Thursday, May 21, 2020

VETRI VERKAI




அதி வீர ராமபாண்டியன்.                  J K  SIVAN 


                             வெற்றி வேற்கை - 1
  
 அந்த காலத்தில் என்று சொல்வதை காட்டிலும்  சங்க காலத்தில்  ராஜாக்கள்  சிறந்த புலவர்களாகவும் இருந்தார்கள். கொற்கை தேச அரசன்   அதிவீர ராம பாண்டியன்.  கொற்கை   தொண்டி   எல்லாம் முத்துக்களை கடலில் பாய்ந்து எடுக்கும் இடம்.  இதற்கு முத்து குளிப்பது என்று பெயர்.  இந்த ராஜா நைடதம், லிங்கபுராணம், காசிகாண்டம், வாயு ஸம்ஹிதை, திருக்கருவை அந்தாதி, கூர்ம புராணம்  எல்லாம் வலேறு  எழுதியவன். முடிந்தால் அவற்றை எல்லாம்  எழுத வேண்டும். சிலது படித்திருக்கிறேன்.   இந்த  அதிவீர ராமபாண்டியன் எழுதிய அற்புதமான குட்டி நூல் தான்  வெற்றி வேற்கை.  வெற்றி வேலை கையில் பிடித்த முருகன் தமிழ் கடவுள் . பாண்டியன் முருகன் கை வேலையே ''வெளியிடு வினையில்லை'' என்று அறிவுறுத்த,  ''வேலைப்பணிவதே எம் வேலை, வேறென்ன வேலை ?''என்று நமக்குநர்த்த  அளித்திருக்கும் இந்த வெற்றிவேற்கை க்கு இன்னொரு பெயர்  ''நறுந்தொகை''  அப்படிச்சொன்னால் சிலருக்கு புரியுமா? 
அவற்றில் செல்வோம்.  திருக்கோளூர் பெண் பிள்ளை  81 வார்த்தைகள் தான் சொன்னாள் . இந்த ராஜாவும்  81 வாக்கியங்கள் தான் சொல்கிறான். ஏதோ 81ல் ஒரு விசேஷம் இருக்கிறது. எனக்கு அது தான் வயது என்பது தான் எனக்கு தெரிந்த விஷயம்.

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்  சரண அற்புதமலர் தலைக்கு அணிவோமே என்று விநாயகன் பாதமலர்களை சிரத்தில் சூடி படிப்போம். 

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கையாளி குல சேகரன் புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றம் களைவோர் குறைவில் லாதவரே.

 வெற்றி தரும் வேலை கையில் கொண்ட, கொற்கை நகரத்தை ஆளும், குலத்திற்கு சிகரம் போன்ற அதிவீர ராமனாகிய நான் கூறியுள்ள நல்ல தமிழினால் ஆன இந்த நறுந்தொகையினால் தம் குற்றங்களை நீக்கிக் கொள்வோர் குறைவில்லாத வாழ்வார்களாக என்று  ஆரம்பிக்கிறான்  பாண்டியன்.

1. எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும் -
பள்ளிக்கூடத்தில்  விரலைப் பிடித்து முதலில்  ''அனா , ஆவன்னா''   எழுத கற்றுக்கொடுத்த வாத்யார் ரொம்ப ரொம்ப கஷ்டங்களை அனுபவித்தார்.  பெரிய காலேஜ் ப்ரொபஸருக்கு கூட அந்த கஷ்டம் கிடையாது.  அப்படி எழுத்தை படிக்க  எழுத முதன் முதலில் நமக்கு கற்பித்த  டீச்ரையோ  வாத்யாரையோ  மறக்கவே கூடாது. கடைசி மூச்சு வரை அவரை தெய்வமாக  வணங்கவேண்டும். நான் காவேரியம்மாவை மறப்பதில்லை.

2.. கல்விக்கு அழகு கசடற மொழிதல் - 
எழுத படிக்க தெரிந்துவிட்டால்  அடாடா என்னவெல்லாம்  பேசுகிறார்கள்.  காது புளித்து போகிறதே  வாட்சப்பில், பிபியில், யூட்யூபில்.   கசடற மொழிதல்  தமிழ் வார்த்தையை தப்பில்லாமல் பேசுவது மட்டுமல்ல, என்ன பேசுகிறோம் அதையும் கொஞ்சமும் பிறர் மனது புண்படாமல்   செவிக்கு நாராசமாக  இல்லாமல் பேசுவது தான்.   பாண்டியனுக்கு இதெல்லாம் நடக்கும் என்று அப்போவே தெரிந்திருக்கிறது.

3. செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் - 
பணம் சம்பாதிப்பவன்  தனது பெரிய குடும்பத்தை கட்டி  காப்பாற்றி  நிர்வாகம் பண்ணவேண்டும்.  இதைச் சொல்லவே வேண்டாம். இந்த  நீதி வாக்கியத்தை  அரசியல் வாதிகள்  தப்பில்லாமல்  கடைப்பிடிக்கிறார்கள். 
மற்றவர்கள் ஏதோ வேண்டியவர்களை மட்டும்  அனுசரித்து  ஆதரவு தருகிறோம். முடிந்தவரை.

4. வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் -
இது கொஞ்சம்  CONTROVERTIAL  ஜாக்கிரதையாக சொல்லவேண்டும்.    வேதம் ஓதுவதும், ஒழுக்கத்தோடு இருப்பதுமே ப்ராம்மணர்களுக்கு அழகு. இருப்பவர்களுக்கு  வணக்கம். இல்லாதவர்கள் இருப்பவர்களை பார்த்து  அப்படி நடக்கவேண்டும்.  வேதம் என்பது ஒரு சிலரைத்தவிர பலருக்கு  பிழைப்பாகிவிட்டது. பணம் முக்யமாகிவிட்டதால் மற்றதில் கவனம் குறைவாகிவிட்டது.

5. மன்னவர்க்கு அழகு செங்கோல் முறைமை -
அடே  பாண்டியா, இது  உன்காலத்திற்கு பிறகு கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்டது உனக்கு தெரியாது. 
ராஜாக்கள் கிடையாது என்பதால் எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்.   சத்யமேவ ஜெயதே  வாய்மை வெல்லும் என்பதை கம்பத்தின் உச்சியில் மூன்று சிங்கங்கள் விடாமல் கர்ஜிப்பதோடு சரி.

அதி வீர ராமபாண்டியனை மேலும் ரசிப்போம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...