Sunday, October 1, 2017

ஒரு மகரிஷியின் கதை

" ஒரு மகரிஷியின் கதை" - J.K. SIVAN

இந்த காலம் போலவே அந்த காலத்திலும் பட்டம் பெயர் வாங்க ஆசை இருந்தது சிலருக்கு. அதில் உத்தவரும் ஒருவர். நிறைய வேதம், உபநிஷத், வேதாந்தம் எல்லாம் தெரிந்த என்னை போல் ஒரு மேதாவி உண்டா? என்கிற கர்வம் இருந்தது. ஆனால் தன்னை ஏன் யாரும் "மகரிஷி உத்தவர்'' என்று புகழ்ந்து போற்றி மதிக்கவில்லை என்ற ஒரு அகம்பாவம் இருந்ததை கிருஷ்ணன் அறிவான். கிருஷ்ணன் தன்னுடைய ரிஷிகள் நண்பர்களிடம் சொல்லி தனக்கு மகரிஷி அந்தஸ்து இன்னும் ஏன் அளிக்கவில்லை என்ற குறையும் உத்தவருக்கு இருக்கிறது என்றும் கிருஷ்ணனுக்கு தெரியும்.

ஒருநாள் கிருஷ்ணன் கேட்டான். "உத்தவா, நீ சகல சாஸ்திரங்கள், வேத வேதாந்தம், உபநிஷ த்துக்கள் எல்லாம் கற்று தேர்ந்துவிட்டாயா?"

"இதிலென்ன சந்தேகம் உனக்கு கிருஷ்ணா ''

" ஓ அப்படி என்றால் எனக்கு தான் முதலில் ரொம்ப சந்தோஷம் கட்டாயம் நான் உன்னை நாளைக்கு சந்திக்கிறேன். உன்னால் எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டுமே".

“சரி, கிருஷ்ணா, நானே வருகிறேன்”.

மறுநாள் அதிகாலையிலேயே உத்தவர் வந்துவிட்டார் கிருஷ்ணனை தேடி.

"வா வா உத்தவா, உனக்காக தான் காத்திருந்தேன். உன்னைத்தவிர வேறு யாரிடமும் இந்த வேலையை கொடுக்க இஷ்டமில்லை. நீ ரொம்ப நெருங்கியவன் எனக்கு. ஆகவே தான் மிக ரகசியமான இந்த விஷயம் உன்னிடம் சொல்கிறேன். இது நம்மோடயே இருக்கட்டும். உனக்கு என் பிரிய சகி ராதாவைத் தெரியுமே , அவளுக்கு நான் ஒரு சேதி சொல்ல வேண்டும் உன் மூலம். நீ நேரே பிருந்தாவனம் உடனே சென்று அவளிடம் அந்த சேதியைச் சேர்த்துவிடு. செய்கிறாயா?''

கிருஷ்ணனுக்கு சேவை செய்ய, அதுவும், தான் மட்டுமே செய்யக்கூடிய சேவை என்ற பெருமை உத்தவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ரொம்ப சந்தோஷம் அவருக்கு.

உடனே கிளம்பினார். போகும்போது கை அசைத்து விடை அளித்தான் கிருஷ்ணன்.

"கிருஷ்ணா நீ ராதாவுக்கு கடிதம் எதுவும் எழுதி கொடுக்கவில்லையே".

"கடிதம் எல்லாம் ஒன்றும் இல்லை."

ரதத்தில் சென்று கொண்டிருந்த உத்தவன் பிருந்தாவனம் அடைந்தபோது தான் அவருக்கு சுரீர் என்று இருந்தது.

''அடாடா ! ராதாவிடம் என்ன சேதி சொல்ல வேண்டும்?. கிருஷ்ணன் ஒன்றும் சொல்லவுமில்லை, எழுதியும் தரவில்லை. நானும் கேட்டு வாங்கவில்லையே. சொல்லாமலோ எழுதாமலோ ஒரு செய்தி எப்படி இருக்கமுடியும்? இவ்வளவு தூரம் வந்துவிட்டேன். சரி . நாம் செய்த தவறை நாமே சரி செய்வோம் என்று ஒரு ஓலைச்சுவடியை எடுத்தார் உத்தவர் .

'' என் பிரியமுள்ள ராதா நீ எவ்வாறு இருக்கிறாய்?. நான் நன்றாக இருக்கிறேன் . உன் நினைவு ஒன்றே தான். மற்றவை நேரில்'' -- உன் கிருஷ்ணன் '' என்று கிருஷ்ணன் எழுதியது போல் தானே எழுதி வைத்துக் கொண்டார் உத்தவர்.

பிருந்தாவனத்தில் ராதா வீட்டை உத்தவர்அடைந்தபோது ராதைக்கு பரம சந்தோஷம் கிருஷ்ணனிடம் இருந்து வந்த விருந்தினர் அல்லவா. நன்றாக உபசரித்தாள். க்ஷேம லாபங்கள் எல்லாம் குசலம் விசாரித்த பிறகு உத்தவர் "இந்தா ராதா கிருஷ்ணன் உனக்கு ஒரு கடிதம் கொடுத்தான்" என்று ஓலையை நீட்டினார்.. அதை படிக்காமலேயே ராதா வாய் கொள்ளாமல் சிரித்தாள்.

“ஏன் ராதா, சிரிக்கிறாய் என்ன விஷயம்?”

“கிருஷ்ணன் தான் இதை உன்னிடம் கொடுக்கச்சொன்னான்.”

ஓலையை வாங்கிய ராதை அதை சரியாக கூட படிக்க வில்லை. சிரித்தாள்

“அப்படி என்ன கிருஷ்ணன் எழுதியிருக்கிறான்?” நீ படிக்கக்கூட இல்லையே '' என்று தெரியாதவன் போல் கேட்டார் உத்தவர் .

"ஓ அதுவா. அதில் உத்தவர் இன்னும் சரியாக கற்றுக்கொள்ளவில்லை" என்று எழுதியிருக்கிறான் கண்ணன்.

"என்ன இது விந்தையாக இருக்கிறதே. இவளுக்கு தான் கிருஷ்ணனோடு பேசியது எல்லாம் எப்படி தெரிகிறது?" உத்தவர் அசந்து போய் நின்றார் .

“ஆச்சர்யம் வேண்டாம் நான் விவரமாக சொல்கிறேன்' என்று ராதா தொடர்ந்தாள்.

"நானும் கிருஷ்ணனும் ஒருவரை ஒருவரை நேசிப்பதற்கு ஈடு இணை இல்லை. எங்கள் நேசம்
எப்படிப்பட்டது என்று யாராலும் புரிந்து கொள்ள இயலாது. நாங்கள் இரு வேறு உடல்கள் தாமே ஒழிய எங்களின் உயிர் ஒன்றே தான். நான் ஏதாவது எழுதியோ கிருஷ்ணன் ஏதாவது சொல்லியோ எங்களுக்கு தெரிந்து கொள்ளவோ புரிந்து கொள்ளவோ தனியாக ஒன்றுமில்லை. எங்கள் இருவருக்குள்ளும்
தனியாக ஒரு எண்ணமோ எதிர்பார்ப்போ, நோக்கமோ, ஒன்றுமே இல்லையே. நான் எதை நினைக்கிறேனோ அதுவே கிருஷ்ணனின் நினைப்பு, நான் எதைச் சொல்கிறேனோ அது கிருஷ்ணன் சொல்வதேயாகும். எங்களுக்குள் வேறுபாடு என்று ஒன்றில்லை. எங்கள் பிரேமை அமரத்வமானது. பரஸ்பர நம்பிக்கை,. தன்னலமற்ற ஒருமித்த மனப்பான்மை, தியாகம், பரிபூர்ண அன்பு இவை கலந்த ஒரே உயிர் நாங்கள் என்றபோது எதற்கு ஒருவருக்கருவர் கடிதமோ, செய்தியோ அனுப்பணும்?. வேறாக இருக்கும் இருவர்க்கு அல்லவோ அது தேவை?'' .

''என்ன திகைத்து நிற்கிறீர். உத்தவரே உம்மை ஒன்று கேட்கிறேன். நீர் தான் நிறைய படித்தவராசே. உங்கள் அத்வைதம் என்ன சொல்கிறது. இரண்டற்ற ஒன்று தானே எல்லாம்? இதை புரிந்து கொண்டால் வேறென்ன புரிய இருக்கிறது?. பக்தி என்பது இறைவனோடு ஒன்றரக் கலப்பது தானே? நான் எங்கிருந்தால் என்ன?. கிருஷ்ணன் என்னிடம், என்னுள், என்னோடு மூச்சாக கலந்திருக்கும்போது நான் ஏன் அவனைத் தேடிச் செல்லவேண்டும்? அவன் ஏன் என்னை தேடி வரவேண்டும்.? இதில் பேச்சென்ன, எழுத்தென்ன?” பேசி முடித்தாள் ராதா.

“படிக்காத ஒரு கிராமத்துப்பெண் நீ இப்படியெல்லாம் உயர்ந்த வேதாந்தமெல்லாம் எப்படி சர்வ சாதாரணமாக பேசுகிறாய்?? என்று அசந்து போய் கேட்கிறார் உத்தவர்

“உள்ளன்போடு தன்னை இறைவனுக்களிக்க படிப்பெதற்கு?. பார்க்கும் எதுவும் எவரும் கிருஷ்ணனாகவே எனக்கு இருக்கும்போது தனியாக அவன் எங்கிருக்க முடியும் ?”

உத்தவர் துவாரகை திரும்பும்போது முற்றிலும் மாறுதல் அவரிடம் இருந்தது. "தான், நான் " எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வந்தது. மறுநாள் கிருஷ்ணனை சந்தித்தார் உத்தவர். அவரிடம் நிறைய மாறுதல் இருப்பதை உணர்ந்து சிரித்தான் கிருஷ்ணன்.

"என்ன உத்தவா ஊருக்கெல்லாம் போய் வந்தாயா. நீ வந்தவுடன் தான் உனக்கு என் நண்பர்களிடம் எல்லாம் சிபாரிசு செய்து ஒரு "மகரிஷி" பட்டம் வாங்கித்தருவது பற்றி பேசவேண்டும் இன்று என நினைத்தேன்".

ஷாக் அடித்தது போல் ஆச்சு உத்தவருக்கு. எழுந்து நெடுஞ்சாண்கிடையாக கிருஷ்ணன் காலில் விழுந்து வணங்கினார்

"கிருஷ்ணா எனக்கு மகரிஷி பட்டம் வேண்டாம். அந்த எண்ணம், ஆசை, படித்த கர்வம் எல்லாம் ராதையைப் பார்த்தபின் நேற்றோடு காற்றில் போய் விட்டது.

"உத்தவா, இந்த பிருந்தாவன விஜயம் உன்னை திருப்பிப் போடும், உன் அகக்கண் திறக்கும் என்ற என் நம்பிக்கை வீண் போகவில்லை. உன் மீது இருக்கும் நம்பிக்கையால் தான் என்னுடைய உபதேசங்களை எவ்வளவோ மகரிஷிகள் இருந்தும் உன் மூலம் எழுதவைத்து மகரிஷி யாகவோ, பட்டம் பெறவோ, சிறிதும் எண்ணம் இல்லாத உன்னால் மக்களுக்கு அவற்றை எளிதில் புகட்ட, புரிய வைக்க எனக்குள் ஒரு தீர்மானம்.

கிருஷ்ணன் கடைசியாக உத்தவரோடு பேசியபோது உபதேசித்த உத்தவ கீதை தான் (ஹம்ச கீதை என்றும் அதற்கு பெயர் உண்டு) கிருஷ்ணன் அவதாரத்தில் கடைசியாக செய்த உபதேசம்.இதை உபதேசித்த உத்தவர் “மஹர்ஷி” என்றே அழைக்கப் படுவதில் என்ன அதிசயம்?.

இனி நாள் முதல் உங்களுக்கு உத்தவ கீதை கொஞ்சம் கொஞ்சமாக தரப்படும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...