இன்று நம்மோடு காளமேகம் உலா வறுகிறார்.
தமிழ்ப்புலவர்கள் ஒரு இடத்தில் என்று இல்லாமல் பல சமஸ்தானங்களுக்கு, அரசர்களைத் தேடி, பிரபுக்களை, புரவலர்கள், வள்ளல்களை தேடி (தமிழ் நாட்டிற்குள் தான் ) சென்று தமது வித்தையை மதிப்பவர்களிடம் இருந்து பட்டம், பதவி, பரிசில் பெறுவது அக்காலத்தில் வழக்கம்.
காளமேகம் ஒரு தடவை இப்படித்தான் நாகப்பட்டினத்திற்கு நடந்தார். நீண்ட நேரம் நடந்து வந்த களைப்பும் பசியும் அவரை ஒரு சாத்திரத்தை தேட வைத்தது. நாகப்பட்டினத்தில் காத்தான் என்பவரது சத்திரத்தில் உணவு கிடைக்கும் என அறிந்து அங்கே சென்றார்.
வெகு நேரம் காத்திருந்தும் சாப்பாடு வந்த பாடில்லை. காளமேகம் பொறுமையை முற்றாக இழந்து போன பின்னர்தான் உணவு அருந்த அழைப்பு வந்தது. பசி வயிற்றைக் கிள்ள, காதை அடைக்க, அந்த நேரத்தில் அந்த மஹா கவியின் நகைச்சுவை ஒரு பாடல் மூலம் வெளிப்பட்டது. காத்தான் சத்திரம் பற்றிய பிரபல பாடல் இது தான்.
கத்துக்கடல் நாகைக்
காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
அரிசி வரும் - குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்;
ஓரகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்.
திருநாகை எனும் நாகப்பட்டினம் செல்வோர்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அங்கே நடப்பதை அறிந்து கொள்ளுங்கள். பசி என்று அங்கே காத்தானின் சத்திரத்துக்கு போனீர்களோ அவ்வளவு தான். ஒரு நாள் உபவாசம் தானாகவே நடைபெறும். ஏனென்றால் சூரிய அஸ்தமன நேரத்தில் தான் சத்திரத்துக்குள் அரிசி வந்து இறங்கும். சமையல் காரர் அதை குத்தி அரிசிப்பானையில் உலையிலிட இரவு எட்டு ஒன்பது மணிக்கு மேல் ஆகிவிடும். அப்புறம் சாதம் வெந்து உங்கள் இலையில் வந்து ஒரு கரண்டி சாதம் சூடாக விழும் சமயம் விடியற்காலை வெள்ளி கீழ்வானில் முளைத்து விடுவான்.
இந்த பாடலை உரக்க காளமேகம் பாடியது காத்தான் காதிலும் விழுந்தது. ஓஹோ வந்திருப்பது மகா காவி காளமேகம் என்பது தெரிந்தது. அடடா இந்தப் பாடலினால் தனது அன்ன சத்திரத்திற்கு கெட்ட பெயர் வந்து விடுமோ என்று பயம் வந்ததால் காத்தான் காளமேகம் காலி விழுந்து தன்னை மன்னிக்க வேண்டினார். கொண்டார். காளமேகம் நிலமையைச் சரி செய்ய பாடலுக்கான விளக்கத்தை இவ்வாறு சொல்லிக் கொண்டார்.
ஐயா காத்தான் மஹாராஜா, நான் எழுதிய பாடல் உங்கள் சத்திரத்தை குறை கூறுவதற்காக இல்லை. அதற்கு வேறொரு அர்த்தமும் உண்டே என்று சாமர்த்தியமாக விளக்கினார். எப்படி ?
' நாகப்பட்டினம் காத்தானது சத்திரத்தில் மட்டுமே , நாடே அஸ்தமிக்கும் நேரத்தில் அதாவது நாட்டில் எங்கும் உணவு இன்றி மக்கள் ஆகாரமின்றி தவித்து பஞ்சம் தலைவிரித்தாடும் காலத்திலும் கூட அரிசி மூட்டை மூட்டையாய் வந்திறங்கும். அங்கு பரிமாறும் உணவை உண்டு அந்த ஊரே பசி அடங்கும். இலையில் விழும் ஒரு அகப்பை அன்னம் வெள்ளி நட்சத்திரம் போல பிரகாசமாக இருக்கும்'.
காத்தான் ஆனந்த கூத்தாடினான். இப்படி ஒரு கவிஞனா. இவனுக்கு ஒருவேளை உணவளிக்க நான் என்ன பாக்யம் செய்தவன் என்று மகிழ்ந்தான். இது மட்டுமா ?
இதே போல் கும்பகோணத்தில் ஒரு நிகழ்ச்சி. அங்கு ஒரு அன்ன சத்திரத்தில் சாப்பிட காத்திருந்த அனைவரும் வரிசையாக அமர்ந்து சாப்பிடும்போது, காளமேகத்தை இன்னொரு கவிதை பாட காரணமானது.
அவருக்கு அடுத்த இலையில் ஒரு முன் குடுமிச் சோழிய பிராமணன் உணவு உட்கொண்டு கொண்டிருந்தான். வேகமாக தலையை அசைத்து அவன் சாப்பிடும்போது அவனது நீண்ட முன் குடுமி முடிச்சு அவிழ்ந்து அவன் அவன் இலையில் சாதத்தின் மேல் விழ, இலையில் விழுந்த தனது குடுமியை பிராமணன் எடுத்து உதற, அருகில் உணவருந்திக் கொண்டிருந்த காளமேகத்தின் இலையில் அந்தக் குடுமியில் ஒட்டிக்கொண்டிருந்த இருந்த சோற்றுப் பருக்கைகள் விழ, காளமேகம் கோபம் கொண்டு சொன்ன கவிதை,
சுருக்கு அவிழ்ந்த முன்குடுமிச் சோழியா! சோற்றுப்
பொருக்குஉலர்ந்த வாயா! புலையா! - திருக்குடந்தைக்
கோட்டானே! நாயே! குரங்கே! உனைஒருத்தி
போட்டாளே வேலையற்றுப் போய்!
இதற்கு அர்த்தம் வேறு சொல்லவேண்டுமா. நான் என்ன முன் குடுமிச் சோழியனா?
No comments:
Post a Comment