Tuesday, October 3, 2017

பாட்டி சொல் தட்டாதே.


பாட்டி சொல் தட்டாதே.---J.K. SIVAN


சாதி சண்டைகள் இன்னும் முடிந்தபாடில்லை. எது நடந்தாலும் அதற்கு ஜாதிச்சாயம் பூசினால் தான் அரசியலில் கை தட்டுவார்கள். காசு பார்க்கலாம். ஏதாவது ஒரு ஜாதியை புகழவேண்டுமானால் தாராளமாக புகழலாம். ஆனால் மற்றொரு ஜாதியை கடிந்து கொச்சைப் படுத்தி குளிர் காய்வது கீழ்த்தர.

ஒரு இளைஞன் வேறு குல பெண்ணை காதலித்தான். யாரும் ஆதரிக்கவும் இல்லை, கல்யாணமும் பண்ணி வைக்கவில்லை. பதிலாக கொல்வதற்கு தயாரானார்கள். எனவே சிறிசுகள் ரெண்டும் உயிர் தப்பி ஓடின. பல மாசங்கள் கழித்து சாமர்த்தியமாக வரவழைத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஆள் வைத்து கொன்று எரித்தனரோ புதைத்தனரோ, நிறைய இது போன்ற செய்திகள் பத்திரிகையை நிரப்புகின்றன. பெற்ற தாயோ தந்தையோ கூட இந்த விஷயத்தில் பெண்ணுக்கு எதிரி. கூடப் பிறந்த அண்ணனோ தங்கையோ, தந்தையோ சதி செய்து அந்த பையனைக் கொல்கிறார்கள். இதில் ஒரு சந்தோஷம் அவர்களுக்கு. கல்யாணம் பண்ணிக்கொண்டாலும் தக்க தண்டனை கொடுத்தாகி விட்டதே என்று. சீ ! பேசத்தெரிந்த, ரெண்டு கால் மிருகங்கள்.

அரசியலில் சாதி, பள்ளி கல்லூரிகளில் சாதி, ஆபிசில் சாதி. வோட்டு போட ஜாதி, கட்சி ஜாதி அடிப்படையில், ச்சே! ''என்று மடியும் இந்த அநீதி அக்கிரமம்?. ஒருவன் பிறக்கும்போது அவனைக் கேட்டுக் கொண்டா சாதி அமைகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலும் சாதி இருந்திருக்கிறது. இது தமிழனுக்கு ஒரு சாபக்கேடு.

ஒரு கிழவி வெறுத்துப் போய் பாடியிருக்கிறாள். அவள் வார்த்தையில் எப்போதும் அழுத்தம் ஜாஸ்தி. நறுக்குத் தெரித்தாற்போல் சொல் விழும்.

''சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி ''

'' ஏ மானிடர்களே சாதி என்ன சாதி. அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. ரெண்டே ரெண்டு தான் உலகில் சாதி. ஆண் சாதி, பெண் சாதி தான் இயற்கையாகவே உள்ளதே. உனக்கு வேண்டுமானால் சொல்கிறேன் புரிந்துகொள் உயர்ந்த சாதி யார் தெரியுமா?, நாலு பேருக்கு தான தர்மம் புரிந்து உதவுபவர்கள் . அவர்கள் தான் பெரியோர். அப்படி இல்லாத கருமிகள் தான் இழி குலத்தோர். தாழ்ந்த சாதியினர்.


உனக்கு தான் தினமும் தோப்புகரணம் போடுகிறேனே. விளக்கு எற்றுகிறேனே. உனக்கு கண்ணில்லையா?. எனக்கு மட்டும் இத்தனை கஷ்டம் ஏன்? ஒண்ணுமே பண்ணாதவன் எல்லாம் நல்லா இருக்கான். அவனை நன்றாக ஓஹோ என்று வைக்கிறாய். எனக்கு மட்டும் இத்தனை சோதனையா? தோப்புக்கரணம் போட்டுக்கொண்டே கேட்கிறான் சூடாமணி.

இதை அத்தனையும் கேட்டுக்கொண்டு பிள்ளையார் பேசாமல் தானே இருக்கிறார். பாவம் அவர் என்ன பண்ணுவார். மூட்டை மூட்டையாக பாவம் பண்ணி ஜன்ம ஜன்மமாக சேர்த்து வைத்துவிட்டு, இப்போது அதன் பலன் வருத்தும்போது பிள்ளையாரை நொந்து, கடிந்து என்ன பயன்? போனது போகட்டும்.பாபம் தீர, முடிந்த அளவு நல்லதே நினைத்து, செய்து, நாலு பேருக்கு உதவி, தான தர்மம் பண்ணி இனியாவது கொஞ்சமாவது பாபத்தை குறைத்துக் கொள்ள வேண்டாமா? . ஒன்றுமே செய்யாமல் இருந்து விட்டு, மேலும் மேலும் பாபத்தை வளர்த்துக் கொண்டு நல்ல கதி தேடுவது எதற்கு சமமாகும்?

சுவையான பசியாற்றும் சாதம் வேண்டுமானால் நல்ல தண்ணீரில், நல்ல அரிசியை களைந்து போட்டு அல்லவோ அடுப்பில் கொதிக்க வைக்கவேண்டும். வெறும் பானையை அடுப்பில் வைத்தால் சாதம் உலையிலிருந்து பொங்கியா வெளியே வரும்.! முட்டாளே! என்கிறாள் கிழவி. உன்னை அன்போடு அணைக்கிறேன் பாட்டி. இவ்வளவு கெட்டிக்காரியா நீ!


எனக்கு பழைய ஞாபகம் தான் அடிக்கடி வருமே. நுங்கம்பாக்கம் கார்ப்பரேஷன் ஸ்கூலில் ஆறாவது படித்த போது எங்கள் வகுப்பு வாத்தியார் P .S .ராகவய்யர். அரைக்குடுமி. பஞ்சகச்சம். கச்சலான சிவந்த உடம்பு. நெற்றியில் பட்டை பட்டை விபூதி. காதில் கடுக்கன். தோளில் முழுக்கை நீல சட்டையின் மேல் நீள அங்கவஸ்திரம். கையில் சாக்பீஸ். யாராவது நெற்றிக்கு இட்டுக்கொண்டு வராவிட்டால் கெட்ட கோபம் வந்து விடும். ''ராஜகோபாலா, எழுந்திரு இங்கே வா. தூங்கிட்டு நேரே பள்ளிக்கூடம் வறியா?
''இல்லே சார்.''
'' குளிக்கலே?''
'' குளிச்சேன் சார்.''
'' பின்னே ஏன் மோட்டு நெத்தியோட வந்திருக்கே?''
''பள்ளிக்கூடத்துக்கு நேரமாயிட்டதுன்னு அவசரத்திலே மறந்துட்டேன் சார்''.
''எதாவது சாப்பிட்டியா?''
''ரெண்டு இட்டிலி சார்''
''அதுக்கு மட்டும் மறக்கலியோ? உருப்படா கழுதை போய் மூஞ்சி அலம்பிண்டு வாசல்லே பிறையிலே பிள்ளையார் கிட்டே இருக்கே விபுதி அதையாவது 'ஓம் நமசிவாய' என்று மூணு தரம் சொல்லிட்டு நெற்றியிலே இட்டுக்கோ. போய் பள்ளிக்கூடத்தை ரெண்டு சுற்று வேகமாக ஓடி சுற்றிட்டு வா.''''
இது தான் பனிஷ்மென்ட்.

அதேபோல் ஒரு ஊர் என்றால் அங்கே கோவில் இருக்க வேண்டும். கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பார்கள். நிச்சயம் தண்ணீர் இல்லாத ஆறு அந்த காலத்தில் கிடையாது. எல்லா ஊரிலும் ஆறு பின்னால் கூட ஓடியது. இன்னும் ரெண்டு விஷயம் கிழவி சொல்கிறாள்.

உடன் பிறப்பு இல்லாத ஒத்தையன் பிரயோஜனம் இல்லாத உடம்பு. ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது மூன்று அண்ணன் தம்பி, அக்காள் தங்கை இருந்தது. பத்து பன்னிரண்டு பேர் குடும்பங்கள் எங்கள் குடும்பத்தை போல் இருந்தது.
ஒரு வீடு என்றால் விளக்கேற்ற ஒரு பெண் வேண்டும். பெண்ணில்லாத வீடு பாழடைந்த பேய் மனை என்கிறாள் கிழவி. வீடு பெண் ஒருத்தி இருந்தால் தான் லக்ஷ்மிகரம் என்ற நம்பிக்கை இன்னும் நிறைய வீடுகளில் இருக்கிறது.

நீறில்லா நெற்றிபாழ்(;) நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் (கு) அழகுபாழ் - மாறில்
உடன்பிறப் பில்லா உடம்புபாழ் பாழே
மடக்கொடி இல்லா மனை.

அவ்வை நிறைய விஷயம் தெரிந்த கிழவி. எங்கே போகிறாள், பிடித்து நிறைய பேச வைக்கலாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...