ராமனும் பரசுராமனும்
பரசுராமனின் லக்ஷியம் க்ஷத்ரியர்களை கொல்வது . எதிரே லட்டு மாதிரி தசரதன், ராமன் லக்ஷ்மணன் கிடைத்தால் எப்படி இருக்கும்? யமதர்மனைப் போல எதிரே நின்றான். தசரதன் நடுங்கினான். பரசுராமன் பலம் வீரம் அவனுக்கு தெரியாதா? மஹா தேஜஸ். நீலமேக நிறம். ஜடாமகுடதாரி. கண்களில் அக்னி. கையில் நீண்ட பரசு.(கோடாலி) இன்னொரு கையில் வில். தசரதன் அவனை விழுந்து வணங்கினான்.
''சுவாமி எங்களுக்கு பிராண பிச்சை தரவேண்டும்''
''அதமனே , ராமன் என்ற எனது பெயரில் உலாவுபவன் இவன் தானா? என ராமனை அலட்சியமாக பார்த்தான் பரசுராமன்.
'' என்ன கர்வம் உனக்கு. ஏதோ வலுவற்ற பழைய உளுத்துப்போன தனுஸை , ஜனகன் அரண்மனையில் எடுத்து ஒடித்த பெருமையா? எங்கே உன் பலத்தை என்னிடம் காட்டு. இதோ என் கையில் இருக்கும் விஷ்ணு தனுசுவிடம் உன் புஜபலத்தை காட்டு. அப்புறம் நீ என்னோடு யுத்தம் புரிய தகுந்தவனா என்று நான் முடிவு செயகிறேன்'
' என்றான் பரசுராமன்.பரசுராமனை வணங்கி ராமன் பதில் சொன்னான்:
'' தேவர்கள், பசுக்கள், ஸ்த்ரீகள், பிராமணர்கள் இவர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்துவது எங்கள் ரகுவம்ச வழக்கம் இல்லை. உங்களை பூஜித்து வணங்குகிறோம்.''
''என் வில்லை நினைத்து பயத்திலேயே நடுங்கி இப்படி சமாளிக்கிறாயா ?''
''சரி வேறு வழியில்லை' நேரம் வந்துடுவிட்டது. இதோ எடுக்கிறேன் உங்கள் வில்லை''
ராமன் பரசுராமன் கையிலிருந்த விஷ்ணு தனுஸை அலக்ஷியமாக இடதுகையால் எடுத்து நிற்க வைத்து வலதுகையால் நாண் ஏற்றி தனது அம்புரா துணியிலிருந்து ஒரு அஸ்திரத்தை எடுத்து வில்லில் பூட்டினான் .
''பரசுராமரே, ராமன் ஒருமுறை தொடுத்த அஸ்திரம் பலனில்லாமல் திரும்பாது. ஆகவே ஒன்று உமது பாதார விந்தங்களையோ அல்லது பரலோகத்தையோ இலக்காக காட்டுங்கள். உங்களை தாக்க விருப்பமில்லை ''
பரசுராமன் பதில் சொல்லவில்லை. எங்கோ பொறி தட்டிற்று. பழைய நினைவுகள் வெள்ளமாக மனதில் பெருகின. ஞானம் நினைவில் வந்தது. அடாடா என்ன மடத்தனம்.......
''மஹா விஷ்ணுவே ஸ்ருஷ்டி , ஸ்திதி, ஸம்ஹார காரியங்களை புரிய அவ்வப்போது எடுக்கும் அவதாரங்களை நான் அறிவேன். எனது தந்தையை கொன்ற கார்த்த வீர்யார் ஜுனன் பரம்பரையை பூண்டோடு அழிக்க தவம் செய்து மஹாவிஷ்ணுவின் அம்சமாகவே செயல்பட்டேன். வரும் திரேதாயுகத்தில் நான் தசரதன் பிள்ளை ராமனாக அவதரிப்பேன் என்று அப்போது என்னிடம் சொன்னது ஸ்ரீமன் நாராய ணன் சொன்னது நினைவுக்கு வருகிறது. அப்போது உனக்கு அளித்த சக்தியை திரும்ப பெறுவேன் என்றார் மஹாவிஷ்ணு. பிறகு நீ தவம் மேற்கொண்டு ப்ரம்மனுடைய ஆயுள் காலத்தில் ''ஒரு நாள் ' வாழ்வாய் என்றார் .
'' ப்ரம்மதேவனே வேண்டியதால் அவதரித்த வன் நீ ஸ்ரீ ராமா. ' என் சக்திஎல்லாம் என் கை தனுசை நீ எடுக்கும்போதே பெற்றுக்கொண்டாய். என் தவப்பயன் முடிந்தது. என் ஜென்மம் சாபல்யமடைந்தது. ''
ராமன் தொடுத்த அஸ்திரம், பாணம் , பரசுராமனின் சர்வ சக்தியையும் பறித்தது.
'பரசுராமரே , உங்களுக்கஏதேனும் வரம் வேண்டுமானால் கேளுங்கள்''
'ததாஸ்து''
ராமனை வலம் வந்து கட்டி தழுவி ஆனந்தக்கண்ணீர் வடித்தவாறு பரசுராமன் மஹேந்த்ர பர்வதம் தவம் செய்ய சென்றார். தசரதர் தனது மகன் ராமனின் பராக்கிரமத்தை கண்டு ஆனந்தித்து எல்லோரும் அயோத்தி திரும்பினார்கள்.
மணமாகி திரும்பிய ராம சகோதரர்களை அயோத்தி கோலாகல விழா கோலம் பூண்டு ஜொலிக்க, எல்லோரும் ஆனந்தமாக வரவேற்று உபசரித்தார்கள்.
''பார்வதி, ராமரின் கதையை சொல்லு என்றாயே கதை எப்படி இருக்கிறது. என்றபோது பார்வதி விடை சொல்ல திணறினாள்.
''பார்வதி மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ராம கிருஷ்ண இரு அவதாரங்கள் மேன்மையும் மகிமையும் வாய்ந்தவை. கிருஷ்ணன் பூர்ணாவதாரன்'' என்று ஆனந்த ராமாயணத்தின் முதல் சார காண்ட மூன்றாவது சர்க்கத்தை நிறைவு செயது நான்காவதில் அடியெடுத்து வைப்போம்.
No comments:
Post a Comment