தலைக்கு மேல் பாரம் J K SIVAN
நான் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வசிப்பது இந்த நங்கநல்லூரில் . நங்கல்லுருக்கு மேற்கே அடுத்து மூவரசம் பேட்டை, அங்கேயே மீனம்பாக்கம் பின் புறம் திரிசூலம் மலைகல். ஆரம்ப காலத்தில் மலைகளை விடாமல் இரவும் பகலும் வெடி வைத்து உடைத்து நிறைய மலைகள் பெரும் பாதாளமாக போய் விட்டது. அப்போதெல்லாம் தினமும் வெடி சத்தம் பீரங்கி போல் சப்தம் செய்யும். லாரிகள் பேய்த்தனமாக கருங்கல் பாறை உடைத்த ஜல்லிகளை சுமந்து குறுக்கும் நெடுக்கும் ஓடும். மோசமான தெருக்களில் அவை போகும்போது கல் சிதறி மண்டையில் விழும்.
நம் கதையில் வரும் ஒரு ஊர் அது போலவே என்று கொள்ளலாம்.
அந்த ஊரின் பெயரே கல்லுடைச்சான் பட்டி . கத்திரி வெய்யில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் வேளை. குப்பனுக்கு கைவந்த கலை கல் தூக்கும் வேலை!!!. அதில் வரும் கூலியில் தான் அவன் குடும்பம் வயிறு கழுவியது. இதே வேலை தான் என்றும் என்றபோதும் அன்று என்னவோ அவன் சுமையை தூக்கியபோது ரொம்ப களைத்துப்போய் விட்டான். ஒருகட்டிடத்தின் நிழலில் தூக்கி வந்த கல்லை கீழே வைத்து இளைப்பாறினான்.
"கடவுளே, என்னால் தூக்கவே முடியவில்லையே. ரொம்ப கனமான சுமையாக இருக்கிறதே" என்று
பிரார்த்தித்தான்.
" குப்பா.......''யார் கூப்பிடுவது? எவரும் கண்ணில் படவில்லையே. கடவுளே இது என்ன யார் என் பெயர் சொல்லி கூப்பிடுவது. வேலை செய்யாமல் நான் ஓய்வெடுப்பதை பார்த்துவிட்டு முதலாளி தான் குரல் கொடுக்கிறானோ?'வேறு 'யாருமில்லை நீ கூப்பிட்ட கடவுள் தான் பேசுகிறேன்''''சாமீஈஈ. ''
"அப்பனே, இந்த சுமை ரொம்ப கனமாக இருந்தால் நீ இந்த கட்டிடத்தின் உள்ளே சென்று உன் சுமையை
இறக்கிவிட்டு அதோ எதிரில் தெரியும் கதவை திறந்து பார். அங்கு இதே போன்று நிறைய கல் இருக்கிறது
சிறியதாக ஏதாவதொன்றை எடுத்து கொண்டு போ. "
அவ்வாறே செய்தான் குப்பன். அந்த அறை என்பதை விட பெரிய கூடம் என்று சொல்லலாம். அதில் எங்கு பார்த்தாலும் கல் பாறைகள் நிரம்பி இருந்தது. அதில் ஒரு ஓரமாக சுவற்றில் தான் கொண்டுவந்த கனமான பாறையை சார்த்தி வைத்தான். சுற்று முற்றும் பார்த்துக் கொண்டே நடந்தான்.
அவன் கொண்டு வந்த கல் பாறை போல் அநேக பாறைகள் எங்கே எங்கு பார்த்தாலும் காணப்பட்டதால் தேடிப்பிடித்து ஒரு கல்லை தேர்ந்தெடுத்தான். அது இருப்பதற்கும் கொஞ்சம் எடை குறைந்த கல்லாக அவனுக்கு தோன்றியது. எத்தனை வருஷமாக கல் தூக்குகிறான். அவனுக்கு தெரியாதா?
சுவற்றின் மேல் சாய்ந்திருந்த அந்த கல்லை மெதுவாக தூக்கினான் வெளியே நடந்தான். எந்த லாரியில் அதை கொண்டு போடவேண்டுமோ அந்த திசை நோக்கி நடந்தான். அப்பாடா நல்லவேளை . எடை குறைந்த கல் கிடைத்தது.
அவன் மனம் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. குப்பன் கடவுளை நினைத்தான்..
"கிருஷ்ணா! உனக்கு நன்றி, உன்னால் எனக்கு கிடைத்த இந்த கல் கொஞ்சம் சிறியதாகவும் வெயிட் குறைந்ததாகவும் உள்ளது . இதை எடுத்து செல்ல உதவின உனக்கு நன்றி '''
''ஹாஹா ''யாரோ சிரிக்கும் சப்தம்.... யாருமில்லையே? “கடவுளே! நீயா சிரிக்கிறாய்?”
"அப்பா, குப்பா, நீ செலக்ட் பண்ணிய கல் நீ கொண்டு வந்து வைத்தது தான்'' என்று கடவுள் குரல் கேட்டது.
நீதி:
நமக்கு நம்முடைய கஷ்டங்கள் மலையாக தோன்றும்போது மற்றவர்கள் படும் அவஸ்தைகளையும்
எண்ணற்ற துன்பங்களையும் நோக்கினால் நாம் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பது புரியும். நம்முடைய துன்பம் கொசுவாகிவிடும்.
No comments:
Post a Comment