Saturday, May 9, 2020

MOTHER'S LIBRARY

                     
                  அம்மா  லைப்ரரி   J K  SIVAN 



என் தாயார்  ஜம்பாவதி  அம்மாள் பள்ளிக்கூடமே  பார்க்காதவள்  என்றாலும்  நன்றாக தமிழ் படிப்பாள். பாடல்கள், பாசுரங்கள் தெரிந்தவள். அருமையாக  பாடுவாள்.  எல்லாம் ரத்தத்திலேயே ஊறியிருந்த காரணம்  அப்பா  ப்ரம்ம ஸ்ரீ  வசிஷ்ட பாரதிகள் தமிழ்க்  கடல். கம்பராமாயண ப்ரவசனத்தில் புராண பிரசங்கங்களில் நிகரற்றவர்.  மஹா பெரியவாவிடமிருந்து  ''புராணசாகரம் '' என்ற  விருது பெற்றவர். 

என் சிறுவயதில் எங்கள் வீட்டில்  ''நல்ல தங்காள்  சரித்ரம்''  என்று  ஒரு  பழைய  புத்தகத்தையும்  ''பெரிய எழுத்து  விக்ரமாதித்தன் கதைகள்'',  ''மஹா பக்த விஜயம்''  போன்ற சில பழைய   புத்தகங்களை அவள் ஒழிந்தபோது படிப்பது ஞாபகம் வருகிறது. 

அதில் நல்லதங்காளும், விக்கிரமாதித்தனும்  ''அறுதப்பழசு''    வகையைச்  சேர்ந்தவை.   அந்த  ரெண்டு  புத்தகங்களுமே  அவளால்  ஊசி  நூலினால்  மீண்டும்  ஒரு தடவை   தைக்கப்பட்டு   பலப்படுத்தப்  பட்டவை.    உள்ளே  பக்கங்கள் பழுப்பு கலர்.  பேப்பர்  சக்தி இழந்து விறைத்திருக்கும்.  நிறைய  பக்கங்கள்  அப்பளம்  போல்  நொறுங்கும்  தன்மையானவை.  அம்மா  பார்க்காதபோது  ஒரு  சில  பக்கங்களை  மடித்து  அவை  ஒடிந்து சிறு  தூள்களாக  கீழே விழுவதை பார்த்து  மகிழ்ந்து இருக்கிறேன்.  பாவம்  அவளுக்கு  தெரியாது  நான்  தான்  செய்தேன்  என்று.  எதற்குமே    அனாவசியமாக என்  அண்ணன் ஜம்பு  தான்  திட்டு வாங்குவான்.  செய்யாத தவறுக்கு  தண்டனை  பெறுவதில் அவனுக்கு நிகர்  அவன் தான். ''யார்ரா அவன்  இந்த  பக்கத்தை   எல்லாம்   நொருக்கினவன்.    படுபாவிகளா.  நல்ல  விஷயங்களை எல்லாம்  படிக்க முடியாதபடி  பண்ணிட்டேளே ''  என்று அவள்  பொருமியதின்  அர்த்தம்  தெரியாத வயது  எனக்கு.

அந்த  புத்தகங்களைப் படிக்கும்போதே தானாகவே  அழுவாள்.  அதில்  துயர  சம்பவங்கள்    வர்ணிக்கப் பட்டிருந்தால்  தானும்  புத்தகத்தில்  வரும்  சோக  சம்பவத்தோடு, பாத்திரங்களோடு,  கரைந்து விடுபவள்  என்பது இப்போது   புரிகிறது.  நல்ல தங்காள்   அவளை  அநேகம்  முறை  அழ வைத்திருக்கிறாள். எனக்கு அம்மாவை அழைவைத்த  அந்த புத்தகங்கள் மேல் கோபம் வந்திருக்கலாம். அதனால் ஒடித்தேனோ அள்ளது ஓடிவதைப் பார்ப்பதில்  விளையாட்டா என்பது ஆராய்ச்சிக்குகந்த பொருள்.

அதற்கு  பிராயச்சித்தமாகத்தான்  இப்போது  நல்ல விஷயங்களை  புத்தகமாக்கி  நிறைய  வீடுகளில் வயதானவர்களும்  தமிழில்  படிக்க  என்னால்  முடிந்ததை  செய்கிறோனோ   என்று கூட   எனக்கு புரியவில்லை.  ஏதோ  செய்வதில்  கொஞ்சம்  திருப்தி  ஏற்படுகிறதே  அந்த  வரைக்கும்  சந்தோஷம்.  

மறுபடி  புத்தக விஷயத்துக்குப் போவோமா?   அந்த  ரெண்டு புஸ்தகங்களுமே  வெள்ளைக்காரன்  காலத்தியவை.   அவற்றை  பதிப்பித்தவர்  இரத்தின நாயக்கர்  சன்ஸ்   என்று  போட்டிருந்ததாக  ஞாபகம்.  எனக்குத்தான் அப்போது படிக்கத் தெரியாதே.  பிற்காலத்தில்  எப்போதோ  அந்த  புஸ்தகத்தை படு  பயங்கரமாக  கிழி பட்டு  நாசமான  மோசமான நிலையில்  பார்த்தபோது இந்த  பெயர்  மனதில் பதிந்தது.

ஒரு ஆச்சரியம்  என்னவென்றால்  அந்த  புத்தகத்தில்  நிறைய  படங்கள்  உண்டு.  எனக்கு  அந்த  சிறு வயதில்  படம்  தான்   பார்க்க தெரிந்தது. படிக்க தெரியாதே .  ஆறு  வயதிற்குத்தான்  என்னை  ஒண்ணாம்  க்ளாசில்  என்  தந்தையார்  ஒரு  கூரைக்கட்டு  பள்ளியில்  படிக்கக் கொண்டு   சேர்த்தார்.  கார்பொரேஷன் பள்ளி.   காவேரியம்மா தான்  டீச்சர்.  அடிக்கவே  மாட்டாள்.  நன்றாக  நினைவு இருக்கிறது.   ரெட்டைநாடி.  எப்போதுமே   பச்சை  நூல்  புடவை தான்.  சிரித்துக்கொண்டே  இருப்பாள்.  கோவம்  மட்டும்  திடீர்  திடீர்  என்று சொல்லாமல்  கொள்ளாமல்  சுனாமியாக  வரும்.   பிரம்பால்  அடிக்க மாட்டாள்.  காதை மட்டும்  கன்னா பின்னா  என்று  திருகுவாள் .  அதனால்  ஏற்படும் வலியில்  கதறும்போது இனிமே  இப்படி பண்ண மாட்டாயே  என்ற  நீதி வாக்கியம்  வெளிப்படும்.  மாட்டேன் மாட்டேன்  என்று  நாங்கள்  தேர்தல்  வாக்குறுதி அளிப்போம்.   விட்டு விடுவாள்.  இது  ஒரு தொடர்ந்து  நடந்த கதை அப்போதெல்லாம். வீட்டில்  போய்  காது திருகினதை சொல்வதில்லை.  சொன்னாலும்  காவேரி அம்மாவின்  பக்கம்  தான்  தீர்ப்பு  கிடைக்கும். 

புஸ்தகத்தை பற்றி சொன்னேனே.  அதில்  ராஜா,  மந்திரி, காலாட்படைகள், குதிரைவீரர்கள்  எல்லாருமே  இருப்பார்கள்.  ஒவ்வொருவரிடமும்  ஒரு  பட்டா கத்தி  நீளமாக  கையில் இருக்கும்  இடுப்பில்  ஒரு  கேடயம்.  தலையில்  கிரீடம்.  காது குண்டலம்.  காதுவரை  மீசை. உடம்பை பிடித்தாற்  போல  ஒரு  ஆடை.  ஒரு  அவசரத்துக்கு  அவிழ்க்கமுடியாது. காலில் ரொம்ப கஷ்டமான  ஒரு  காலணி. நிறைய  சுற்றுகளாக  இருக்கும்.  ஆஹா  இது  என்ன  வேடிக்கை.!!  வினோதம்!   குதிரை  மீது அமர்ந்துகொண்டிருப்பவனும்,  தரையில்  நின்று  கொண்டிருப்பவனும்  படத்தில் காணும்  மரங்களும்  ஒரே  உயரம்.  ராஜா  மந்திரி  இத்யாதி  அனைவருமே  ஒரே மாதிரி முக அமைப்பு கொண்டவர்கள், மீசை  குண்டலம் தலை கிரீடம்,  உடம்பை பிடித்துக் கொண்டிருக்கிற  ஆடை  எல்லாம் ஒரே மாதிரி.  உடல்  வாகு  கூட   கட்டுமஸ்தான  குள்ள உடம்பு  தான் அனைவருக்கும்.  . இதுபோதாதென்று  அனைவருமே  ஒரே  பக்கம்  தான்  பார்த்துக்கொண்டிருப்பார்கள்.   

  படத்தில் பெண்கள்  எல்லோருமே  முகத்தை விட  பெரிய  புல்லாக்கு அணிந்து கொண்டிருப்பார்கள்.  அவர்கள் அனைவருக்கும்  ஒரே  மாதிரியான  உணர்ச்சியற்ற  பட்டை  சதுர  முகம்.  குண்டாகத்தான்  அனைவருமே,  குள்ளமாக  இருப்பார்கள்.  மூக்கு  கொஞ்சம்   நீண்டே தான்  இருக்கும்.  அப்போது தானே  அதில்  புல்லாக்கு  தொங்கவிடமுடியும்?   புல்லாக்கு  முகத்துக்கு  சம்பந்தமில்லாமல்   தொங்கிக்கொண்டிருக்கும்.   மேலுதடு  கீழுதட்டை விட   கொஞ்சம்  முன்னே  நீண்டு  மூக்கில் பாதி  தூரம் வரை.  அது  ஏன்   அவர்கள்  அனைவருக்குமே  தாடையில்    முகவாய்   கட்டையில்  ஒரு  வளையம்?  அவர்கள்  அணிந்துள்ள  புடைவை மேலாடை  அனைத்துமே  யூனிபார்ம்  போல  ஒரே மாதிரியானவை.  உட்கார்ந்தவள், நின்றவள்  அனைவருமே  ஒரே உயரம்.  

அந்த  கால  சித்திரக்காரர்கள்,  சம நோக்கு கொண்டவர்கள்,  பாரபட்சம்  அற்றவர்கள்  என்று  அப்போது எனக்கு  புரியவில்லை. இந்த  படங்களை  திரும்ப  திரும்ப  பார்ப்பதிலேயே  எனக்கு அந்த  வயதில் பொழுது போனது.  அந்த  புத்தகங்களை  மாடப்பிறையில்,  அம்மா  எப்போதும்  சமையில்  அரை   பாத்திரங்களுக்கு  இடையே எங்காவது  செருகி  வைத்திருப்பாள். எங்களிடமிருந்து பாதுகாக்க....

நான்  அவற்றை  எளிதில்  ஆக்ரமிப்பேன்.  முடிந்த இல்லை  கிடைத்த  நேரத்தில்--  எனக்கு  நேரமில்லாமல்  ஒன்றும்  இல்லை  -  புத்தகம்  கிடைத்த  நேரத்தில் -  அந்த காய்ந்த  அப்பளம் போன்ற  பக்கங்களை  ஒடிப்பதில் அலாதி  ஆனந்தம். 

புத்தகத்தில்  சில பக்கங்களில்  ஆறு  ஒரே  வளையமாக  கோடுகளில் ஓடிக்கொண்டிருக்கும்.  அதில் ஆழத்தில் இருந்தாலும்  நண்டு  மீன்கள்  எல்லாம்   நம் கண்ணுக்கு  நன்றாகவே   தெரியும்படியான ஓவியம். .  மீன்களும் ஒரே  பக்கம்  பார்த்துக்கொண்டு   ஒரே  அளவில் தான் காணப்படும்.  ஆற்று நீர்   ஓட்டம்  வரிசையாக  கோடுகளாக   காட்டபட்டிருக்கும்.  கீழிருந்து  மேலாக  பல  வரிசைகள். இது தான்  ஆறு.   எங்காவது  சில பக்கங்களில் ஒரு முனிவர் சிலையாக  அமர்ந்திருப்பார்.  அல்லது  ஒரு  சிவலிங்கமோ  நந்தியில்லாமல்  தனித்து  இருக்கும்.    தலைமேல் ஒரு  வாழை மரமோ,  வேறு  எதாவது  மரமோ  அதன் கிளைகளை   தலைக்கு  மட்டும்  குடையாக  அமைத்துக்கொண்டிருக்கும்.  மறுபடியும்  மரமும்  அந்த உட்கார்ந்திருக்கும்  முனிவரோ  அல்லது  சிவலிங்கமோ  கிட்டத்தட்ட   ஒரே உயரம்.    எழுந்தால்   தலை  மரத்தில் மோதிவிடும். 

புத்தகத்தின்  வாக்யங்கள்  பெரிதாக  இருக்கும்,  பெரிய  எழுத்திலும்  இருக்கும்   '' அஹோ  வாரும்  பிள்ளாய்...''  போன்ற  சொற்கள்  அதிகம்  இருக்கும். 

இத்தகைய  புத்தகங்களை  மீண்டும் ஒரு முறை  பார்த்து  படிக்க  ஆவல் அதிகரிக்கிறது.  தேடிக்கொண்டு இருக்கிறேன்.  இந்த முறை  நிச்சயம்  பக்கங்களை  உடைக்க மாட்டேன். வேறு யாரும் உடைக்கவும் விடமாட்டேன். அம்மாவுக்கு ப்ராமிஸ். 

  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...