ராமாயணம். J K SIVAN
5 ஹனுமனை அறிந்தான்.
பாரத தேசத்தின் தென் மேற்கில் வரிசையாக தொடர்ச்சியாக உள்ள மலைக்குன்றுகள் மேற்கு தொடர்ச்சி மலைகள் என அறிவோம். அவற்றில் ஒன்றின் சிகரம் தான் ரிஷியமுக பர்வதம். அங்கே சில வானரர்கள் மலை உச்சியில் அமர்ந்து முக்யமாக எதையோ பேசிக்கொண்டிருந்தபோது தான். அவர்களுக்கு இடையே ''பொத்'' தென்று ஒரு துணி மூட்டை மேலே இருந்து விழுந்தது. மேலே அண்ணாந்து பார்த்தபோது ஒரு புஷ்பகவிமானத்தில் பத்து தலைகளோடு ஒரு ராக்ஷஸன் தெற்கே உள்ள கடலை நோக்கி வேகமாக சென்று கொண்டி ருந்தான். ஒரு பெண் தலைவிரி கோலமாக அழுதுகொண்டே அவர்களை பார்த்து கையாட்டி ஏதோ சொல்கிறாள்....
அவர்கள் சாதாரண குரங்குகள் அல்ல. தங்களது நாட்டை விட்டு தப்பி வந்தவர்கள். அவர்களில் பலிஷ்டனாக ஒருவன். அவன் பெயர் சுக்ரீவன் மற்றவர்கள் அவனது அமைச்சர்கள். ஹனுமான் மற்றும் சிலர். கிஷ்கிந்தா எனும் ராஜ்யத்தை பறிகொடுத்த ராஜா. அவன் சகோதரன் வாலி அவனைக் கொல்ல அலைந்தான். அவனிடமிருந்து தப்பி இங்கே வந்தார்கள். நாடு, பதவி, மனைவி அனைத்தையும் இழந்த சுக்ரீவனோடு ஹனுமான் மற்றும் சிலர் இங்கே ரிஷ்யமுக பர்வதத்தில் தங்கி இருக்க காரணம், வாலி பெற்ற ஒரு ரிஷி சாபம். உலகில் எங்கிருந் தாலும் வாலியால் சுக்ரீவனைக் கொல்லமுடியும் இங்கே மட்டும் வரவே முடியாது. இங்கே காலடி எடுத்து வைத்தால் அவன் தலைவெடித்து சாவான் என்று சாபம்.
''யார் இவள், எதற்கு அழுகிறாள், அவள் தான் மூட்டையாக சிலஆபரணங்களை கழற்றி துணியில் சுற்றி நம்மை நோக்கி எறிந்தவள், ராக்ஷஸன் அவளை எங்கோ பிடித்துச் செல்கி றான்....'' விஷயம் தெரியாமல் அதிசயித்தார்கள்.
சில நாளில் அங்கே ராம லக்ஷ்மணர்கள் வில்லேந்தி நடந்து வருவதை மலை உச்சியி லிருந்து சுக்ரீவன் பார்த்துவிட்டான்.
''ஒருவேளை வாலி இங்கே தான் வர முடியாத தால் நம்மைக் கொல்ல அவனால் அனுப்பப் பட்ட வீரர்களோ? ஹனுமான், எதற்கும் நீ அதோ வரும் அந்த ரெண்டு வில் வீரர்களையும் கண்டு யார் எதற்கு இந்த பக்கம் வருகிறார்கள் என்று விசாரித்து வா'' என்று அனுமனிடம் சொல்கிறான் சுக்ரீவன்.
''வாலியின் ஆட்கள் என்று தெரிந்தால் கொன்று விடுவோம் இருவரையும்.;;
ஹனுமான் யோசித்தான். ஒரு பிராமண
பிரம்மச் சாரியாக வேஷம் தரித்து ராம லக்ஷ்மணர்களை அணுகினான். வணங்கினான். தயங்கி நின்றான்
.''யாரப்பா நீ? என்ன பார்க் கிறாய்?'' என்றான் லக்ஷ்மணன்
'இவ்வளவு லக்ஷணமாக இருக்கும் நீங்கள் ராஜ குமாரர்கள் போல் இருந்தாலும் உங்கள் ஆடையும், கவலை தோய்ந்த முகமும், களைப் பும் வித்யாசமாக உங்களை காட்டுகிறதே, ரொம்ப வெயிலில் நடந்து அலைந்தவர்கள் என்பதை உங்கள் கால் கொப்புளங்கள் காயங்கள் சொல்கிறதே. புதியவர்களாக இந்த பகுதியில் தென்படும் நீங்கள் யார் என்று ஒருகணம் நின்று பார்த்தேன். யார் என்று கேட்டு நம்மால் ஏதாவது உதவ முடியுமானால் உதவ லாமே என்று தோன்றியது'' என்றான் ஹனுமான்.
ராமன் சிரித்தான். முகமலர்ந்தான்.
'' ஆஹா, இவ்வளவு பவ்யமாக அன்பாக பேசும் நீ யாரப்பா? எங்களை பொறுத்தவரை நான் ராமன், இவன் லக்ஷ்மணன் அயோத்தி இளவர சர்கள், தந்தை சொல் சிரமேற் கொண்டு கானகம் ஏகியவர்கள். என் மனைவி சீதையைக் காணவில்லை. யாரோ ஒரு ராக்ஷசன் நாங்கள் இல்லாதபோது எங்கள் பர்ணசாலையிலிருந்து அவளைக் கடத்திச் சென்றுவிட்டான் என்று அறிந்தோம். அவனைத் தேடிச் செல்கிறோம்''
ஹநுமானுக்கு ராமனைப் பற்றி தெரியும். ராமன் வீரத்தையும், கருணையும், நேர்மை நியாய பழக்க வழக்கமும் எல்லோரிடமும் அன்பான குணத்தையும் பற்றி கேள்விப்பட்டு இஷ்ட நாயகனாக மனதில் மதிப்புடன் இருப்பவன். அவனையே நேரில் கண்டதில் அளவுகடந்த மகிழ்ச்சி. ஆனந்தக் கண்ணீரோடு சாஷ்டாங்கமாக ராமன் காலில் விழுந்தான் ஹனுமான்.
'' நான் உங்களை சந்தேகாஸ்பதமான ஒரு மனிதனாக பார்த்து அனுப்பப்பட்ட ஒருவனாக உளவறிந்து போக மாறுவேஷத்தில் பிரம்மச் சாரியாக வந்தவன். என்னை மன்னித்து விடுங்கள்'' என்று அரற்றுகிறான்.
உங்களை போய் ''யார் நீங்கள் ?'' என்று கேட்ட முட்டாள் நான். என்றான் ஹனுமான். . ராமன் அநுமனை அணைத்து எழுப்புகிறான். முதுகில் தட்டி மகிழ்ந்தான். ராமனுக்கு ஒவ்வொருவரும் ஏதாவது ரூபத்தில் உதவ முன்வருவது கண்டு லக்ஷ்மணன் மகிழ்ந்தான். பெருமையுற்றான். அனுமனை அவனும் அன்போடு ஆலிங்கனம் செய்தான். ஆசையோடு ராம லக்ஷ்மணர்களை தனது பல மிகுந்த தோளில் சுமந்து ஹனுமான் ரிஷ்யமுக பர்வதத்தின் உச்சியை அடைந்து சுக்ரீவனை சந்திக்க செய்தான்.
தொடரும்
No comments:
Post a Comment