பேசும் தெய்வம் J K SIVAN
நூறு வருஷம் காரண்டீ.
மஹா பெரியவாளின் அருகே இருந்து சேவை செய்யும் பாக்யம் படைத்த ராயவரம் பாலுவுக்கு ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகள் தெரிந்திருக்கும். அவை அத்தனையும் ஒரு சேர எங்கே படிக்க முடிகிறது. பெரியவா அனுபவங்களை காசு பண்ணாமல் எல்லோருக்கும் வாரி வழங்க ஆசை. கிடைத்ததை எல்லாம் என்னால் முடிந்தவரை தெளிவாக எடுத்துச் சொல்லி வருகிறேன். புத்தகமாக்கி இலவசமாக கொடுக்கிறேன். விலை போடப்படாத புத்தகங்கள் பேசும் தெய்வம் என்று ரெண்டு பாகங்கள். கிட்டத்தட்ட 200 பக்கங்கள் ஒவ்வொன்றிலும். மூன்றாம் பாகம் புத்தகமாக ரெடியாகி விட்டது. எழுத்தை புஸ்தகமாக்குவதில் தான் சிரமம். அச்சுக்கூலி, தட்டச்சுக் கூலி கொடுக்க வேண்டும். 1000 பிரதிகளுக்கு பல ஆயிரங்கள் ரூபாய் செலவாகிறது. எப்படியோ நன் கொடை கள் வங்கிக் கணக்கில் பெற்று அந்த செலவுகளை சந்தித்து புத்தகங்கள் நன்கொடையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அவர்கள் வேண்டு வோருக்கு அவர்களது அன்பளிப்பாக வழங்கட்டும். நாங்களும் ஆஸ்பத்தரிகள், முதியோர் இல்லங்கள், பொது நூலகங்கள், பள்ளிக்கூட மாணவ மாணவி களுக்கு பரிசாக கொடுக்கிறோம். யார் கொடுத்தால் என்ன? நல்ல விஷயம் நாலு பேரைப் போய் சேரவேண்டும்.
இப்போது ஒரு அற்புத நிகழ்ச்சி சொல்கிறேன்.
மஹா பெரியவா ஒரு சமயம் கரூரில் நெரூர் சதாசிவப் பிரும்மேந்திரர் அதிஷ்டானத்துக்கு, தரிசனத் துக்காகச் சென்றிருந்தார்..
சதாசிவப் பிரும்மேந்திரரிடம், பெரியவா ளுக்கு இருந்த பக்திக்கும், மரியாதைக்கும் எல்லையே இல்லை.
பிரும்மேந்திரா பெயரைச் சொன்னாலும், கேட்டாலும், உருகிப் போய்விடுவார் பெரியவா. அதிஷ்டானத்திற்குள் சென்று ஜபம் செய்வதற்கு உட்கார்ந்து விட்டார். அதிஷ்டான அன்பர்களும், பெரியவாளுக்குக் கைங்கரியம் செய்யும் பணியாளர்களும், சற்றுத் தொலைவாக ப் போய் நின்று கொண்டார்கள். எங்கும் நிசப்தம். அமைதி. காற்று மட்டும் மெல்லிசாக வீசிக் கொண்டி ருந்தது. அதில் தெய்வீகம் முழுசாக கலந்தி ருந்தது. பெரியவாள், அதிஷ்டானங்களுக்குள் சென்று ஜபம் செய்வதையோ, சந்யாஸ முறைப்படி வணங்குவதை யோ யாரும் பார்க்கக்கூடாது என்பது, ஸ்ரீ மடத்து சம்பிரதாயம். மானுட எல்லைகளுக்கு அப்பால் சென்று, தெய்வீகத்தின் நுழைவாயிலில் நிற்கும் அபூர்வ தருணங்கள், அவை. இந்தக் கட்டுப்பாடு, பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. நூறு வாட்ஸ் மின் விளக்கையே பார்த்துப் பழகிய கண்கள் எதிரில், லட்சம் வாட்ஸ் மின் ஒளியைப் பாய்ச்சினால், எப்படித் தாங்கமுடியும்? அந்தச் சமயம் பார்த்து வெகு அவசரமாக ஓடி வந்தார். ஓர் பக்தர். ரங்கசாமி என்று பெயர்.
“பெரியவாளை உடனே தரிசனம் பண்ணனும். பிரசாதம் வாங்கிக்கொண்டு உடனே புறப்படணும்”
''சத்தம் போடாதீங்கோ'' அப்புறம் வாங்கோ.
''எனக்கு அவரை உடனே பார்க்கணும்'
“சுவாமி, இதைக் கேளுங்கோ. மஹா பெரியவா , கதவை சார்த்திக்கொண்டு அதிஷ்டானத்துக்குள் ஜபம் பண்ணிண்டு இருக்கா. இப்போ நாம் யாருமே அவாளைத் தரிசிக்க முடியாது. தியானம் கலைந்து பெரியவா தானாகவே வெளியே வந்தவுடன் முதல் ஆளாக நீங்கள் தரிசனம் செய்து கொள்ளலாம்.”
வந்தவர், இலேசுபட்டவர் அல்லர்; ரொம்பவும் அமுக்கமான பேர்வழி!. தொண்டர்களின் பேச்சைக் கேட்டு சமாதானம் அடைந்துவிட்டாற்போல, பாவனை செய்து கொண்டிருந்தார். அமைதியையும் மீறி சில தொண்டர்களின் சுதந்திரமான வாய் வீச்சு, அடக்குவாரின்றி வெள்ளமாக ஓடிக்கொண்டிருந்தது. பேச்சு வெள்ளத்தில் மூழ்கித் திளைத்துக் கொண்டி ருந்தார்கள் அவர்கள்.
அப்போது தான் ஒரு அதிசயம் நடந்தது. இதெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த ரங்கசாமி, தொண்டர்கள் சற்று கவனக் குறைவாக இருக்கும் நிலையில் கண்ணி மைக்கும் நேரத்தில் குபீரென்று தாவிக் குதித்து ஓடி சாத்தியிருந்த அதிஷ்டானத்தின் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்ளே சென்றுவிட்டார்! இந்தத் தடாலடித் திட்டத்தை யாரும் எதிர் பார்க்காததால் எல்லோரும் குழம்பிப் போய் நின்றார்கள். பெரிய ஷாக் இது எல்லோருக்கும். யாரும் இப்படி பண்ணதில்லையே. அந்த நேரத்தில் அதிஷ்டானத்திலிருந்து பெரிய வாளின் குரல், அதுவரையில் சிஷ்யர் கள் கேட்டறியாத ஒரு கம்பீரத்வனியில் தெளிவாகக் கேட்டது. “நீங்கள் ம்ருத்யுஞ்ஜய ஜப-ஹோமம் எதுவும் பண்ண வேண்டாம். உங்கள் வீட்டுக்கு ம்ருத்யு வரமாட்டான். திரும்பிப் போங்கோ'' -- பெரியவா குரல்.
அன்பர் ரங்கசாமி கதவை மூடிவிட்டு, சட்டென்று வெளியே வந்தார். அணுக்கத் தொண்டர்கள் அவரை மொய்த்துக் கொண்டு விட்டார்கள். ரங்கசாமி ஒரு கதையே சொன்னார். ''என்னுடைய ரொம்ப நெருங்கிய உறவின ருக்கு, திடீரென்று நெஞ்சுவலி. பரிசோதனை செய்த டாக்டர்கள், “நாற்பத்தெட்டு மணி நேரம் போனால்தான்,உறுதியாக சொல்ல முடியும்” என்று சொல்லி விட்டார்கள். ஜோசியரை் கேட்டோம்.
“உடனே ம்ருத்யுஞ்ஜய ஹோமம் செய்யுங்கோ'' ன்னு சொல்லிட்டார்.
அப்போதான் எங்க கூட இருந்த ஒருத்தர், இப்போ இந்த ஊரிலே தான் காஞ்சி மஹா ஸ்வாமிகள் தங்கி இருக்கார். சதாசிவ ப்ரம்மேந்த்ர அதிஷ்டானம் வந்திருக்கார். அவரைப் போய் பாருங்கோ. விஷயத்தைச் சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்தால் நல்லது நடக்கலாம்'' இதைச் சொன்னது குடும்பத்தில் எல்லோராலும் மதிக்கப்பட்ட ஒரு வயதான மூதாட்டி.
''கவலைப்படாதேங்கோ, பெரியவா, இதோ பக்கத்திலே, நெரூர்லே தானே இருக்கார். அவாகிட்ட சொல்லிவிடுங்கோ,அவா பார்த்துப்பா”
நாங்க எல்லோரும் பாட்டி சொன்னதை மனதார ஏற்றுக்கொண்டோம். அவசரம் என்கிறதாலே ஓடிவந்தேன். ''
ரங்கசாமி செய்த பூர்வ புண்யம் , அதிர்ஷ்டம், பேசும் தெய்வமே அவருக்கு அருள்வாக்குக் கூறிவிட்டது!
No comments:
Post a Comment