசிக்கிறாங்களே நீங்க ஏதாவது..
''ராஜாவைப் பத்தி  பேசறீங்களே,  பணம் கேட்பார்,  கொடுப்பேன் திருப்பி சொன்ன டைம்லே  கடனை வட்டியோடு திருப்பி கொடுப்பார்... நீங்க  அன்னாடங்காச்சி'' அதெல்லாம்  பேசலாமா?  முதல்லே  இடத்தை காலி பண்ணுங்க. அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணாதீங்க'',

ஆறுமாதம்  தொடர்ந்து அந்த ஏழை பிராமணர்  விடாமல்  சீனியப்பா கடைக்கு  படையெடுத்தார்.   அவனும் தினமும் சளைக்காமல்  துரத்தினான்.  பொறுக்கமுடியாமல் ஒரு நாள் ஒரு செல்லாக்காசை எடுத்து அவர் மேல் வீசி  ''இதை  வச்சி,உங்கள் பிள்ளை கல்யாணம் நடத்துங்க''  என்று  விரட்டினான். 
வீசி எறியப்பட்ட நாணயம்  ஒரு 'ஓட்டைக் காலணா. அதுவும்  செல்லாத  நாணயம்.   எவரும் சீந்த மாட்டார்கள். என்ன கிடைக்கும் அதில்?
''ஐயா  தனவந்தரே, இந்த பணத்தில் நான் எப்படி  உபநயனம் நடத்துவேன்? கொஞ்சம் தயவு, கருணை கூர்ந்து உதவுங்கள்''
''ஐயரே , இந்த பணத்தை நான் கொடுத்தது  கூட  ஒரு கருணையால் தான்.   தினமும் நீங்கள் வந்து  கேட்கிறீர்களே என்பதற்காக.   இல்லையென்றால் இந்த கருணை கூட  காட்டி இருக்க மாட்டேன்''

அப்போது தான் அந்த பிராமணனுக்கு ஞானோதயம்  உண்டானது.  இவனிடமிருந்து எதுவும்  பொறாது.  இவன் மனைவி  கொஞ்சம் காருண்ய சிந்தை  கொண்டவள்  என்று  ஊரில் எல்லோரும்  சொல்கிறார்களே.   முடிந்தால் அவளை போய்  பார்த்து   யாசிப்போம் என்று  பிராமணர்  நடந்தார்.   வெயில் கொதித்தது.  வெறும் கால்கள் சூரிய உஷ்ணத்தில் கொப்புளித்து விட்டது.   மிகுந்த பசியோடு களைப்போடு  அவள் இருந்த  ஒரு பெரிய  மாளிகை வாசலில்  வந்து நிழலில் ஒதுங்கினார்.  அவரைப் பார்த்துவிட்டு  வீட்டுக்குள் ளிருந்து ஒரு பெண்மணி வெளியே வந்தாள் .

''உள்ளே வாருங்கள்.  ஏதாவது சாப்பிடுங்கள் என்று தாகத்திற்கு நீர் மோர்,  உண்ண ஆகாராதிகள்  கொடுத்தாள் .  அவர் தனது பிள்ளையின் உபநயனத்திற்கு  பொருளுதவி கேட்டு   அலைகிறார் என்று அறிந்தாள் .

''ஐயா  என் கணவர் தாங்கள் இங்கே வந்து நான் ஆகாரம் கொடுத்தேன் என்று அறிந்தால் கூட  என்னைப்  படாதபாடு படுத்துவார். நான் எப்படி உதவுவேன்? வழியில்லையே?  இங்கிருந்து போய்விடுங்கள்.''

''ஓஹோ  நீங்கள் தான் நவகோடி சீனியப்பன் மனைவியா. உங்கள் கணவர் கொடுத்த இந்த செல்லாத காலணாவை வைத்துக்கொண்டு நான் என்னம்மா  செய்யமுடியும்?  அம்மா . நீங்களாவது   ஏதாவது உதவக்கூடாதா?''

''எல்லாமே என் கணவருடையது எனக்கென்று ஒன்றுமே இல்லை. நான் என்ன செய்வேன் சொல்லுங்கள்.''

''உங்களிடம் சீனியப்பருடையது   இல்லாமல் வேறு  ஏதாவது இருந்தால் அதை தந்து உதவ இயலாதா?  இதோ உங்கள் முகத்தில் உள்ள மூக்குத்தி நமது வழக்கப்படி உங்கள் தாய் தந்தை கொடுத்ததாக இருக்கும். அது உங்கள் சொந்த பொருள் தானே அதை தரலாமே. அது சீனியப்பன் தந்தது   இல்லையே,என்ன தயக்கம்?'  இதனால்  ஒன்றும்  உங்களுக்கு கெடுதல்  நடக்காது. அழை கழற்றி கொடுங்களேன்''

வேறு வழியின்றி  லட்சுமிபாய் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள் .  அதை எடுத்துக்கொண்டு பிராமணர் நேராக சீனியப்பாவின் கடைக்கு சென்றார். 

''ஐயா  நீங்கள் தான தர்மம் தான் எதுவும்  செய்ய  முடியாது என்று சொல்லிவிட்டீர்கள். இந்த நகையை வைத்துக்  கொண்டாவது   அதற்கீடாக  ஏதாவது காசு கொடுங்களேன். என் பிள்ளை உபநயனத்தை நடத்துகிறேன்''

கையில் நகையை வைத்துக்கொண்டு ஏன் இவன் தான தர்மம் கேட்டான்?  என்று யோசித்தான் சீனியப்பா.
மூக்குத்தியை கையில் வாங்கி அதை எடைபோட்டு பரிசோதனை செய்ய  பார்த்த போது   அவனுக்கு மின்சார தாக்குதல் போல்  உடல் சில்லிட்டது.  அது  அவன் மனைவி அணியும்  விலையுயர்ந்த மூக்குத்தி. 

''ஐயா  இது எங்கிருந்து கிடைத்தது,  இதற்கு உண்டான பணம் கடையில் இல்லை, வீட்டுக்கு சென்று பணம் கொண்டு வருகிறேன்.   அதுவரை இங்கே  உட்காருங்கள்  என்று அமர்த்திவிட்டு   சீனியப்பா   பிராமணன் தொடுத்து மூக்குத்தியை துணியில் சுற்றி,  பணப்பெட்டியில் வைத்து மூடி  பூட்டிவிட்டு  கடையை அடைத்து   பூட்டி  சாவியை  எடுத்துக்கொண்டு வீட்டுக்கு சென்றான். மூச்சிரைக்க ஓடி   வீட்டுக்குள்  நுழைந்தான். . 

''லக்ஷ்மி  லக்ஷ்மி .  எங்கே தொலைந்தாய் உடனே  வா இங்கே.''  உரக்க கத்தினான். 
எங்கே உன் மூக்குத்தி முகத்தில் காணோமே..''
அவள் எதிர்பார்த்தது நடந்துவிட்டது. என்ன  சித்ரவதை செய்யப்போகிறானோ. கனவில் தானம் கொடுத்த தற்கே  தண்டித்தவனாயிற்றே.   பகவானே  என்று வேண்டிக்கொண்டு  கூசாமல் ஒரு பொய்  சொல்லிவிட்டாள் .

''நாதா  இன்று நான்  எண்ணெய் தேய்த்து குளித்தேன். அதற்கு முன் மூக்குத்தியை கழற்றி உள்ளே வைத்திருக்கிறேன்.''
''போய் உடனே  அதை என்னிடம் கொண்டுவந்து காட்டு?'' உள்ளே  பூஜைக்கு ஓடினாள். கண்களில் கண்ணீர் மல்க, 
''நாராயணா, எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. ஏதோ என்னையறியாமல் பொய்  சொல்லிவிட்டேன்.  கணவன் முன் மீண்டும் மூக்குத்தி இல்லாமல் போகமுடியாது. என்னை மன்னித்துவிடு. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்.''  காதில் இருந்து  வைர கம்மலை எடுத்து பொடித்து  குடித்து உயிரை நீக்க துணிந்தாள் . அந்த நேரம் அவள் முன் அவள் வைத்திருந்த  பாத்திரத்தில்  'ணங்'' என்று அவள் ப்ராமணனிடம் கழற்றி கொடுத்த மூக்குத்தி  விழுந்தது.  ''பகவானே'' என்று  அதிசயித்து  அதை எடுத்துக்கொண்டு கணவனிடம் ஓடினாள்.
''இதோ என் மூக்குத்தி''
சீனியப்பா அதிர்ந்து போனான். வீட்டுக்கு போய் பணம் கொண்டு வருகிறேன் என்று சொன்னது நாடகம். அவனிடம் நிறைய பணம் கடையில் இருந்தது. இவ்வளவு விலையுயர்ந்த கல்லை உடைய  என் மனைவியின்  மூக்குத்தி இந்த பிராமணனிடம் எப்படி வந்தது. ஊரில் எவரிடமும் இவ்வளவு விலையுயர்ந்த கல் கிடையாதே. என் மனைவி மூக்குத்தி அல்லவோ இது.  உடனே அவள் முகத்தில் மூக்குத்தி இருக்கிறதா, தானம் செய்தாளா? என்று சோதிக்க மூக்குத்தியை பெட்டிக்குள்  போட்டு பூட்டி , சாவியோடு வந்திருக்கிறான். இங்கே எப்படி அதே மூக்குத்தி வந்தது?  உடனே கடைக்கு ஓடினான். கடையை திறந்தான். பெட்டியை திறந்தான். துணியால் சுற்றிய அவள் மூக்குத்தி பொட்டலம் அப்படியே வைத்ததுபோலவே  இருந்தது. ஆனால்  துணி பொட்டலத்திற்குள் அவன் வைத்து பூட்டிய  மூக்குத்தி இல்லை?எப்படி மறைந்தது?''

உட்காரவைத்த இடத்தில் கிழ பிராமணனும் இல்லை.   இது என்ன அதிசயம்? வீட்டுக்கு ஓடினான்.  என்ன நடந்தது என்று மனைவியை துருவி கேள்விக்கணைகளை தொடுத்தான். நடந்ததை அறிந்தான்.  தான் கிழ பிராமனிடம் ஆறுமாதங்களாக நடந்து கொண்டது.  செல்லாத காலணா கொடுத்தது. அவன் மனைவி செய்த மூக்குத்தி தானம். பிராமணன் அதை வைத்து பணம் கேட்டது. தான் மூக்குத்தியை ஜாக்கிரதையாக  துணியில் முடிந்து பெட்டியில் பூட்டி வைத்தது.  கடையைப் பூட்டிக்கொண்டு சாவியோடு வீட்தூக்கு வந்தது. மனைவியிடம் அதே மூக்குத்தி இருந்தது. பின்னர் கடைக்கு ஓடியது.  கடை திறந்து, பூட்டிய பெட்டியை திறந்து  துணி மூட்டையை பிரித்தது.  அதில் வைத்திருந்த மூக்குத்தி  மறைந்தது...பணம் பெறாமல் கிழவர் மறைந்தது...எல்லாம்  நாராயணன் செயல் தான்.....இது மனிதச் செயலுக்கு அப்பாற்பட்டது.. என்று புரிந்தது. 

''ஐயோ  லட்சுமி என்னை தேடி ஆறுமாதமாக வந்து நின்ற  நாராயணன் முகத்தை கூட நான் சரியாக பார்க்கவில்லையே மஹா பாவி. என்னோடு விளையாடி இருக்கிறானே. அவனுக்கு செல்லாத  காலணாவை வேறு கொடுத்தேனே .. சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டானே  ,  மஹா பாவி நான்.....எனக்கு புத்திவந்தது. கண் திறந்தது. அந்த நாராயணனைத் தவிர வேறொன்றிலும் இனி என் மனம் செல்லாது. இந்த செல்வம் எனக்கு வேண்டவே வேண்டாம். நான் செய்த பாவங்களை முதலில் தொலைக்க முயல்வேன்.. என் சொத்து சுதந்திரம் எல்லாம் இனி ஹரியுடையது.  நான் ஹரியை தேடி அலைவேன்... 

உற்றார் உறவினர்  நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் சீனியப்பா முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.   

''நாதா  நமது சொத்தை செல்வங்களை  ஏழை பிராமணர்களுக்கு தானமாக கொடுத்துவிடுவோம்'' என்றாள்  லட்சுமிபாய். 

''லட்சுமி,  அவை என் சொத்தல்ல எனும்போது அதை தானம் செய்யும் உரிமை எனக்கேது?  ஹரியுடையது. அவன் கொடுத்தது.  ஹரி யாரை அதை அனுபவிக்க விடுகிறானோ அவர்கள் அனுபவிக்கட்டும்''  என்று பந்தர்பூரை நோக்கி நடந்தான் சீனியப்பா. 

விஜயநகரத்தை கிருஷ்ண தேவராயர் அப்போது ஆண்டுவந்தார். அவரது குரு  வியாசராஜர்  சீனியப்பாவை அனைத்து   நடந்ததை அறிந்து,   ''நீ அவதரித்ததின் நோக்கம் நிறைவேறிற்று. இனி நீ புரந்தரதாசர்.

 ''புரந்தரவிட்டல''  என்று  வரும்  எண்ணற்ற பாடல்களை நாம் கேட்டு மகிழும் புரந்தர தாஸரின் கதை இது.
கலியுகத்தில் நாரதரின் அவதாரம்.  4,75,000 பாடல்கள் இயற்றியுள்ளார்.  முடிந்தபோது யூ  ட்யூபில்   MLV    பாடிய தாஸர  பாடல்களை கேளுங்கள்.  




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...