Sunday, May 10, 2020

RASA NISHYANTHINI




ரஸ நிஷ்யந்தினி J K SIVAN

ஸ்ரீ ராம பிரசாதம்...

தனது வாழ்நாளில் நூற்றுக்கு மேலான ஸ்ரீ ராம பட்டாபிஷேக நிகழ்ச்சிகளை நடத்தியவர் மஹாபெரியவாளால் பருத்தியூர் பெரியவா என்று போற்றப்பட்ட ஸ்ரீ பருத்தியூர் கிருஷ்ண
சாஸ்திரிகள். ராமாயண சாஸ்திரிகள் என்றே அறியப்பட்டவர். சிறந்த சங்கீத ஞானம். ஹரிகதா காலக்ஷேபங்கள் நிறைய நடத்தியவர். ராமாயணம் தவிர பாகவதம், உபநிஷத், கீதை, புராணங்களில் ஈடற்ற உபன்யாசங்கள். பல ஜமீன்கள், ஆதீனங்கள், சமஸ்தானங்களில் வரவேற்கப்பட்டு கௌரவம், நிறைய பொன்னும், வெள்ளி, நவரத்தினங்கள், பட்டு வஸ்திரங்கள் என்று எண்ணற்ற பரிசுகள் பெற்றவர். அப்படியே வாரி வழங்கிவிடுவார் மற்றவர்களுக்கு. ஒவ்வொரு உபன்யாசம் கடைசியிலும் அவரை ரசிகர்கள் சூழ்ந்து சந்தேகங்கள் விளக்கங்கள் கேட்பார்கள். நிதி பொருள் உதவி கேட்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வழங்குவார்.
சென்னையில் நடந்த ஒரு சம்பவம் மட்டும் சொல்கிறேன். நெல்லூர் வெங்கடாச்சலம் கடினமான உழைப்பாளி, சாது, ஏழை பிராமணன். ராம பக்தன். பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டது. பிள்ளை வீட்டார் அடுத்த வாரம் ஏற்பாடுகள் பற்றி பேச வரப்போகிறார்கள். கையில் காலணா இல்லை. கவலை அவனை தின்றது.
வீட்டுக்கு அருகே கோவிலில் யாரோ ஒருவர் ராமாயண பிரசங்கம் என்று அறிந்து கிருஷ்ண
சாஸ்திரிகள் உபன்யாசத்தில் ராமர் மஹிமையில் தன்னை மறந்தான். பிரசங்க முடிவில் சிலர் அவரை அணுகி உதவிகள் பெறுவதை பார்த்து தானும் பெண் கல்யாணத்திற்கு உதவி கேட்கலாமா என்று எண்ணம். ஆனால் அருகில் சென்றும் வார்த்தை வரவில்லை. தினமும் கால் அவரை கேட்க இழுத்தது. அற்புதமாக பிரசங்கங்கள் கேட்டான். அருகில் சென்று வணங்கினான். ஆசி பெற்றானே தவிர உதவி கேட்கவில்லை. ஆச்சு இன்னும் ரெண்டே நாள். பிள்ளைவீட்டார் வரப்போகிறார்கள். கண்களில் நீர் மல்க அன்று ப்ரவசன முடிவில் அவர் எதிரே நின்றான். அவர் பார்வை அவன் மேல் விழ அவரை நமஸ்கரித்தான். வாய் பேச வரவில்லை. எதிரே தட்டில் இருந்த ஒரு பழத்தை அவனுக்கு ஆசிர்வதித்து அளித்தார். அன்றோடு கோவில் உபன்யாச நிகழ்ச்சி நிறைவேறி சாஸ்திரிகள் வேறு இடம் சென்றுவிட்டார். வெங்கடாசலம் வீடு திரும்பினான்.
மறுநாள் காலை யாரோ ஒரு பையன் வாசல் கதவை தட்டினான்.
''யாரப்பா நீ என்ன வேண்டும்?''
''வெங்கடாச்சலம் அய்யர் என்று இங்கே....''
''நான் தான் பா. என்ன விஷயம் சொல்லு?''
''ராமாயண சாஸ்திரி இதை உங்க கிட்டே கொடுக்க சொல்லி அனுப்பினார்''
தனது இடுப்பு வேஷ்டியிலிருந்து ஒரு பிரவுன் கவரை எடுத்து பிரசாதம் புஷ்பம் மேலே வைத்து நீட்டினான்.
யார் இவன் ? சாஸ்திரிகளுக்கு தமது விலாசம் எப்படி தெரிந்தது. என்ன பிரசாதம் கொடுத்து அனுப்பி இருக்கிறார்.?
தன் கண்களை நம்பவே முடியாமல் வெங்கடாசலம் அந்த ப்ரவுன் கவரை முன்னும் பின்னும் திருப்பி பார்த்தார். கோந்து போட்டு ஓட்டிய கனமான பிரவுன் கவர். உள்ளே என்ன என்று பிரித்து பார்க்கும்போதே ''நான் வருகிறேன்'' என்று பையன் வேகமாக கிளம்பிவிட்டான்.
கவர் உள்ளே 2500 ரூபாய்கள். நூறு வருஷங்களுக்கு முன்பு அது பல லக்ஷங்களுக்கு சமம். கல்யாணம் எல்லாம் பண்ணி மிச்சம் கூட மீறும்.
''ஸ்ரீ ராமா'' என்று அடிவயிற்றிலிருந்து குரல் எழும்பியது. அவன் தன்னுடைய பெண் கல்யாணத்துக்கு 1500 ரூபாய்க்கு என்ன வழி என்று தேடும் நேரம். பிள்ளைவீட்டார்கள் வந்து'பேசி, குறித்த நாளில் பெண்ணின் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது. கல்யாணம் முடிந்த கையோடு வெங்கடாசலம் சாஸ்திரிகள் இருந்த அக்ரஹாரம் தேடி சென்று பலர் சூழ்ந்திருக்க, அவரை நமஸ்கரித்து அவர் செய்த எதிர்பாராத பெரிய உதவிக்கு நன்றி கூறினான்.
'' நான் எத்தனையோ நாள் எதிரே நின்றும் வாய் திறந்து உங்களை என் பெண் கல்யாணத்துக்கு ஏதாவது பொன் பொருள் யாசகம் கேட்க விரும்பி தயக்கத்தோடு கேட்காமலேயே இருந்தும், என் நிலைமை புரிந்து என் மனதில் உள்ளதை சொல்லாமலேயே அறிந்து சரியான சமயத்தில் நீங்கள் செய்த உதவிக்கு என் ஜென்மம் பூரா, என் குடும்பம் முழுக்க உங்களுக்கு கடன் பட்டு இருக்கிறோம்.'' தட்டு தடுமாறி வார்த்தைகள் விழ
அவரை கீழே விழுந்து நமஸ்கரித்தான். கண்களில் நன்றிக் கண்ணீர்.
கிருஷ்ண சாஸ்திரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.
''என்னப்பா சொல்கிறாய் நீ.? யார் நான் அனுப்பின பையனா.? 2500 ரூபாயா?, எந்த பையனையும் எனக்கு தெரியாதே, உன்னையும் தெரியாதே? பணம் கொடுத்து எதுவும் யாரிடமும் உனக்கு அனுப்பவில்லையே அப்பா?''
இந்த நிகழ்ச்சி சாஸ்திரிகள் மீது பக்தி பரவசத்தை மேலும் அதிகரிக்க வைத்து வெங்கடாச்சலம் அவர் குடும்பத்தில் ஒருவனானான். மீதி பணத்தில் ஏதோ சில வியாபாரங்கள் பண்ணி பணக்காரனான். அவரை அழைத்து ஊரில் நிறைய ப்ரவசனங்கள் ஏற்பாடு செய்தான்.
எத்தனையோ அதிசயங்கள் ஸ்ரீ கிருஷ்ண சாஸ்த்ரிகள் வாழ்வில் நடந்திருக்கிறது என்று படித்தேன். மனது உங்களோடு பகிர்ந்துகொள்ள துடித்ததால் இந்த கட்டுரை.. அப்பப்போ நடு நடுவே ருசிகர தகவல் வரும்.
இனி கொஞ்சம் கொஞ்சமாக சாஸ்திரிகளின் ''ரஸ நிஷ்யந்தினி'' க் குள்ளும் செல்வோம். ரஸம் என்ரால் தெரியுமே. சுவை, ருசி. டேஸ்ட் . நிஷ்யந்தினி என்றால் ஊற்று. ராமனின் பெயர் அளவில்லாத அம்ரித ஊற்று. அதன் ருசியைப்பற்றி சொல்லமுடியாது. அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அருமையான பெயர் வைத்திருக்கிறார்.
அயோத்தியில் எவருமே சந்தோஷமாக வாழ்ந்த காலம். இக்ஷ்வாகு குலத்தில் நான்கு பிள்ளைகள் பிறந்திருக்கிறார்களாமே! தசரத மஹாராஜா வீராதி வீரன், சக்கரவர்த்தி, எவரும் வெல்லமுடியாத மஹா வீரர். அறுபதினாயிரம் வருஷம் ஆண்டவராமே. அடுத்த வாரிசு வந்துவிட்டதாம். முதல் பிள்ளை அவ்வளவு அழகனாம் ராமன் என்று பெயராம். மூன்று தம்பிகள் அவனுக்கு பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் . ஒவ்வொரு நாளும் திருவிழாவாகவே காட்சி அளித்தது. இன்று நேற்றல்ல பன்னிரெண்டு வருஷங்களாக. தசரதன் அவ்வளவு மகிழ்ச்சியில் இருந்தான். செல்வத்தை வாரி வழங்கினான். அயோத்தியில் வீடுகளுக்கு கதவுகளே இல்லையாம். எதற்கு எதை, எவரிடமிருந்து பாதுகாக்க கதவு தேவை? எல்லோரிடமும் எல்லாமே இருந்தபோது எவர் வந்து எதை எடுத்துச் செல்ல போகிறார்? கொள்வார் இல்லாததால் கொடுப்பார் இல்லை என்பார் கம்பர். தானம் செய்வது புண்யம். ஆனால் தானம் செய்ய முடியாதே? ஆச்சர்யமாக இருக்கிறதே? தானம் செய்ய முடியாதா ? என்ன சொல்கிறீர்கள். ஆமாமய்யா, யாருக்கு தானம் செய்வீர்? எல்லோரிடமும் எல்லாமே நிறைந்து இருக்கிறதே, எதை எவரிடம் பெறுவது??? இந்த நிலை அயோத்தியில்.
அயோத்தியில் ஒரு ரிஷி வருகிறார் என்று செய்தி காற்றுவாக்கில் எல்லோர் காதிலும் விழுந்தது. சாதாரண ரிஷி அல்ல, கோபமே உருவான தவசிரேஷ்டர். மற்றவர்களுக்கே இப்படி ஆர்வம் என்றால் தசரதனுக்கு எப்படி இருக்கும்.
''அட என்ன ஆச்சர்யம்... நமது ராஜ்யத்துக்கு நமது அரண்மனைக்கு ப்ரம்ம ரிஷி என்று வசிஷ்டர்நாவினால் சிறப்பு பெற்ற மஹரிஷி விஸ்வாமித்ரர் வரப்போகிறாரா...... தடபுடலாக அவரை வரவேற்க தசரதன் ஏற்பாடுகள் செய்தான்.
விஸ்வாமித்ரர் தசரத மஹாராஜா அரண்மனைக்கு வந்துவிட்டார். தசரதன் ஓடோடிசென்று மந்திரி பிரதானிகள் புடைசூழ வாசலில் நின்று அவரை வரவேற்கிறான். வணங்குகிறான். தனது சக்ரவர்த்தி ஆசனத்தில் அவரை அமர்த்தி கைகட்டி எதிரே நிற்கிறான்....
தொடர்வோம்......

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...