அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN
'ஐயோ உள்ளம் கொள்ளை போகுதே...!! - 2
குமுதவல்லியின் அழகு எங்கும் பரவியபோது, திருமங்கை மன்னன் செவியிலும் அந்த சேதி விழ அவனுக்கு அவள் மேல் ஒரு பற்றுதல் உண்டாயிற்று . அவளை சந்திக்க ஆவல் கொண்டான். ''ஆடல் மா'' என்று அவன் குதிரைக்குப் பெயர். அதன் மேல் அமர்ந்து வைத்தியன் வீடு வந்த திருமங்கை மன்னன், நீலன் என்னும் பரகாலன், திருவெள்ளக்குளத்தில் குமுதவல்லியை பார்க்கிறான். அவள் அழகு உள்ளம் கொள்ளை கொண்டது. முடிவெடுத்தான் மன்னன்.
''இவளே என் மனைவி'' என்று வைத்தியரிடம் சொல்கிறான். வைத்தியர் வானில் பறந்தார். அவ்வளவு சந்தோஷம் அவருக்கு. மகளை அழைத்தார். வந்தாள் .விஷயம் கேட்டாள் .
''அரசே நான் உங்களை மணக்க வேண்டுமானால் ஒரு நிபந்தனை'' என்றாள் குமுதவல்லி.
''என்ன நிபந்தனை சொல் பெண்ணே''
''நீர் ஒரு பலம் வாய்ந்த வீர மன்னர். இருந்தாலும் அது போதாது. எம்பெருமானார்க்கு பக்தனாக மாற வேண்டும். விஷ்ணு பக்தர்களுக்கு சேவை புரியவேண்டும்.
''பெண்ணே, உன்னை அடைய என்ன நிபந்தனையானாலும் நான் ஏற்பேன். இப்போது முதல் நான் விஷ்ணு பக்தன் போதுமா?'' என்றான் திருமங்கை மன்னன்.
''போதாதே...'' என்றாள் குமுதவல்லி.
''போதாதா, இன்னும் என்ன செய்யவேண்டும் நான்?'' கவலையோடு கேட்டான் திருமங்கை மன்னன் நீலன்.
''தினமும் நான் 1008 விஷ்ணு பக்தர்களுக்கு அமுது படைத்து அவர்கள் திருவடிகளுக்கு பாத பூஜை செய்யவேண்டும். அந்த திருப்பாத தீர்த்தத்தை சிரசில் ப்ரோக்ஷித்து புண்ணியம் பெற வேண்டுமே. ஏற்பாடு செய்வீர்களா இதற்கு தினமும்? முடிந்தால் சொல்லுங்கள், நான் உங்கள் மனைவி அரசே'' என்றாள் குமுதவல்லி.
மறு வார்த்தை பேசாமல் ஒப்புக்கொண்ட திருமங்கை மன்னன் மனைவியானாள் குமுதவல்லி.
நாள் தோறும் 1008 விஷ்ணு பாகவதர்களுக்கு அமுது படைப்பது அவ்வளவு சுலபமா? செய்தானே அந்த திருமங்கைமன்னன்!. இப்படி அன்றாட அன்னதான பாத பூஜை செய்த திருமங்கை மன்னனின் செல்வம் எல்லாம் கரைந்தது. மேற்கொண்டு இந்த சேவையை எப்படி தொடர்வது? செல்வம் கரைந்த அவனால் சோழ மன்னனுக்கு கப்பம் கட்டவும் வழியில்லை. சோழ ராஜா வெகுண்டான். சோழனின் படை திருமங்கை வந்தது. நீலனுடன் சோழராஜாவின் படை மோதியது. திருமங்கை மன்னன் வீரன் பலசாலி, அவனிடமும் படை கொஞ்சமாக இருந்தாலும் கட்டுக்கோப்புடன் இருந்ததால அவன் தோற்க வில்லை. சோழ ராஜா அவனை மன்னித்து கப்பம் பாக்கியை விரைவில் செலுத்து'' என்று நீலனை திருப்பி அனுப்பினான்.
பணம் தேவைப் பட்டது. ஒருபக்கம் அன்றாட அமுது படையலுக்கும் இன்னொரு பக்கம் ராஜாவுக்கு கப்பம் கட்டவும் பணத்திற்கு எங்கே போவது? என்ன வழி? யோசித்து மண்டை வெடித்து விட்டது நீலனுக்கு . கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். இனிமேல் செல்வந்தர்களை கொள்ளை அடிப்பது ஒன்றே பணம் திரட்ட வழி என்று தீர்மானித்த திருமங்கை மன்னன் நீலன் அவ்வாறே பல கொள்ளைகள் நடத்தினான். அவற்றின் மூலம் பணம் திரட்டி நித்ய விஷ்ணு பக்த போஜனம் செய்து வந்தான்.
ஸ்ரீமந் நாராயணனுக்கு இதில் விருப்பம் இல்லை. திருடி, கொள்ளையடித்து செய்யப்படும் விஷ்ணு பக்த சேவை லோக சம்ரக்ஷகனுக்கு திருப்தி அளிக்குமா? திருமங்கைமன்னன் நீலனைத் திருத்த வேண்டும் என்று பரமன் திருவுள்ளம் கொண்டான்.
திருமங்கை ஊருக்கு பக்கத்தில் காட்டு வழியாக ஒரு புதிதாக திருமணம் நடந்த தம்பதிகள் திருமணக் கோலத்துடன் நகைகள், செல்வம், மற்ற விலை உயர்ந்த பொருள்களுடன் உறவினர்களோடு சென்று கொண்டிருந்தார்கள்.
ஒற்றர்கள்ஒ மூலம் செய்தி நீலனுக்கு தெரிந்தது.
ஒரு புது திருமண தம்பதி நிறைய நகைகள், பணத்தோடு தனது எல்லையில் காட்டுவழியே வரும் விஷயம் நீலனுக்கு திருப்தியை அளித்தது. ''ஆஹா இந்த புது மண தம்பதிகளை கொள்ளை அடித்தால் கொஞ்சம் ஆபரணங்கள் பொருள் கிடைக்குமே, சில நாட்கள் நிம்மதியாக திருவமுது சேவைக்கு உதவுமே'' என்று மகிழ்ந்தான். கொள்ளைக்கூட்டத்தோடு அன்றிரவு அவர்களை மடக்கினான்.
''உங்கள் நகைகள், ஆபரணங்கள், பொருள்கள், பணம் எது இருந்தாலும் ஒன்றுவிடாமல் கொடுத்தால் உயிர் தப்பலாம் '' என்றான் திருமங்கை மன்னன் நீலன் .
'ஆஹா அப்படியே'' என்றான் உயிருக்கு பயந்த அந்த புது திருமண மாப்பிள்ளையும் மணமகளும் தனது எல்லா நகைகளையும் எடுத்து முன்பாக வைத்தாள். அவர்களிடமிருந்து எல்லா நகைகளையும் உருவி விட்டான். மூட்டை கட்டினான். அந்த நேரம் தான் மாப்பிள்ளை காலில் இருந்த ஒரு விலை உயர்ந்த ஆபரணம் நீலனின் கண்ணில் பட்டது.
''கழட்டு அதையும் ''
''ஐயா என்னால் அதை கழட்ட முடியவில்லையே. தாங்களே கழட்டமுடிந்தால் எடுத்துக் கொள்ளுங்கள் '' என்றான் மணமகன்.
நீலன் பலசாலி. ஆனால் எவ்வளவோ முயன்றும் அது மசியவில்லை. பல்லால் அந்த மாப்பிள்ளை காலில் விரல்களில் கடித்து இழுத்தும் பயனில்லை.
இவ்வளவு பலம் வாய்ந்தவனை அதிசயத்தோடு பார்த்தான் நீலன். மாப்பிள்ளையும் மனதில் மெச்சி 'கலியா'' என்று மனதுக்குள் அன்பாக அழைத்தான். ஸ்ரீமந் நாராயணன் திருவடி சம்பந்தம் ஏற்பட்டவுடன் கலியன் புதியவன் ஆனானா?!!.
'சரி, இந்த ஆபரணம் இல்லாவிட்டால் பரவாயில்லை. அகப்பட்டதே போதும்'' ன்று தீர்மானித்து தனது உதவியாளனிடம் 'அடே தோழா, அகப்பட்டதை சுருட்டு , போகலாம்'' என்று நீலன் சொல்ல, அவனும் முயன்று தரையில் எதிரே நகைகள், ஆபரணங்கள் சேர்த்து கட்டி வைத்த மூட்டையை தூக்கினான். மூட்டையை நகர்த்த முடியவில்லை. என்னது இது கண்கட்டி வித்தை என்று நீலன் தானும் பலத்தோடு அதைப் பெயர்த்தெடுக்க முயன்று தோற்றுப்போனான். நீலனுக்கு கோபம் வந்தது.
''என்னடா மாப்பிள்ளை, என்னுடன் விளையாடுகிறாயா? என்ன மந்திரம் போட்டு இதை நகர்த்த விடாமல் செய்தாய் சொல்'' என்று மிரட்ட பயந்து நடுங்கிய புது திருமண மாப்பிள்ளை,
'அய்யா எனக்கு தெரிந்த ஒரே மந்திரம் இது தான். இங்கே வாருங்கள் சொல்கிறேன் என்று அருகே அழைத்து நீலன் காதில் ஸ்ரீமந் நாராயணன் தானே 'ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய' என்ற தனது அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசிக்கிறார். அந்த கணம் முதல் எம்பெருமானிடம் உபதேசம் பெற்ற இந்த சிறந்த பாக்யம் பெற்ற, நீலன் என்கிற கொள்ளையன், திருமங்கை மன்னன், கலியன், இனி என்றும் நாமறியும் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார்.
பெருமாளையும் பிராட்டியையும் அந்த புதிதாக கல்யாணம் ஆன தம்பதிகளில் அடையாளம் கண்டு கொள்கிறார். கண்கள் ஆனந்த பாஷ்பத்தில் மலர்கின்றன. ஆற்று வெள்ளமாக பாசுரங்கள் நாவிலிருந்து கொட்டுகிறதே!
" வாடினேன், வாடி வருந்தினேன், மனத்தாற் பெருந்துயர் ........... நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன் நாராயணா எனும் நாமம்...'' என்று பத்து பாசுரங்கள் தேனாக மனம் உருகி அவர் நாவிலிருந்து நமக்கு கிடைக்கிறது. கருடாரூடராக பெருமாள் பிராட்டியுடன் ஆழ்வாருக்கு காட்சி அளிக்கிறார்.
''கலியா, எல்லா விஷ்ணு க்ஷேத்ரங்களும் சென்று எமைப் பாடு '' என்று கட்டளையிடுகிறார். பிறகு என்ன?
ஸ்ரீ வைஷ்ணவ வரலாறு தான் நிறைய கூறுகிறதே. நான் வேறு சொல்ல வேண்டுமா?
86 திவ்ய தேசங்கள் செல்கிறார் கலியன் எனும் திருமங்கை ஆழ்வார். . ஆறு பிரபந்தங்கள், அதாவது பெரிய திருமொழி, திருக் குறுந்தாண்டகம், திரு நெடுந்தாண்டகம் திரு வெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், எல்லாமாக சேர்ந்து 1253 திருப் பாசுரங்கள். இவை நாம் கொள்ளை அடிக்காமலேயே திருமங்கை ஆழ்வார் ''கொள்ளை கொள்ளையாக '' நமக்கு கொடுத்தவை.
ஸ்ரீ ரங்கத்து ஆலயத்திற்கு மதில் சுவர் கட்டினார். ஆலய சொத்து பிறர் கொள்ளை அடிக்காமல் தப்பியது. நம்மாழ்வார் ஐம்பொன் சிலையை பத்து நாள் மார்கழி விழாவுக்கு திருநகரியிலிருந்து கொண்டுவந்து பிறகு திரும்ப செய்தவர். இவரைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். நீண்ட தொடர்கதை தான் தேவை இவரைப் பற்றி எழுத.
(திருநாங்கூர் 11 கருட சேவை இந்த வருஷம் சேவிக்க எனக்கு பாக்கியம் கொடுத்தவர் திருமங்கை ஆழ்வார். இதைத்தான் சொன்னேன் எனக்கும் இந்த ஆழ்வாருக்கு சம்பந்தம் உண்டு என்று. 10.2.16 அன்று திரு அண்ணன் கோயில் (திருவெள்ளக்குளம்) என்ற திவ்ய தேசத்தில் ''குமுதவல்லி நாச்சியார் அரங்கத்தில் '' நடை பெற்ற இந்த ஆண்டு ''கலியன் ஒலி மாலை '' ஸ்ரீ வைணவ ஆண்டு விழாவில் அடியேன் படைத்த ' ''பாவையும் பரமனும் '' என்ற ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை கற்பனை விளக்க நூல் 2ம் பதிப்பு, பெரியோர்களால் மதிக்கப் பெற்று வைணவச்செம்மல் வித்துவான் ஸ்ரீ கு. அரங்கநாதாச்சாரியார் ஸ்வாமி தலைமையில், பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீ உ.வே. அண்ணா ஸ்ரீநிவாஸாச்சாரியாரின் பாராட்டை பெற்று , ஸ்ரீ அண்ணன் பெருமாள் கோவில் மேலத் திருமாளிகை வர்த்தமான ஆச்சாரிய பீடாதிபதி எம்பார் ஸ்ரீ உ.வே. ரங்காச்சாரியார் ஸ்வாமி ஆசியுடன் வெளிவந்து அடியேன் கௌரவிக்கப் பட்டேன்.)
திருமங்கை ஆழ்வார் குமுதவல்லி நாச்சியாருடன் சுற்றுவட்டார 11 திவ்ய தேசங்களுக்கு கருடாவாகனத்தோடு சென்று பெருமாளையும் பிராட்டியையும் அழைத்து வந்து திரு நாங்கூரில் கருட சேவை செய்வித்து திரும்ப அந்த திவ்யதேசங்களுக்கு தம்பதி சமேதராக சென்று கருடாரூடராக அவர்களை ஸ்தலத்தில் திரும்பச் சென்று விடை பெற்ற திவ்ய அனுபவத்தை நான் நேரில் முதல் முறையாக கண்டு களித்தேன். இது பற்றி தனியாக எழுதி இருக்கிறேன்.
No comments:
Post a Comment